குறையேயில்லாத லீடர்ஸ்ன்னு யாருமே இல்லையாம்மா?!

‘இல்ல இந்த மக்கள் தாங்களே ஒரு லீடரை தலை மேல தூக்கி வைச்சு கொண்டாடிக், கொண்டாடியே பெரிய அதிசயப் பிறவியா உருவாக்கிடறாங்க... அப்புறம் அவங்க கிட்டயும் குறை கண்டுபிடிக்கிறாங்களே! அது ஏன்?’
குறையேயில்லாத லீடர்ஸ்ன்னு யாருமே இல்லையாம்மா?!

சால்ட் சில்ட்ரன்... பெப்பர் பேரன்ட்ஸ் - 7

சென்ற வாரத்த்தில் நிறுத்திய இடத்திலிருந்து தொடர்வதற்குள் இன்று வீட்டில் எனக்கும், என் மகளுக்கும் நிகழ்ந்த சம்பாஷனை ஒன்று வேறொரு பிரச்னை பற்றி யோசிக்க வைத்து விட்டது. முதலில் அந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசி விட்டு... பிறகு விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கலாம்...

இன்று காலையில் மகளை பள்ளிக்கு கிளப்புவதற்காக வழக்கம் போல எழுப்பினேன்... தூக்கம் கலையாது புரண்டு, புரண்டு படுத்தவள்... பிறகு என்ன நினைத்தாளோ விசுக்கென எழுந்தமர்ந்து;

‘ம்மா... நேத்து எங்க ஸ்கூல்ல லீடர்ஸ் மீட் நடந்துச்சு! நைட்டே சொல்லனும்னு நினைச்சேன், மறந்து தூங்கிட்டேன்... இப்பச் சொல்லலைன்னா அப்புறம் சுத்தமா மறந்துடுவேன்.’ என்றவாறு என்னைப் பார்த்தாள்;

‘ஓ அப்டியா? அதுல என்னடா ஸ்பெஷல்... வழக்கமா மாசா...மாசம் நடக்கறது தானே?’

‘என்ன ஸ்பெஷலா? என்னம்மா நீங்க? ச்சே... இப்டிக் கேட்டுட்டீங்களே?!’ சொல்லிக் கொண்டே மகளின் முகம் கூம்பியது...

‘ஏன்டா... என்ன ஆச்சு? ஏன் மூஞ்சியத் தூக்கி வச்சுக்கற? உனக்குப் பிடிக்காததது ஏதாவது நடந்துடுச்சா உங்க ஸ்கூல்ல?’

‘ஸ்கூல்ல எல்லாம் ஒன்னுமில்ல.. ஆனா இப்ப நீங்க தான் என்னை டிஸ்அப்பாயிண்ட்மெண்ட் பண்ணிட்டு இருக்கீங்க!’

என் கேள்வியில் தான் அவள் ஏமாற்றமடைந்திருக்கிறாள் என்று புரிந்தாலும், எதற்காக என்று தெரியாததால் மேலே யோசிக்க நேரமின்றி, இப்படியே இழுத்து, இழுத்துப் பேசிக் கொண்டே இருந்தால் அப்புறம் பள்ளிக்கு கிளம்ப தாமதமாகி விடும்.... பள்ளிவேன் வந்து அலாரத்தைக் கதற விடும் என்பதால், ஆதூரமாக அவளது தலையைக் கோதி எண்ணெய் தேய்த்து வாரிக் கொண்டையிட்டுக் கொண்டே... ‘ஸ்கூலுக்கு லேட் ஆகுதுடா குட்டிம்மா, நான் என்ன டிஸ்அப்பாயின்மெண்ட் பண்ணேன்னு நீயே சொல்லிடேன்’ என்றேன்.  

அவள் என்னை நிமிர்ந்து பார்த்து குற்றம் சாட்டும் பாவனையில்;

‘ம்மா... என்னோட பல வருசக் கனவு... இந்த வருசம் தான் நிஜமாயிருக்கு. அதைக்கூட இப்டி சட்டுன்னு மறந்துட்டீங்களே, எனக்கு உங்க மேல கோபமா வருது தெரியுமா?!’ என்றாள்.

எனக்குப் பொறுமை கரைந்து கொண்டே வந்தாலும்... திடீரென மூளைக்குள் லேசாக மின்னலடித்தது. அட ஆமாம் என்று என்னை நானே தலையில் கொட்டிக் கொண்டு;

‘ஐய்யய்யோ ஸாரிடா குட்டி மறந்தே போனேனே... லீடர்ஸ் மீட் நடந்ததுன்னு சொன்ன இல்ல... ஹைய்யோ இதானே நீ லீடரா கலந்துக்கற... உன்னோட ஃபர்ஸ்ட் லீடர்ஸ் மீட். கங்கிராட்ஸ்டா குட்டி... கை கொடு...கை கொடு... சரி இப்பச் சொல்லு என்னல்லாம் டிஸ்கஸ் பண்ணீங்க?

சிக்ஸ்த்ல இருந்து டென்த் கிளாஸ் வரைக்கும் எல்லா செக்சன்ல இருந்தும் லீடர்ஸ் மீட்டிங் அட்டெண்ட் பண்ணாங்கம்மா. நான் எய்த் கிளாஸ் பி செக்சன் மானிட்டராக்கும், என்றாள் பெருமையாக.

அவளது பெருமையைப் பார்த்து சிரிப்பு வந்தாலும்.. சிரித்தால் கேலி செய்வதாக நினைத்து திட்டுவாள் என்பதால் சிரிப்பை அடக்கிக் கொண்டு... அமர்த்தலாக ‘ம்ம்’ என்றேன் பெருமிதமாக.

’எய்த் ‘டி’ ஹரி இல்ல... அதான் என் லாஸ்ட் இயர் கிளாஸ்மெட் அவன் தைரியமா எழுந்து நின்னு பிரின்ஸிகிட்ட, ‘மேம் கேன்டீன் தேர்டு ஃபுளோர்ல இருக்கறதால, நான் மேலே ஏறிப் போய் ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடறதுக்குள்ள ஸ்னாக்ஸ் பீரியடே முடிஞ்சிடறது. தயவு செய்து ஒவ்வொரு ஃப்ளோர்லயும் ஒரு கேன்டீன் வைங்க மேடம்’ ன்னு சொன்னான். அதுக்கு ப்ரின்ஸி சிரிச்சிகிட்டே அவன் காதைப் பிடிச்சு திருகி, வொய் மை டியர் பாய்? ஒவ்வொரு ஃப்ளோர்ல எதுக்கு கேன்டீன்? அது ரொம்பக் கஷ்டம்... பேசாம ஒவ்வொரு கிளாஸ் ரூம்க்கு ஒரு கேன்டீன் வச்சிடலாம், நீ தோணும் போதெல்லாம் வாங்கி, வாங்கி முழுங்கிக்கலாமில்லே?!’ ன்னு’ சொன்னதும் மொத்தப்பேரும் கொல்லுன்னு சிரிச்சிட்டோம்.’

‘ம்ம்.. அவன் கஷ்டமா... ஃபீல் பண்ணிருப்பானில்ல?’

‘அதெல்லாம் இல்லம்மா... அவன் பாட்டுக்கு அசடு வழிய சிரிச்சிட்டு, காதைத் தொடைச்சிட்டு... ப்ளீஸ் கன்ஸிடர் மை ரிக்வெஸ்ட் மேம்னு சொல்லிட்டு உட்கார்ந்துட்டான்.’

‘அப்புறம் சிக்ஸ்த் சி செக்சன் ரோஷினி எழுந்து; மேம் சில காம்பெடிசன்ஸ், கல்ச்சுரல் புரோகிராம்ல டீச்சர் செலக்ட் பண்ண ஸ்டூடண்ட்ஸையே மறுபடி, மறுபடி செலக்ட் பண்றாங்க... கேட்டா, அவங்க தான் டிரெயின் ஆனவங்கன்னு சொல்லி, ஆர்வமா இருக்கற மத்த ஸ்டூடண்ட்ஸோட டிஸ்கரேஜ் பண்ணிடறாங்க... பிளீஸ் இந்த பார்சியாலிட்டி வேணாம்னு சொல்லுங்க மேம்ன்னு சொன்னா.’ உடனே பிரின்ஸி;

‘ நான் சம்மந்தப்பட்ட டீச்சர்ஸ் கிட்ட பேசறேன்ம்மா, ஆனா நீங்க டீச்சர்ஸ் கஷ்டத்தையும் புரிஞ்சுக்கனும்... கல்ச்சுரல்ஸ், கேம்ஸ்ல நாம ஜெயிச்சாகனும்னா வெல் டிரெயிண்டு ஸ்டூடண்ட்ஸ் தான் பெஸ்ட். யூ டூ ஒன் திங்க்... டிரெயிண்டு ஸ்டூடண்ட்ஸ்ன்னா என்ன அர்த்தம்?! அந்தந்த போட்டிகளை ஜெயிக்க கூடிய தகுதி உள்ளவங்க தானே. அப்போ நீ உன் ஃபிரெண்ட்ஸ் கிட்டச் சொல்லி அவங்க திறனை வளர்த்துக்கச் சொல்லேன். அஸ் எ லீடர் இது உன் கடமை’ ன்னு முடிச்சிட்டாங்க.’

‘ம்ம்’

‘நைன்த் ’சி’ செக்சன் பூமிகா இல்ல... மீட்டிங்ல அவ பிரின்ஸி கிட்ட என்ன தெரியுமா சொன்னா?’

‘மேம் மிடில் ஸ்கூல் பசங்களோட, பிரைவேட் வேன் டிரைவர்ஸ் சில பேர் இன்டீஸண்டா பேசறாங்க... அவங்க லாங்வேஜை இந்தப் பசங்களும் கத்துக்கிற மாதிரி ஆயிடுது, ஏன்னா ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ் கூட ஏதாவது பிர்ச்னைன்னா இவங்க பேச்சுலயும் அந்த பேட் வேர்ட்ஸ் எல்லாம் ரிபீட் ஆகற மாதிரி தெரியுது. இட்ஸ் நாட் குட் ஃபார் அவர் ஸ்கூல் மேம்... யாரெல்லாம் ஸ்கூல் பசங்க முன்னாடி அப்படி பேட் வேர்ட்ஸ் பேசறாங்கன்னு நோட் பண்ணி அவங்களை கூப்பிட்டுக் கண்டிச்சே ஆகனும் மேம்’ னு சொன்னாம்மா.

‘ஓ... கரெக்டாத்தானே சொல்லிருக்கா! அவ ரொம்ப ஸ்மார்ட்!’ என்றேன்.

மகள் திரும்பிப் பார்த்து என்னை முறைத்து விட்டு; 

‘என்ன ஸ்மார்ட்?  இதையே தான் அங்க இருந்த ஹை ஸ்கூல் பாய்ஸும் சொன்னாங்க... என் கிளாஸ் பாய்ஸ் கூட; அந்தக்கா ‘கெத்துடா’ ன்னாங்க’ இதுல என்ன கெத்து?!’ என்று சலிப்பாய் உதட்டைப் பிதுக்கி அழகு காட்டினாள்.

‘சரி அவளை விடு, நீ என்ன பேசின லீடர்ஸ் மீட்ல?!’

‘நானா... நான் என் கிளாஸ் ரூம்ல ஜன்னல் கதவு டேமேஜ் ஆகி மூட முடியாம இருக்கறதைச் சொன்னேன். வெயில் நேரத்துல அந்தப் பக்கம் உட்கார்ந்திருக்கறவங்களுக்கு கண்ணு கூசி சில நேரம் தலை வலி வர ஆரம்பிச்சுடுது..  அதே காத்து அதிகமா அடிச்சா நோட் புக்ஸை டெஸ்க்ல வச்சு எழுதவே முடியல அவ்ளோ ஏர் ஃப்ளோ இருக்கு! அதனால அதை சரி பண்ணனும்னு கேட்டேன்.’

‘அதுக்கு பிரின்ஸி... ஜன்னல் மட்டும் தானா? கதவெல்லாம் சரி பண்ணத் தேவை இல்லையா? உன் கிளாஸ்மேட்ஸ் அதை மட்டும் எப்படி விட்டு வச்சாங்க? நல்லாப் பார்த்தியா? கதவு இருக்கா? இல்ல அதையும் சரி பண்ணனுமான்னு கிண்டலா கேட்டாங்க. நான் இல்ல மேம் ஜன்னல் தான் ஃபர்ஸ்ட் சரி பண்ணனும். மத்ததெல்லாம் ஓக்கே மேம்னு சொன்னேன்.’ அவங்க உடனே;

ஓக்கே... சீக்கிரமே சரி பண்ணிடச் சொல்லலாம்னாங்க.

‘குட்... சரியாத்தான் சொல்லி இருக்க.’

‘ம்ம்... என்னத்த சரியாச் சொல்லி இருக்கேன்?! நான் பேசினது சிம்ப்பிள் லோக்கல் இஷ்யூவாம்... ஆனா பூமிகா பேசினது தான் டாப் மேஜர் இஷ்யூவாம்... லாவண்யா சொல்றா’

ஓ... இப்ப பிரச்னை லீடர்ஸ் மீட்ல என்ன பேசினீங்கங்கறதுல இல்லை. உங்க பிரின்ஸி யாரை விட யார் பேசினதை முக்கியமா எடுத்துக்கிட்டாங்கங்கறது தான் விசயமா?! என்று நான் கேட்டு வைக்க; 

மகள் மீண்டும் என்னை முறைத்து விட்டு; 

‘அதில்லைம்மா... நான் பேசினதும் முக்கியமான விசயம் தானே.. ஆனா இந்த ஸ்டூடண்ட்ஸை பாருங்க எல்லாரும் அவ பேசினதை தான் பெருசா கெத்துங்கறாங்க... எனக்கும் அது தெரிஞ்ச இஸ்யூ தான். ஆனா நான் ஏன் அதைப் பத்திப் பேசல.. ஏன்னா ... நான் இப்போ போற வேன்ல யாருமே அப்படி இன்டீசண்டாப் பேசல... அதானே?!’

‘ஆமாம்... அதானால தான்... இதை விட பெட்டரா அண்டர்ஸ்டேண்ட் பண்ணிக்க முடியாதுடா... ஸோ கியூட்... சிம்ப்பிள் இப்போ உன் பிரச்னை தீர்ந்ததா?

‘தீரல... இருங்கம்மா... சொல்லி முடிக்கறதுக்குள்ள நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க. வாட் ஐ மீன்?... நானோ, ஹரியோ, ரோஷினியோ, பூமிகாவோ யாரா இருந்தாலும் நாங்க எல்லோருமே அவங்கவங்க பிரச்னைகளுக்குத் தான் விடை தேட நினைக்கிறோம். ஆனா இந்த சோ கால்டு ஜனங்க.. ஐ மீன் ஸ்டூடன்ட்ஸ் தான் காண்ட்ரொவர்சியலா, புதுசா  எதுனா யாராவது சொன்னா... உடனே அவங்களை கெத்துன்னும், லீடர் ஆஃப் தி லீடர்ஸ்னும் சொல்லித் தூக்கி தலையில வச்சு கொண்டாட ஆரம்பிச்சுடறாங்க. அதைப் பத்தித் தான் நான் உங்க கிட்ட பேச நினைச்சேன்.’

இவள் என்ன சொல்ல வருகிறாள்? என்று புரியாததால்...

‘இதுல பேச என்னடா இருக்கு? அதான் மனுஷங்க இயல்பு... இப்போ நீ என்ன தான் சொல்ல வர?’ என்றேன்.

‘இல்ல இந்த மக்கள் தாங்களே ஒரு லீடரை தலை மேல தூக்கி வைச்சு கொண்டாடிக், கொண்டாடியே பெரிய அதிசயப் பிறவியா உருவாக்கிடறாங்க... அப்புறம் அவங்க கிட்டயும் குறை கண்டுபிடிக்கிறாங்களே! அது ஏன்?’

இப்போது எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. நேரம் வேறு கடந்து கொண்டே இருந்தது. அவளைச் சமாதானப் படுத்தும் விதமாக;

‘மக்கள் குறை இருந்தா குறை சொல்வாங்க, நிறை இருந்தா நிறையைச் சொல்வாங்க’ இட்ஸ் கொயட் நேச்சுரல்... இதுல நீ இவ்ளோ யோசிக்க ஒன்னுமில்லை. குளிச்சிட்டு வந்து ஸ்கூலுக்கு கிளம்பற வழியைப் பார்’ என்றேன்.

‘குறையே இல்லாத லீடர்ஸ்னு யாருமே இல்லையா?’

‘ எனக்குத் தெரிஞ்சு இல்லடா.. ஆனா நீ வேணூம்னா குறையே இல்லாத லீடரா ஆக ட்ரை பண்ணிப்பார். ஆனா இப்ப முதல்ல குளிக்கப் போ.’

என் பதிலில் முழுத்திருப்தி இல்லாமலே தான் அவள் குளிக்கப் போனாள்.

குளித்து விட்டு மறுபடியும் வந்து எதையாவது கேட்டு வைப்பாளோ என்று நான் கிச்சன் வேலைகளுக்குள் மூழ்கிப் போனாலும்.. அவளது கேள்வி மட்டும் இவ்வளவு நேரம் கழித்தும் என் காதில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது.

குறையில்லாத லீடர்ஸ்னு யாருமே இல்லையாம்மா?!

இதுவரை அப்படி யாரும் இல்லை மகளே! ஒருவேளை உங்களது தலைமுறையில் அப்படி யாராவது வருவார்களோ என்னவோ?!’ என்று சொல்லத் தோன்றியது; ரொம்பவும் சினிமாட்டிக்காக இருக்கும் என்பதால் தவிர்த்து விட்டு; குற்றம் குறைகள் இல்லாத உலகத் தலைவர்களை கூகுள் சர்ச் எஞ்சினில் தேடத் துவங்கினேன். அப்போது தான் நறுக் கென்று குட்டியதைப் போல ஒரு விசயம் உரைத்தது. அப்படியானால் இதுவரையிலான தலைவர்கள் யாரையும் குறைகளற்றவர்களாக நான் கருதவில்லையா? ஏன் யார் பெயரையும் என்னால் என் மகளுக்குச் சொல்ல முடியாமல் போனது?! என்று யோசித்தேன். ஸ்வாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி அரவிந்தர், வீர சிவாஜி, வீர பாண்டிய கட்டபொம்மன், ஜான்ஷி ராணி லஷ்மி பாய், திப்பு சுல்தான், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பாபு ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி, தந்தை பெரியார், மகா கவி பாரதியார்,  இப்படி ஆன்மீகம், தேச விடுதலைப் போராட்டம், சமூக சீர்திருத்தம், என வண்டி வண்டியாக நம்மிடையே தலைவர்கள் இருக்கிறார்களே... அவர்களில் ஒருவரது பெயரை என்னால் ஏன் உடனடியாக என் மகளிடம் சொல்ல முடியவில்லை என்றால் அந்தக் குழப்பத்திற்கான காரணமும் இணையம் தான் எனப் புரிந்தது.

முன்பு நூலகத்தில் கிடைக்கும் வரலாற்றுப் புத்தகங்கள் மற்றும் தலைவர்களது சொந்த வாழ்க்கை வரலாறுகளை வைத்து மட்டுமே அவர்களது நல்லியல்புகளை நாம் தீர்மானித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது அப்படியல்ல இணையத்தில் அவர்களது பெயர்களை உள்ளிட்டால் போதும், உள்ளிருக்கும் அனைத்து விசயங்களையும் கொட்டி விடுகிறது கணினி. அதில் நல்லதும் இருக்கிறது, சமயங்களில் தேவையற்ற குப்பை விமரிசனங்களும் இருக்கிறது. நாம் இதுவரை தலைமைப் பொறுப்பை அளித்து மனதாரத் தூக்கிச் சுமந்த பல தலைவர்களது தலைமைப் பண்பை எள்ளி நகையாடும் வண்ணமும் சில பக்கங்கள் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. இதெல்லாம் அவசியமா? இல்லையா? என்பதைத் தாண்டி இணையம் மூலமாக நமது நம்பிக்கைகளை இடித்துச் சரிக்கும் விதமாக உலகத் தலைவர்கள் பலரைப் பற்றியும் பலவிதமான எதிர்மறைத் தகவல்களையும் நாம் அறிந்து கொள்ளும் நிர்பந்தத்தில் உள்ளோம். 

பெற்றோரான நமக்கே இந்த விசயத்தில் இத்தனை குழப்பமென்றால்... தங்களது பாடப்புத்தகங்கள் உத்தமர்கள் என்று வர்ணித்திருக்கும் தலைவர்களின் புனிதத்தைச் சிதைத்து கணினியில் வேறொரு பிம்பம் உருவாக்கப் பட்டிருந்தால் அதை இந்தக் குழந்தைகள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் எனத் தெரியவில்லை. போதாக்குறைக்கு வேலைக்குப் போகும் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளின் படிப்பிற்கான தேடல்களுக்கு வசதியாக இருக்கட்டும் என்று டேப்லட்டுகளையும், ஸ்மார்ட் போன்களையும், லேப் டாப்களையும் சர்வ சாதாரணமாக தங்களது குழந்தைகள் கையாள அனுமதித்து விடுகிறார்கள். அவர்கள் அதில் எந்தெந்த பக்கங்களைப் படிக்கிறார்கள் என்பதைக் காணும் அவகாசம் பெரும்பாலும் அந்தப் பெற்றோர்களுக்கு இருப்பதில்லை. அப்படியானால் நமது குழந்தைகள் எந்தக் குப்பையை வேண்டுமானாலும் படித்து விட்டுப் போகட்டும் என்று நினைக்கிறோமா நாம்? இதற்கெல்லாம் ஒரு கட்டுப்பாடு வேண்டாமா? என்றெல்லாம் கவலைகள் தறி கெட்டு ஓடின. கவலைகளை அதன் போக்கில் விட்டு விட்டு நான் மீண்டும் இந்தக் கேள்விக்கே மீண்டும் வந்தேன்.

குறையில்லாத லீடர்ஸ்ன்னு யாருமே இல்லையாம்மா? 

என் மகளுக்காகவாவது குறையேயில்லாத ஒரே ஒரு தலைவரை நான் கண்டுபிடித்தே ஆக வேண்டும். இதை வாசிக்கும் நீங்களும் கூடத் அப்படித் தேடிக் கண்டுபிடிப்பதோடு, அதை எங்களோடு இங்கே பகிரவும் செய்யுங்கள்.

- தொடரும்

Image courtsy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com