மரங்களை வெட்டாமல் தடுக்க தங்கள் இன்னுயிர் கொடுக்கத் தயங்காத அந்த மூன்று பெண்களைப் பற்றி அறிவோமா?!

கெளரா தேவியின் தலைமையில் ரெனியின் 27 பெண்கள் திரண்டு வந்து மரம்வெட்டிகளை மரங்களை வெட்ட விடாமல் ஒவ்வொருவரும் அங்கிருந்த மரங்களைச் சூழ்ந்து கட்டிப் பிடித்துக் கொண்டு கைகோர்த்து நின்றனர்
மரங்களை வெட்டாமல் தடுக்க தங்கள் இன்னுயிர் கொடுக்கத் தயங்காத அந்த மூன்று பெண்களைப் பற்றி அறிவோமா?!

சூழலைக் காக்கும் முனைப்பில் ‘மரங்களைக் காக்கும் போராட்டத்திற்காக தங்களது இன்னுயிரையும் இழக்கத் தயாரான மக்கள்’ முன்னெடுத்துச் செயல்படுத்திய சிப்கோ இயக்கத்தின் 45 ஆவது ஆண்டுவிழா இன்று. அவர்களையும் அவர்களது தன்னிகரற்ற தியாக உணர்வையும் சிறப்பிக்கும் வகையில் போராட்டத்தின் நினைவாகக் கூகுள் டூடுல் வெளியிட்டுக் கொண்டாடியிருக்கிறது.

சிப்கோ இயக்கம் என்றால் என்ன? அந்த மக்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

சிப்கோ இயக்கம் (Chipko movement) என்பது சூழல் பாதுகாப்பிற்கு ஆதரமாக காடுகளைக் காக்கும் இயக்கமாகும். தங்களது சுயலாபத்துக்காக அரச உத்தரவு/ அரசாங்க ஆணை என்ற பெயரில் மரங்களை வெட்ட வருவோரைத் தடுத்து மரங்களைக் கட்டித் தழுவியபடி காக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டதனால், அதற்கு சிப்கோ அந்தோலன் (CHIPKO ANDOLAN) என்று பெயர். இதைத் தோற்றுவித்தவர் ஜாம்போஜி என்னும் ராஜபுத்திரர்.

ராஜஸ்தான் மாநிலத்தில், நாகார் மாவட்டத்தில் உள்ள பிப்பசார் கிராமத்தில் வாழ்ந்த வசதிமிக்க செல்வந்தர் ஜாம்போஜி. திருமணம் செய்து கொள்ளாது வாழ்ந்த இவர் உயிரினங்களின் மீதும் சூழலின் மீதும் மிகுந்த பேரன்பும் கருணையும் காட்டி வாழ்ந்து வந்தவர். ஜாம்போஜிக்கு 25 வயதான போது மழைவளம் குன்றி அவர் கிராமம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. மக்கள் கெஜ்ரி மரங்களை விறகுக்காக வெட்டிக் கொண்டு போய் அதை விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தனர். இறைச்சிக்காக ‘சின்காரா’ என்னும் பாலைவன மான், வெளிமான் போன்ற மான்களை வேட்டையாடினர். இதனைக் கண்டு வருந்திய ஜாம்போஜி அதற்கு மாற்றுக் காண முயன்றார். இயற்கையை அழிக்காமல், இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கைக்கு மக்களை தயார்ப்படுத்தினார்.
அதற்காகவே அவர் கி.பி. 1524ல் அவர் பிஷ்னாய் அமைப்பைத் தோற்றுவித்து அதற்கான 29 கோட்பாடுகளையும் வகுத்தளித்தார்.

பிஷ்னாய் என்றால் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் என்று பொருள். இதற்காகத் தன் செல்வம் முழுவதையும் ஒதுக்கி சூழலை அழிக்காமல் எழை எளிய மக்களின் வறுமையைப் போக்கப் பாடுபட்டார் ஜாம்போஜி. அவரது கொள்கையை ஏற்றுக் கொண்டு அவரைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் அவரது கட்டளைக்கு இணங்கி அவரது கோட்பாடுகளின் வழியே வாழ்ந்து வந்தனர். இது நடந்தது 1750 களில்.

ஜாம்போஜியின் பிஷ்னாய் கோட்பாடுகள் சொல்வதென்ன?

ஜாம்போஜி வகுத்தளித்த 29 கோட்பாடுகளில் 8 கோட்பாடுகள் உயிரியப் பன்மையைப் (diversity) பாதுகாப்பதற்கும், பண்ணைகளில் வளர்க்கும் விலங்குகளைக் காப்பதற்கும் முக்கியத்துவம் அளித்தன. இதனால் மரங்கள் வெட்டப்படாது காக்கப்பட்டன. விலங்குகள் பேணப்பட்டன. உணவுக்கென காய்கறிகளை விளைவித்து கொண்ட மக்கள் குடிப்பழக்கத்தையும், புகைப்பிடித்தலையும் சூழலியல் கேடுகளெனத் தவிர்த்தனர். இறந்த பிறகு சடலங்களை எரிப்பதும் கூட சூழலுக்குத் தீங்களிப்பது என்று அவர்கள் கருதியதால் சடலங்களை எரிக்காது புதைக்கும் பழக்கமும் அவர்களிடத்தில் நிலவின. இதனால் சடலங்களை எரிப்பதற்காக மரங்கள் வெட்டப்படுவதும் தவிர்க்கப்பட்டது.

காலப்போக்கில் பிஷ்னாய் பிரிவு மக்கள் இந்தியாவின் பல பகுதிகளில் பரவினர். இவர்கள் சில பிரிவினர் தற்போது ராஜஸ்தானின் மேற்கு பகுதியிலும், பஞ்சாப், ஹரியானா, உத்ராஞ்ஜல் பகுதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.

பிஷ்னாய்களின் கதையைத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? சரி இப்போது நடப்புக்கு வாருங்கள்;

1974 ஆண்டு உலகின் கவனத்தை ஈர்த்த சிப்கோ இயக்கப் போராட்டத்தின் கதை...

இன்று கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்திருப்பது அந்தப் பழைய சிப்கோ இயக்க பிஷ்னாய்களுக்காக அல்ல, 1973 ஆம் ஆண்டில் நடந்த ஒரு மாபெரும் பெண்கள் புரட்சியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மரங்கள் இன்றைய உத்தரகாண்ட் பகுதியில் வெட்டப்படாமல் பாதுகாக்கப்பட்டன. அதற்குப் பிரதான காரணமான பெண்களாக கெளரா தேவி, சுதேஷா தேவி, பட்ச்னி தேவி, எனும் மூன்று பெண்களையும் சந்தி பிரசாத் பட் எனும் DGSS இயக்கத் தலைவரையும் தான் குறிப்பிட வேண்டும். இவர்கள் நால்வருமே 1973 ஆம் ஆண்டில் ஜாம்போஜியின் சூழலியல் போராட்டக் கொள்கையான சிப்கோ இயக்கப் போராட்டங்களை வெகு காலத்துக்குப் பின் இன்றைய நவீன இந்தியாவின் கண்மூடித்தனமான நகரமயமாக்கல் கொள்கையை எதிர்த்து வெகு ஆக்ரோஷமாக உயிர்த்தெழச் செய்தவர்கள் என்றால் அதில் மிகையில்லை.

1974 ஆம் ஆண்டு, மார்ச் 25 ஆம் நாள் அரசு அங்கீகாரத்துடன் இன்றைய உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் இருக்கும் ரெனி கிராமத்தில் உள்ள மரங்களை வெட்டி நிலத்தைச் சமப்படுத்த மரம் வெட்டிகள் சிலர் அந்தக் கிராமத்தினுள் நுழைந்தனர். அங்கே வெட்டப்படும் மரங்களைத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சகாய விலையில் தாரை வார்க்க அரசு முன்னதாக ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த மரங்களைக் கொண்டு டென்னிஸ் ராக்கெட்டுகள் தயாரிப்பதாகத் திட்டம். இதை எதிர்த்து கிராம மக்களுடன் இணைந்து காந்திய சமூகப் போராட்டவாதியான சந்தி பிரசாத் பட்டும் அவரது (DGSS) (தஷோலி சொஸைட்டி ஃபார் வில்லேஜ் செல்ஃப் ரூல்) கிராம சுயராஜ்ஜியத்திற்கான தஷோலி சொஸைட்டி சங்கத்தினரும் தீவிரமாகப் போராட்டத்தில் குதித்தனர்.

DGSS  என்பது 1980 களின் பின் DGSM Dasholi Gram Swarajya Mandal மாறியது. சந்தி பிரசாத் பட்டின் DGSS  அமைப்பின் முக்கிய நோக்கமே கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரத்துக்குத் தேவையான சிறு சிறு தொழில்நுட்பக் கருவிகளை தங்களது வாழ்விடத்தின் அருகில் கிடைக்கக் கூடிய இயற்கை வசதிகளின் உதவியுடன் உருவாக்கவும், தயாரிக்கவும் கற்றுத்தருதலேயாகும். அதன்படி காடுகளில் மரங்கள் மிதமிஞ்சி வெட்டப்படுவது தவிர்க்கப் பட்டு கிராம மக்களுக்கான சுய வேலை வாய்ப்பை இந்த அமைப்பின் மூலம் உருவாக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை. காந்தியவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் மாணவர்களுள் ஒருவராக காந்தியவாதத்தின் மீது நம்பிக்கை கொண்டு சாந்தி பிரசாத் பட் இந்த இயக்கத்தை 1964 ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கி நடைமுறைப்படுத்தி வந்தார். ஆகவே அவர் உத்தரகாண்டின் இந்த மூன்று பெண்களுடன் இணைந்து இப்போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்ததில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

1974 சிப்கோ போராட்டத்தைப் பொருத்தவரை பொதுவெளியில் சமூகத்தின் முன் கவனத்தை ஈர்த்தது அந்தப் பெண்கள் எனினும், அந்தப் பெண்களுக்குத் தேவையான நெஞ்சுரத்தை அளிப்பதில் பிரதானமாக விளங்கியவர்களாக சாந்தி பிரசாத் பட்டையும் அவரது இயக்கத்தவர்களையும் தான் சொல்ல வேண்டும்.

அரசு உத்தரவின் பேரில் மரம் வெட்டிகள் ரெனி கிராமத்தின் மரங்களை வெட்டத் தொடங்கியதும், அதைக் கண்ட உள்ளூர்ப் பெண்மணியொருவர் விரைந்து சென்று அதை கிராம மகிளா சங்கத் தலைவியான  கெளரா தேவியிடம் தெரிவிக்க, கெளரா தேவியின் தலைமையில் ரெனியின் 27 பெண்கள் திரண்டு வந்து மரம்வெட்டிகளை மரங்களை வெட்ட விடாமல் ஒவ்வொருவரும் அங்கிருந்த மரங்களைச் சூழ்ந்து கட்டிப் பிடித்துக் கொண்டு கைகோர்த்து நின்றனர். இது மரம்வெட்டிகளை எரிச்சலூட்டியது. கொடுத்த காசுக்கு வேலை செய்ய விடாமல் என்ன இது? இந்தக் கிராமப் பெண்கள் இப்படித் தொல்லை செய்கிறார்களே என்று கருதி அந்த மரம் வெட்டிகள் தங்களை வேலை செய்ய விடாமல் தடுத்த பெண்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்கள், கோடாரிகளாலும், உடனிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மூலமாகத் துப்பாக்கிகளைக் காட்டி சுட்டு விடுவதாகவும் மிரட்டினர். ஆனாலும், அந்தப் பெண்கள் அஞ்சியதாகத் தெரியவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்கள் தங்களது கோர்த்த கரங்களை விடவில்லை. மரங்களைத் தங்களது குழந்தைகளாகக் கருதி அவற்றைச் சுற்றி கட்டிப் பிடித்துக் கொண்டு அரவணைத்து நின்றார்கள். அவர்கள் மரம் வெட்டிகளிடம் சொன்னது; நீங்கள் எங்களை மீறி மரங்களை வெட்ட விரும்பினால், எங்களைக் கொன்ற பிறகு தான் மரங்களைத் தொட முடியும் என்பதே! மரங்களை விட்டு விலகாவிடில் கொன்று விடப்போவதாகவும் கூட மிரட்டப்பட்டார்கள் தான். ஆயினும் அப்பெண்கள் அஞ்சவில்லை. தீரத்துடன் போராட்டத்திற்கு தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்றனர். இந்தப் பெண்களின் தீரத்தைக் கண்டு அருகிலிருந்த லதா மற்றும், ஹேமாவதி கிராமங்களைச் சார்ந்த பெண்களும் கூட இவர்களுடன் இணைந்து போராட படை திரண்டு முன்வந்தனர். நான்கு நாட்கள் விடாத போராட்டத்தின் பிறகு ஒருவழியாக மரம் வெட்டிகள் பின்வாங்கிச் சென்றனர். 

சிப்கோ போராட்டத்தில் கலந்து கொண்ட கிராமியப் பெண்கள்...

இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி சூழலியலாளர்கள் மத்தியில் ஒரு புத்துணர்வை அளித்தது. பெண்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தால் அவர்கள் அதில் வெற்றி கிடைக்கும் வரை ஓயமாட்டார்கள் என்பதற்கு இப்போராட்டம் ஒரு உதாரண சம்பவமாக விளங்குகிறது. விரைவில் இந்தப் போராட்டம் பற்றிய சேதி அன்றைய மாநில முதல்வர் ஹேம்வதி நந்தன் பகுகுணா காதுக்கும் செல்ல, சூழலை ஆராய்ந்த முதல்வரின் ஆலோசனைக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு ஆதரவாக தங்களது அறிக்கையைச் சமர்பித்தனர். இந்தப் போராட்டத்தில் அந்தப் பெண்களுக்கும் அவர்கள் சார்ந்திருந்த சிப்கோ இயக்கத்துக்கும் கிடைத்த வெற்றி உலக அரங்கில் அதன் பின் மிகுந்த கவனத்துக்கும் பாராட்டுதலுக்கும் உள்ளானது. பெண்களை, ஆண்களை விட வலிமை குன்றியவர்களென இனி எக்காரணத்தைக் கொண்டும் கருத இயலாது. தங்களது ஒற்றுமை, விடாமுயற்சி, மன உறுதி மட்டும் பிடிவாதமான போராட்ட குணத்தின் காரணமாகவும், பிற கிராமப் பெண்களையும் இப்போராட்டத்தில் ஈடுபடச் செய்யும் விதத்திலான இவர்களது தலைமைப் பண்பையும் கண்டு உலகமே வியந்து பாராட்டியது.

அப்போராட்டம் நடந்து முடிந்து இன்றோடு 45 வருடங்கள் முடிந்து விட்டன. ஆனாலும் சூழல் பாதுகாப்புக்காக நாம் இப்போதும் போராடிக் கொண்டே இருக்க வேண்டிய நிலை தான் நீடிக்கிறது. ஒரு பக்கம் மக்களில் ஒருசாரர் சூழல் சமநிலை பற்றிய விழிப்புணர்வே இன்றி மரங்களை வெட்டிக் குவித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். மறுபுறம் சூழலின் மீது மிகுந்த அக்கறை கொண்டு தங்கள் மொத்த வாழ்நாளையும் சூழலியல் போராட்டங்களுக்காக அர்ப்பணித்து விட்டு போராடித் தீர்க்கும் மனிதர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கான பாராட்டு என்பது இப்படி டூடுல் வெளியிட்டுச் சிறப்பிப்பதோடு நின்று விடாமல் உலக மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தனித்தனியாக சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்து விட்டால் அது உலகின் மிகச்சிறந்த பாராட்டாகக் கருதப்படலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com