டிடிவி தினகரன் நன்றி சொல்ல விரும்பினா முதல்ல இந்த ஃப்ரெஞ்சுக்காரருக்கு தான் சொல்லனும்!

இதுவரை மக்களின் அத்யாவசியத் தேவைகளில் ஒன்றாக இருந்த குக்கர் இப்போது அரசியல்வாதிகளின் தேர்தல் தேவையாகவும் மாறி விட்டது சுவாரஸ்யமான கதை தான்
டிடிவி தினகரன் நன்றி சொல்ல விரும்பினா முதல்ல இந்த ஃப்ரெஞ்சுக்காரருக்கு தான் சொல்லனும்!

தேர்தல் சின்னமான பிரஸ்ஸர் குக்கர்...

உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தோதாக தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டிடிவி தினகரன் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மீண்டும் குக்கர் சின்னத்தையே உள்ளாட்சி மன்றத் தேர்தலின் போதும் டிடிவி தரப்பு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

யார் கண்டார்கள்! எம்ஜிஆருக்கு இரட்டை இலை போல, கலைஞருக்கு உதய சூரியனைப் போல நாளை இந்தக் குக்கர் சின்னமே டிடிவியின் நிரந்தர சின்னமாக ஆனாலும் ஆகிப் போகலாம். ஆர்கே நகர் இடைத்தேர்தல் சமயத்தில் தினகரனின் தனிமனித ஆளுமை பேசிய பேச்செல்லாம் இரண்டாம் பட்சம். முதல் பட்சமாக மக்களின் (வாக்காளர்களின்) மனதில் ஸ்பஷ்டமாகப் பதிந்து பேசாத ரகசியப் பேச்சுக்களையும் பேசியது இந்தக் குக்கர் சின்னம் தான்.

குக்கர் பேசுமா? என்று கேட்டு விடாதீர்கள். மனைவியை நேசிப்பவர்கள் பிரஸ்டீஜை... அதாவது பிரஸ்ஸர் குக்கரை வேணாம்னு சொல்வாங்களா ரேஞ்சுக்கு ஆர்கே நகர் மக்களுக்கு வீட்டுக்கொரு குக்கர் வழங்கி தினம், தினம் காலங்காலையில் குக்கர் இல்லாத வீடுகளில் கூட குக்கரைப் பேச வைத்துப் புரட்சி செய்து ஈட்டிய வெற்றியல்லவா அது! அந்த நன்றிக் கடனில் தான் மீண்டும் தனது கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கச் சொல்லி கேட்டிருக்கிறார் டிடிவி தினகரன்.

தமிழகத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, படுத்துக் கொண்டே ஜெயித்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். தனது ரோஜா நிற முகத்தைக் காட்டி, முகலாவண்யத்துக்காக ஜெயித்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. பேச்சு வன்மையால் குரலுக்காக ஜெயித்தவர் கலைஞர் கருணாநிதி. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக, திமுக எனும் இரு கட்சிகளும் இப்படித்தான் ஏதோ ஒரு தனித்திறமையால் தொடர்ந்து ஜெயித்து ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கின்றன. முதல்வர் நாற்காலியில் இவர்களை அமர வைப்பதில் அவர்கள் செய்த நன்மைகளைக் காட்டிலும் மேற்சொன்ன தனித்திறன்களுக்குத் தான் வல்லமை அதிகம். இது தமிழ்நாட்டில் சிறு குழந்தைக்கு கூடத் தெரியும். சரி டிடிவி தினகரனுக்கு ‘குக்கர்’ தான் என்றாகி விட்டது. இனி மக்களுக்கு ஓட்டு இயந்திரப் பலகையில் இரட்டை இலை கண்டதும் எம்ஜிஆர் முகம் ஞாபகம் வருவதைப் போல குக்கரைக் கண்டாலே டிடிவி ஞாபகம் வந்து மேலுமொரு குக்கர் பெறும் கனவில் பச்சக்கென தங்களது பொன்னான ஓட்டை குக்கருக்கே குத்தினாலும் குத்துவார்கள். எல்லாம் அவன் செயல்!

தமிழக தேர்தல் வரலாற்றில் இப்படியொரு மகத்துவத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் குக்கரைப் பற்றி நமக்கு வேறு ஏதாவது தெரியுமா? என்றால்... அது தான் காலையில் சமைத்து உண்கிறோமே என்று சொல்லி விடாதீர்கள். இப்போதும் சோற்றைப் பானையில் வடித்து உண்பவர்கள் இருப்பார்கள்... ஆனாலும் அவர்கள் வீட்டிலும் சாஸ்திரத்துக்காகவாவது ஒரு குக்கர் வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு குக்கர் 21 ஆம் நூற்றாண்டின் துவக்கம் முதலே இந்திய மக்களிடையே தனித்த செல்வாக்கைப் பெற்று விட்டது. இம்மாதிரியானதொரு சந்தர்பத்தில் குக்கரின் வரலாற்றைப் பற்றியும் நாம் கொஞ்சம் தெரிந்து கொண்டால் நியாயமாக இருக்குமென்று பட்டது. அந்த யோசனையின் விளைவே இந்தக் கட்டுரை.

பிரஸ்ஸர் குக்கரின் கதை...

குக்கரைக் கண்டுபிடித்தது ஒரு ஃப்ரெஞ்சுக்காரர். அவரது பெயர் டென்னிஸ் பாபின்.

அவர் உயர் வெப்பத்தில் நீர் கொதிக்கும் போது உண்டாகக் கூடிய நீராவி மூலமாக அரிசியை மிகக்குறைவான நேரத்தில் வேக வைக்கும் தன்மை கொண்ட ஒரு பாத்திரத்தை உருவாக்க முயற்சித்தார். இதன் மூலமாக சத்துக்களும் வீணாகக் கூடாது என்பது உபரி ஆசை. அதற்காக அவர் கண்டு பிடித்த பாத்திரத்தின் பெயர்  'ஸ்டீம் டைஜெஸ்டர்'. அதாவது நீராவி செரிப்பான். இந்த பாத்திரத்தில் வெப்பத்தின் காரணமாக உருவாகும் நீராவி, நீரின் கொதி திறனை அதிகரிக்கச் செய்யும் என்றும் அதன் மூலமாக வழக்கத்தை விட விரைவில் சமைக்க முடியும் எனவும் அவர் கருதினார்.

தன்னுடைய இந்த அருமையான கண்டுபிடிப்பை எடுத்துக் கொண்டு 1681 ஆம் ஆண்டு வாக்கில் ‘ராயல் சொஸைட்டி ஆஃப் லண்டனுக்குச்’ செல்கிறார் டென்னிஸ் பாபின். அவர்களோ இதை இயற்கை அறிவியல் ஆய்வு சார்ந்த ஒரு கண்டுபிடிப்பாக மட்டுமே அங்கீகரித்து டென்னிஸுக்கு மிகுந்த ஏமாற்றத்தைப் பரிசளித்தனர். பிற்காலத்தில் அவர்களே டென்னிஸை அழைத்து தங்களது சொஸைட்டியின் உறுப்பினராக்கியது தனிக்கதை.

கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் எந்த ஒரு புதிய பொருளுக்கும் மக்களிடையே இருந்த சந்தேகம் கலந்த வரவேற்பு தான் பிரஸ்ஸர் குக்கருக்கும் இருந்தது. 1681 ஆம் ஆண்டு வாக்கிலேயே பிரஸ்ஸர் குக்கருக்கான ஆரம்ப முஸ்தீபுகள் துவங்கப்பட்டு விட்டாலும் அது இன்று நாம் காணும் குக்கருக்குண்டான வடிவமைப்பைப் பெற கிட்டத்தட்ட 150 வருடங்களாயின. முதன்முறையாக 1864 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கட்பிரட் என்பவரது முயற்சியில் தகரம் மற்றும் இரும்புத்தாது கலைவையில் கிடைத்த உலோகத்தின் மூலமாக முதல் குக்கர் தயாரிப்பு தொடங்கப்பட்டது.

இன்று நாம் பயன்படுத்தும் குக்கரின்  எள்ளுப்பாட்டி!

1918 ஆம் ஆண்டில் ஸ்பெயின், ஜரகோஸாவைச் சேர்ந்த ஜோஸ் ஆலிக்ஸ் மார்டினிஸ்க்கு பிரஸ்ஸர் குக்கர் தயாரிப்பிற்கான காப்புரிமை வழங்கப்பட்டது. 71143 எனும் காப்புரிமை எண் கொண்ட தனது கண்டுபிடிப்புக்கு மார்டினிஸ் ‘ஒல்லா எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிட்டார். ‘எக்ஸ்பிரஸ் குக்கிங் பாட்’ (அதி விரைவில் சமைக்கக் கூடிய பாத்திரம்) 1924 ஆம் ஆண்டில் முதன்முறையாக பிரஸ்ஸர் குக்கரின் இணைத்து சமையல் குறிப்பு புத்தகமும் வெளியிடப்பட்டது இவரது தயாரிப்புகளில் தான். தானே எழுதி, வெளியிட்ட 360 சமையல் சூத்திரக் குறிப்புகளுடன் ஒல்லா எக்ஸ்பிரஸ் பிரஸ்ஸர் குக்கர் வெளிவந்தது. இந்தக் குக்கர்கள் உணவகங்களில் பயன்பாட்டில் இருந்தன. ராணுவ முகாம்கள் போன்ற ஆட்புழக்கம் அதிகமுள்ள இடங்களில் எல்லாம் இவைகள் பயன்படுத்தப் பட்டன.

முதல் தலைமுறை பிரஸ்ஸர் குக்கர்...

1938 ஆம் ஆண்டில் நியூயார்க்கைச் சார்ந்த ஆல்ஃப்ரெட் விஸ்செர் என்பவர் முதன் முதலாக ஃப்ளெக்ஸ் சீல் ஸ்பீட் குக்கரை அறிமுகப்படுத்தினார். இந்தக் குக்கர்கள் முதன்முறையாக வீட்டு உபயோகங்களுக்கு என அறிமுகப்படுத்தப் பட்டன. அதற்கு கிடைத்த அமோகமான வெற்றி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களிடையே குக்கர் தயாரிப்பில் பிற்காலத்தில் பலத்த போட்டியை உருவாக்கியது. 1939 ஆம் ஆண்டில் நேஷனல் பிரஸ்ஸர் குக்கர் கம்பெனி நியூயார்க் உலக கண்காட்சியில் தானே தயாரித்த முதல் பிரஸ்ஸர் குக்கரை அறிமுகப்படுத்தியது. இது பிற்காலத்தில் ‘நேஷனல் பிரஸ்டோ இண்டஸ்ட்ரி எனப் பெயர் மாற்றம் பெற்றது.

இப்படியெல்லாம் பல பரிமாணங்களில் உருமாறி வந்த குக்கர் இன்று நாம் பயன்படுத்தும் குக்கரின் கொள்ளுப்பாட்டியான முதல் தலைமுறை பிரஸ்ஸர் குக்கராக மாறி வர சில காலம் பிடித்தது. முதல் தலைமுறை பிரஸ்ஸர் குக்கர்கள், குக்கருக்குள் அழுத்தம் அதிகரிக்கும் போது உள்ளிருக்கும் நீராவியை வெளியேற்றி குக்கருக்குள் தாங்கக்கூடிய அளவிலான அழுத்தத்துக்கு மாற்றித்தர இன்று நாம் பயன்படுத்துகிறோமே ‘விசில்’ அமைப்புடன் அறிமுகமாயின. சிலர் அந்த விசில் சத்தம் கர்ண கடூரமாக இருப்பதாக உணர்ந்ததால் முதல் தலைமுறை பிரஸ்ஸர் குக்கரில் திருப்தி அடையாத அதன் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அதில் தங்களது வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சங்களைக் கொண்டு வர முயன்று கொண்டே இருந்தனர். ,

உள்ளிருக்கும் தண்ணீரின் கொதிநிலை உயர, உயர அதன் அழுத்தத்துக்கு நீராவியை வெளித்தள்ளும் விசில் அமைப்புகளுடன் பிரஸ்ஸர் குக்கர்களை ஆபத்துக் குறைவானவையாகவும், விசில் சத்தம் குறைவானதாகவும், மக்கள் விரும்பி வாங்கிப் பயன்படுத்தத் தக்க அம்சங்கள் கொண்டதாகவும் மாற்றும் முயற்சிகளும், ஆராய்ச்சிகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

சில சமயங்களில் அதிக அழுத்தம் காரணமாக குக்கர் மூடி வெடித்துத் திறந்து கொண்டு உள்ளிருந்த உணவுப் பொருட்களெல்லாம் விசிறியடிக்கப்பட்டுச் சிதறும்படியாக குக்கர் விபத்துகள் அரங்கேறிய படியால், அப்படியான விபத்துக்கள் நேராத அளவில் சிறந்த குக்கர்களைத் தயாரிப்பது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. தொடர்ச்சியான பல்வேறு ஆய்வுகளின் பின்னரெ இன்று நாம் பயன்படுத்தக் கூடிய ஆபத்துக்கள் அதிகமற்ற நவீன ரக பிரஸ்ஸர் குக்கர்கள் புழக்கத்துக்கு வந்தன. பிரஸ்ஸர் குக்கர்களின் தங்கையாக இன்று அதி நவீன எலக்ட்ரிக் பிரஸ்ஸர் குக்கர்களைக் கூட நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். என்ன இருந்தாலும் இந்திய மனநிலைக்கு எலக்ட்ரிக் குக்கர்களைக் காட்டிலும் ஸ்டவ் டாப் பிரஸ்ஸர் குக்கர்கள் என்று சொல்லப்படக்கூடிய ஸ்டவ்வில் வைத்து சமைக்கக் கூடிய பிரஸ்ஸர் குக்கர்கள் தான் விற்பனையில் அமோக லாபத்தைச் சம்பாதித்து வருகின்றன.

இன்று பிரஸ்ஸர் குக்கர்கள் இயங்கும் சூத்திரத்தைப் பின்பற்றி சாதம் சமைக்க மட்டுமல்ல, குழம்பும், கிரேவியும் செய்யத் தோதாக பிரஸ்ஸர் பான்கள், பால் காய மில்க் குக்கர்கள், இட்லி அவிக்க, புட்டு அவிக்க இட்லி குக்கர்கள், புட்டுக்கெனத் தனியாக இண்டாலியம் குழாய்ப் புட்டு குக்கர்கள் எனப் பலவும் வந்து விட்டன. இன்றைய குக்கர்கள் பிரஸ்டோ தயாரித்து அறிமுகப்படுத்திய முதல் தலைமுறை குக்கர்களைக் காட்டிலும் பல மடங்கு நவீனமானவை. ஹாக்கின்ஸ் பிரஸ்ஸர் குக்கர் விளம்பரத்தில் ஒரு பேத்தி, தனது பாட்டியிடம் சொல்வாளே, ‘பாட்டி ஹாக்கின்ஸ் குக்கர் மூடி பிரஸ்ஸர்னாலே திறக்காது’ என்பது போல 100% பிரஸ்ஸரால் மூடி பிளந்து திறந்து கொள்ளாத பிரஸ்ஸர் குக்கர்கள் எல்லாம் வந்து விட்டன.

பிரஸ்ஸர் குக்கர்களின் தனிச்சிறப்பு...

எவர்சில்வர் பாத்திரங்களில் சமைப்பதைக் காட்டிலும் குக்கரில் சமைப்பதால் அரிசி மற்றும் காய்கறிகளிருக்கும் சத்துக்கள் சோற்றை வடிப்பதன் மூலமாக வீணடிக்கப்படுவது குறையும். பாத்திரங்களில் சமைப்பதற்கான நேரத்தோடு ஒப்பிடும் போது குக்கர்களில் சமைக்க அவற்றில் மூன்றில் ஒரு பங்கு நேரமே போதுமானது. பாத்திரங்களில் சமைக்கையில் நீரின் கொதிநிலை வெறும் 100 டிகிரி செல்சியஸாக மட்டுமே இருக்க பிரஸ்ஸர் குக்கர்களில் சமைக்கும் போது நீரின் கொதிநிலை அசாதாரண அளவில் 121 டிகிரி செல்சியஸாக உயர்வதால் பானைகளில் சமைப்பதை விட குக்கர்களில் சமைப்பது நேரத்தை மிச்சப்படுத்தித் தருகிறது.

அதனால் தான் இன்று, உலகம் முழுக்க இன்று குக்கர் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். குக்கர் வாங்கக் கூட வகையில்லாது இருக்கும் குடும்பங்கள் இன்று அரிது. அதுதான் இன்று தேர்தல் சின்னமாகி விட்டதே. குக்கரே வாங்க முடியாதவர்களின் குக்கர் ஆசையை இனி அரசியல்வாதிகள் ஓட்டு அறுவடைக்காக வெகு எளிதாக நிறைவேற்றி விடுவார்கள். 

இதுவரை மக்களின் அத்யாவசியத் தேவைகளில் ஒன்றாக இருந்த குக்கர் இப்போது அரசியல்வாதிகளின் தேர்தல் தேவையாகவும் மாறி விட்டது சுவாரஸ்யமான கதை தான்.

ஒன்று செய்யலாம், தேர்தல் கலாச்சாரம் இப்படித்தான் என்றாகி விட்டபடியால் அரசியல்வாதிகள் தேர்தல் ஆணையத்திடம்,  இனி வருடம் தோறும் மாம்பழம், கதிர் அரிவாள், பம்பரம், உதய சூரியன், இரட்டை இலை, கை, போன்ற சின்னங்களை வழங்குவதைக் காட்டிலும் குளிர்சாதனப் பெட்டி, இஸ்திரிப் பெட்டி, கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சிப் பெட்டி, கட்டில், பீரோ, மெத்தை போன்ற மக்களுக்கு உபயோகமுள்ள பொருட்களையே தேர்தல் சின்னங்களாக அறிவிக்கக் கோரி விண்ணப்பிக்கலாம். அப்புறமென்ன,  இந்தப் பொருட்களை எல்லாம் வாங்க முடியாதவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும் போதாவது வாழ்வில் ஒளி பிறக்கட்டுமே!

அதனால் தான் சொல்கிறேன். டிடிவி தினகரன் தனது ஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றிக்கும், இனிமேல் அடையவிருக்கும் வெற்றிகளுக்கும் நன்றி சொல்ல விரும்பினாரென்றால் முதலில் சொல்ல வேண்டியது இந்த பிரஸ்ஸர் குக்கர் என்ற வஸ்துவை முதன்முறையாகக் கண்டறிந்தவரான ஃப்ரெஞ்சுக்காரரான டென்னிஸ் பாபினுக்குத் தான் சொல்ல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com