எல்லோரும் தான் ஆத்திச்சூடி படித்தோம், ஆனால் அதன் அர்த்தம் முழுதாக விளங்கியது ஐஷா ஃபாத்திமாவுக்கு மட்டும் தான்!

‘ஐயமிட்டு உண்’ என்பது, ஆத்திச்சூடியில் ஒளவை சொன்ன மொழி. எல்லோரும் தான் ஆரம்பப் பள்ளியில் ஆத்திச்சூடி படித்தோம், ஆனால் இவருக்கு மட்டும் தானே அதன் அர்த்தம் முழுதாக விளங்கியிருக்கிறது! 
எல்லோரும் தான் ஆத்திச்சூடி படித்தோம், ஆனால் அதன் அர்த்தம் முழுதாக விளங்கியது ஐஷா ஃபாத்திமாவுக்கு மட்டும் தான்!

முன்னரே இம்மாதிரியான சேவைத் திட்டங்கள் அயல்நாடுகளில் உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். அயல்நாடுகளில் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையில்லாத அல்லது அபிரிமிதமாக உள்ளதாகத் தாங்கள் கருதும் பொருட்களை எல்லாம் தங்களது தெருவின் முனையில் இருக்கும் பொதுவான இடமொன்றில் காட்சிப்படுத்தி வைத்து விடுவார்கள் எனவும். தேவைப்படும் ஏழைகள் அவற்றில் தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துச் செல்லலாம் எனவும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே டெக்னிக் தான். ஆனால், அது தமிழ்நாட்டில், அதிலும் பெசண்ட் நகரில் பலிதமாகி இருப்பது மிகுந்த பாராட்டுதலுக்குரிய செய்தி! 

ஏனெனில், நம் மக்களின் இயல்புப்படி, பலரது வழக்கம் என்னவென்றால், ஆதரவற்றோர் ஆசிரமங்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்குத் தானம் தர வேண்டுமென்றால் நல்ல மனம் படைத்தவர்கள் சிலர் எப்போதும் நல்லவற்றையே தானமளிப்பார்கள். ஆனால் சிலருக்கு, அதிலும் கூட கஞ்சத்தனம் எட்டிப் பார்க்கும். தானமாகத்தானே தருகிறோம் என்ற மிதப்பில், தங்களிடமுள்ள ஓட்டை, உடைசல், அழுகல், மெழுகல் பொருட்களை எல்லாம் கூட தானமென்ற பெயரில் வாரி வழங்கி விடுவார்கள்.

தாம் அளிக்கும் பொருட்கள், உண்மையிலேயே சம்மந்தப்பட்டவர்களுக்கு உபயோகமாக இருக்குமா? அல்லது வேண்டாத குப்பையாக இருக்குமா? என்பது பற்றியெல்லாம் அந்த தான மகாப்பிரபுக்களுக்கு கிஞ்சித்தும் யோசனையே இருப்பதில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரண காலங்கள் என்றால் அது குஜராத் பூகம்ப காலம், இலங்கையில் உள்நாட்டுப் போர்க்காலம், சென்னையின் சுனாமி, 2015 வெள்ள அபாய காலம் எனலாம், இம்மாதிரியான தருணங்களில் எல்லாம், இயற்கைச் சீற்றங்களாலும், போரினாலும் தங்களது உடமைகளை இழந்த மக்களுக்கு தமிழக மக்கள் சேவை என்ற பெயரில் வாரி வழங்கிய குப்பைக் கூளங்களை சில வார இதழ்கள் அப்படியே படம் பிடித்து செய்தி வெளியிட்டு நம் மக்களின் யோக்யதையை வெளிக்காட்டின. தானம் என்பது எப்போதுமே சிறந்ததை அளிப்பதாக இருந்தால் தானே கொடுப்பவருக்கும் மதிப்பு, பெறுபவருக்கும் மரியாதையாக இருக்கக் கூடும். அதை அப்போது பலர் மறந்ததின் விளைவு தான். தானம் அல்லது இயற்கைப் பேரிடர் உதவி என்ற பெயரில் குவிந்த பல்லாயிரக்கணக்கான டன் குப்பைகள். நிற்க!

இதுவரை நாமறிந்த தானங்களில் இப்படிப்பட்ட விரும்பத்தகாத விஷயங்களும் இருந்தாலும், உண்மையிலேயே தானம் என்பதின் அர்த்தம் அறிந்து அதை தேவை இருப்பவர்களுக்கு தாயுள்ளத்தோடு வழங்கக் கூடிய நல் உள்ளங்களும் நம்மிடையே வாழத்தான் செய்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் ஐஷா ஃபாத்திமா ஜாஸ்மின். இந்தப் பெண்ணின் சேவை மனப்பான்மையால் உருவானது தான், ‘ஐயமிட்டு உண்’ சேவைத் திட்டம். 

சென்னை, பெசண்ட் நகர் பகுதியில் தற்போது வழங்கப் பட்டு வரும் இந்தச் சேவை, வெகு விரைவில் சென்னையில் பல இடங்களிலும் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட இருக்கிறதாம். அந்த நன்முயற்சியில் இவரோடு நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கைகோர்க்கவிருக்கிறார்கள். ஐஷா ஃபாத்திமா, அமைத்திருக்கும் மிகப்பெரிய குளிர்சாதனப் பெட்டி போன்ற கருவியில் உணவுப் பொருட்களும், மறுபுறம் அலமாரி போன்றதொரு அமைப்பில் உடைகள், காலணிகள் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களும் தானமாக வைத்து விட்டுச் செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், யார் வேண்டுமானாலும் தங்களுக்குத் தேவையில்லாத அல்லது மீந்திருக்கும் உணவுப் பொருட்களை மட்டுமல்ல புதிதாக வாங்கியும் நிரப்பி விட்டுச் செல்லலாம். பெட்டியினுள் ஒரு சிறு குறிப்பேடு பராமரிக்கப்படுகிறது. அதில் பொருட்களை தானமளிப்பவர் தங்களது முகவரி, தானமளிக்கும் உணவுப் பொருட்களை எத்தனை நாட்களுக்குள் உண்ண வேண்டும். உள்ளிட்ட விவரங்களை உள்ளிடலாம்.  கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்பதைத் தடுக்கும் பொருட்டு இப்படி ஒரு வசதியும் அதில் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் முன்பே புழக்கத்தில் இருந்த முறை தான் இது என்கின்றன சில ஊடகச் செய்திகள். ஆனால் அவை அனைத்தும் பலர் சேர்ந்து கூட்டாகச் செயல்படுத்தும் சேவை முறைகள். இப்படி ஐஷா போன்று தனியொரு பெண்ணாய் தாயுள்ளத்துடன் சேவையில் ஈடுபடுவோர் மிகவும் குறைவே. எனவே ஐஷாவின் இந்த முயற்சியை எத்தனை பாராட்டினாலும் தகும். தொழில்முறையில் பல்மருத்துவரான ஐஷா,  இந்தத் திட்டத்தை தொடங்கி சில மாதங்கள் ஆகின்றன. ஆனால், நான் ஐஷாவைப் பற்றித் தெரிந்து கொண்டது இன்றைய விகடனில் கமல் எழுதிய தொடரின் மூலமாகத் தான். தொடரின் முதல் வாரத்திலேயே ஐஷா போன்ற தன்னலமற்ற சிறந்த பெண்மணி ஒருவரை அறிமுகம் செய்வித்ததற்காக கமலுக்கும் நாம் நன்றி சொல்லிக் கொள்ளலாம். 

‘ஐயமிட்டு உண்’ என்பது, ஆத்திச்சூடியில் ஒளவை சொன்ன மொழி. எல்லோரும் தான் ஆரம்பப் பள்ளியில் ஆத்திச்சூடி படித்தோம், ஆனால் இவருக்கு மட்டும் தானே அதன் அர்த்தம் முழுதாக விளங்கியிருக்கிறது! 

வாழ்த்துக்கள் ஐஷா ஃபாத்திமா. 

Thanks to Vikatan & Google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com