குழந்தைகளுக்கு போதை மருந்து அளித்து தூங்கச் செய்த டே கேர் பெண்மணிக்கு 21 ஆண்டுகள் சிறை!

குழந்தைகளை டே கேரில் (குழந்தை காப்பகத்தில்) விடுவது தவறில்லை. ஆனால், அப்படி விடுமுன் காப்பகம் நிஜமாகவே நல்லவர்களால் தான் நடத்தப்படுகிறதா? நடத்துபவர்கள் மேல் குற்றப் பின்னணி எதுவும் உண்டா என்றெல்லாம்
குழந்தைகளுக்கு போதை மருந்து அளித்து தூங்கச் செய்த டே கேர் பெண்மணிக்கு 21 ஆண்டுகள் சிறை!

வாஷிங்டனில் சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் வைத்து நடத்திக் கொண்டிருந்த பெண்ணொருத்தி கண்டுபிடிக்கப்பட்டு ஆதாரங்களுடன் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். எப்படி தெரியுமா?

32 வயதான நெதர்லின் எனும் பெண், லிட்டில் கிக்லர்ஸ் என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். அவரது காப்பகத்தில் குழந்தைகளை ஒப்படைக்கும் பெற்றோரிடம் நெதர்லின் கண்டிப்புடன் வளியுறுத்தும் நிபந்தனைகளில் ஒன்று, எந்தக் காரணத்தை முன்னிட்டும் காலை 11 மணி முதல் பிற்பகம் 2 மணீ வரை குழந்தைகளை அழைத்துச் செல்ல காப்பகத்துக்கு வரக்கூடாது என்பது! அந்த 3 மணி நேர இடைவேளை என்பது குழந்தைகள் உறங்குவதற்கான நேரம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அடடா! தங்களது குழந்தைகளின் உறக்கத்தில் தான் இந்த காப்பகப் பொறுப்பாளருக்கு எத்தனை அக்கறை என்று தான் முதலில் பெற்றோர்கள் அனைவரும் நினைத்திருந்தனர். 

ஆனால், உண்மையில் அந்த நேரத்தில், நெதர்லின் செது கொண்டிருந்தது முழுக்க முழுக்கத் தனது சொந்த வேலைகளை. அந்த நேரத்தில் தான் அவர் தனது வெளுத்துப் போன உடலை சூரியனுக்குக் காட்டி மாநிறமாக மாற்ற முயற்சிக்கும் நேரம் என்கிறார்கள் சிலர், சிலரோ, அவர் அந்த நேரத்தில் தான் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார் என்றார்கள். ஆனால் காவல்துறை ஆய்வில் தெரிய வந்தது என்னவென்றால், அந்த நேரத்தில் நெதர்லின் தனது சொந்தக் குழந்தைகளை பள்ளியில் இருந்து பிக் அப் செய்து கொண்டு வரும் நேரம் என்று தெரிய வந்திருக்கிறது.

அந்த நேரத்தில், தான் பணம் பெற்றுக் கொண்டு பொறுப்பேற்றுக் கொண்ட குழந்தைகளை காப்பகத்தில் தனியே விட முடியுமா? குழந்தைகள் விழிப்புடன் இருந்தால் தானே இந்தப் பிரச்னை எல்லாம்?! பேசாமல் குழந்தைகளுக்கு மெலட்டோனின் எனும் போதை வஸ்துவை கலந்து அளித்துத் தூங்கச் செய்து விட்டால், விட்டது தொல்லை. எல்லாமே 1 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தானே; அவர்கள் பாட்டுக்கு போதை மயக்கத்தில்  தூங்குவார்கள். அதற்குள் தனது சொந்த வேலைகளையும் முடித்து விடலாம் என நெதர்லின் திட்டம் போட்டிருக்கிறார். அதைச் சில நாட்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வந்திருக்கிறார். தனது காப்பகத்தில் குழந்தைகளைச் சேர்க்கும் நோக்கில் அணுகிய பெற்றோரிடத்தில் ‘தானொரு அரசு அங்கீகாரம் பெற்ற பதிவு செய்து கொண்ட செவிலி என்று கூறி நம்ப வைத்திருக்கிறார். இதை நம்பித்தான் பெரும்பாலான பெண்கள் நெதர்லினின் காப்பகத்தில் தங்களது குழந்தைகளைச் சேர்த்துள்ளனர்.

ஒருவழியாக நெதர்லினின் குற்றங்கள் கண்டறியப்பட உதவியாக இருந்தது அவரது முன்னாள் ஆண் நண்பர் ஒருவரே!

2007 ஆம் ஆண்டு வாக்கிலேயே அடையாளத் திருட்டு மற்றும் ஆள்மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதாக நெதர்லினின் மீது கிரிமினல் ரெக்கார்டு இருக்கிறதாம். அது மட்டுமல்ல, தனத் இரு கூட்டாளிகளுடன் இணைந்து தனது தேவைகளுக்காக சுயநலமாக அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யவிருக்கிறாள் என்பது போன்ற ரெகார்டுகளையும் அவள் பராமரித்து வந்திருக்கிறாள்.

தற்போது மனதில் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடிய நெதர்லினின் மோசமான குற்றத்துக்காக அவளுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்களில் சிலர், இவளை வெளியே விடவே கூடாது, மொத்தமாகச் சிறையில் தள்ளுங்கள் என்றும் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளியுங்கள் என்றும், வாதிட நீதிபதி என்னவோ, நெதர்லினை கடுமையாக எச்சரித்து விட்டு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்துள்ளார்.

கொஞ்சமும் மெலட்டினின் பின்விளைவுகள் குறித்த தெளிவின்றி. மிக மோசமாகத் தனது சுயநலத்துக்காக ஒன்றும் அறியாப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நெதர்லின் மெலட்டினின் போதை மருந்து அளித்ததால் குழந்தைகளுக்கு உயிரிழப்பு ஏற்படவில்லையே தவிர பிற பாதிப்புகள் நிறையவே இருக்கத்தான் செய்கின்றனவாம். சில குழந்தைகளுக்கு உடல் முழுதும் தடிப்புத் தடிப்பாக பூச்சி கடித்தது போன்ற தளும்புகள், சில குழந்தைகளுக்கு தூக்க சுழற்சி மாறுபட்டு சதா அழுகையால் மோசமான உடல் மெல்வு, முகம் வெளுத்து சோகையாக மாறுதல், உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றனவாம். அந்தக் குழந்தைகள் இயல்பு நிலையை அடைய சில வருட தொடர் மருத்துவக் கண்காணிப்பு தேவை என்கிறார்கள் மருத்துவர்கள்.

இத்தனை நடந்தும் நெதர்லின், நீதிமன்ற விசாரணையின் போது, நான் எனது காப்பகத்தில் இருந்த குழந்தைகளை என் சொந்தக் குழந்தைகள் போலத்தான் பாவித்தேன். அவர்கள் மீது உண்மையான அக்கறையோடு தான் கவனித்துக் கொண்டேன். குழந்தைகளுக்கும் என்னைக் கண்டால் மிகவும் பிடிக்கும் ‘ என்று அப்பாவியாகத் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறாள்’

நெஞ்சு பதறத்தான் செய்கிறது. இப்படியும் சில அரக்கிகள் குழந்தைகள் காப்பகம் நடத்துகிறேன் என்ற பெயரில் வந்து சேர்ந்தால் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியவர்கள் பெற்றோர்களான நாம் தான். நமது குழந்தைகளின் பொறுப்பை எவரிடமேனும் ஒப்படைக்கிறோமெனில் தொடந்து அவர்களை நமது கண்காணிப்பில் வைத்திருப்பதும் அவசியமாகிறது.

இது இப்படி என்றால் பல வருடங்களுக்கு முன் பெங்களூரில், வீட்டோடு இருந்து குழந்தையை கவனித்துக் கொள்ள வந்த கிராமப் புறத்துப் பெண்ணொருத்தி... குழந்தையின் பெற்றோர் இருவரும் வேலைக்குக் கிளம்பியதும் அவர்கள் திரும்பி வரும் வரையிலான இடைவெளியில் குழந்தையை அவளுக்குத் தெரிந்த பிச்சைக்காரி ஒருத்தியிடம் கொடுத்து தூக்க மருந்து அளித்து தோளில் சார்த்திக் கொண்டு சிக்னல், சிக்னலாகப் பிச்சையெடுக்க விட்டு பணம் சம்பாதித்திருக்கிறார். 

வீட்டில் குழந்தைக்காக பெற்றோர் செய்து வைத்த குளிர்சாதன வசதி, சத்தான ஆகார வசதி, எக்ஸ்ட்ரா சத்துணவுகள், பழங்கள் அனைத்தையும் உண்டு கொழுத்ததோடு போனஸாகக் குழந்தையைப் பிச்சையெடுக்க வாடகைக்கு விட்டதில் வேறு அந்தக் கிராதகிக்கு நல்ல வருமானம். 

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் எனும் பழமொழிக்கிணங்க இவளும் ஒருநாள் பிடிபட்டாள். ஆனால், அந்தக் குழந்தையின் பெற்றோரது மனநிலையை யோசித்துப் பாருங்கள். எத்தனை வலித்திருக்கும்! இப்படி ஒரு அரக்கியிடம் குழந்தையை விட்டுவிட்டு இத்தனை நாட்கள் நிம்மதியாக அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தோமே? குழந்தை அப்போதெல்லாம் தூக்கமாத்திரை மயக்கத்தில் சிஞல், சிக்னலாக எவளோ ஒரு பிச்சைக்காரி கைகளில் கிடந்திருக்கிறதே? இதற்காகவா நாம் சம்பாதித்துக் கிழிக்கிறோம் என்ற ஆத்திரத்திலும், சுய பச்சாதாபத்திலுமாக அந்தக் குழந்தையின் தாய் தனது வேலையை உடனடியாக ராஜினாமா செய்து விட்டு வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளத் தொடங்கினார்.

குழந்தைகளை டே கேரில் (குழந்தை காப்பகத்தில்) விடுவது தவறில்லை. ஆனால், அப்படி விடுமுன் காப்பகம் நிஜமாகவே நல்லவர்களால் தான் நடத்தப்படுகிறதா? நடத்துபவர்கள் மேல் குற்றப் பின்னணி எதுவும் உண்டா என்றெல்லாம் ஒன்றுக்குப் பலமுறை யோசித்த பின்னரே நமது குழந்தைகளை ஒப்படைக்க வேண்டும்/ இல்லா விட்டால் மேலே குறிப்பிட்டுள்ளபடி மனம் நொந்து வருத்தப்படப்போவதும் நாமே தான். அதனால் பெற்றோர்களே! அவரவர் குழந்தைகள் விஷயத்தில் எப்போதுமே எச்சரிக்கையாக இருங்கள்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com