வடுகபட்டி பூண்டு - தமிழகத்தின் மிகப்பெரிய பூண்டுச்சந்தை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!

வடுகபட்டியின் பூண்டு சந்தைதான் தமிழ்நாட்டில் பெரிய பூண்டு சந்தை. இந்த ஊருக்குள் நுழைந்தாலே வெள்ளைப் பூண்டின் மணம் காற்றில் கலந்து வாசத்தை அள்ளி வீசுகிறது.
வடுகபட்டி பூண்டு - தமிழகத்தின் மிகப்பெரிய பூண்டுச்சந்தை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!

பூண்டு...

நம்மூரில் வாயுத் தொல்லை என்றால் சட்டென்று வீட்டில் பூண்டு ரசம் வைத்து கொடுத்தால் டக்கென்று கேட்கும் என்பார்கள், நமக்கு பூண்டை பற்றி தெரியும் இவ்வளவு தான் தெரிந்திருக்கக் கூடும். ஆனால், இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தில் பூண்டைப் பற்றி என்னென்ன அதிசயமான தகவல்களை எல்லாம் தெரிந்து கொண்டேன் தெரியுமா?! பொதுவாக ஒரு ஊரில் விளையும் பொருட்களுக்கு மட்டுமே அங்கு சந்தை இருக்கும், உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஈரோடு மஞ்சள், போடி ஏலக்காய், ஊத்துக்குளி வெண்ணை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று, இதனால் நீங்கள் ஊருக்குள் நுழையும் முன்பாக வயலில் இறங்கினால் அந்த விளைபொருட்களை பார்க்கலாம், பின்னர் சந்தைக்குச் சென்று வாங்கலாம். ஆனால், வடுகபட்டியில் பூண்டு விளையவில்லை, ஆனாலும் இங்கே பூண்டுச் சந்தை என்பது பேமஸ் என்றால் அதிசயம் இல்லாமல் வேறென்ன! பொதுவாக வீட்டின் சமையல் அறையில் பூண்டு என்பது மிகவும் கொஞ்சமாக இருக்கும், வெள்ளை வெளேரென்று இருக்கும் பூண்டை உரித்து ரசத்திலும், குழம்பிலும் போடும்போது இரண்டே இரண்டு மட்டும் போடுவார்கள், ஆனால் மூட்டை மூட்டையாக பூண்டை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? ஊருக்குள் நுழைந்தாலே பூண்டு வாசனை தூக்குகிறது... அந்த வாசனையோடு பூண்டு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோமே...

இந்த ஊரின் இன்னொரு சிறப்பு இது கவிஞர் வைரமுத்துவின் பிறந்த ஊர்!

வடுகபட்டி, வத்தலக்குண்டுக்கும் பெரியகுளத்துக்கும் இடைப்பட்ட ஊரான தேவதானப்பட்டி வழியாகவும், தேனி - பெரியகுளம் வழியாகவும் வடுகபட்டிக்குச் செல்ல முடியும். வடுகபட்டியின் பூண்டு சந்தைதான் தமிழ்நாட்டில் பெரிய பூண்டு சந்தை. இந்த ஊருக்குள் நுழைந்தாலே வெள்ளைப் பூண்டின் மணம் காற்றில் கலந்து வாசத்தை அள்ளி வீசுகிறது. ஊருக்குள் நுழைவதற்கு முன் அங்கு இருந்த வயல் வெளிகளில் பூண்டுச் செடியை தேடி அலைந்தோம். இதற்கு முன்னே பூண்டுச் செடி பார்த்ததில்லை, அதனால் எந்த செடியை பார்த்தாலும் இதுதான் பூண்டுச் செடி என்று நான் தேடிக்கொண்டு இருக்க, அதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் ஒருவர் என்ன தேடறீங்க என்று கேட்க, பூண்டுச் செடி என்றபோது அவர் அது இந்த ஊரிலேயே இல்லையே என்று சொல்ல குழப்பம் ஆரம்பம் ஆனது. இந்த ஊரில்தான் தமிழ்நாட்டின் பெரிய பூண்டு சந்தை இருக்கு, ஆனால் இந்த ஊரில் பூண்டு விளைவிப்பதில்லை... என்ன குழப்பம் இது?!

கொடைக்கானல் மலைப்பகுதியான வில்பட்டி, பூம்பாறை, கூக்கால், மன்னவனூர், பூண்டி கிராமங்களில் 650 எக்டேர் பரப்பில் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு சந்தை வசதியும், அதை வாங்கும் அளவுக்கு மக்கள் தொகையும் இல்லாததால், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இரண்டு தலைமுறைக்கு முன்பு வடுகபட்டிக்கு அருகில் இருக்கும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த பூண்டை அங்குள்ளவர்கள் கீழ்ப்பகுதிக்கு கொண்டுவந்து, இங்கு வாழ்ந்த மக்களிடம், வெற்றிலை, அரிசி, தேங்காய், பருப்பு போன்ற தானிய வகைகளுக்கு, 'பண்டமாற்று’ முறைப்படி மாற்றிக்கொண்டார்கள். இப்படி மாற்றத்தொடங்கிய சந்தை நாளடைவில் ஏற்றுமதியாகும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. பூண்டு சந்தை என்றவுடன் பெரிய பெரிய கட்டிடங்கள், வீதிகள் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம், ஒரு சிறு வீதி... பூண்டு சந்தை வீதி என்று கேட்டால் எல்லோரும் சொல்கிறார்கள். ஒவ்வொரு வியாழனும், ஞாயிறும் சந்தை நடைபெறும் அப்போது இந்த தெருவில் எள் போட இடமிருக்காது என்கிறார்கள்.

பூண்டு என்பது தாவர வகைகளுள் ஒன்று. இவை உறுதியில்லாத, ஒடிசலான, பெரும்பாலும் பச்சை நிறம் கொண்ட தண்டுகளுடன் கூடியவை. பூண்டுச்செடிகள் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை. இவை பருவகாலத் தாவரங்கள். நிலத்துக்கு மேல் உள்ள இதன் பகுதிகளான இலை, தண்டு என்பன குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே காணப்படும். அதன் பின்னர் அவை அழிந்து விடுகின்றன. பூண்டு ஒரு பலபருவப் பயிராகும். மேல் மலைப்பகுதிகளில் பூண்டு இரு பருவங்களில் பயிர் செய்யலாம். கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 2000 மீட்டர் உயர இடங்களில் சாகுபடி செய்யலாம், இதனால்தான் தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் மட்டுமே வளர்கிறது, இதைச் சந்தைபடுத்த முன்னொரு காலத்தில் வடுகபட்டிக்கு வந்ததால் இன்று வடுகபட்டி பூண்டு என்று ஆகிவிட்டது! பயிர் வளர்ச்சிப் பருவத்தில் குளிர்ச்சியான ஈரப்பதம் நிறைந்த வெப்பநிலையில் முற்றும் நிலையில் உலர்ந்த வெப்ப நிலையில் இருப்பது அவசியம். பூண்டு முற்றுகின்ற தருணத்தில் நீண்ட வெப்ப நாள் இருப்பது நல்லது. அதிக வெப்பம் மற்றும் கடுமையான பணி பூண்டுக்கு ஏற்றதல்ல. பூண்டு  இருமண்பாடுகள் வடிகால் வசதியுடன் கூடிய நிலத்தில் நன்கு வளரும். மணற்சாரி மண்ணாக இருந்தால் பூண்டிற்கு சிறப்பான நிறம் கிடைப்பதில்லை. ஆண்டு தோறும் 3300 டன் பூண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. பூண்டு பயிர் சாகுபடியில் 3000 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 

1.   மூலிகையின் பெயர் -: பூண்டு.
2.   வேறு பெயர்கள் -: வெள்ளைப்பூண்டு.
3.   தாவரப்பெயர் -: ALLIUM SATIVUM.
4.   தாவரக்குடும்பம் -: AMARYLLIDACEAE.

ஊரின் உள்ளே நுழைந்து சந்தைத் தெருவை தேடி கண்டுபிடித்து இதுவா அதுவா என்று யோசிக்கும்போதே பூண்டு வாசனை இந்த தெருதான் என்று வழி காட்டுகிறது. நாங்கள் சென்றிருந்த போது ஒரு லாரியில் இருந்து பூண்டை இறக்கி கொண்டு இருந்தனர். இன்றைக்கு மிகப் பெரிய பூண்டு வர்த்தக மையமாக மாறியிருக்கும் இந்த சந்தைக்கு  மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற நமது மலைப்பிரதேசங்களில் இருந்தும் ரகம், ரகமாய் பூண்டுகள் வடுகபட்டிக்கு வந்து குவிந்து மொத்தமாக விற்பனையாகி வருகிறது. என்னதான் வெளிமாநிலங்களிலிருந்து வெள்ளைப் பூண்டு இங்கு வந்து குவிந்தாலும், கொடைக்கானல் பள்ளத்தாக்குப் பகுதியில் விளையும் மலைப்பூண்டுதான், மார்க்கெட் விலையைத் தீர்மானிக்கிறது. பூண்டு வகைகளைப் பற்றி கேட்டால் சொல்லி கொண்டே போகின்றனர், நிறைய வகை இருந்தாலும் உள்ளூர் வகைகள் என்பது சிங்கப்பூ சிகப்பு, ராஜாளி மற்றும் பர்வி, காடி. பூண்டை மூன்று வகையாக வியாபாரத்திற்கு பிரிக்கின்றனர், முதல் ரகம் என்பது கொடைக்கானல் பூண்டு, இரண்டாம் ரகம் என்பது ஊட்டி பூண்டு, மூன்றாம் ரகம் என்பது ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ், உத்தரப் பிரதேஷ் காஷ்மீர், சீனா பகுதிகளில் இருந்து வருவது. மற்ற மாநில பூண்டுகள் வெள்ளை நிறத்திலும், நம்மூர் மலைப்பூண்டுகள் பழுப்பு நிறத்தில் மண் வாசத்தோடும் இருக்கும்.

பூண்டு செடி என்று சொல்லும்போது இது விதை போட்டு வளரும் தாவர வகை. விதையை விதைத்து அது வளர ஆரம்பிக்கும்போது வெங்காயம் போல மண்ணுக்கு அடியில் பூண்டு வளரும். ஒரு செடிக்கு ஒரு பூண்டு மட்டுமே, அது நன்கு வளர்ந்தவுடன் அந்த செடியில் இருந்து நீல நிறத்தில் பூ பூக்கிறது, அந்த பூ சிறிது சிறிதாக பூண்டு விதைகளை தருகிறது. அந்த விதைகளையே மீண்டும் போட்டு பூண்டு வருகிறது. பூண்டு செடியை பார்க்கும்போது ஆனந்தம்தான் !!

இப்படி வளரும் பூண்டை மலைப்பூண்டு, நாட்டுபூண்டு என்று இரு வகை கொண்டு இங்கே பிரிக்கின்றனர். அதிலும் வட நாடு, கொடைக்கானல், சீனா பூண்டு என்று வகைகள் உண்டு. இப்படி அறுவடை செய்யப்படும் பூண்டை 30 kg, 50 kg மூட்டைகளில் கட்டி லாரியில் ஏற்றி இந்த சந்தைக்கு அனுப்பி விடுகின்றனர். சந்தைக்கு செல்வதற்கு முன் இங்கே பூண்டுகளை கசடு நீக்கி, பெரியது சிறியது என்றெல்லாம் பிரிக்கின்றனர். மீண்டும் அதை மூட்டையாக கட்டி முடித்தால் பூண்டு சந்தைக்கு ரெடி.

ஒரு கிலோ மலை பூண்டு என்பது இங்கு 90 ரூபாய்க்கு மொத்த வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது, நாட்டுப்பூண்டு என்பது அறுபது ரூபாய் ஆகிறது. இதில் சில்லறைக்கு வாங்குபவர்களுக்கு மலைப்பூண்டு 160 ரூபாய், நாட்டு பூண்டு 100 ரூபாய் !! ஒரு ஏக்கருக்கு சுமார் பத்தில் இருந்து பதினைந்து டன் வரை பூண்டு கிடைக்கும், கிலோ நூறு ரூபாய்க்கு என்று வைத்தாலும் உங்களுக்கு நான்கு லட்சம்! சரி, பூண்டை விளைவிப்பது எப்படி? பூண்டு செடி நமது வெங்காய செடியை போலதான், வேரில் காய்ப்பது. அதை வெட்டி எடுத்தால் பூண்டு, மேலே பூக்கும் பூ சிறிய விதைகளாக இருக்கும் அதை நட்டு வைத்தால் மீண்டும் பூண்டு ரெடி! பூண்டைப் பறித்து, சுத்தப்படுத்தி, லாரியில் ஏற்றி அனுப்பி வைக்க... மீதி எல்லாம் லாபம்தான் !! 

பூண்டு என்பது மருத்துவ குணம் கொண்டது மட்டும் இல்லாமல், அதை வகை வகையாக உட்கொள்ளலாம்! பூண்டு பல்லாக, காய வாய்த்த பொடி பூண்டாக, பூண்டு பொடியாக என்று. இதில் மருத்துவ குணம் இருப்பதால் சில மருந்து கம்பெனிகளும் இந்த சந்தையில் இருந்து நல்ல பூண்டுகளை எடுத்து செல்கின்றனவாம்.

பூண்டில் என்னென்ன மருத்துவ குணம் இருக்கிறது என்று தெரியுமா ?

  • வியற்வையைப் பெருக்கும்,
  • உடற்சக்தியை அதிகப்படுத்தும்,
  • தாய்பாலை விருத்தி செய்யும்,
  • சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்,
  • சீரண சக்தியை அபிவிருத்தி செய்யும்,
  • இரத்த கொதிப்பைத் தணிக்கும்.
  • உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
  • இதய அடைப்பை நீக்கும்.
  • நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும்.
  • ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு.
  • பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.
  • தொண்டைச் சதையை நீக்கும்.
  • மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
  • மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும்.
  • பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது.
  • சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.
  • மூட்டு வலியைப் போக்கும்.
  • வாயுப் பிடிப்பை நீக்கும்.
  • இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.

கட்டுரையாளர்: சுரேஷ்குமார்

Article courtesy: www.kadalpayanangal.com

டிஸ்கி: இணையத்தில் வாசித்துக் கொண்டிருக்கையில் கூகுள் வழியாக இந்தக் கட்டுரை கிடைத்தது. கட்டுரையாளர் கடல்பயணங்கள் என்றொரு வலைத்தளத்தில் சுவாரஸ்யமான பல விஷயங்களைப் பற்றி எழுதி வருகிறார். பயனுள்ள கட்டுரை எனத் தோன்றியதால் தினமணி இணையதளத்தில் பகிர்ந்துள்ளோம். கட்டுரையாளருக்கு ஆட்சேபமிருந்தால் கட்டுரை உடனடியாக நீக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com