சபரிமலை வழக்கு: பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் மாறுபட்ட தீர்ப்பு என்ன?

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
சபரிமலை வழக்கு: பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் மாறுபட்ட தீர்ப்பு என்ன?


புது தில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம், இத்தனை காலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய, கோயில் தேவஸ்தானம் விதித்தக் கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.

மேலும் அறிய:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்: தீர்ப்பின் முக்கியம்சங்கள்

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட் ஆகிய நால்வரும் ஒரே தீர்ப்பை வழங்கினர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதி அளிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

அதே சமயம், இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார்.

அவர் அளித்த தீர்ப்பில், மத ரீதியான வழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. வழிபாடு நடத்துபவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது, அந்த கோயிலோடு நின்று விடாது. தொடர்ச்சியாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தின் மீதும் இதன் தாக்கம் ஏற்படும். மத நம்பிக்கை மீதான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது, அதில் பாலின பாகுபாடு காட்டப்பட்டாலும் கூட.

இதையும் அறிந்து கொள்ள: குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் இந்த கோயிகளில் ஆண்கள் நுழைய முடியாது தெரியுமா? 

மத ரீதியான நம்பிக்கைள் மீதான பிரச்னைகளை நீதிமன்றம் அவ்வளவு சாதாரணமாகக் கையாளக் கூடாது. பாலின சமத்துவத்தை மத ரீதியான சம்பிரதாயங்களில் உருவாக்க முயலக் கூடாது.  ஒருவேளை சதி போன்ற மிகவும் மோசமான, தண்டனைக்குரிய மத அல்லது சம்பிரதாய நம்பிக்கைகளில் மட்டுமே நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம். பகுத்தறிவு கருத்துக்களை மத ரீதியான பழக்க வழங்களுடன் பொருத்திப் பார்க்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

முக்கிய தீர்ப்பு: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் பெரும்பான்மையான நீதிபதிகள் அளிப்பதே தீர்ப்பாகும் என்பதால் 4 நீதிபதிகள் அளித்த தீர்ப்பே இறுதியான தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா அளித்த தீர்ப்பு 5 நீதிபதிகளில் ஒருவர் அளித்த தீர்ப்பு என்று பதிவு மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com