13. காவல்

மாமி ஆசைப்பட்ட ஓட்டு வீட்டில் ஒரு நாள்கூட அவளால் முழுதாக வாழ முடியாமல் போனது மட்டும் நெடுநாள் வரை உறுத்தலாகவே இருந்தது.

மாடத்தில் வைத்த விளக்கின் நிழல் சுவரில் படர்ந்து லேசாக அசைவதுபோல, அடுக்களைக்குள் அம்மா அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்திருப்பது தெரிந்தது. போனவனை எண்ணிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். இருப்பவர்களுக்குப் பசிக்க ஆரம்பித்திருக்கும் என்பதை அவள் அறிவாள். எது இருந்தாலும் இல்லாது போனாலும் வேளைக்குப் பசிக்கத் தவறுவதில்லை யாருக்கும். துக்கத்திலும் கோபத்திலும் சோறு வேண்டாம் என்று சொல்லுவதெல்லாம் எத்தனை வேளைக்கு சாத்தியம்? தீயற்றுப் போனாலும் கங்கற்று இருப்பதில்லை எந்தக் குண்டமும்.

அம்மா அடுப்பை மூட்டுவது தெரிந்தது. அரிசி களைவது தெரிந்தது. உலை வைத்துவிட்டு அடுக்களையை விட்டு வெளியே வந்தாள். வினய்யைக் கூப்பிட்டு ஏதாவது காய் வாங்கி வரச் சொல்லிப் பணம் கொடுத்து அனுப்பினாள். அவன் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிய நேரம், கேசவன் மாமா விடுவிடுவென வீட்டுக்குள் நுழைந்தார். அவர் கையில் ஒரு பெரிய கட்டைப்பை இருந்தது. அந்தப் பை நிறையத் துணிமணிகள் இருந்தன. அவர் தோளில் தொங்கிய இன்னொரு பையில் நாலைந்து பாத்திரங்கள் இருந்தது அவை எழுப்பிய சத்தத்தில் இருந்து தெரிந்தது. அநேகமாக அது மாமாவின் பூஜையறைப் பாத்திரங்களாக இருக்கலாம் என்று நினைத்தேன். வட்டில், சாளக்கிராமம், சொம்பு, கொளபாத்திரம்.

அம்மா அவரிடம் எதுவும் கேட்கவில்லை. வெறுமனே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டு நின்றாள். பிறகு அப்பாவைப் பார்த்தாள். அவர் பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு ஏதோ கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார். மாமாவை நிமிர்ந்து பார்த்து, ‘உக்காரு’ என்று மட்டும் சொன்னார்.

‘நான் அந்தாத்த காலி பண்ணிண்டு வந்துட்டேன் அத்திம்பேர்’ என்று மாமா சொன்னார்.

அப்பாவோ, அம்மாவோ அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு பைகளுக்குள் அடங்கக்கூடிய குடித்தனத்தைத்தான் அவர் அத்தனைக் காலமாக அங்கே நடத்திக்கொண்டிருந்திருக்கிறார். காலி செய்வதொன்றும் அத்தனை சிரமான செயலில்லை. மாமாவின் வீடு தெற்கு வீதியை ஒட்டியிருந்த தென்னந்தோப்புக்கு வடக்கே இருந்தது. மிகச் சிறிய ஓட்டு வீடு. உண்மையில் அது குடிசை வீடுதான். ஆறேழு வருடங்களுக்கு முன்புதான் மாமா அந்த வீட்டின் ஓலைக் கூரைகளை மாற்றி சொருகு ஓடு போட்டிருந்தார். மண் தரையை சிமெண்டு தரையாக்கி, புதிதாக ஒரு நிலைக்கால் வைத்து, அதற்கொரு பூஜையும் போட்டு, கிரகப்பிரவேசமாக இல்லாவிட்டாலும் ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நுழைந்ததும் ஒரு கூடம். அதிலேயே வலது ஓரத்தில் சமைக்கும் இடம். அதை ஒட்டியே நாலடிக்கு நாலடி பரப்பில் பாத்திரம் துலக்க ஒரு தொட்டி. மொத்த வீடே அவ்வளவுதான்.

‘போதுமேக்கா. நாங்க ரெண்டே பேர். இன்னொண்ணுக்கு இந்த ஜென்மத்துல ப்ராப்தமில்லேன்னு தெரிஞ்சாச்சு. உக்கார ரெண்டடி. படுக்க ஆறடி. இந்த வீடு யதேஷ்டம்’ என்று மாமா சொன்னார். கமலி மாமி அன்றைக்கெல்லாம் மிகுந்த சந்தோஷமுடன் காணப்பட்டாள். எங்கள் ஆறு பேருக்கும் அன்று கேசவன் மாமா வீட்டில்தான் சாப்பாடு. இலை விரித்து, சர்க்கரை வைத்து பருப்பு, நெய், சாம்பார், ரசம், இரண்டுவிதக் காய்கறிகள், வடை, திருக்கண்ணமுதுடன் மாமி அமர்க்களப்படுத்தியிருந்தாள்.

‘என்னத்துக்கு கமலி இவ்ளோ பண்ணியிருக்கே?’ என்று அம்மா கேட்டாள்.

‘இதைவிட்டா வேற எப்ப இதெல்லாம் பண்ணி சாப்பிடறது?’ என்றாள் கமலி மாமி.

மாமா வீட்டில் பெரும்பாலும் சமையல் என்ற ஒன்று இருந்து எனக்கு நினைவில்லை. அவர் கோயில் மடைப்பள்ளியில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தார். புளியோதரை இல்லாத நாள்களிலும் அவருக்கு ததியோன்னத்துக்குக் குறைவிருக்காது. கமலி மாமி பிரமாதமாக ஆவக்காய் ஊறுகாய் போடுவாள் என்பதால், மாமா வீட்டில் பெரும்பாலும் கோயில் ததியோன்னமும் ஆவக்காய் ஊறுகாயும்தான் சாப்பாடாக இருக்கும். மாமி ஒரு நாளும் அதைப்பற்றியெல்லாம் அலுத்துக்கொண்டதில்லை என்று கேசவன் மாமா அடிக்கடிப் பெருமையாகச் சொல்லுவார்.

‘கேட்டுக்கோடா வினோத். உனக்குத்தான் அவன் சொல்றான். சாப்பிடறதுல ஒண்ணுமில்லே. எதையாவது ஒண்ணப் போட்டு வயித்த நிரப்பினா போதும். புத்தி ஒண்ணுதான் எப்பவும் பிரகாசமா இருக்கணும். துலங்கி நிக்கணும். வயித்தையே கவனிச்சிண்டிருந்தா அந்த ஜோலி கெட்டுப்போயிடும்’ என்று அப்பா சொல்லுவார்.

எங்கள் வீட்டில் வினோத்துக்கு மட்டும்தான் விதவிதமாகச் சாப்பிடுவதில் ஆர்வம் அதிகம். அதற்காக அம்மாவை எப்போதும் அவன் நச்சரித்துக்கொண்டே இருப்பான். இட்லித் தட்டில் நாலு குழி மாவூற்றி வைக்கும்போதுகூட கொஞ்சம் கேரட் துருவித் தூவி வேகவிடச் சொல்லுவது அவன் வழக்கம்.

‘இட்லில போய் யாராவது கேரட் போடுவாளா?’ என்று அம்மா கேட்டால், ‘போட்டுத்தான் பாரேன், நாலு கொத்தமல்லிய சேத்துக் கிள்ளிப் போடு. பிரமாதமா இருக்கும்’ என்பான்.

‘உனக்கு யாருடா இதெல்லாம் சொல்லித்தரா?’

‘யாருமில்லே. நானே யோசிப்பேன். முடக்கத்தான் கீரை தோசை பண்றப்போ, கேரட் இட்லி மட்டும் கூடாதா? உப்மாக்கு தாளிக்கறப்போ நாலு துளசியைக் கிள்ளி சேர்த்துப் போட்டுத் தாளிச்சிப் பாரு. அமிர்த வாசனையா இருக்கும்’ என்பான்.

அம்மாவுக்கு அவன் பேச்செல்லாம் எப்போதும் தீராத ஆச்சரியம்தான். இந்தப் பிள்ளை எப்பப்பார் சாப்பாட்டையே நினைத்துக்கொண்டிருக்கிறானே என்று சமயத்தில் அவள் அலுத்துக்கொள்வதுண்டு. ஆனாலும் அவனது ருசி சார்ந்த ஆலோசனைகள் பிழைபட்டுப் போவதேயில்லை என்று அடிக்கடி சொல்லுவாள்.

‘யாரு கண்டா? எனக்கப்பறம் உன் பிள்ளைதான் மடைப்பள்ளி நிர்வாகத்த எடுத்துக்கப் போறானோ என்னமோ’ என்று கேசவன் மாமா சொல்லும்போதெல்லாம், அப்பா அந்தப் பேச்சை வெட்டி விடுவார். &அவனை நான் ஐசிடபிள்யுஏ படிக்கவெக்கப் போறேன். இன்னிக்கெல்லாம் அதுதான் பெரிய படிப்பு. அதைப் படிச்சவாள்ளாம் மெட்ராசுல லட்ச லட்சமா சம்பாதிக்கறாளாம்’ என்பார்.

வினோத்துக்கு அது என்ன படிப்பு என்று விசாரித்து அறிய விருப்பம் இருந்ததில்லை. அப்பாவுக்கும் அநேகமாக அதைப்பற்றி எதுவும் தெரிந்திருக்காது என்றுதான் நாங்கள் அனைவருமே நினைத்தோம். யாரோ சொல்லியிருப்பார்கள். ஐசிடபிள்யுஏ என்பது பெரிய படிப்பு. நாலு பேரில் ஒருவனை அதைப் படிக்க வை. என்ன காரணத்தாலோ அப்பா வினோத்தை அதற்குத் தேர்ந்தெடுத்திருந்தார்.

அவருக்கு அண்ணாவை பாலிடெக்னிக்குக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த வருடம்தான் முதல்முதலாக அப்படியொரு படிப்பு அறிமுகமாகியிருந்தது. தொழில் கல்வி. அங்கே படித்துவிட்டால் போதும். எல்லா பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் உடனே கூப்பிட்டு வேலை கொடுத்துவிடுவார்கள் என்று அப்பா சொன்னார். அதேபோல, வினய் பெரியவனானதும் எப்படியாவது அவனை அரசாங்கப் பரீட்சை எழுதவைத்து கவர்மெண்டில் போட்டுவிட வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருப்பார். என்ன உத்தியோகம், எந்தத் துறை என்றெல்லாம் பேச்சே கிடையாது. கவர்மெண்டில் போட்டுவிட வேண்டும். வீட்டுக்கு ஒருவனாவது பென்ஷன் வாங்கும் உத்தியோகத்தில் இருக்க வேண்டும் என்பது அவரது இச்சை.

‘அதெல்லாம் ஒரு குடுப்பினை. எல்லாருக்கும் அவ்ளோ லேசுல கிடைச்சிடாது. என்னையே எடுத்துக்கோ. எங்கப்பா தலைகீழா நின்னு தண்ணி குடிச்சிப் பார்த்தார். முடிஞ்சிதா? இந்த ஜென்மால ஒனக்கு விஜிபில டிக்கெட் கிழிக்கற உத்தியோகம்தான்னு எழுதி வெச்சுட்டான். யாரு மாத்த முடியும்?’ என்று அலுத்துக்கொள்வார். விஜிபி திறப்பதற்கு முன்னால் அப்பா முதலைப் பண்ணையில் அதே டிக்கெட் கிழிக்கும் உத்தியோகத்தில்தான் இருந்தார். அதற்கும் முன்னால் மகாபலிபுரத்தில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார். டிக்கெட் கிழிக்கும் உத்தியோகம் என்று அவர் சொன்னாலும், உண்மையில் அவர் அந்த வேலையைச் செய்யவில்லை. கணக்குப் பிரிவில்தான் அவர் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்பதை வெகு காலம் கழித்துத்தான் நான் தெரிந்துகொண்டேன். அதுவும் அண்ணா சொன்னதுதான்.

அன்றைக்கு கேசவன் மாமா வீட்டு கிரகப்பிரவேசத்தில் நாங்கள் ஆறு பேர் மட்டும்தான் விருந்தினர். ஒப்புக்கு ஒரு வாத்தியாரைக்கூட மாமா அழைத்திருக்கவில்லை. அவரே ஒரு ஔபாசனக் கல்லை எடுத்துவைத்து அக்னி சந்தானம் செய்து, தனக்குத் தெரிந்த மந்திரங்களைச் சொன்னார். பத்து நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. ‘இலை போட்டுடலாம்’ என்று கமலி மாமிக்குச் சொல்லிவிட்டு, ‘உக்காருங்கோ அத்திம்பேர்’ என்று சொன்னார்.

அன்று முழுதும் நாங்கள் மாமா வீட்டிலேயேதான் இருந்தோம். என்னமோ புத்தம் புதிதாக ஒரு வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தாற்போல, அம்மா வாய் ஓயாமல் மாமியைப் புகழ்ந்துகொண்டே இருந்தாள். ‘கண்ணு படும். கோயில் வாச்மேன் முனுசாமி சும்மாத்தானே கெடக்கறான்? கூப்ட்டு ஒரு பூசணிக்காய சுத்தி உடைச்சிட்டுப் போகச் சொல்லு’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அன்றிரவு மாமா எங்கள் வீட்டுக்கு வந்தபோது, பூசணிக்காய் உடைத்துவிட்ட தகவலைச் சொல்லத்தான் வந்தார் என்று நினைத்தோம். ‘என்னடா?’ என்று கேட்டபோது, மாமா மேல் துண்டால் வாயைப் பொத்தி, குலுங்கிக் குலுங்கி அழுதார்.

‘டேய், என்னன்னு கேக்கறனே? சொல்லித் தொலையேன்’ என்று அப்பா பதற்றத்துடன் முன்னால் வந்தார். அம்மாவுக்கும் பதற்றமாகிவிட்டது. ‘ஆத்துல அவ சகஜமா இருக்காளோல்யோ?’ என்று கேட்டாள்.

‘போயிட்டாக்கா!’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார் கேசவன் மாமா.

ஒரு ஓட்டு வீட்டில் வாழ வேண்டும் என்பது கமலி மாமியின் வாழ்நாள் கனவாக இருந்தது என்று பிற்பாடு மாமா சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். தலைமுறை தலைமுறையாக ஏழைமையின் கோரப் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமான குடும்பம் அவளுடையது. மாமா அவளை மணந்துகொண்டபோது, கமலி மாமியின் அப்பா அவர் கையைப் பிடித்துக்கொண்டு அழுதபடி சொன்னாராம், ‘மாப்ளே, என்கிட்ட மொத்தமா நாப்பத்தியெட்டு ரூபா இருக்கு. அத வெச்சிண்டு ஒரு கல்யாணத்த எப்படி பண்றதுன்னு எனக்குத் தெரியலே. நீங்களே பாத்துப் பண்ணிக்கோங்கோ’ என்று சொல்லி அந்தப் பணத்தை மாமாவின் கையில் திணித்திருக்கிறார்.

‘அந்தப் பொண்ண எனக்குத் தெரியும் கேசவா. தங்கமான பொண்ணு. யோசிக்காம பண்ணிக்கோ’ என்று அம்மாதான் மாமாவுக்கு எடுத்துச் சொல்லியிருந்தது. அம்மா சொல்லிவிட்ட பின்பு மாமாவுக்கு மாற்றுச் சிந்தனையே இருந்ததில்லை. என்றைக்கும். எனவே, சம்மந்தி பிராமணன் கொடுத்த நாற்பத்தியெட்டு ரூபாயை அவர் கையிலேயே திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘நாள் மட்டும் பார்த்துச் சொல்லுங்கோ. அகிலவல்லி சன்னிதில கல்யாணம். அவாவா ஆத்துல சாப்பாடு’ என்று சொல்லிவிட்டிருக்கிறார்.

கமலி மாமியின் தகப்பனாரெல்லாம் எப்போது போய்ச் சேர்ந்தார் என்பதே எங்களுக்குத் தெரியாது. இதெல்லாம் மாமா எப்போதாவது கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்ன தகவல்கள்தாம். ஆனால் மாமி ஆசைப்பட்ட ஓட்டு வீட்டில் ஒரு நாள்கூட அவளால் முழுதாக வாழ முடியாமல் போனது மட்டும் நெடுநாள் வரை உறுத்தலாகவே இருந்தது. ‘எல்லாத்துக்கும் ஒரு ப்ராப்தம் வேணும். அவளுக்கு வீட்டுக்கு ஓடு போடற ப்ராப்தம் இருந்திருக்கு. இருந்து பாக்க இல்லே’ என்று கேசவன் மாமா சொன்னார்.

மாமி இறந்த துக்கம் அவருக்குப் பல மாதங்கள் இருந்தன. ஷவரம் செய்யாமல், தலை வாராமல், அழுக்குத் துணி மாற்றாமல்தான் ஊரெல்லாம் திரிந்துகொண்டிருந்தார். அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். ‘போதும்க்கா. திருப்தியாத்தான் இருந்தோம். திருப்தியாவே போய் சேந்துட்டா. இனிமே என்ன? நீ இருக்கே. அத்திம்பேர் இருக்கார். பிள்ளைகள் இருக்கா. இவ்ளோதான் எனக்கு. என் திருப்தி இவ்ளோதான்’ என்று சொல்லிவிட்டார்.

ஒரு நாளில் நூறு முறை மாமா எங்கள் வீட்டுக்கு வருவார். காலை கோயில் காரியத்துக்குப் போகும்போது ஒருமுறை. எட்டு மணிக்கு காப்பிக்கு ஒரு முறை. பத்து மணிக்கு வந்து அரை மணி தலை சாய்த்துவிட்டுப் போக ஒருமுறை. நடை சாத்தும் நேரம் வீட்டுக்குப் போகும்போது ஒருமுறை. மாலை ஒரு முறை. சந்தைக்குப் போய் வரும்போது ஒருமுறை. இரவு படுக்கப்போகுமுன் ஒருமுறை. பெரும்பாலும் அவர் எங்கள் வீட்டிலேயேதான் இருந்தார். அவருக்கென்று ஒரு ஓட்டு வீடு இருப்பதே எங்களுக்கு மறக்கத் தொடங்கியிருந்தபோதுதான், ‘மொத்தமா வந்துட்டேன்க்கா’ என்று சொல்லிக்கொண்டு மாமா வந்து சேர்ந்தார்.

‘அத்திம்பேர், உங்கள கேக்காமத்தான் இந்த முடிவ எடுத்தேன். ஆனா இதை மாத்திக்கப் போறதில்லே. நீங்க என்னிக்காவது என்னை செருப்பால அடிச்சி வெளிய போன்னு சொன்னாலும் போறதா இல்லே. ஓடிப்போனவன தேடிக் கண்டுபிடிக்கறது ஒரு காரியம்னா, உள்ளவாள பாத்துக்கறதும் இனிமே என் பொறுப்புதான்’ என்று சொன்னார்.

அன்றிரவு வினய்தான் வினோத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான். ‘மாமா நம்மள பாத்துக்க வரலை வினோத். அம்மாவ பாத்துக்கத்தான் வந்திருக்கார்.’

‘ஏண்டா?’ என்று வினோத் கேட்டான்.

‘அம்மா தற்கொலை பண்ணிண்டுடுவாளோன்னு மாமாக்கு பயம்’ என்று வினய் சொன்னான்.

அதைக் கேட்டதும் எனக்கு மிகவும் அச்சமாகிவிட்டது. உடனே எழுந்து சென்று அம்மாவின் அருகில் படுத்துக்கொண்டேன். விடிந்ததும் அண்ணாவைப் பற்றி நான் அறிந்த அனைத்தையும் ஒரு வாக்குமூலம்போல் அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே தூங்கிப்போனேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com