யார் இந்த கெளஹர் ஜான்? இந்த ஆர்மீனியப் பெண்ணுக்கு கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பிப்பது ஏன்?

தேர்ந்த இசைக்கலைஞராகவும், கதக் நடனக்கலைஞராகவும் மேலே, மேலே, மேலே சாதித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தவரான கெளஹருக்கு அவரது காலத்தில் வாழ்ந்த மற்றெல்லா தேவதாசிப் பெண்களையும் போலவே
யார் இந்த கெளஹர் ஜான்? இந்த ஆர்மீனியப் பெண்ணுக்கு கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பிப்பது ஏன்?

கூகுள்காரர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து மறைந்த பல சிறப்பான மனிதர்களுக்கு தொடர்ந்து டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒரு பணி. ஏனெனில், இதுவரை கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்களில் நமக்குத் தெரிந்தவர்கள் இருந்ததைக் காட்டிலும் தெரியாதவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள நேரும் போது ஆச்சர்யமாக இருப்பதோடு, தென்கச்சி சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’ போல புதியதாகவும் நிறைய அறிந்து கொள்வதற்கான திருப்தியும் கிடைக்கிறது.

ஹெளஹர் ஜான்...

அந்த வகையில் இன்று கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்திருப்பது யாருக்கு எனில் கௌஹர் ஜான் எனும் இசை மற்றும் நாட்டியக்கலைஞருக்கு. மிக அருமையாகப் பாடிக்கொண்டே ஆடவும் பயிற்சி பெற்றவர்கள் நெல்லிக்காய் மூட்டைகள் போல அன்று எண்ணிக்கையற்று.. பலர் பல ஊர்களில் சிறந்த இசைக்கலைஞராகவும், நாட்டிய மேதையாகவும் இருந்திருக்கலாம்... அவர்களில் எல்லோருமே இன்று வரை மக்கள் மனதில் நீடித்து நிலைத்து விட்டார்கள் என்று சொல்ல முடியாது. தனது இசைத்திறனையும் தாண்டி இவரிடம் அப்படி என்ன சிறப்பு என்றால்? இந்துஸ்தானி இசை மேடைகளிலும், கச்சேரிகளிலும் முழங்கிக் கொண்டிருந்த இவரது தேன் குரலோசை முதன்முதலாக 78 rpm  கிராமஃபோன் ரெகார்டுகளிலும் பதிவு செய்யப்பட்டு இந்தியவின் இண்டு, இடுக்குகளில் நுழைந்து பட்டி, தொட்டியெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. கெளஹர் ஜான் அப்படித்தான் மக்களிடையே பிரபலமானார்.

அரை இந்திய, அரை ஆர்மீனியச் சிறுமி...

கெளஹர் ஜானின் அப்பா ஒரு ஆர்மீனியர். அம்மா பிறப்பால் இந்தியரான கிறிஸ்துவப் பெண்மணி. 1873 ஆம் ஆண்டு வாக்கில் மேற்கு வங்கத்தில் இருக்கும் அஸம்கார்க் நகரில் ஆங்கிலேயரின் உலர் ஐஸ் ஃபேக்டரியொன்றில் பணி புரிந்து வந்த வில்லியம் ராபர்ட் யோவார்ட்  இசையிலும், நாட்டியத்திலும் சிறந்து விளங்கியவரான விக்டோரியா எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் இருவருக்கும் பிறந்த மகள் ஏஞ்சலினா யோவர்ட். ஆனால், என்ன காரணத்தினாலோ விக்டோரியாவுக்கு, வில்லியம் யோவர்ட்டுடன் இணைந்து நெடுநாட்கள் வாழமுடியாத சூழல் நேர்கிறது. தனது இசையை, தன் கணவர் சரியாக மதிக்கவில்லையோ? தனது நாட்டியத் திறனை அவர் வெறுக்கிறாரோ, தன் மீது சந்தேகம் கொள்கிறாரோ என்றெல்லாம் யோசித்துக் கலங்கிய விக்டோரியா... கூடிய விரைவில் தனது கலக்கம் நிஜமாகி கணவரை விட்டுப் பிரிய நேர்கிறது. அதற்கு காரணம் விக்டோரியாவின் புது நண்பர் குர்ஷித். இஸ்லாமியரான குர்ஷித்துடன் ஏற்பட்ட நட்பினால் விக்டோரியா, தனது கண்வர் வில்லியமிடம் இருந்து 1879 ஆம் ஆண்டில் விவாகரத்துப் பெற்று பிரிகிறார். பின்பு என்ன காரணத்தாலோ அவர் இஸ்லாமிய மதத்தை நேசிக்கத் தொடங்கி கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறி தன் பெயரையும் மல்கா ஜான் என்று வைத்துக் கொள்கிறார்.

ஏஞ்சலினா டு கெளஹர் ஜான்... 

விக்டோரியா, மலக் ஜான் ஆனபோது ஏஞ்சலினா யோவர்டும்... கெளஹர் ஜான் ஆகிறாள். மதம் மாறிய தன் தாயோடு இணைந்து வாழத்தொடங்கிய கெளஹார் ஜானுக்கு அவரது தாயாரின் மூலமாகவே இசை ஞானமும், நாட்டியப் பற்றும் ஏற்படுகிறது. தாயும், மகளும் இணைந்து இசைக் கச்சேரி செய்யத் தொடங்குகின்றனர். அந்தக்காலத்தில் பனாரஸ் இன்றைய காசியில் மிகச்சிறந்த கதக் நாட்டியக் கலைஞர் எனவும், அரசவை நர்த்தகியாகவும் விளங்கினார் மல்கா ஜான். பனாரஸில் அன்று மல்கா என்ற பெயரில் வேறு சில புகழ்பெற்ற நர்த்தகிகளும் இருந்ததால் கெளஹரின் அம்மாவை badi malka jan என அரசவையின் முக்கியஸ்தர்கள் அழைக்கத் தொடங்கினர்.

அரசவை நர்த்தகியான அம்மாவுடனான நாட்கள்...

கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற பின் பலகாலம் பனாரஸில் வாழ்ந்து வந்த மல்கா ஜான் ஒரு காலகட்டத்தில் மகள் கெளஹர் ஜானை அழைத்துக் கொண்டு கொல்கத்தா (அன்று அது கல்கத்தா) செல்கிறார். அங்கே நவாப் வாஜித் அலிஷாவின் தர்பாரில் நிரந்தர நாட்டியக் கலைஞராக பணிபுரியும் வாய்ப்பு மல்கா ஜானுக்குக் கிடைத்தது. அங்கிருந்து தான் தனது இன்றைய அகில உலகப் புகழைத் தேடிக் கொண்டார் மல்கா ஜான். கொல்கத்தா திரும்பிய அன்னை மல்கா ஜான் ரூ 40000 கொடுத்து ஒரு இடத்தை விலைக்கு வாங்கி அதில் ஒரு கலைப்பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார்.

கெளஹருக்கு ஹிந்துஸ்தானி இசை கற்றுக் கொடுத்த மாமேதைகள்...

அந்தப் பள்ளியில் இருந்து தொடங்கியது தான் கெளஹர் ஜானின் இசை மற்றும் நாட்டியப் பயணம். அங்கே கெளஹருக்கு பரிசுத்தமானதும், பரிபூர்ணமானதுமான ஹிந்துஸ்தானி இசையை கற்றுக்கொடுத்த இசைகுருமார்கள் யாரெல்லாம் தெரியுமா? பாட்டியாலா புகழ் இசை மேதை காலே கான்,  (காலு உஸ்தாத்) ராம்பூரின் உஸ்தாத் வசீர் கான், உஸ்தாத் அலி பக்ஸ் ஜர்னைல் (பாட்டியலா கரனாவைத் துவக்கிய அடிப்படை உறுப்பினர்களில் ஒருவர்) கதக் நடனத்தைக் கற்றுக் கொடுத்த குரு தி லெஜண்டரி பிருந்தாதின் மஹராஜ் (இன்றைய கதக் சூப்பர் ஸ்டார் பிர்ஜூ மஹராஜின் தாத்தா) (பிர்ஜூ மஹராஜ் யாரென்று தெரியாதவர்கள் கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தின் ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணில்லையே’ கதக் நாட்டியப் பாடலை யூ டியூபின் தேடிப் பிடித்துப் பாருங்கள். அதன் நாட்டிய ஆசிரியர் பிர்ஜூ மஹராஜ்) பிறகு ஸ்ரீஜன் பாயிடமிருந்து ‘துர்பத் தமர்’ எனும் இசை வடிவைக் கற்றுக் கொண்டார். அது மட்டுமல்ல பெங்காலி கீர்த்தனைகளையும் கூட உரிய வகையில் சரண் தாஸிடம் கற்றுக் கொண்டார். கற்றுக் கொள்ளும் இடைவெளியில் வெகு விரைவாக கஜல் பாடல்களை இயற்றிப் பாடுவதிலும் வல்லவராக இருந்தார் கெளஹர் ஜான். ஹம்தம் என்ற புனைப்பெயரில் ரபீந்திர சங்கீதத்திலும் சிறந்து விளங்கினார் கெளஹர் ஜான்.

கெளஹரின் முதல் அரங்கேற்றம் எங்கே? எப்போது? யார் முன்னிலையில்?!

இப்படியெல்லாம் இசையின் பல்வேறு வடிவங்களையும், கதக் நடனத்தையும் முறையாகக் கற்றுத்தேர்ந்த கெளஹர் ஜானுக்கு 1887 ஆம் ஆண்டு தர்பங்கா ராஜின் அரசவை தர்பாரில் வைத்து முதல் முறையாக அரங்கேற்றம் நிகழ்ந்தது. அத்துடன் அவர் அரசவை நர்த்தகி மற்றும் பாடகியாகவும் அமர்த்தப் பட்டார். திறன் வாய்ந்த பல்வேறு இசை ஆசிரியர்களிடம் பெற்ற பயிற்சியும் இயல்பிலேயே கெளஹருக்கு நாட்டியத்திலும், இசையிலும் இருந்த ஆர்வமும் கைகோர்க்க நாட்டிய மேடைகள் தோறும் கெளஹரின் முகம் தோன்றத் தொடங்கியது. 1896 ஆம் ஆண்டில் முதல்முறையாக இவரது கதக் நடன நிகழ்ச்சியும்  ரெகார்டாகப் பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிலேயே முதன்முதலில் கிராமஃபோன் ரெகார்டுகளில் பதிவு செய்யப்பட்ட முதல் இசைக்கலைஞர் & நடனக் கலைஞர் என்ற பெருமை கெளஹர் ஜானுக்கு என்றென்றைக்குமாய் நிலைத்தது. தனது தாயார் தொடங்கிய கலைப்பயிற்சி பள்ளி மூலமாக தொடர் சாதகம் செய்த பலன் கெளஹர் தான் கற்றுக்கொண்ட அத்தனை கலைகளிலும் உன்னதமாகத் தேர்ச்சி அடைந்தார். இந்நிலையில் அவரது அம்மா மல்கா ஜான் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைகிறார். இதனால் சதா சர்வ காலமும் தன் அன்னையைச் சுற்றியே தனது வாழ்வைக் கட்டமைத்துக் கொண்டவரான கெளஹர் மிகப்பெரிய துயரத்துக்கு ஆளாக நேர்கிறது. சில காலம் அம்மாவின் இழப்பை எண்ணி மிகப்பெரிய மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார் கெளஹர்.

அம்ரித் கேசவ், நட்பா? காதலா எனப் பிரித்தறிய முடியாது ப்ரியங்களில் ஒன்று...

அப்போது தான் 1904 .. 1905 ஆம் வருடங்களில் குஜராத்தைச் சேர்ந்த தியேட்டர் நாடகக் கலைஞரான அம்ரித் கேசவுடன், கெளஹருக்கு ஆழ்ந்த நட்பு ஏற்படுகிறது. கேசவுடன் தொடங்கிய இனிமையான நட்பின் பின் தாயின் மரணம் அளித்த மனக்கஷ்டங்களிலும், தனிமைத் துயரிலுமிருந்து சிறிது, சிறிதாக வெளிவரத்துவங்கினார் கெளஹர். ஆனால், அந்த நட்பும் நெடுநாள் நீடிக்கவில்லை. 1907 ஆம் ஆண்டில் கேசவ் மரணமடைந்தார்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவை அலங்கரித்த இரு இசைக்க(ன்னி)ண்ணிகள்...

1910 ஆம் ஆண்டில் கெளஹர் சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடைபெற்ற இசை கச்சேரியொன்றில் பங்குபெற்றார். அதைத் தொடர்ந்து அவரது ஹிந்துஸ்தானி பாடல்கள் தமிழ் இசைப் புத்தகங்களையும் அலங்கரிக்கத் தொடங்கின. 1911 ஆம் ஆண்டில் கெளஹரின் கலைத் திறமையை மெச்சிய இங்கிலாந்து அரச குடும்பம் டெல்லி தர்பார் மண்டபத்தில் நிகழவிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் அரங்கேற்றத்தின் போது இசைக்கச்சேரி செய்ய மனமுவந்து அழைப்பு விடுத்தது. அந்த கெளரவ அழைப்பை ஏற்று விழாவுக்குச் சென்ற கெளஹர் ஜான், அலகாபத்தின் மிகச்சிறந்த இசைக்கலைஞரான ஜானகி பாயுடன் இணைந்து யே ஹாய் தஜ்போஷி க ஜல்சா, முபாரக் ஹோ முபாரக் ஹோ உள்ளிட்ட பாடல்களை டூயட் கச்சேரி செய்து விழாவைச் சிறப்பித்தார்.

கெளஹரின் இறுதி நாட்கள்...

ஒரு கதக் நடனக் கலைஞராகவும், மிகச்சிறந்த ஹுந்துஸ்தானி இசைக்கலைஞராகவும் தன் முழு வாழ்வையும் கலைக்கு அர்ப்பணித்தவரான கெளஹர் ஜான் தனது கடைசிக் காலங்களில் மைசூரில் வாழ்ந்து மடிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மைசூருக்கு ஏன் சென்றார் எனில், அப்போதைய மைசூர் மன்னரான கிருஷ்ணராஜ உடையாரின் அழைப்பை ஏற்று மைசூர் அரண்மனையில் அரண்மனை இசைக் கலைஞராகப் பணியாற்றத்தான். ஆனால், அங்கே சென்று 18 மாதங்களில்  அதாவது 1930 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் கெளஹர் ஜான் உடல்நலக் குறைபாட்டால் மரணமடைந்தார்.

பன்மொழி இசைவித்தகி...

தனது வாழ்நாளில் 1902 ஆம் ஆண்டு முதல் 1920 வரை 10 மொழிகளில் சுமார் 600 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இசைக்கோப்புகள் வெளியிட்டவர் என்ற பெருமை கெளஹருக்கு உண்டு. பெங்காலி, ஹிந்துஸ்தானி, குஜராத்தி, தமிழ், மராத்தி, அராபி, பெர்சியன், புஸ்தோ மொழி, ஃப்ரெஞ்ச், ஆங்கிலம் உட்பட அத்தனை மொழிகளிலும் பாடல்களைப்பாடி இசைக்கோப்புகளை ‘ மை நேம் இஸ் கோஹர் ஜான்’ எனும் பெயரில் வெளியிட்டார் கெளஹர் ஜான்.

கெளஹர் ஜானின் இசைக்கோர்ப்பு ஆடியோ பதிவாக...

கெளஹரின் தேன்குரலில் தர்பாரி கூமர் இசைக்கோர்ப்பு...

கெளஹர் ஜான் மட்டும் ஸ்பெஷல் ஏன்?

அந்தக் காலத்தில் இசைக்கலைஞர்களுக்கு புதிதாக வந்த கிராமஃபோன் இசைப்பதிவுக் கருவியில் பாடல்களைப் பதிவு செய்யும் விதம் குறித்து இனம்புரியாத அச்சங்கள் நிறைய இருந்தன. அவர்களில் எவரேனும் இசைக்கோர்ப்பில் பாட தைரியம் பெற்றவர்களாக இல்லை. கிராமஃபோன் இசைக்கருவியின் நீண்ட கொம்பு போன்ற அமைப்பையும் முள்ளையும் கண்டு அவர்கள் பயந்தனர். கெளஹார் ஜானுக்கு ஏனோ அந்தப் பயங்கள் இல்லை. அவர் தைரியமாக முன்வந்து பாடியதோடு, பாடி முடித்ததும் தன் பெயரை அதில் பதிவு செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தார். அதனாலேயே முதன் முதலில் தானே பாடி கிராமஃபோன் ரெகார்ட்டில் பதிவான முதல் பெண் இசைக்கலைஞரென அவர் இன்றளவும் பாராட்டப்படுகிறார். அது மட்டுமல்ல, கெளஹருக்கு, இந்துஸ்தானி இசை வடிவங்களான தும்ரி, தத்ரா, கஜ்ரி, சைதி, தரணா என அனைத்திலுமே பண்பட்ட தேர்ச்சி இருந்தது. அத்தனை இசையையும் அவரால் 3 நிமிடப் பாடல்களாகப் பதிவு செய்து ரெகார்டு வெளியிடும் திறமையும் பெற்றிருந்தார்.

பேகம் அக்தரின்  இசை முன்னோடி... 

ஹிந்துஸ்தானி இசை ரசிகர்களில் பேஹம் அக்தரை அறியாதவர்கள் யார்? அவருக்கு சில காலம், தானொரு மிகச்சிறந்த பாலிவுட் பாடகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. சினிமாவில் பாடி இசைத்தட்டுகள் அமோகமாக விற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் இயங்கிக் கொண்டிருக்கும் போது ஒருமுறை கெளஹர் ஜான் மற்றும் அவரது அம்மா மல்கா ஜான் இணைந்து வழங்கிய இசைக் கச்சேரியொன்றை கேட்க நேர்கிறது. இந்த இசைப்பிரவாகத்தைக் கேட்டதும் அதுவரை பேஹம் அக்தரின் மனதிலிருந்த சினிமா இசை மோகம் அடியுடன் மடிய... அன்று முதல் இவர்களைப் பின்பற்றி ஹிந்துஸ்தானி இசையுலகின் முடிசூடா இளவரசியாக பாரம்பர்ய இசை வடிவம் மட்டுமே தனக்குப் போதுமானது எனத் தீர்மானித்தார். பேஹம் அக்தரின் குருவான உஸ்தாத் இம்தத் கான்... மல்கா & கெளஹர் ஜானின் இந்துஸ்தானி இசை மேடைகளில் சாரங்கி இசைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கெளஹரின் தனிப்பட்ட வாழ்க்கையும் மூன்று முக்கியமான ஆண்களும்...

தேர்ந்த இசைக்கலைஞராகவும், கதக் நடனக்கலைஞராகவும் மேலே, மேலே, மேலே சாதித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தவரான கெளஹருக்கு அவரது காலத்தில் வாழ்ந்த மற்றெல்லா தேவதாசிப் பெண்களையும் போலவே இல்லற வாழ்வு சோபிக்கவே இல்லை. அதனால் வந்து சேர்ந்த துன்பங்கள் தான் அதிகம். ஆயினும் கெளஹரின் வாழ்வில் மூன்று ஆண்களை முக்கியமான நபர்களெனக் கூறலாம். முதலாமவர் ஜமீன்தார் நிமாய் சென். இவரிடமிருந்து கெளஹர் பெற்ற செல்வம் அளவிட முடியாதது என்கிறார்கள் அக்காலத்திய மக்கள். ஒரு தேவதாசியுடன் சினேகம் கொண்டால் மலை போன்ற செல்வத்தையும் கரைத்துக், கரைத்து உறிஞ்சிக் குடித்து சிறு மடுவாக்கி விடுவார்கள் அவர்கள் என்பதற்கு கெளஹரை உதாரணமாக்கினார்கள் அன்று அவர்களை அறிந்தவர்கள். நிமாய் சென்னுக்கு, கெளஹர் ஜானின் மேலிருந்த ப்ரியத்துக்கு எதை உதாரணமாக்கினாலும் தகாது. அப்படிக் கொட்டியளந்தார் என்கிறார்கள். கெளஹர் ஜான் வாழ்வில் இரண்டாவது ஆண்... சையது குலாம் அப்பாஸ் எனும் கெளஹரின் தனி உதவியாளர். இவரே கெளஹரின் இசைக்கச்சேரிகளில் தபேலா வாசிப்பவராகவும் இருந்தார். கெளஹரை விட 10 வயது இளையவர், ஆயினும் கெளஹர் இவரை மணந்து கொண்டார். இந்தத் திருமணம் சில காலங்களிலேயே தோல்வியைச் சந்தித்தது. ஏனெனில், பொருள் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சையது செய்த துரோகங்களை கெளஹரால் மன்னிக்க இயலவில்லை. அடுத்ததாக கெளஹரின் வாழ்வில் இடம்பிடித்த மூன்றாவது நபர் அம்ருத் வகல் நாயக். பிரபல குஜராத்தி மேடை நாடகக்கலைஞரான அம்ருத்துடனான உறவும் 3, 4 வருடங்களில் முடிவுக்கு வந்தது. இந்த உறவில் இருவருக்கிமிடையே நீடித்த பேரன்பும், பெருங்காதலும் நீண்ட நெடுங்காலம் நீடிக்கும் என இருவரைப் பற்றியும் நன்கறிந்த நண்பர்கள் ஆனந்தித்திருந்தனர். ஆனால், இந்த உறவு இடையில் தடைபடக் காரணம் மனவேறுபாடு அல்ல, மரணமே!

ஆம்... அம்ருத் திடீரென இறந்ததால் கெளஹர் மீண்டும் தனித்தவர் ஆனார்.

தனி வாழ்வில் மீண்டும், மீண்டும் ஏமாற்றத்துக்கு உள்ளானவராக, தோல்வியைச் சந்தித்தவராக இருந்த போதும் இசை வாழ்விலும், ஒரு நடனக் கலைஞராகவும் என்றென்றைக்குமாய் லட்சக் கணக்கான மக்களின் மனதுக்குகந்த ஹிந்துஸ்தானி இசை முன்னோடியாக கெளஹர் இசை ரசிகர்களின் மனதில் வெற்றிகரமாக கோலோச்சினார் என்பதே நிஜம்.

இன்று அவரது 145 ஆவது பிறந்த நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com