பேரன்டிங்கில் மாற்றுச் சிந்தனை நலம் தருமெனெ நம்புகிறீர்களா?

இந்த வற்புறுத்தல் என்பதன் அளவுகோல் தான் என்ன? பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி எந்தளவுக்கு வற்புறுத்தலாம் என்பதற்கு ஒரு வரையறை உண்டில்லையா?
பேரன்டிங்கில் மாற்றுச் சிந்தனை நலம் தருமெனெ நம்புகிறீர்களா?

சால்ட் சில்ட்ரன் பெப்பர் பேரண்ட்ஸ்- 7

‘அப்பா’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள்... இதுவரை பார்க்கவில்லை என்றாலும் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக உங்கள் ___ தொலைக்காட்சியில் என்று நொடிக்கொரு விளம்பரத்தோடு சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் போதாவது பார்த்து விடுங்கள்.

அந்தத் திரைப்படத்தில் இந்த உலகின் மூன்று விதமான அப்பாக்களை காண்பித்திருப்பார்கள். அந்த மூன்று விதங்களுக்கும் அப்பாற்பட்ட குணாதிசயங்கள் கொண்ட அப்பாக்கள் கூட அரவமின்றி நம்மோடு உலவிக் கொண்டிருந்தாலும் அப்பாக்களைப் பொதுமைப்படுத்த வேண்டுமெனில் இந்த மூன்று அப்பாக்களுமே போதும் என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் வரும் அப்பாக்களில்; தம்பி ராமசாமிக்கோ, எப்படியாவது தன் மகன் எல்லாவற்றிலும் முதலில் வந்தே தீர வேண்டும் என்று ஆசை. நமோ நாராயணனுக்கோ ‘அது பள்ளியோ அல்லது வேறு இடமோ, எங்கு செல்வதாக இருந்தாலும் தன் மகன் இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக இருந்து விட்டு வந்து விட வேண்டும்; எனும்படியான பயந்தாங்கோழி மனப்பான்மை. இவர்கள் இருவரைத் தாண்டி சமுத்திரக்கனிக்கோ; தன் மகன் அவனது விருப்பங்களுடன், தன்னம்பிக்கையோடு வளர வேண்டும் என்று ஆசை. இந்த மூன்று விதமான அப்பாக்களில் பார்வையாளர்களுக்கு ஆதர்ஷ்மாக விளங்கிய அப்பா யாரென்றால் அது சமுத்திரக்கனி தான் என்று நம்மில் யாரைக் கேட்டாலும் நாம் எளிதாகச் சொல்லி விடுவோம். ஆமாம் வெறுமே சொல்ல மட்டும் தான் நம்மால் முடியும். ஆனால் அப்படி ஒரு விதமான பிள்ளை வளர்ப்பை நம் வீட்டிலும் செயல்படுத்திப் பார்த்தால் என்ன? என்ற துணிவு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கக் கூடும்?! பெரும்பாலானோருக்கு அந்த துணிச்சல் இல்லை என்பதே வாஸ்தவம்.

நமக்கு நம் குழந்தைகள் 10 ஆம் வகுப்பில் ஸ்டேட்போர்டு சிலபஸில் படிக்கிறவர்கள் எனில் குறைந்த பட்சம் மூன்று சதங்களோடு 500க்கு 490 மதிப்பெண்களாவது பெற்றே ஆக வேண்டும். அதே சிபிஎஸ்இ சிலபஸ் எனில் 10/10 கிரேட் வாங்கியே தீர வேண்டும். இந்தக் கனவுகள் இல்லாத பெற்றோர்கள் இன்று வெகு குறைவாகவே உள்ளனர். எனவே அதற்காகத் திட்டமிட்டு, திட்டமிட்டே நாம் நமது வாழ்வின் பொன்னான பல நாட்களை இயந்திரத் தனமாகவே செலவழித்துக் கொண்டிருக்கிறோம். 

இயந்திரத்தனம் என்றதும்... உடனே அப்படியானால் குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லையா? பெற்றோர்களும், குழந்தைகளுமாக எப்போதுமே சிரித்துப் பேசிக் கொண்டு பொழுது போக்கிக் கொண்டிருப்பதே வாழ்நாள் முழுதும் செய்து கொண்டிருந்தால் பிறகு வாழ்க்கைக்கான முன்னேற்றங்களை எப்படித் தேடுவது? சும்மா சினிமாவில் காண்பிக்கிறார்களே என்று நாம், நம் குழந்தைகளை படிக்கச் சொல்லி வற்புறுத்தாமல் விட்டோமானால், அப்புறம் சினிமா அப்பாக்கள் போல நம்மால் நிம்மதியாக இருந்து விட முடியுமா? பேக்கப் சொன்னதன் பின் சினிமா அப்பாக்களுக்கு அவர்களது சினிமா குழந்தைகளைப் பற்றி அக்கறை கொள்ள அவசியமில்லாமல் போகும். ஆனால் நிஜ அப்பாக்களுக்கு அப்படி இல்லையே?! நிஜ பெற்றோர்களுக்கு எப்போதும் அவர்களது நிகழ்காலமும், எதிர்காலமும் அவர்களது பிள்ளைகளே எனும் போது அவர்களைப் படிக்கச் சொல்லியும், கல்வியின் மீது அக்கறை காட்டச் சொல்லியும் வற்புறுத்தாமல் இருப்பது என்பது இயலாத காரியமே! ஆனால் இந்த வற்புறுத்தல் என்பதன் அளவுகோல் தான் என்ன? பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி எந்தளவுக்கு வற்புறுத்தலாம் என்பதற்கு ஒரு வரையறை உண்டில்லையா? அந்த வரையறையைத் தாண்டாதவரை இருவருக்குமிடையே எந்த விதமான நிர்பந்தங்களும் ஆட்சி செலுத்தப் போவதில்லை. இதை இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், பெற்றோர்களும் ஒரு காலத்தில் அவரவர் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளாக இருந்தவர்களே! அதனால் அவர்களுக்கு நிச்சயம் தங்களது குழந்தைகளின் மனச்சங்கடங்களும், உளவியல் சிக்கல்களும் புரியாமல் போக நிச்சயம் வாய்ப்புகள் இல்லை. ஒரு சில பெற்றோர்கள் புரிந்து கொள்ள மறுப்பின் அது சந்தர்ப்பவாதமும், பிடிவாதமும் தானே தவிர வேறில்லை.

தமிழில் பள்ளி செல்லும் வயதிலுள்ள பதின் பருவக் குழந்தைகளை மையமாக வைத்து குழந்தைகளுக்கான திரைப்படங்கள் பல வெளிவந்து விட்டன. ஆனால் அவை அனைத்துமே பெரியவர்களால் திரைக்கதை அமைக்கப் பட்டு வெளிவந்த கதைகள். நிஜமாகவே ஒரு 15 வயதுச் சிறுவன் ஒருவன் தன்னை ஒத்த சிறுவர், சிறுமிகளை மையமாக வைத்துத் திரைக்கதை எழுதினால் அது எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள வேண்டுமென்பது எனது நெடுநாள் ஆசைகளில் ஒன்று. அவனுடைய பார்வையில் பெற்றோர் எப்படிச் சித்தரிக்கப் படுகிறார்கள் என்று அறிந்து கொள்ளவும் ஆசை உண்டு எனக்கு. இதுவரை வெளிவந்த குழந்தைகள் திரைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள் அஞ்சலி, பசங்க, பசங்க-2, குட்டி, சைவம், கன்னத்தில் முத்தமிட்டால், தங்க மீன்கள், காக்கா முட்டை, சாட்டை, அப்பா, இந்தத் திரைப்படங்களில் எல்லாம் தன் வீட்டுப் பெரியவர்களை மன நிம்மதிக்கு உள்ளாக்கும் வண்ணம் குழந்தைகள் எப்படி மாற்றம் அடைகிறார்கள் என்றும், பெரிய மனிதத் தன்மையுடனான குழந்தைகளும் தான் காட்டப் பட்டார்களே தவிர. குழந்தைகளை குழந்தைகளின் குணங்களுடன் மட்டுமே பதிவு செய்து இதுவரை எந்த ஒரு படமும் வெளிவந்தந்தாக நினைவில்லை. இந்தத் தொடரை வாசிப்பவர்களுக்கு அப்படி ஏதாவது குழந்தைகள் படம் பார்த்த அனுபவம் இருப்பின் அதை இங்கே பகிருங்கள். மேலே சொன்ன வரிசையில் ‘குட்டி’ திரைப்படம் ஓரளவுக்கு இரு வேறுபட்ட குடும்ப அமைப்புகளின் பிரதிநிதிகளான இரு குழந்தைகளின் மனநிலையைப் பதிவு செய்திருக்கும். அது மிக இயல்பானதாகவும் இருந்தது. ஆனால் அதிலும் கூட குழந்தைகளின் மனநிலையும், வாழ்வும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது என்று கூற முடியாது. ஏனெனில் அந்த திரைப்படம் குழந்தைத் தொழிலாளியாக்கப் பட்டு மும்பைக்கு விற்கப்பட்டு விடும் பெண்குழந்தைகளின் பரிதாபம் குறித்துப் பேச வந்த படம் என்பதால் அதில் குழந்தைகளின் அக உலகம் சார்ந்த காட்சிப் பதிவுகளுக்கு இடமில்லாமல் போய் விட்டது.

90 களில் வெளிவந்த ‘அஞ்சலி’ திரைப்படத்துக் குழந்தைகள் கொஞ்சம் அதிகப் பிரசங்கிகள் என்றே இப்போது நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அது தான் குழந்தைகளும் இயல்பும் கூட என்றாலும் திரைப்படத்தில் அது இன்னும் கொஞ்சம் அதீதமாக இருந்ததோ என இப்போது தோன்றுகிறது. அதே இயக்குனரின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படமும் கூட அப்படியே தான். இந்தத் திரைப்படங்களைக் காட்டிலும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளில் அவ்வப்போது வந்து, அவரை சிக்கலில் மாட்டி வைத்து விட்டுப் போகும் குழந்தைகள் மிக இயல்பானவர்களோ என்று கூட சில நேரங்களில் தோன்றி விடுகிறது.

ஏன் இந்த விசயத்தைப் பற்றி இத்தனை நீளமான வியாக்யானங்கள் எனில்; ஆம் தமிழில் குழந்தைகளுக்கேயான ஒரு திரைப்படம் இன்னும் உருவாகவில்லை, உருவாக்கப்படவில்லை. குழந்தைகளின் பெயரை வைத்து, குழந்தைகளை மையமாக வைத்துக் கொண்டு நாம் எப்போதும் பெரியவர்களுக்கான, பெற்றோர்களுக்கான திரைப்படங்களை மாத்திரமே உருவாக்கி வந்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளத்தான். 

பள்ளிக்காலத்தில் ஒழுங்காகப் படித்து, டாப் ரேங்க் வாங்கி, கல்லூரிக் காலத்தில் விரும்பிய பாடத்தை அதாவது பெற்றோர்கள் விரும்பிய பாடத்தை எடுத்துப் படித்து, வேலை வாய்ப்பு என்று வருகையில் பெற்றோர்களது மனம் நிறையும் வண்ணம் கை நிறைய சம்பளத்துடன் ஒரு நல்ல வேலையை வாங்கிக் கொண்டு நிம்மதியாக உட்காருவது தான் ஒரு மாணவனுக்கு சிறந்த வாழ்க்கையாக அமைய முடியுமா? இப்படிப்பட்ட எண்ணங்களுடன் வளர்ந்தால் தான் ஒரு குழந்தைக்கு சிறந்த குழந்தை என்ற அங்கீகாரம் கிடைக்குமா? என்றால்... ஆம் இப்போதுள்ள நமது சமூக அமைப்பில் இப்படி இருந்தால் மட்டுமே இந்த உலகம் நமது குழந்தைகளை சிறந்த குழந்தைகள், நமது குழந்தை வளர்ப்பு முறை சிறந்த குழந்தை வளர்ப்பு முறை எனும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் யாருக்கும் அணுவளவும் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் குழந்தை வளர்ப்பில் மாற்றுச் சிந்தனைகளையும் இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளாமல் இல்லை. அந்த ஏற்றுக் கொள்ளல் எப்போது எனில்; அந்த மாற்றுச் சிந்தனைகளால் அந்தக் குழந்தைகள் செயற்கரிய செயல்கள் ஏதாவது செய்து அது மக்களில் அனேகம் பேரைச் சென்றடைந்தால் மட்டுமே. அப்போது அங்கீகாரம் சாத்தியமாகிறது. அப்படி இல்லாத பட்சத்தில் அப்படியான மாற்றுச் சிந்தனையில் நம்பிக்கை கொண்ட பெற்றோர்களையும், குழந்தைகளையும் இந்தச் சமூகம் வேற்றுக்கிரகவாசிகளாக சித்தரிக்கத் தொடங்கி விடுகிறது. இது தான் நிதர்சனம்.

இப்படியான ஆராய்ச்சிகளில் இறங்கும் முன் பெற்றோர்களான நாம் முதலில் நமது குழந்தைகளை, குறிப்பிட்ட காலம் வரையில் குறைந்தபட்சம் 10, 11 வயது வரையிலாவது குழந்தைகளாகவே டீல் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ள முயற்சிப்போம். அது எப்படி எனில் நாமும் குழந்தைகளாக மாறிப்போவதைக் தவிர்த்து அதற்கு அதற்கு வேறு உபாயங்கள் இல்லை.

குழந்தைகளையும், பெற்றோர்களையும் பற்றி அடுத்த வாரம் மேலும் பேசலாம்...

தொடரும்...

Image courtsy: Google.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com