10. பேயின் நாக்கு

என் இலக்கு கோவளம் தர்காதான். தர்காவின் வாசலில் எப்போதும் அமர்ந்திருக்கும் முஸ்லிம் பக்கிரியை அம்மாவுக்கு மட்டுமல்ல; எனக்கும் தெரியும்.

இரவு பதினொன்றரை இருக்கும். என் கனவில் ஒரு பேய் வந்தது. அது ஆண் பேயா, பெண் பேயா என்று சரியாகத் தெரியவில்லை. தலை முதல் கால் வரை செக்கச்செவேலென்று சேவல் கழுத்தைத் துணியாக நெய்தாற்போன்ற அங்கியொன்றை அது அணிந்திருந்தது. எத்தனை முயன்றும் என்னால் அந்தப் பேயின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அநேகமாக அது முதுகைக் காட்டிக்கொண்டு நின்று பேசியிருக்க வேண்டும். எத்தனை பிரம்மாண்டமான, அகன்ற பெரும் முதுகு! வெறும் முதுகைக் காட்டியே ஒருவனை அச்சமுற வைக்க முடியுமென்றால் அது ஒரு பேயால் மட்டுமே முடியும். எனக்கு உடம்பெல்லாம் நடுநடுங்க ஆரம்பித்துவிட்டது. அண்ணா தெரியாமல் ஏதோ மந்திரம் சொல்லி வரவழைத்துவிட்ட பேய். அதைத் திருப்பி அனுப்ப அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், அழைத்தவனை விட்டுவிட்டு அது ஏன் என்னைத் தேடி வந்திருக்கிறது? நல்ல உறக்கத்தில் இருந்த என்னை அது மெல்ல நெருங்கித் தொட்டது. பிறகு லேசாகத் தட்டி விழிப்புற வைத்தது. பார்த்ததும் நான் அலறத் தொடங்கும் முன் என் வாயைப் பொத்தியது. எனக்கு அதுவும் ஆச்சரியம். எனக்கு முதுகைக் காட்டி நின்றுகொண்டிருந்த பேய் எப்படித் தன் கைகளைப் பின்புறமாக நீட்டி என் வாயைச் சரியாகத் தொட்டுப் பொத்த முடிகிறது? அப்படியே என்னை எழுப்பி, கொல்லைப்புறம் வரும்படிச் சைகை செய்துவிட்டு அது முன்னால் போனது. கட்டுண்டவன்போல நான் அதன் பின்னால் எழுந்து சென்றேன். சத்தமில்லாமல் கதவைத் திறந்து கிணற்றடிக்குச் சென்ற பேய், அங்கே விளக்கைப் போட்டது. ஆனால் அப்போதும் என்னால் அதன் முதுகைத்தான் காண முடிந்ததே தவிர, முகத்தையல்ல.

‘என்ன வேண்டும்?’ என்று நான் குரல் நடுங்கக் கேட்டேன்.

‘நீதான் வேண்டும். எப்போது வருகிறாய்?’

‘எங்கே?’ மீண்டும் நடுக்கம்.

‘பேய்களின் உலகத்துக்கு. உன் சகோதரன் உன்னை அங்கே அழைத்துச் செல்லச் சொல்லி என்னிடம் சொல்லியிருக்கிறான்.’

‘ஐயோ எதற்கு?’

‘நீ தவறிப்போய் மனிதனாகப் பிறந்துவிட்டாய். பிறப்பிக்கும்போது செய்த பிழையைக் கடவுள் சரி செய்ய நினைக்கிறார்.’

‘என் அண்ணா அனுப்பியதாக அல்லவா நீ சொன்னாய்? அப்படியானால் அவன் கடவுளின் ஆளா? அவனை விடு. கடவுள் எப்படி ஒரு பேயுடன் சிநேகிதம் வைத்துக்கொண்டிருக்க முடியும்? அவர் சம்பந்தப்பட்ட ஒரு காரியத்தில் நீ ஈடுபடவே முடியாது.’

‘பேசிக்கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை. நீயாக வந்தால் அழைத்துச் செல்வேன். அல்லது உன்னை எடுத்து விழுங்கிக்கொண்டு போய்விடுவேன்.’

‘ஐயோ! நான் வர முடியாது. எனக்குக் கடவுளே வேண்டாம். அவரிடம் போய்ச் சொல்லிவிடு‘ என்று சொல்லிவிட்டுத் தலைதெரிக்க ஓட ஆரம்பித்தேன். அந்தப் பேய் அசையாமல் நின்று நான் ஓடுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தது. ஒரு மைல் தூரத்துக்கு நான் ஓடியிருப்பேன் என்று நினைக்கிறேன். வீட்டிலிருந்து பாய்ந்து வெளியேறி, கிழக்கு மாட வீதியைக் கடந்து, உற்சவ மண்டபத்தைச் சுற்றிக்கொண்டு கடற்கரைச் சாலை வரை மூச்சு விடாமல் ஓடினேன். அச்சம் ஓய்ந்தபாடில்லை. ஒரே ஒரு முறை அங்கே சென்றபின் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் இடப்புறமாகத் திரும்பி கோவளத்தை நோக்கி ஓடத் தொடங்கினேன்.

என் இலக்கு கோவளம் தர்காதான். தர்காவின் வாசலில் எப்போதும் அமர்ந்திருக்கும் முஸ்லிம் பக்கிரியை அம்மாவுக்கு மட்டுமல்ல; எனக்கும் தெரியும். அம்மாவோடு அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவரை நான் பார்த்திருக்கிறேன். அந்த மனிதர் சிரிக்கமாட்டார். யாருடனும் பேசுவதும் கிடையாது. யாராவது வீட்டில் பிரச்னை, வியாதி என்று எதையாவது கொண்டுவந்து அவர்முன் போட்டால், சில நிமிடங்கள் கண்மூடி எதையோ முணுமுணுத்துக்கொண்டிருப்பார். அவரையறியாமல் அவரது இடக்கரம் மார்புவரை நீண்டிருக்கும் தாடியை உருவிவிட்டுக்கொண்டிருக்கும். மந்திரம் உருட்டி முடித்தபின் அவர் தனது குல்லாவை ஒருமுறை கழட்டி, வழுக்கைத் தலையைத் துடைத்துக்கொள்வார். மீண்டும் குல்லாவை அணிந்துகொண்டு அவரவர் தேவைக்கேற்ப நல்ல வார்த்தையோ, தாயத்தோ தருவார்.

எப்படியாவது அவரை நெருங்கி, அடைக்கலமாகிவிட்டால் அந்தப் பேயிடமிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்துத்தான் நான் கோவளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். ஆனால் நான் தர்கா சாலையில் திரும்பும் இடத்தில் எனக்கு எதிரே ஒரு சிவப்புச் சுவரைப்போல அந்தப் பேய் மறித்துக்கொண்டு நின்றிருந்தது. இப்போதும் அது தன் முகத்தைக் காட்டவில்லை. முதுகுதான் தெரிந்தது. கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தவன், எதன் மீது மோதுகிறோம் என்பதே தெரியாமல், பேயின் முதுகில் சென்று மோதிக்கொண்டு கீழே விழுந்தேன்.

இப்போது அது திரும்பியது. என்ன ஆச்சரியம்! அந்தப் பேயின் முகம் உள்ள பக்கமும் முதுகைப் போலவேதான் இருந்தது. அளவில் பெரிதான ஒரு பேட்மிண்டன் ராக்கெட்டை நிகர்த்த முதுகு. அங்கே கண் இல்லை. மூக்கோ காதுகளோ இல்லை. வாய் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு சிறிய துவாரம் மட்டும் இருந்தது. அத்தனை சிறிய துவாரம் வழியே அந்தப் பேய் எப்படி என்னை எடுத்து விழுங்கமுடியும்?

அப்போதுதான் எனக்குச் சிறியதொரு நம்பிக்கை வந்தது. கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்டு, உரத்த குரலில் அதனை எச்சரிக்க ஆரம்பித்தேன். ‘போய்விடு. நீ விபரீதமாக ஏதோ திட்டத்தோடு வந்திருக்கிறாய். ஆனால் உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.’

‘அப்படியா?’ என்றது பேய். அதன் வாயாக இருந்த துவாரத்துக்குள் இருந்து ஒரு பட்டு நூலைப்போல் ஏதோ ஒன்று நீண்டு வெளியே வந்தது. முதலில் அது ஒரு மண்புழு என்று நினைத்தேன். ஆனால் அதன் நீளம் நம்பமுடியாததாக இருந்தது. மெல்ல மெல்ல நீண்டுகொண்டே வந்த அது ஒரு பாம்பாக இருக்கலாம் என்று பிறகு தோன்றியது. ஆனால் ஒரு பாம்பைக் காட்டிலும் நீளமாக அது சுருண்டு சுருண்டு வெளிப்பட்டுக்கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அதுதான் பேயின் நாக்கு என்பது எனக்குப் புரிந்துவிட்டது. என்ன செய்வது என்று நான் முடிவெடுக்கும்முன் அதன் நாக்கு மெல்ல என்னைச் சுற்றிச் சுழன்று அப்படியே இறுக்கிக் கட்டியது.

‘விடு. என்னை விட்டுடு’ என்று நான் அலறத் தொடங்கினேன். பேய் அதைப் பொருட்படுத்தவில்லை. என் எலும்புகள் நொறுங்குமளவுக்கு அதன் நாக்கு ஒரு பாசக் கயிறேபோல் என்னைக் கட்டி இறுக்கி அப்படியே தூக்கியது. உடனே அதன் நீளம் சுருங்க ஆரம்பித்தது. நாக்கு, பேயின் வாய்க்குள் சுருங்கி அடங்கத் தொடங்கியபோது நானும் மெல்ல மெல்ல அதனுள்ளே போக ஆரம்பித்தேன். முற்றிலும் உள்ளே போகவிருந்த கணத்தில் என் முழுப் பலத்தையும் திரட்டி, அம்மா என்று அடி வயிற்றிலிருந்து ஓலமிட்டுக் கண் விழித்தேன்.

அதற்குமேல் என்னால் படுத்திருக்க முடியவில்லை. பயத்தில் நான் சின்னாபின்னமாகியிருந்தேன். எழுந்து சென்று அடுக்களையில் விளக்கைப் போட்டு தண்ணீர் எடுத்துக் குடித்தேன். மீண்டும் விளக்கை அணைத்துவிட்டு வாசல் திண்ணைக்குப் போய் உட்கார்ந்துகொள்ளலாம் என்று முடிவு செய்து இருட்டில் யார் மீதும் கால் படாமல் ஜாக்கிரதையாக நடந்து தாழ்வாரத்தைக் கடந்து வாசல் கதவைத் திறந்தேன்.

அண்ணா அங்கே அமர்ந்திருந்தான். என்னைக் கண்டதும் புன்னகை செய்தான்.

‘டேய் நீ தூங்கலியா?’

‘இல்லை. உக்கார்’ என்று சொன்னான்.

‘எனக்கு ஒரு பயங்கரமான கனவுடா. அம்மாவை எழுப்பியிருப்பேன். என்னமோ வேணாம்னு தோணிடுத்து. பாரு, இன்னும் என் கையெல்லாம் உதறுது’ என்று அவன்முன் என் கைகளை நீட்டினேன்.

‘என்ன கனவு?’

‘எல்லாம் பேய்க் கனவுதான். நீ என்னமோ பண்ணல்ல? பேய் மந்திரம் சொன்னியே...’

அவன் சட்டென்று என்னை நிறுத்தினான். ‘அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அது மூலமந்திரம். ஆகர்ஷண மந்திரம். நீ மட்டும் கடைசிவரை இருந்து பிரசாதம் வாங்கி சாப்ட்டிருந்தா, ஒனக்கு என்னென்னமோ நல்லது நடந்திருக்கும்’ என்று சொன்னான்.

‘பிரசாதமா!‘

‘ஆமா. ஒன்ன எடுத்துண்டுவரச் சொன்னனே சர்க்கரை! அதுதான் பூஜைக்கப்பறம் பிரசாதமா மாறும்.’

என்னால் அவன் சொன்ன எதையும் ஏற்கவும் முடியவில்லை; நம்பவும் முடியவில்லை. ஆனால் பிடித்திருந்தது. என் கனவில் அன்று வந்த பேய் மிக நிச்சயமாக அன்று மாலை அவன் நிகழ்த்திய பூஜையின் விளைவுதான். நியாயமாக நான் அவனைக் கடிந்துகொண்டிருக்கலாம். அம்மாவிடம் அவன் செய்யும் களேபரங்களைப் பற்றி எடுத்துச்சொல்லி கண்டிக்கச் சொல்லியிருக்கலாம். கேசவன் மாமாவிடம் சொல்லிவிட்டால் அதற்குமேல் பிரச்னையே இராது. மாமா இருபத்து நான்கு மணி நேரமும் அவனைக் கண்காணித்து, மிரட்டி அதட்டி ஒரு வழிக்குக் கொண்டு வந்திருப்பார்.

ஏன் நான் அதைச் செய்யாமல் போனேன்? என்னால் உணர இயலாத ஒரு சாகச முயற்சியை அவன் மேற்கொண்டிருப்பதாக என் உள்ளுணர்வு சொன்னது. அது சார்ந்த ஆர்வப் படபடப்பும் நிகரான அச்சமும் எனக்கு இருந்தது. அந்தந்தக் கணங்களில் அவன் சொல்கிற அனைத்துமே இந்த இரு உணர்வுகளையும் எனக்கு அளித்தாலும் பிற்காலத்தில் இதெல்லாம் பெரும் விபரீதமாக உருக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உள்ளவை என்றெல்லாம் எனக்குத் தோன்றவேயில்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது. அதனால்தான், அவன் எனக்கு நிகழ்த்திக் காட்டிய அனைத்தையுமே வெறும் கதையும் காட்சியுமாக உள்வாங்கியிருக்கிறேன்.

அன்றைக்கு அவனிடம் கேட்டேன், ‘என்னமோ அற்புதம்னு சொன்னியே? அது என்ன?’

‘நீதான் ஓடிப்போயிட்டியே?’

‘பரவால்ல. இப்ப சொல்லு. என்ன அற்புதம் நடந்தது?’ என்று விடாமல் கேட்டேன்.

அவன் என்னை உற்றுப் பார்த்தான். ‘நீ நம்பமாட்டே. நேர்ல பார்த்திருக்கணும்.’

‘இல்லை. நம்பறேன், சொல்லு’ என்று மீண்டும் சொன்னேன்.

‘நான் அரையடி உசரத்துல காத்துல மிதந்தேன்’ என்று அண்ணா சொன்னான்.

‘நிஜமாவா!’

‘சத்தியம். அது நடந்தது. நீ பாத்திருக்கலாம். ஆனா ஓடிப்போயிட்டே.’

‘இல்ல. இதெல்லாம் நடக்கவே நடக்காது’ என்று நான் அடித்துச் சொன்னேன்.

‘நடந்தது விமல்! இன்னொரு தடவை எப்ப நடக்கும்னு எனக்குத் தெரியலை. ஆனா ரொம்ப நாளா நான் பண்ண பயிற்சி பலன் குடுத்துடுத்து’ என்று சொன்னான்.

எனக்கு அதற்குமேல் பேச்சே எழவில்லை. எத்தனை பெரிய பைத்தியக்காரத்தனத்தைச் செய்துவிட்டேன்! அண்ணா எனக்குக் காட்ட விரும்பிய அற்புதம், உண்மையில் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடியதல்ல. சொல்லப்போனால் அவனுக்கே அது ஒரு அற்புதம்தான். பல காலமாக அதனை ஓர் இலக்காக வைத்து அவன் நானறியாத ஏதேதோ பயிற்சிகளைச் செய்துபார்த்து வந்திருக்கிறான். நேற்றைக்கு மாலை எல்லாம் திரண்டு வரவிருந்த நேரம். என் அறியாமையால் நான் ஒரு பெரும் அனுபவத்தைத் தவறவிட்டிருக்கிறேன்!

என்னையறியாமல் என் கண்களில் இருந்து தரதரவென்று நீர் வழிந்தோடியது. நான் அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘இன்னொரு தடவை பண்ணிக்காட்டுடா!’ என்று கெஞ்ச ஆரம்பித்தேன்.

‘முடியுமான்னு தெரியல. பாப்போம்‘ என்று சொன்னான். ‘ஆனா இதையெல்லாம் நீ யார்ட்டயும் சொல்லக் கூடாது. யாருக்கும் இதெல்லாம் புரியாது.’

எனக்கும்தான் புரியவில்லை. ஆனாலும் என்னை அவன் நம்புகிறான்! அது எனக்கு அவன் அளித்த கௌரவமாக அப்போது தோன்றியது. அவன் மீது மிகப்பெரிய மரியாதை உருவானது. அண்ணா படுபயங்கர சக்திகள் மிக்க மந்திரவாதி மாண்ட்ரேகைக் காட்டிலும் சிறந்ததொரு ஆகிருதியாக விரைவில் உலகுக்கே தெரியவருவான் என்று நினைத்தேன். இதை அவனிடம் சொன்னபோது அவன் முகம் சுளித்தான்.

‘உனக்கும் புரியல இல்லே? நான் மந்திரவாதி இல்லை விமல். அப்படி ஆகணும்னு எனக்கு இஷ்டமும் இல்லை.’

‘பின்னே?’

‘இது வேற. ஒனக்குப் புரியணும்னா நீ கேள்வியே இல்லாம என்னைப் பின்தொடர்ந்து வந்துண்டே இருக்கணும்’ என்று சொன்னான்.

நான் தூங்கப் போய்விட்டேன். பொழுது விடியட்டும் என்று நினைத்தேன். பல்லைத் துலக்கிவிட்டு, காப்பி குடித்து முடித்த கணம் முதல் அவன் சொன்னபடி, கேள்வியே கேட்காமல் அவனது சீடனாகிவிடலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com