புராரி கூட்டுத் தற்கொலை விவகாரம்... தொடரும் சந்தேகத்திற்கிடமான மர்ம முடிச்சுகள்!

புராரி கூட்டுத் தற்கொலை விவகாரம்... தொடரும் சந்தேகத்திற்கிடமான மர்ம முடிச்சுகள்!
புராரி கூட்டுத் தற்கொலை விவகாரம்... தொடரும் சந்தேகத்திற்கிடமான மர்ம முடிச்சுகள்!
  • புராரி கூட்டுத்தற்கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு டைரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் தற்கொலை நிகழ்ந்துள்ள முறைகள், அவர்கள் எப்படி மரணித்தார்கள் என்பன போன்ற விஷயங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் உடல்களில் முகங்கள் மூடப்பட்டு வாய்கள் டேப்பால் ஒட்டப்பட்டு, கைகள் பின்புறம் கட்டப்பட்டு கிடத்தப்பட்டிருந்தனர். டைரிக் குறிப்புகளின் படி இந்த மரணங்கள் நிகழ்த்தப்பட்டதின் அடிப்படை ‘மரணமும் ரட்சிப்பும்’ எனும் வழிபாட்டு முறைமையொன்றின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்  என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இறந்தவர்களின் உடல்கள்  ‘பாத் பூஜா’ என்று சொல்லப்படக்கூடிய அமானுஷ்ய நம்பிக்கையின் அடிப்படையில் கிடத்தப்பட்டிருந்தன. அதாவது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கருதப்படும் 11 பேரின் சடலங்களும் ஆலமரத்தின் விழுதுகளைப் போல கிடத்தப்பட வேண்டும் என அவர்கள் விட்டுச் சென்றுள்ள டைரிக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் அந்த டைரிக் குறிப்பில், குடும்பத்தில் எவரொருவரும் அலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது என்பதும் ஸ்ட்ரிக்டாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால், அனைவரது அலைபேசிகளும் சைலண்ட் மோடில் போடப்பட்டு ஒரு பாலீதீன் பையில் அழகாகப் பேக் செய்யப்பட்டு கப் போர்டில் வைக்கப்பட்டிருந்தது காவல்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • கூட்டுத் தற்கொலை செய்து கொள்ள செவ்வாய், வியாழன் அல்லது சனிக்கிழமையே தகுந்த நாள் என்றும். அன்று தங்களைத் தாங்களே பலி கொடுத்துக் கொண்டால் மட்டுமே தற்கொலைச் சடங்கின் முழு பலனும் கிட்டும் என்றும் அந்த டைரிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே பலனும் முழுமையாக இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  • இதில் கூட்டுத் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தின் மூத்தவரான நாராயண் தேவியை மட்டும் ஒருவர் தூக்கில் தொங்க விட்டு அவர் இறந்த பின் கயிற்றை நீக்கி அவரது சடலத்தை படுக்கையில் கிடத்தி விட்டு அவரது கழுத்தை இறுக்கிய கயிற்றையும் படுக்கையில் அவரது அருகே வைத்து விட்டு பிறகு தானும் தூக்கில் தொங்கி இறந்துள்ளனர். நாராயண் தேவியை தூக்கில் தொங்க விட்டு அவரது கழுத்திலிருந்து கயிற்றை நீக்கியது இறந்தவர்களில் யார்? என்பதைக் கண்டறியும் முயற்சியில் தற்போது காவல்துறை இறங்கியுள்ளது.
  • நாராயண் தேவி தவிர அவரது மகள் பிரதிபா (57),  மகன்களான பாவனேஷ் (50), லலித் பாட்டியா (45) பாவனேஷின் மனைவி சவிதா (48), அவர்களுடைய வாரிசுகளான மீனு, நீத்து,  15 வயது துருவ்,  லலித பாட்டியாவின் மனைவி டினா, அவர்களது 15 வயது மகன் ஷிவம் உள்ளிட்ட அனைவரது சடலங்களும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • பிரதிபாவின் மகள் ப்ரியங்கா (33) க்கு கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் அவரும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஐடி கம்பெனியொன்றில் பணீபுரியும் ப்ரியங்கா வருட இறுதியில் நடைபெறுவதாக இருந்த தனது திருமணம் குறித்த சந்தோஷ எதிர்பார்ப்புகளுடன் இருந்தவர் என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்த உண்மை.
  • நாராயண் தேவிக்கு இறந்தவர்கள் தவிர மேலுமொரு மகனும், மகளும் இருப்பதாகவும் அவர்கள் வெளியூர்களில் வசிப்பதும் தெரிய வந்துள்ளது.
  • பானிபட்டில் வசிக்கும் நாராயண் தேவியின் மகள் சுஜாதா நாக்பால் அதிர்ச்சியும், சோகமும் விலகாதவராக ஆற்றாமையுடன் பகிர்ந்து கொண்ட விஷயம், என்னால் இதை நம்பவே முடியவில்லை. என் குடும்பத்தினர் அனைவருமே மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் தற்கொலை செய்து கொள்ள எந்தத் தேவையுமே இல்லை. யாரோ என் குடும்பத்தினர் அனைவரையுமே கொன்று தூக்கில் தொங்க விட்டிருக்கின்றனர், கொலைகாரர்கள் யார்? அவர்கள் எதற்காக அப்படிச் செய்தார்கள் என்பதை காவல்துறை தான் கண்டறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
  • தற்கொலை நிகழ்ந்த வீட்டின் அருகில் கிடைத்த சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் சனிக்கிழமை இரவு 10.40 மணியளவில் பாட்டியா குடும்பத்தினருக்கு இரவு உணவு டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப் பின் அந்த வீட்டுக்குள் யாரும் செல்லவோ, வெளியேறவோ இல்லை.
  • இரவு 11 மணியளவில் புது மணப்பெண்ணாகப் போகும் ப்ரியங்கா தனது சகோதரியுடன் திருமணத்திற்கான ஷாப்பிங் குறித்து சாட் செய்திருக்கிறார்.

அவ்வளவு தான் அதற்குப் பிறகு அனைவரையும் அக்கம்பக்கத்தார் மீண்டும் காண நேர்ந்தது பிணமாகத்தான்.

நாராயண் தேவி குடும்பத்தாருக்குச் சொந்தமான மளிகைக் கடையைத் திறக்கத் தாமதமானதால் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தகவல் அளித்ததின் பேரிலேயே காவல்துறைக்கு இவ்விஷயத்தில் சந்தேகம் வந்து வீட்டுக்குள் புகுந்து சோதனையின் இறங்கினர்.

காவல்துறை விசாரணையில் மேலும் தெரிய வந்த முக்கியமான தகவல். நாராயண் தேவி குடும்பத்தாருக்கு எந்த அளவுக்கு ஆன்மீக நம்பிக்கை இருந்ததோ அதே அளவுக்கு அமானுஷ்ய நம்பிக்கையும் இருந்திருக்கிறது என்பதே! கூட்டுத்தற்கொலை நிகழ்ந்த வீட்டில் காவல்துறை நிகழ்த்திய தேடலில் சொர்க்கம், மரணத்துக்குப் பின்னான சொர்க்க வாழ்வு கிடைப்பதற்கான வழிமுறைகள், அதற்குப் பொருத்தமான சடங்குகள், சம்பிரதாயங்களை வலியுறுத்தும் புத்தகங்கள் அதிகமும் சிக்கியுள்ளதாகத் தகவல். 

அந்தப் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளவாறு குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் இந்த உலகுக்கு விட்டுச்சென்றுள்ள டைரிக் குறிப்புகளின் அடிப்படையில் தற்கொலை செய்து கொண்டால் உடனே நேரடியாக சொர்க்க வாழ்வு கிட்டும் என நம்பியிருக்கிறார்கள் எனும்படியான தடயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

அந்தத் தடயங்கள் உண்மையிலேயே இறந்தவர்கள் விட்டுச் சென்ற தடயங்களா அல்லது நாராயண் தேவி குடும்பத்தார் மீது தீராக்கோபமும், பொறாமையும் கொண்ட வேறு எவரேனும் இப்படியெல்லாம் தடயங்களை வேண்டுமென்றே உருவாக்கி விட்டு அவர்களை மொத்தமாகக் கூட்டுக் கொலை செய்திருக்கிறார்களா? எனும் படியான சந்தேகங்கள் வலுத்து வருகின்றன.

ஏனெனில், நாராயண் தேவி குடும்பத்தாருக்கு தற்கொலை செய்து கொண்டு மரணிக்கும் அளவுக்கு, இந்த உலகில் வாழவே முடியாதபடியான நெருக்கடி நிலை எதுவுமே இல்லை. வெளியார் பார்வைக்கு அவர்கள் மிக மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்த குடும்பமாகவே பதிவாகியிருக்கின்றனர். அதிலும், குடும்பத்தின் மூன்றாம தலைமுறையில் முதல் சுபகாரியம் முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மணப்பெண்ணும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தான் சந்தேகத்தைக் கிளறுகிறது. இந்த சந்தேகத்துக்கு பானிபட்டில் வசிக்கும் நாராயண் தேவியின் மகள் சுஜாதாவின் வாக்குமூலமும் வலு சேர்த்துள்ளது.

புராரி தற்கொலை சம்பவத்தில் உண்மையில் நிகழ்ந்தது என்ன? வழக்கு குறித்து காவல்துறை தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளது. 

முதலில் இது நிஜமாகவே கூட்டுத் தற்கொலை தானா? அல்லது ஜோடிக்கப்பட்ட தற்கொலையா? என்ற முடிச்சு அவிழ வேண்டும்.

ஒருவேளை இது கூட்டுத் தற்கொலையாக இல்லாத பட்சத்தில் குடும்பத்துடன் இவர்களைக் கொலை செய்து விட்டு ஆன்மீகம் & அமானுஷ்ய நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்ந்த தற்கொலை இது என கொலையாளி ஜோடிக்க நேர்ந்ததற்கான காரணம் என்ன? என்பது தெரிய வேண்டும்.

அடுத்ததாக இது கொலையாக இருக்கும் பட்சத்தில் கொலைக்கான உண்மையான காரணம் என்னவெனத் தெரிய வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் பதில் கிடைத்தால் வழக்கின் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழலாம்?

புராரி கூட்டுத் தற்கொலை சம்பவத்தைப் பார்க்கையில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘யாவரும் நலம்’ திரைப்படம் நினைவில் வருவதைத் தடுக்க முடியவில்லை.

அந்தத் திரைப்படத்தில், அபார்ட்மெண்ட் ஒன்றில் கூட்டுக் குடும்பமாக வாழும் குடும்பத்தினர் மொத்தமாக கொலை செய்யப்படுவார்கள். கொலைக்கான காரணம் என்னவென்று கண்டுபிடிக்கப்பட முடியாமலே காவல்துறை அந்த வழக்கை முடித்து வைத்து விட்டு வேறு வேலை பார்க்கக் கிளம்பி விடும். ஆனால், எந்தப் பாவமும் செய்யாமல், கொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மா தங்கள் கொலைக்கான நியாயத்தைத் தேடிக் காத்திருக்கும். 

படத்தில் கூட்டுக் கொலை நிகழ்வதற்கான காரணம்
அந்தக் குடும்பத்தின் இளம்பெண் டி.வி செய்தி வாசிப்பாளராக இருப்பார். அவருடைய அதிதீவிர ரசிகர் ஒருவருக்கு அந்தப் பெண்ணின் மீது தீராக்காதல்.ஆனால், அந்தப் பெண்ணுக்கோ வேறிடத்தில் திருமணம் நிச்சயமாகி விடும். குடும்பமே திருமண சந்தோசத்தில் இருக்கும் போது இந்த வெறி பிடித்த ரசிகர் வந்து தனக்கே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து தரச்சொல்லி கலவரம் செய்வார். அதற்கு இளம்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மறுப்புத் தெரிவிக்கவே அவர் தற்கொலை செய்து கொள்வார். அதே நாளிரவில் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தாரும் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பார்கள்.

இப்படிச் செல்லும் யாவரும் நலம் திரைப்படக் கதை...

தமிழில் இந்தப் படம் வெற்றி பெற்ற த்ரில்லர் திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரையிலும் கருதப்படுகிறது. 

இத்திரைப்படம் முதலில் இந்தியில் வெளிவந்து அங்கே வெற்றித்திரைப்படமாகி பின்னரே தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. 

கிட்டத்தட்ட புராரி கூட்டுத்தற்கொலை விவகாரத்திற்கும் இது போன்ற பின்னணி ஏதும் இருக்கக்கூடுமா எனத் தெரியவில்லை. அவையெல்லாம் வழக்கு விஷயத்தில் கிடைக்கக் கூடிய ஆதாரங்களின் அடிப்படையிலான காவல்துறை விசாரணையின் போக்கைச் சார்ந்தது.

எது எப்படியாயினும்... மொத்தக் குடும்பமும் கூட்டுத் தற்கொலை செய்து கொண்டதற்கான பின்னணி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பது நிஜம்.

இது கொலையா? தற்கொலையா? 

கொலை எனில் ஏன், எதற்கு? எப்படி?

தற்கொலை என்றால்? நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தை அமானுஷ்ய சக்திகள் மற்றும் நம்பிக்கைகளைப் பயன்படுத்தி எவராலாவது இப்படி முட்டாள்தனமாகத் தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்ட முடியுமா? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com