இந்த வாரம் ‘புளூ வேல்’ விளையாட்டைப் பற்றிப் பேசலாம்...

வாழ்க்கையில் எதெதற்கோ பெரிது பெரிதாக திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் நாம், நம் குழந்தைகளின் மனதை உள்ளது உள்ளபடி படிக்கவும், கணிக்கவும் தான் கொஞ்சம் பிரயத்தனப் பட்டுப் பார்ப்போமே!
இந்த வாரம் ‘புளூ வேல்’ விளையாட்டைப் பற்றிப் பேசலாம்...

இந்த வாரம் புளூ வேல் விளையாட்டைப் பற்றி பேசியே ஆக வேண்டும். 

ஆன்லைன் விளையாட்டுகளில் ஒன்றான இந்த புளூ வேல் தான் நேற்று அனைத்து தமிழ் ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக இருந்தது. 

இன்றும் கூட அதன் அலை இன்னும் ஓயவில்லை. நேற்று மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இந்த ‘புளூ வேல்’ விளையாட்டால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து உலகெங்கும் சிலநூறு உயிர்களைப் பலி கொண்ட இந்த புளூ வேல் கொடூரத்தின் தாக்கம் தமிழகத்திலும் பரவலாகத் தெரியத் துவங்கி உள்ளது. இன்று புத்துச்சேரியில் எம்பிஏ மாணவர் ஒருவர் இந்த விளையாட்டில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனச் செய்தி வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை, தண்டையார் பேட்டையைச் சேர்ந்த மார்வாரி மாணவர் ஒருவர் இதே புளூ வேல் விளையாட்டில் ஈடுபட்டுத் தான்,  தனது அபார்ட்மெண்ட் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என வாட்ஸ்- அப் வதந்தியொன்று உலவிக் கொண்டிருந்தது.

ஊரே புளூ வேல், புளூ வேல் என்று அலறிக் கொண்டிருக்கையில் நீதிமன்றம் சும்மா இருக்க முடியுமா? இதோ இப்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து இந்த விளையாட்டின் தீங்கினைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறது. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த புளூ வேல் விளையாட்டில்?! ஏன் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் விளக்கினைத் தேடி ஓடும் மழைக்கால ஈசல்களைப் போலே ஈர்க்கப்பட்டுத் தொடர்ந்து பலியாகிக் கொண்டே இருக்கிறார்கள்? அந்த விளையாட்டினால் அவர்களுக்கு கிடைப்பதென்ன? மரணத்தை தேடி ஓடச் செய்வது எப்படி விளையாட்டில் அடங்கும்?! தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மதுரை மாணவர் விக்னேஷ் எழுதி வைத்த தற்கொலைக் குறிப்பில் சொல்லப் பட்டிருந்ததைப் போல இது விளையாட்டல்ல விபரீதம் மட்டுமே! 

அப்படியானால் இந்த விபரீதத்திலிருந்து எப்படி நமது குழந்தைகளை மீட்பது? என்றெல்லாம் பல யோசனைகள் இப்போது அனைத்துப் பெற்றோர்கள் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கலாம். அந்தப் பெற்றோர்கள் அனைவருக்குமே தெரிந்தே இருக்கும் இன்றைய குழந்தைகளுக்குக் கிட்டியிருக்கும் அதீத தொழில்நுட்ப வசதிகளைக் குறித்து;

இருபதாண்டுகளுக்கு முன்பு வரை அலைபேசிகள் அதிகமாகப் புழக்கத்தில் இல்லை. கணினி மையம் என்பது கூட எங்கோ நகரின் வணிகப் பகுதிகளில் ஏதோ ஓரிடத்தில் மட்டுமே நான்கைந்து கணினிகளுடன் காணக் கிடைக்கக் கூடிய ஒரு சிற்றறையாக இருந்தது. அங்கேயும் கூட ஆண்களின் புழக்கமே அதிகமிருக்கும். உலகத்துடனான மக்களின் ஒரே தொடர்பு சாதனமாக அப்போது இருந்தது செய்தித்தாள்களும், தூர்தர்ஷனும், அனைத்திந்திய வானொலியும் மட்டுமே இப்படியான சூழலைப் பற்றி இப்போது யோசிக்கக்கூட முடியாது. இப்போது எல்லோருக்கும் உள்ளங்கையில் விரிகிறது உலகம்.

வீட்டுக்கு ஒரு லேன்ட்லைன் தொலைபேசி இருப்பதே அந்தஸ்தாக இருந்த காலம் மாறி இப்போது வீட்டுக்கு ஐந்தாறு அலைபேசிகள் வந்தாயிற்று. தனி மனிதர் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 2 ஸ்மார்ட் ஃபோன்களையாவது வைத்துக் கொள்வது தான் இப்போதைய டிரெண்ட். தொழில்நுட்ப வளர்ச்சி என்பதும் வசதி என்பதும் இப்போது மக்களின் வேலைகளை எளிதாக்க கிடைத்த வரங்களாக அல்லாது அவரவர் அந்தஸ்தைப் பறைசாற்றும் பகட்டு வஸ்துக்களாகி விட்டன.

  • உங்க வீட்ல ஸ்மார்ட் டி.வி இருக்கா?
  • உங்க வீட்ல எல்லாருக்கும் தனித்தனியா லேப் டாப் இருக்கா?
  • உங்க வீட்ல எல்லார்கிட்டயும் ஆப்பிள் ஃபோன் இருக்கா?
  • உங்க கார்ல வை- வை வசதி இருக்கா?

என்பதுவும் இன்று பள்ளிக் குழந்தைகளின் பேசுபொருளாகி விட்டது.

முன்பும் இப்படிப்பட்ட பேச்சுகள் சகஜம் தான் என்றாலும், இப்போதைய தேவைகளைப் பாருங்கள்;

இவற்றில் எதிலொன்றிலும் நமக்கு நிரந்தர திருப்தி என்று எதுவும் கிட்டுவதே இல்லை. பொருட்களை வாங்கி உபயோகித்து மகிழ்வதற்கான ஆயுட்காலம் என்பது வெகுவாகக் குறைந்து விட்டது. ஒரு ஸ்கூட்டர் வாங்கினால் 5 வருடங்களில் புதிதாக மாற்ற நினைக்கிறோம், ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கினால், அதை மாறிக் கொண்டே இருக்கும் எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப வருடம் ஒருமுறை மாற்றினால் என்ன? என்று மனம் புதுப் புது மாடல் ஸ்மார்ட் ஃபோன்களை காணும் போதெல்லாம் அலைபாயத் தொடங்கி விடுகிறது. பெரியவர்களின் மனநிலையே இப்படி இருக்கையில் குழந்தைகளை அதிலும் வளரிளம் பருவத்திலிருக்கும் குழந்தைகளின் மனநிலையைப் பற்றி என்ன சொல்ல முடியும்?!

அவர்களது உலகத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் இல்லையேல் குதூகலமே வற்றிப் போய் விட்டார் போலாகி விடுகிறது. பள்ளிப்பாடச்சுமைகளைத் தாண்டியும் அவர்களால் ஸ்மார்ட் ஃபோன்களில் தரவிறக்கம் செய்து கொண்ட ஆன்லைன் விளையாட்டுக்களுக்காய் நேரம் ஒதுக்க முடிகிறது. ஒரு நாளில் ஒரு தடவையாவது ஆன்லைன் விளையாட்டுக்களில் ஈடுபடாத குழந்தைகளைக் காண்பதென்பது இன்று அரிதினும் அரிதான விஷயம்! ‘அனேகன்’ திரைப்படத்தில் காட்டப்படுவது போல இந்த ஆன்லைன் விளையாட்டுகளைத் தயாரித்து களமிறக்கும் சம்மந்தப்பட்ட கேம் தயாரிப்பு நிறுவனங்கள் இன்று கோடிகளில் கொழிக்கின்றன. ஆனால் அவற்றைத் தரவிறக்கி விளையாடி, விளையாடி ஒரு காலகட்டத்தில் அந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகி குழந்தைகள் மற்றும் மாணவர்களின் வாழ்வு தான் பின்னாட்களில் ஷீணித்துப் போகிறது.

இன்று நம்மிடையே ஓய்வு நேரம் மொத்தத்தையும் ஆன்லைன் விளையாட்டுகளில் தொலைக்கும் குழந்தைகளும், மாணவர்களும் அனேகம் பேரிருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? 
அவர்கள் என்னென்ன ஆன்லைன் விளையாட்டுக்களில் எல்லாம் நேரம் செலவளிக்கிறார்கள் என?! சொல்வதற்கு அவர்களிடம் ஒரு மிகப்பெரிய லிஸ்ட் இருக்கும். உதாரணத்துக்கு கீழே சில ஆன்லைன் விளையாட்டுக்களைப் பாருங்கள்.

  • போக்கி மேன்
  • ஆங்ரி பேர்ட்ஸ்
  • கேண்டி கிரஷ் சகா
  • புளூ வேல்
  • கிளாஸ் ஆஃப் கிளான்ஸ்
  • டாக்கிங் டாம்
  • மோஷி மான்ஸ்டர்ஸ்
  • பைரேட் கிங்ஸ்
  • டீன் பாட்டி
  • நியோ பெட்ஸ்
  • கிளப் பெங்குவின்
  • ஃப்ரீ ரியால்ம்ஸ்
  • ஃபியூஷன் ஃபால்
  • ஸ்டார் வார்
  • வெபோஸர்ஸ்

மேற்கண்டவற்றில் பெரும்பாலான விளையாட்டுக்கள் ஏதேனும் ஒரு வகையில் வன்முறையை அடிப்படையாகக் கொண்டவையே! இந்த விளையாட்டுக்களில் ஈடுபடுவதால் தங்களுடைய ஸ்ட்ரெஸ் குறைவதாகப் பல மாணவ, மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

மாணவர்களுக்கு ஸ்ட்ரெஸ் ஏன் வர வேண்டும்? 

மாணவப் பருவத்திலிருப்பவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படக் கூடிய மன அழுத்தம் வர ஒரே காரணம். தனிமைப்படுத்தப் பட்ட உணர்வு மட்டுமே! அத்தகைய உணர்வு வராதிருக்கும் வரை எந்த ஒரு மனித உயிரும் தங்களது தன்னம்பிக்கை உணர்வையும், வாழ்வை எதிர்கொள்ளும் தைரியத்தையும் எப்போதும் இழப்பதே இல்லை. சரி இப்போது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த புளூ வேல் ஆன் லைன் விளையாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்,

இது போன்ற ஆபத்தான விளையாட்டுக்களை மாணவர்கள் தேர்ந்தெடுத்து விளையாடக் காரணங்கள் என்ன? 

  • வீட்டில் போதுமான கண்காணிப்புகள் இன்மை, 
  • வயதைப் பொருட்படுத்தாது இணைய வசதிகளைப் பயன்படுத்தக் கிடைத்த சுதந்திரம்.
  • ‘என் மகளுக்கு ஸ்மார்ட் ஃபோனில் அத்தனை விஷயங்களும் அத்துப்படி’ என 3 வயதுக் குழந்தையைப் பார்த்துக்கூடப் பெருமிதப்பட்டுக் கொள்ளும் பெற்றோர் மனப்பான்மை.
  • ‘இளங்கன்று பயமறியாது’ என்பது மாதிரியான பருவத்திலிருக்கும் தங்களது குழந்தைகளை நெறிப்படுத்த போதிய அவகாசமில்லாத பெற்றோர்கள்.
  • கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குறும்பு செய்யும் குழந்தைகளை அடக்க ஒரே வழி தொலைக்காட்சியும், ஸ்மார்ட் ஃபோன் விளையாட்டுக்களுமே என முடிவு செய்து அவற்றைப் பழக்கப்படுத்தும் பெற்றோர் மற்றும் பெற்றோரில்லாத நேரத்தைய குழந்தைக் காப்பாளர்களின் தவறான அணுகுமுறை!
  • எந்த ஒரு விளையாட்டிலும் ‘த்ரில்’ உணர்வைத் தேடும் மாணவ மனப்பான்மை!
  • முந்தைய தலைமுறையைப் போலல்லாது பிள்ளைகள் இம் எனுமுன் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கித் தரும் பெற்றோர்கள்!
  • தங்களுடன் அதிக நேரம் செலவளிக்க இயலாத பெற்றோரை எவ்விதமாக எமோஷனல் மூளைச் சலவை செய்து தமது விருப்பங்களை நிறவேற்றிக் கொள்ளலாம் எனும் தந்திரமறிந்து வைத்திருக்கும் பிள்ளைகள்..

இப்படி அனுமார் வால் போலக் காரணங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

மேற்கண்ட காரணங்களில் எப்போதும் குற்றவாளிக் கூண்டில் நிற்பது பெற்றோர்களே! 

அன்பான பெற்றோர்களே!

வாழ்க்கையில் எதெதற்கோ பெரிது பெரிதாக திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் நாம், நம் குழந்தைகளின் மனதை உள்ளது உள்ளபடி படிக்கவும், கணிக்கவும் தான் கொஞ்சம் பிரயத்தனப் பட்டுப் பார்ப்போமே! அங்கே முரட்டுப் பிடிவாதம், கீழ்ப்படியாமை, அதீத கோபத்தினாலான ஒழுங்கீனம், கோபம் எல்லாவற்றுக்கும் அடியில் பெற்றோரின் அருகாமைக்கும், அன்புக்கும் சதா ஏங்கிக் காத்திருந்து அலுத்துப் போன ஒரு பரிசுத்தமான மனம் இருக்கும். அந்த மனதின் தேவைகளை பெற்றோர்களான நாம் உணர்ந்து கொண்டாலே பல பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடும். பெற்றோர்களான நாம், நம் குழந்தைகளின் எஜமானர்களாகவோ அன்றி வேலைக்காரர்களாகவோ எப்போதும் இருந்து விடத் தேவையில்லை. குழந்தைகள் எப்போதும் தேடித் தேடி ஓய்ந்து போவது தமக்கிணையான களித்தோழமைகளைத் தான். எந்த வயதிலும் ஒரு மனித உயிர் அதை ஈன்ற அன்னைக்கு குழந்தையே! எனும் போது சகலமும் பகிர்ந்து கொள்ளத் தக்க ஒரு தோழமை உணர்வை பெற்றோர்கள் தமது பிள்ளைகளிடம் எப்போதும் வெளிப்படுத்த தயங்கவே கூடாது.

பிறகு இந்த ஆன்லைன் விளையாட்டுக்களாவது ஒன்றாவது! குழந்தைகளுக்கு அவை தரும் சந்தோஷத்தைக் காட்டிலும் அலாதியான சந்தோஷத்தைத் தரக்கூடியதாக இருக்கக் கடவது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கக் கூடிய பரிசுத்தமான அன்பும், அரவணைப்பும் மட்டுமே!

ஆகவே பெற்றோர்களும், குழந்தைகளும் எப்போதும் அன்பால் மட்டுமே இணைந்திருங்கள்!

ஒருபோதும் ஸ்மார்ட் ஃபோனால் கிடைக்கும் அந்தஸ்தில் மயக்கம் கொள்ளத் தேவை இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com