‘நோ’ சொல்லும் பெண்களை கழுத்தறுத்துக் கொன்று விடும் கலாச்சாரம்! அஸ்வினி கொலைக்கான நீதி என்ன?

உனக்குப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ ஒருமுறை ஒருவனைக் காதலிக்கத் தொடங்கி விட்டால் அவன் நல்லவனோ, கெட்டவனோ அவனுடன் தான் வாழ்ந்தாக வேண்டும், இல்லாவிட்டால் கொலை செய்யப்படுவீர்கள்
‘நோ’ சொல்லும் பெண்களை கழுத்தறுத்துக் கொன்று விடும் கலாச்சாரம்! அஸ்வினி கொலைக்கான நீதி என்ன?

சுவாதி கொலையைப் போலவே அஸ்வினி கொலை எழுப்பிய திகிலும் பரபரப்பும் அவ்வளவு தானா?

கடந்த வாரம் சென்னை மீனாட்சி கல்லூரி வாயிலில் வைத்து அழகேசன் என்பவனால் குத்திக் கொல்லப்பட்ட மாணவி அஸ்வினி குறித்துப் பேசுவதை ஊடகங்கள் நிறுத்திக் கொண்டன. ஊடகங்களுக்கு அடுத்த பரபரப்புச் செய்தியாக தேனி குரங்கணி காட்டுத்தீ சிக்கிவிட்டது. இன்று புரட்சித் தலைவர் டிடிவியார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி அடுத்த பரபரப்பை கிளப்பியிருக்கிறார். ஊடகங்கள் இப்படி பரபரப்புச் செய்திகளின் பின்னால் ஓடுவதில் தவறில்லை. ஆனால், முக்கியத்துவம் அளிக்க வேண்டிய செய்திகளை மறக்கடிக்கும் அளவுக்கு அடுத்தடுத்த செய்திகளைக் கடைபரப்பி சாதாரண பொது ஜனங்களின் மூளையை மழுங்கடிக்க முயற்சிக்கக் கூடாது. 

ஒரு இளம்பெண், தான் பயின்று கல்லூரி வாயிலில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். குத்திய இளைஞனுக்கும் அவளுக்கும் முன்பு காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒருவரையொருவர் விரும்பிய நிலையில் அந்த இளைஞனின் போக்கு அஸ்வினிக்குப் பிடிக்காமல் போனதால், அவரை விட்டுப் பிரிய நினைக்கிறார். அதற்குள், அந்த இளைஞன் கட்டாயத்தாலி கட்டியதால் அதை வீசி எறிந்த அஸ்வினி விஷயத்தை தனது அம்மா மற்றும் உறவினர் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறார். அவர்கள் அழகேசனைக் கூப்பிட்டுக் கண்டிக்க காவல்துறையை நாடுகிறார்கள். காவல்துறை பஞ்சாயத்தில் அழகேசன் எச்சரிக்கப்பட்டு அஸ்வினியின் வாழ்வில் தலையிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் வெளியில் விடப்படுகிறான். இத்தனையும் ஐந்தாறு மாத இடைவெளியில் நடந்து முடிகிறது. 

காவல்துறை எச்சரிக்கைக்குப் பிறகும் கூட அஸ்வினிக்கு அழகேசனால் தொல்லை இருந்திருக்கிறது. அதனால் தான், தனது வீடு இருந்த மதுரவாயல் பகுதியில் இருந்து நுங்கப் பாக்கத்தில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறார் அஸ்வினி. சம்பவ தினத்தன்று கூட அங்கிருந்து தான் கல்லூரிக்கு வந்திருக்கிறார். ஆனால் மீண்டும் வீடு திரும்ப வகையின்றி விதி அழகேசன் ரூபத்தில் அவரது வாழ்வை முடித்து விட்டது.

மக்கள் நடமாட்டம் நிறைந்த கேகே நகர்ப் பகுதியில், பிரபலமான ஒரு பெண்கள் கல்லூரி வாயிலில் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்தக் கொலைக்கான பரபரப்பு இன்று ஓய்ந்து விட்டிருக்கலாம்.ஆனால் அது பெண்கள் மத்தியில் எழுப்பிய அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதில் இந்தச் செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்த போது அதற்கு வந்த கருத்துக்களில் சில மேலும் அதிர வைக்கின்றன.

பெண் பெயரிலான ஒரு முகநூல் கணக்கிலிருந்து வந்திருந்த கருத்துரை இது;

அஸ்வினியைக் கொன்றால் தப்பில்லை என்று பொங்கியிருக்கிறார் இவர். 

காதலித்திருந்தாலும் கூட ஒரு பெண் தனக்குப் பிடிக்காத ஆணை சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமா? அந்த உறவிலிருந்து வெளிவர அவளுக்கு உரிமையில்லையா? அஸ்வினி செய்தது அதைத்தானே? சொல்லப்போனால், இந்த உலகில் லட்சோப லட்சம் ஆண்கள் தங்களது வாழ்வில் முன்பும், இப்போதும் செய்து கொண்டிருக்கும் அதே புறக்கணிப்பை அல்லது விருப்பமின்மை உணர்வைத்தானே அஸ்வினியும் காட்டினார். பிறகு அவர் மட்டும் ஏன் கொல்லப்பட வேண்டும்?! இதிலிருந்து அழகேசனையொத்த ஆண்களின் உலகம் நிறுவ நினைப்பது எதை?!

உனக்குப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ ஒருமுறை ஒருவனைக் காதலிக்கத் தொடங்கி விட்டால் அவன் நல்லவனோ, கெட்டவனோ அவனுடன் தான் வாழ்ந்தாக வேண்டும், இல்லாவிட்டால் கொலை செய்யப்படுவீர்கள் என்ற வன்முறையையையா? மறுக்கும் உரிமை ஒரு பெண்ணுக்கு இல்லையா? பிறகு ஏன் அவனைக் காதலித்தாள் அஸ்வினி என்று கேட்டு விடாதீர்கள்? அந்தப் பெண்ணுக்கு முதிர்ச்சியான வயதில்லை. 17 வயதில் தனக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு மனமுதிர்ச்சி இல்லை.

எல்லா இளம்பெண்களையும் போலவே அஸ்வினியும் தான் வாசித்த ரொமாண்டிக் நாவல்களில் இருந்தும், பார்த்த சின்னத்திரை நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்தும் கூட தனக்கான காதலின் இலக்கணத்தை தவறாகப் புரிந்து கொண்டிருந்திருக்கலாம். அப்படியான நிலையில் அவர் வீட்டு வேலை செய்யும் தனது தாயாரின் விருப்பத்தின் பேரில் தனக்கென பிறிதொரு நல்ல வாழ்க்கையைத் தேடிக் கொள்ள விரும்பியதை எப்படித் தவறெனக் கூற முடியும்? இந்த உலகில் காதல் மட்டுமே மொத்த வாழ்க்கையுமாக ஆகி விட முடியாது. அதைத் தாண்டியும் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. 

காதல் வெற்றிகரமாகக் கல்யாணத்தில் முடிய வேண்டும்.

பிறகு இணைந்து வாழ வேண்டும். இந்த இணைந்து வாழ்தல் எனும் நிலை வரும் போது தான் இருவரது சுயரூபங்களும் வெளியில் வரும். நீ எனக்குப் பொருத்தமில்லை, போயும் போயும் உன்னைப் போய்த் திருமணம் செய்தேன் பார்?! எனக்குப் பொருத்தமானவனா நீ? என்று சாஃப்டாகத் தொடங்கி பாலாவின் நாச்சியார் படத்தில் பயன்படுத்தப்பட்ட கண்டனத்திற்குரிய வசைச் சொல் வரை எல்லாமும் இருவருக்குள்ளும் பரிமாறப்பட்டு சில ஜோடிகளில் சண்டை தூள் பறக்கலாம். இந்த புருஷன், பெண்டாட்டி சண்டை சச்சரவுகள் எல்லாம் காதல் திருமணத்தில் மட்டுமா? ஏன் பெற்றோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் திருமணங்களில் இல்லையா? என்று கேட்கலாம். இருக்கிறது... அங்கும் சண்டை, சச்சரவுகள் நிறையவே இருக்கத்தான் செய்கிறது. அதனால் தான் குடும்ப நல நீதிமன்றங்கள் நாள் தோறும் நிரம்பி வழிகின்றன. 

மொத்தத்தில் காதலித்த பெண்ணோ அல்லது கட்டிய மனைவியோ ஒரு ஆணை ஏன் வெறுக்கத் தொடங்குகிறாள்? என்று ஆராய்ந்தாலே போதும் இப்படியான கொலைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டி விடலாம். ஆனால், ஆண்கள் யோசிக்க மறுக்கிறார்கள். காதலிக்கும் போதும் சரி, அந்தக் காதல் கல்யாணத்தில் முடிந்து இல்லறத்தின் போதும் சரி ஆணின் தவறுகளை எல்லாம் அனுசரித்து விட்டுக் கொடுத்து அவனது கோபதாபங்களுக்கு இலக்காகி சாப்பாடு முதல் படுக்கை வரை சகல விஷயங்களிலும் அவனது விருப்பங்களுக்கு ‘நோ’ சொல்லாமல் காலம் தள்ளும் பெண்களை மட்டுமே அவர்கள் பெண்மையின் இலக்கணமாகக் கருதுகிறார்கள். அப்படியில்லாமல் ஒரு பெண், காதலியாக இருக்கும் போதும் சரி, கல்யாணத்திற்குப் பின் மனைவியாக இருக்கும் போதும் சரி, காதலனது, கணவனது குறைகளை அடையாளம் கண்டு அவனோடு வாழ மறுத்தால் கழுத்தறுத்தோ, அரிவாளால் வெட்டியோ, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தோ கொலை செய்து விட வேண்டியது தானா?

காதலிக்கும் பெண்ணோ அல்லது மனைவியோ நம்பிக்கைத் துரோகம் செய்வதாக ஆண்களுக்குத் தோன்றினால் இடையில் வேறு பேச்சுக்கே இடமின்றி அந்தப் பெண்ணை கொல்வது தான் நீதியா?

காதலித்த பெண் காதலை மறுத்தால் கொலை என்பது இங்கு முதல்முறையல்ல. பலமுறை தமிழ்நாட்டில் இந்தக் கொடூரங்கள் அரங்கேறி இருக்கின்றன. 

அஸ்வினியின் கல்விச் செலவுக்காக சுமார் 2.50 வரை அழகேசன் செலவளித்ததாக ஒரு வீடியோ பதிவில் கூறப்பட்டிருக்கிறது. அந்தப் பெண் இப்போது தான் கல்லூரி முதல் வருடம் படிக்கிறார். பி.காம் பொருளாதாரம் பயில 27,000 தான் கல்லூரிக் கட்டணம் அதை நானோ அவளது பெரியப்பாக்களோ கட்டியிருக்க மாட்டோமா? எப்படி இப்படியெல்லாம் பொய் சொல்கிறார்கள்? என் மகளுக்கு நான் தான் கல்லூரிக் கட்டணம் செலுத்தினேன் என்று அழுது புரள்கிறார் அஸ்வினியின் தாய். அப்படியே அஸ்வினி அழகேசனை காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி இருந்தாலும் பதிலுக்கு அவரது உயிரைப் பறிப்பது எந்த விதத்தில் காதலில் சேர்த்தி? குறைந்த பட்ச மனிதத் தனம் கூட இல்லையே அவரது செயலில், இப்படி ஒரு மனிதனைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததில் என்ன தவறிருக்க முடியும்?

இனி என்ன கேள்வி கேட்டு என்ன? பரிதாபமாக கல்லூரி வாயிலில் வைத்து துள்ளத் துடிக்கப் பறிபோன உயிர் பறிபோனது தான்.

முடிவாக தமிழகத்தில் காதலை மறுக்கும் பெண்களை இப்படித்தான் தண்டிக்க வேண்டும் என்றொரு கலாச்சாரம் பரவ இது ஒரு முன்னுதாரணமாகி விடக் கூடாது என்ற அச்சம் மட்டுமே மிஞ்சுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com