17. ஒரு கோப்பை நெய்

வேதகால ரிஷிகள் மாதக்கணக்கில் உணவின்றி, உறக்கமின்றித் தவமிருந்ததெல்லாம் எப்படி என்று நினைக்கிறீர்கள்? இம்மாதிரியான உணவுப் பழக்கத்தால்தான்

அவர் இறந்துவிடுவார் என்று எனக்கு அப்போது தோன்றவில்லை. நோயின் கடுமை மரணத்தை எண்ணிப்பார்க்க வைக்கக்கூடும் என்பதை அறிவேன். ஆனால் ஒரு காய்ச்சல், அது எத்தனை தீவிரமாக இருந்தாலும் உயிரைப் பறிக்காது என்று நினைத்தேன். குருவிடம் அதனைச் சொல்லவும் செய்தேன். அவர் எனக்கு பதிலேதும் சொல்லவில்லை. ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் சொன்னார், ‘நான் இறந்துவிடுவேன். அதற்குமுன் உன்னிடம் சற்றுப் பேச வேண்டும்.’

என்னவோ தோன்றியது. இந்த மனிதரைச் சற்று அலைக்கழித்துப் பார்த்தால்தான் என்ன? தனது இறுதிச் சொற்களை எனக்களிக்க அவர் முடிவு செய்திருந்ததைப் புரிந்துகொண்டேன். அப்படியானால், அவரது இறுதியைத் தீர்மானிப்பவன் நானாக அல்லவா இருப்பேன்? நான் அதைத் தள்ளிப்போட முடிவு செய்துகொண்டேன்.

‘குருஜி, நீங்கள் ஒழுங்காக உணவு உட்கொள்ளவும் மருந்து எடுத்துக்கொள்ளவும் கூடாரத்துக்குள் வந்து படுக்கவும் ஒப்புக்கொண்டாலொழிய நான் உங்களோடு பேசப்போவதில்லை; நீங்கள் சொல்வதைக் கேட்கப்போவதுமில்லை’ என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டேன். அவர் என்னை வற்புறுத்தவில்லை. என்னை சமாதானப்படுத்தி அழைத்துவரச்சொல்லி யாரையும் அனுப்பவுமில்லை. ஆற்றுப்படுகையில் விரித்த கோரைப் பாயில் அவர் படுத்திருந்தார். வானம் மட்டுமே உலகமென்பதுபோல.

சீடர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து, கவலையுடன் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். உணவு வேண்டாம்; பழங்கள் மட்டுமாவது எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லிப் பார்த்தார்கள். அவர் அதையும் மறுத்தார். இரண்டு பேரைப் பிடித்துக்கொள்ளச் சொல்லி, தானே தடுமாறி எழுந்து ஆற்றில் இறங்கி அவ்வப்போது இரண்டு கை நீரள்ளிப் பருகிவிட்டு வந்து மீண்டும் படுத்துக்கொண்டார். பசியால் அவர் இறக்கமாட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் மட்டுமல்ல. எங்கள் குருகுலத்தில் பயின்ற அனைவருக்குமே பசியை வெல்லும் கலை தெரியும். குருஜி எங்களுக்கு முதலில் சொல்லிக்கொடுத்தது அதனைத்தான்.

‘ஆன்மிகம் என்றில்லை. எதில் நாம் முன்னேற நினைத்தாலும் முதலில் வயிற்றைப் பற்றிய நினைவுக்கு விடைகொடுத்தாக வேண்டும்’ என்று குருஜி சொல்வார்.

ஆசிரமத்தில் வசிக்கிறவர்கள் தினமும் விடிந்து எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய் அருந்த வேண்டும் என்பதை குருஜி ஒரு கட்டாய விதியாக வைத்திருந்தார். பத்து நிமிடங்களுக்குப் பிறகு காலைக்கடன் முடித்துவிட்டு ஒரு லிட்டர் வெதுவெதுப்பான நீரை அருந்தி முடிக்க வேண்டும். இதற்கு அரை மணி நேரம் கழித்து அவரே ஒவ்வொருவரையாக அழைத்து வேப்பிலை, திப்பிலி, மிளகு வைத்து அரைத்த ஒரு சூரணத்தைக் கொடுத்து விழுங்கச் சொல்லுவார். அந்தக் கசப்புக்கும் காரத்துக்கும் அஞ்சி, பலபேர் அதைத் தூக்கிப் போட்டுவிடுகிறார்கள் என்று தெரிந்த பிறகுதான் அவர் தானே நேரடியாக அதைக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் எதிரிலேயே வாயில் போட்டு மென்று விழுங்கியாக வேண்டும். விழுங்கி அரை மணி நேரத்துக்குத் தண்ணீர் குடிக்க அவர் அனுமதிக்கமாட்டார். அவர் எதிரே அங்கேயே அமர்ந்து தியானத்தில் ஈடுபட வேண்டும். அந்த அரை மணியைக் கடந்தபிறகு, கசப்புக்குத் தண்ணீர் குடிக்கத் தேடும் வேட்கை இல்லாது போய்விடும். காப்பி, தேநீர் கிடையாது. பகல் பதினொரு மணிக்கு ஒவ்வொருவருக்கும் இரண்டு வெள்ளரிக்காய் அல்லது இரண்டு தக்காளிப் பழங்களைச் சாப்பிடக் கொடுப்பார்கள். அதனோடு ஒரு கறுப்புத் தேநீர். ஆனால் அதில் சர்க்கரை இருக்காது. அடுத்த உணவென்பது மாலை நான்கு மணிக்கு இருக்கும். சிறிதளவு உலர்ந்த திராட்சை, ஒரு பிடி வேர்க்கடலை இருக்கும். அபூர்வமாகச் சில நாள் கொண்டைக்கடலை சுண்டல் செய்யப்பட்டிருக்கும். முழு உணவு என்பது இரவில் மட்டும்தான். சரியாக எட்டரைக்கு அது ஆரம்பிக்கும்.

தேங்காய்ப் பூவில் பிரட்டிய ஒரு துண்டு வாழைப்பழத்தை அப்போது முதலில் சாப்பிட வேண்டும். அதன்பின் அருந்துவதற்கு ஒரு குவளை ரசம் வரும். வேப்பம்பூ ரசம். தூதுவளை ரசம். இஞ்சி ரசம். ஏதேனும் ஒன்று. ஆனால் ஒரு குவளை மட்டும். அதை அருந்தி முடித்ததும் இரண்டு காய்கறிகள் வரும். ஒன்று பச்சையாக. ஒன்று வேகவைத்தது. அதை உண்டு முடித்து இலை காலியானதும் ஒவ்வொரு இலைக்கும் தலா ஒரு சப்பாத்தி பரிமாறப்படும். பருப்புக் கூட்டைத் தொட்டுக்கொண்டு அதைத் தின்று தீர்த்தால் அடுத்ததாக சாதம் வரும். ஏதேனும் ஒரு குழம்பு. குருஜிக்கு மோர்க்குழம்பு என்றால் இஷ்டம். அதனாலேயே அதை மாதம் ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார். ஆசிரமத்தில் பெரும்பாலும் வத்தக்குழம்புதான் இருக்கும். அபூர்வமாக ஒருநாள் பருப்பு சாம்பார் அமைந்துவிடும். அன்றைக்கெல்லாம் நான் மூன்று முறை, நான்கு முறை சாம்பாரைக் கேட்டுக் கேட்டு வாங்கிப் பிசைந்து வளைத்துக் கட்டுவேன். காய்கறிகளையோ, கூட்டையோ சாதத்துக்குத் தொட்டுச் சாப்பிடக் கூடாது என்று குரு சொல்லுவார். ஒவ்வொரு நாளும் எங்களோடு கூடவேதான் அவர் சாப்பிட உட்காருவார் என்பதால், விதியை மீறக் கஷ்டமாக இருக்கும்.

‘குருஜி, நீங்கள் மிகவும் படுத்துகிறீர்கள். உணவு விஷயத்தில் நீங்கள் சற்று சுதந்தரம் தரலாம்’ என்று ஒருநாள் நான் சொன்னேன்.

‘நான் இழுத்துப்பிடிப்பதெல்லாம் அந்த ஒரு விஷயத்தில் மட்டும்தானே?’ என்றார் அவர்.

யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். உணவைத் தவிர வேறு எதிலுமே அவர் என்னைக் கட்டுப்படுத்தியதில்லை. ஒரு வாரம் ஆசிரமத்தில் சமையல் நடக்கும். அடுத்த வாரம் கூசாமல் பிச்சைக்குப் போகச் சொல்லிவிடுவார். சமைத்து உண்டாலும் சரி, பிச்சை எடுத்து உண்டாலும் சரி. கண்டிப்பாக ஒருவேளை உணவுதான். அதில் மாற்றம் இருக்காது.

‘விமல், இந்த உலகில் படைக்கப்பட்ட எந்த உயிரினமும் சரியாக மணியடித்து மூன்று வேளை உண்பதில்லை. மனிதன் மட்டும்தான் கெட்டுப்போய்விட்டான்’ என்றார் குரு.

‘ஆனால் பசிக்கிறதே?’

‘இல்லை. அது உணர்வல்ல. உன் பிரமை. இந்த வேளைக்கு உண்ணாவிட்டால் பசிக்கும் என்பது, சொல்லித் தரப்பட்டிருப்பது மட்டுமே. உண்மையில் நீ உயிர்வாழ ஒருவேளை உணவு உனக்குப் போதும்.’

‘அப்படியா?’

‘ஒரு வாரம் இருந்து பார். புரிந்துவிடும்’ என்று சொன்னார்.

எனக்கு அது புரிவதற்கு ஒருவாரம் போதவில்லை. சுமார் ஒன்றரை மாதங்கள் பிடித்தன. காலை அருந்தும் ஒரு ஸ்பூன் நெய் மட்டுமே மதியம்வரையிலான பசிக்குப் போதும் என்று குருஜி சொன்னது எத்தனை உண்மை என்று வியந்தேன். மதியம் எழுந்த பசியை நான்கு மணி வரை அடக்கிவைத்தால் கிடைக்கும் இரண்டு வெள்ளரிப் பிஞ்சுகளே ஒரு பெரும் விருந்தைப்போல் ருசிக்கும். இரவுணவு பற்றிய எண்ணம் அடுத்த சில மணி நேரங்களுக்கு இல்லாமல் போய்விடும். மீண்டும் பசி தெரிய எட்டு மணியாகும். சரியாக எட்டரைக்கு ஆசிரமத்தில் இலை போடப்பட்டுவிடும்.

ஒவ்வொரு மாதமும் கடைசி பத்து தினங்கள் மட்டும் குருஜி எங்கள் உணவில் மாற்றம் செய்வார். அந்த நாள்களில் காலை பத்து மணிக்கு ஆளுக்கொரு கட்டு கீரை சமைத்து உண்ணலாம். அதோடு இரவு பத்து மணிக்குத்தான் அடுத்த உணவு. அதை உணவென்று எப்படிச் சொல்வது? ஒவ்வொருவரும் நூறு கிராம் உருக்கிய நெய் அருந்திவிட்டுப் படுத்துவிட வேண்டும்.

அவர் எங்கிருந்து இதைக் கற்றார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் எந்த வரையறைக்குள்ளும் அடங்காத இந்த உணவுப் பழக்கம் சிறிது சிறிதாகப் பசியில் இருந்து எங்களை முற்றிலுமாக வெளியேற்றிவிட்டிருந்தது. பல சமயம் பிச்சைக்குப் போகச் சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு நான் இரண்டு மூன்று நாள்களை உண்ணாமலேயே கடந்திருக்கிறேன். சோர்வு தெரியாது. களைப்பாக இருக்காது. அன்றாடப் பணிகள் எது ஒன்றிலும் தொய்வு நேராது. என்னைப் பார்த்து ஆசிரமத்தில் பலபேர் அப்படி ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள்களெல்லாம் சாப்பிடாதிருந்து பார்த்திருக்கிறார்கள். எங்களால் அது முடிந்தது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை.

குருஜி புன்னகை செய்தார். ‘வேதகால ரிஷிகள் மாதக்கணக்கில் உணவின்றி, உறக்கமின்றித் தவமிருந்ததெல்லாம் எப்படி என்று நினைக்கிறீர்கள்? இம்மாதிரியான உணவுப் பழக்கத்தால்தான்!’

‘அப்படியானால் யோகப்பயிற்சிகள் இதில் உதவுவதில்லையா?’

‘என்ன உளறுகிறாய்? இந்த உணவுப் பயிற்சியே ஒரு யோகமுறை அல்லவா?’ என்று குருஜி கேட்டார்.

ஒரு சமயம், பதினேழு தினங்கள் வெறும் நீரை மட்டுமே அருந்தியபடி அவர் உண்ணாதிருந்ததை நான் கண்டிருக்கிறேன். அந்தப் பதினேழு தினங்களிலும் அவரது அன்றாடப் பணிகள் எதுவும் தடைபடவில்லை. அவர் வழக்கம்போலப் படிக்க வேண்டியவற்றைப் படித்தார். வழக்கம்போல எங்களோடு உரையாடினார். வகுப்பெடுத்தார். பிரசங்கங்கள் செய்தார். நடமாட்டத்தை மட்டும் சற்று மட்டுப்படுத்திக் கொண்டதைக் கவனித்தேன். தினமும் பத்து மைல் தொலைவுக்குக் காலை நடை ஒன்று போய் வருவார். அந்த தினங்களில் அந்தப் பயிற்சியை அவர் மேற்கொள்ளவில்லை.

என்ன நினைத்தாரோ. பதினேழாம் நாள் இரவு படுக்கச் சென்றபோது, ‘காலை நான் உண்ணாவிரதத்தை முடித்துவிடுவேன்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். சொன்னது போலவே மறுநாள் காலை ஒரு ஸ்பூன் நெய் அருந்தித் தமது விரதத்தை நிறைவு செய்தார். அரை மணி நேரம் கழித்து ஒரு தம்ளர் எலுமிச்சைச் சாறு கொண்டுவரச் சொல்லிக் குடித்தார். அன்றைக்கு மட்டும் இரவுணவாக அல்லாமல் காலையே பிச்சைக்குச் சென்று வந்து கிடைத்ததைச் சாப்பிட்டுவிட்டு, ‘நாம் ஆரம்பிக்கலாம்’ என்று முண்டகோபநிஷத்தை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தார்.

எனக்குத் தெரிந்து அவர் நோய் என்று படுத்ததில்லை. சிறு தலைவலி, ஜலதோஷம்கூட அவருக்கு வந்தது கிடையாது. என்ன காரணத்தால் அப்படியொரு காய்ச்சல் கண்டிருக்கும் என்று விளங்கவேயில்லை. குரு சொன்னார், ‘போக ஒரு வழி வேண்டும். எனக்கு விதித்தது இது.’

எனக்கு அந்த சாதுர்மாஸ்ய விரதம் இருக்கும் யோசனையைக் கொடுத்தவனைத் தேடிப்பிடித்துக் கட்டிவைத்துத் தோலை உரிக்க வேண்டும் என்று தோன்றியது. என் நண்பர்கள் அத்தனை பேரும்கூட அதையேதான் சொன்னார்கள். வாடகைக்கு ஓர் அடியாளை அமர்த்தியாவது அவனைத் தேடிப்பிடித்து இழுத்துவரச் செய்யலாம் என்று ஒருவன் சொன்னான். கட்டுப்படுத்த இயலாத கோபத்தை இழுத்துப்பிடிக்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன். அவரது காய்ச்சல் ஓய்வேனா என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தது. அந்த நான்கு மாதங்களில், அவர் எங்களுக்கு அதர்வ வேதத்தின் அங்கங்களுள் ஒன்றான ஆயுர்வேதம் குறித்து போதிப்பதாகச் சொல்லியிருந்தார். அவர் ஒரு சிறந்த நாட்டு மருத்துவர் என்பதை நானறிவேன். ஆனால் கண்டிப்பாகத் தனக்கு எந்த வைத்தியத்தையும் செய்துகொள்ளப்போவதில்லை என்ற உறுதியில் இருந்தார்.

விரக்தியிலும் ஆற்றாமையிலும் இருந்த ஒரு கணத்தில் நானே எழுந்துசென்று அவர் அருகே அமர்ந்து கேட்டேன், ‘குருஜி, அவன் உங்களுக்கென்று அனுப்பப்பட்ட காலதூதன் என்பதை எப்படி அறிந்தீர்கள்?’

அவர் நெடுநேரம் அமைதியாகவே இருந்தார். நான் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டபோது, ‘நீ உன் விரதத்தில் இருந்து விலகுகிறாய். நீ என்னோடு பேசப்போவதில்லை, நான் சொல்வதைக் கேட்கப்போவதில்லை என்று விரதம் பூண்டவன். மறந்துவிட்டாயா விமல்?’ என்று கேட்டார்.

எனக்கு அழுகை வந்தது. அடக்கிக்கொண்டு அவர் கரங்களைப் பிடித்துக்கொண்டேன். ‘உங்கள் உயிர் பொருட்டல்ல. ஆனால் என் வாழ்க்கை எனக்கு முக்கியம். நீங்கள் இறந்துவிடக் கூடாதென்று நான் விரும்புவதன் காரணம் சுயநலம்தான். புரிந்துகொள்ளுங்கள்’ என்று சொன்னேன்.

‘உண்மையாகவா?’

‘ஆம். சந்தேகமில்லை. ஆன்மிகத்தில் சுயநலத்தின் இடம் மிகப்பெரிது என்று நான் கருதுகிறேன். என் சுயம் நன்றாக இருந்தால்தான் உங்கள் நூற்று எண்பத்து ஒன்பது தெய்வங்களும் உயிரோடு இருப்பார்கள்.’

சட்டென்று அவர் புன்னகை செய்தார். என் கைகளைப் பிடித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தார். என் கன்னங்களை வருடிக் கொடுத்தார். ‘சரி, போய் எங்காவது ஒரு கோப்பை நெய் சம்பாதித்துக்கொண்டு வா’ என்று சொன்னார்.

‘குருஜி, நான் உங்களை அழைத்துச் செல்கிறேன். நீங்களே பிச்சை எடுங்கள். விரதம் கலைய வேண்டாம்.’

‘இல்லை, அது கலையாது. பிச்சை எடுத்துவரும் நெய்யை நீ அருந்து. உன்னை நான் அருந்திவிடுகிறேன். அப்படிச் செய்தால் பாதகமில்லை என்று முப்பத்தியேழு சொல்கிறான்’ என்று சிரித்தபடி சொன்னார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com