6. சந்தித் தருணம்

தடாகம் முழுவதும் அல்லி பூத்து நிறைந்திருந்தது. ஒரு மைல் நீளத்துக்குத் தவழ்ந்து வந்து மோதிய கடல் காற்றுக்கு நீர்ப்பரப்பு ததும்பிக்கொண்டிருந்தது. பூக்கள் ஒன்றோடொன்று உரசியபடியே நீரெங்கும் அலைந்து சுழன்று வருவதுபோலத் தோன்றியது. அண்ணா வெகு நேரம் கரையில் அமர்ந்து பூக்களையே பார்த்துக்கொண்டிருந்தான். வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு அவன் கண்கள் மிகவும் பிரகாசமாக, ஒரு கோலத்தில் வைத்த புள்ளிகளைப்போல் துல்லியமாகத் தெரிந்தன. இயல்பில் அவனுடைய கண்கள் மிகவும் சிறியவை. பேசும்போது அதையும் இடுக்கிக்கொண்டே பேசுவான். புருவங்கள் குவிந்து நடு மச்சம் புடைத்துக்கொண்டு நிற்கும். எனக்குத் தெரிந்து அவன் யாரையும் நேருக்கு நேர் பார்த்துப் பேசியதே இல்லை. ஒன்று அவன் பார்வை வேறெங்காவது இருக்கும். அல்லது புருவங்களைச் சுருக்கி, கண்களைக் கிட்டத்தட்ட மூடிக்கொண்டுதான் பேசுவான். பேச்சென்றும் அதனைச் சொல்ல முடியாது. சேர்ந்தாற்போல் நான்கு வார்த்தைகள் பேசிவிட்டால் அபூர்வம். கேட்ட கேள்விக்கு பதில். அதனைத் தாண்டி, யாரோடும் தனக்கு எதுவும் இல்லை என்பதுபோலத்தான் இருப்பான். பள்ளிக்கூடத்துக்குப் போவது வருவதோ, வீட்டில் சொல்லும் வேலைகளைச் செய்வதோ, படிப்பதோ, விளையாடுவதோ தடைபட்டதில்லை. அவன் எல்லோரையும்போலத்தான் இருந்தான். எல்லாவற்றிலும் பங்குகொண்டான். ஆனால் அவன் எல்லோரையும்போல இல்லை என்பதைக் கவனமாக மறைத்துவைத்திருந்தான். வீட்டை விட்டு ஓடிப்போவதற்குச் சில மாதங்களுக்கு முன்னதாகத்தான் தன்னைச் சற்று வெளிப்படுத்த ஆரம்பித்தான். அதுவும் என்னிடம் மட்டும்.

உள்ளதிலேயே வயதில் சிறியவனிடம் சொல்லிவைப்பது நல்லது என்று நினைத்திருக்கலாம். என் மூலமாகத் தன்னைப் பற்றி வீடு அறிய நேர்ந்தால், எதுவும் முழுதாகப் போய்ச் சேராமல் குத்துமதிப்பாக மட்டும் தான் காணாமல் போனதற்கான காரணத்தை அறிவிக்கலாம் என்று எண்ணியிருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் காரணம் இருந்திருக்குமா என்று இப்போதுவரை நானும் யோசித்துப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பிடிபடவில்லை.

அன்றைக்குக் குளக்கரையில் அவன் என்னைச் சட்டையைக் கழட்டச் சொல்லி, சந்தியாவந்தனம் செய்யச் சொன்னான். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ‘இப்பொ எதுக்கு?’ என்று கேட்டேன்.

‘சந்தி வேளைதானே? பண்ணு, பரவால்ல’ என்று சொன்னான்.

நான் என் சட்டையைக் கழட்டிவிட்டு டிராயருடன் குளத்தில் இறங்கி முழங்கால் ஆழத்தில் நின்றுகொண்டு சந்தி பண்ணத் தொடங்கினேன்.

‘உரக்க சொல்லிண்டே பண்ணு’ என்றான்.

‘எனக்கு அவ்ளோ சரியா தெரியாது. உபஸ்தானம் மனப்பாடம் ஆகலை.’

‘பரவால்ல உரக்க சொல்லு.’

முடியாது போடா என்று சொல்லிவிட்டு ஓடிவிடலாமா என்று நினைத்தேன். ஏனோ அப்படிச் செய்யத் தோன்றவில்லை. தனது ரகசிய யோகப் பயிற்சிகள் சிலவற்றைப் பார்க்க அவன் என்னை அனுமதித்திருந்ததும், யாருக்கும் தெரியாமல் திருப்போரூர் முருகனடிமை சாமிகள் மடத்திலிருந்து அவன் எடுத்துவந்து வைத்திருந்த ஒரு நாடிச் சுவடியை எனக்கு என்றாவது ஒருநாள் காட்டுவதாகச் சொல்லியிருந்ததும்தான் காரணம். எனக்கு சுவடி என்றால் என்னவென்று அப்போது தெரியாது. நாடி என்றாலும் தெரியாது. ‘கோவிந்தராஜ் டாக்டர் கைய பிடிச்சிப் பாப்பாரே, அதுவா?’ என்று அவனிடம் கேட்டேன்.

‘இல்ல. இது வேற. ஒனக்கு சொன்னா புரியாது. ஆனா நிச்சயமா ஒருநாள் சொல்லுவேன்’ என்று சொன்னான்.

‘உனக்கு மட்டும் எப்படி இதெல்லாம் புரியும்?’

‘கத்துக்கறேன்.’

‘யாருகிட்ட?’

‘அதெல்லாம் உனக்கு வேண்டாம். ஆனா நான் சொல்ற எதையும் நீ யாருக்கும் சொல்லக் கூடாது. அப்படி சொன்னேன்னா, அதோட நான் உன்கூட பேசறதை நிறுத்திடுவேன்.’

‘ஐயோ சொல்லமாட்டேண்டா’ என்று உடனே பதில் சொன்னேன்.

அன்றைக்கு நான் குளக்கரையில் சந்தி பண்ணி முடித்து வந்ததும் அண்ணா சட்டையைக் கொடுத்து, இந்தா போட்டுக்கொள் என்று சொன்னான். நான் சட்டை அணிந்ததும் சற்றும் எதிர்பாராவிதமாக என்னை நெருங்கி அமர்ந்து என் தோளில் கைபோட்டுக்கொண்டான். ‘உன்னை எதுக்கு சந்தி பண்ணச் சொன்னேன்?’ என்று கேட்டான்.

‘எதுக்கு?’

‘இன்னிலேருந்து ஒரு நாள் தவறாம நீ ரெண்டு வேளை சந்தி பண்ணு. நாப்பத்தெட்டு நாள் பண்ணேன்னா போதும். அதுக்கு மேல வேண்டாம்.’

‘அதான் எதுக்கு?’

‘மந்திரத்த வாய்விட்டுச் சொல்லு. மனசுக்குள்ள சொல்லாத.’

‘எதுக்குன்னு கேக்கறேனே?’

அவன் சில விநாடிகள் அமைதியாக இருந்தான். புருவம் குவித்து என்னை உற்றுப் பார்த்தான். பிறகு, ‘உன் சுவாசம் சரியா இல்லே. உடம்புக்கு வந்து படுத்துப்பேன்னு தோணறது. சந்தியாவந்தன மந்திரத்த உரக்க சொல்றது மூலமா சில பிரச்னைய சரிபண்ணமுடியும்.’

‘நிஜமாவா?’

‘மந்திரத்துல ஒண்ணுமில்லே. அந்த வார்த்தைகளோட உச்சரிப்புதான் விஷயம். இந்த மாதிரி இன்னும் சில மந்திரம் இருக்கு. தினம் ரகுவீர கத்யம் சொல்றவனுக்கு வயித்து வலியே வராது.’

‘நீ சும்மா சொல்ற’ என்றேன் சிரித்துக்கொண்டே. அவன் மீண்டும் சில விநாடிகள் கண்ணிமைக்காமல் என்னை உற்றுப் பார்த்தான். பிறகு கண்களை மூடிக்கொண்டு உரத்த குரலில் சொல்லத் தொடங்கினான்.

அபிசரண ஹுதவஹ பரிசரண விகடன ஸரபஸ பரிபதத்

அபரிமித கபிபல ஜலதி லஹரி கலகல-ரவ குபித மகவஜி

தபிஹனன-க்ருʼதனுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த்வ-யுத்த...

எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. இதையெல்லாம் இவன் எப்போது படித்தான்? யார் சொல்லிக் கொடுத்தது? நிச்சயமாக அம்மாவுக்குத் தெரியாது. அப்பாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பல்லாண்டு பல்லாண்டு மட்டும்தான். அதைக்கூடப் புத்தகத்தை வைத்துக்கொண்டுதான் சொல்லுவார். பள்ளிக்கூடத்திலோ, கோயிலிலோ, வேறெங்காவதோ இவனை இழுத்து உட்காரவைத்து இப்படியொரு மந்திரத்தைச் சொல்லிக்கொடுக்க, எனக்குத் தெரிந்து திருவிடந்தையில் யாருமில்லை. அண்ணா அடிக்கடி சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே போவதைப் பார்த்திருக்கிறேன். அவனேதான் ஒரு நாள் திருப்போரூருக்குப் போவதாகவும் அங்கே ஒரு சாமியாரைப் பார்த்து வருவதாகவும் என்னிடம் சொன்னான். அந்தச் சாமியாரை நானும் ஒரு சமயம் பார்த்திருக்கிறேன். எங்கள் பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு வந்திருக்கிறார். எனக்கென்னவோ அவர் ரகுவீர கத்யம் தெரிந்த சாமியாராகத் தோன்றவில்லை.

அண்ணா சொன்னான், ‘வாழ்க்கை ரொம்பச் சின்னதுடா விமல். பாடம் மட்டும் படிச்சி மார்க் வாங்கி வீணாப் போயிடக் கூடாது.’

அவன் பேசிய பல விஷயம் எனக்குப் புரியவில்லை. அதனால்தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவன் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பான் என்று பிறகு தோன்றியது. அன்றைக்குத் தடாகக் கரைக்கு அவன் என்னை அழைத்துச்சென்றதன் காரணம், என்னை சந்தியாவந்தனம் பண்ணச் சொல்ல மட்டுமல்ல. முழுதும் இருட்டும்வரை காத்திருந்துவிட்டு அவன் சட்டை, நிஜாரைக் கழட்டிவிட்டு வெறும் ஜட்டியுடன் எழுந்து நின்றான்.

‘என்னடா இது?’ என்று நான் சற்று பயந்தேன்.

‘நான் குளத்துக்குள்ள இறங்கி தியானம் பண்ணப்போறேன். வெளிய வர பத்து நிமிஷமாகும். இங்கயே இரு’ என்று சொல்லிவிட்டு, என் பதிலுக்கு நிற்காமல் நீரில் பாய்ந்துவிட்டான்.

எனக்கு உண்மையிலேயே அச்சமாகிவிட்டது. பத்து நிமிடங்கள் எப்படி ஒருவனால் நீருக்கு அடியில் நிற்கமுடியும்? அவனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என்று வராகப் பெருமாளிடம் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தேன். என்னையறியாமல் பிரார்த்தனை விரைவில் நின்றுபோய் ஒன்று, இரண்டு, மூன்று என்று நொடிகளை எண்ணத் தொடங்கினேன். நான் எவ்வளவு எண்ணினேன், பத்து நிமிடங்கள் ஆனதா என்றெல்லாம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அண்ணா செத்தே போய்விட்டான் என்று என் உள்மனம் அலறத் தொடங்கிய நேரம், அவன் நீரின் மேல் மட்டத்துக்கு எழுந்துவந்தான்.

‘டேய், எப்படிடா இது!’ என்று பிரமித்து நின்றுவிட்டேன். அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ‘விமல், இந்தக் குளத்துல காலவ ரிஷி இருக்கார். இன்னமும் உள்ளயேதான் இருக்கார். அதுவும் உயிரோட. யுக யுகமா அவரால எப்படி மூச்சடக்கித் தவம் பண்ண முடியறதுன்னு யோசி.’

‘நீ பாத்தியா அவர?’

‘அடிக்கடி பாக்கறேன்.’

‘ஐயோ நீ பொய் சொல்ற!’ என்று நான் அலறினேன்.

அவன் தீர்மானமாக இல்லை என்று தலையாட்டினான். ‘என் வாய்ல என்னிக்குப் பொய் வருதோ அன்னிக்கு நான் செத்துப்போயிடுவேன்’ என்று சொன்னான்.

‘வேணாண்டா. இப்படியெல்லாம் பேசாதே. எனக்கு பயம்மா இருக்கு.’

அவன் சட்டையால் ஈரத்தைத் துடைத்துக்கொண்டு நிஜாரை மட்டும் போட்டுக்கொண்டு வெற்றுடம்புடன் அமர்ந்தான். சட்டையை அப்படியே விரித்துக் காயப்போட்டான்.

நான் அப்போதுதான் கவனித்தேன். அவன் உடம்பில் பூணூல் இல்லை. ‘டேய், பூணூல் தண்ணிக்குள்ள விழுந்திருக்கு. போச்சு, அப்பா பாத்தா தோலை உரிச்சிடுவார்.’

அவன் சிரித்தான். ‘ரொம்ப நாளாவே இல்லியே. நீ இப்பதான் பாக்கறியா?’ என்று கேட்டான். எனக்கு அது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

‘அப்படின்னா நீயேதான் கழட்டினியா?’

‘ஆமா.’

‘ஏண்டா?’

‘அதுக்கெல்லாம் ஒரு அர்த்தமே இல்லை விமல். உடம்புக்கே அர்த்தம் கிடையாது. உடம்புமேல கிடக்கிற நூலுக்கு என்ன பெரிய அர்த்தம்!’

‘உனக்கு என்னமோ ஆயிடுத்து!’ என்று சொன்னேன்.

அவன் வெகுநேரம் ஒன்றும் பேசவில்லை. எனக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை. அண்ணாவைப் பார்க்கவே எனக்கு அச்சமாக இருந்தது. அன்றைக்கே அம்மாவிடம் அவனைப் பற்றிச் சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். ஏனோ அதற்கும் தைரியம் வரவில்லை. மேற்கொண்டு அவனைப் பற்றி அறிய முடியாமல் போய்விடுமோ என்கிற பயம். அம்மாவுக்கு எப்படியாவது அவனை ஓர் ஆசிரியராக்கிவிட வேண்டும் என்று விருப்பம். அப்பாவிடம் அடிக்கடி அதைச் சொல்லிக்கொண்டிருப்பாள். ‘ஒரு டிகிரி முடிச்சிட்டு ஒரு பிஎட்ட பண்ணிட்டான்னா போதும்.’ தனது மற்ற மூன்று மகன்களின் எதிர்காலத்தைப் பற்றி அம்மா என்றைக்குமே பேசி நான் கேட்டதில்லை. பரீட்சைகளில் குறையும் மதிப்பெண்களைக்கூட அவள் எங்கள் விஷயத்தில் பொருட்படுத்தமாட்டாள். ‘அடுத்த பரீட்சைல சேத்து வாங்கிடு’ என்று மட்டும் சொல்லுவாள். அதையும் செய்யாது போனாலும் அலட்டிக்கொள்ளமாட்டாள். அண்ணாதான் மதிப்பெண் குறையும்போதெல்லாம் அக்கறையுடன் அருகே வந்து உட்கார்ந்து சொல்லுவான், ‘படிப்புல குறையே வெக்கக் கூடாது விமல். இந்தப் படிப்பால பத்து காசு பிரயோசனம் கிடையாதுதான். ஆனா இதுதான் இப்ப கடமைன்னா, இத சரியா செஞ்சிடணும். உனக்கு பாடத்துல எதாவது புரியலன்னா என்னைக் கேளு. சொல்லித்தரேன்.’

சொல்லிக்கொடுத்தும் இருக்கிறான். அப்போதெல்லாம் அவன் முற்றிலும் வேறொரு நபராகவே காட்சியளிப்பான். பாடப் புத்தகங்களை ஒப்புக்குக்கூடப் புரட்டிப் பாராமல், தன் நினைவில் இருந்து ஒரு நீரோடையைப்போலப் பொழிந்துகொண்டே இருப்பான். அவன் ஓர் ஆசிரியராவதற்கு எல்லா தகுதிகளும் கொண்டவன் என்று எனக்கே அந்நாள்களில் அடிக்கடித் தோன்றும்.

அன்றைக்கு அல்லித் தடாகக் கரையில் நான் அதை நினைவுகூர்ந்தேன். ‘இதெல்லாம் வேணாண்டா உனக்கு. அம்மா நீ ஒரு வாத்யாராகணுன்னு எவ்ளோ ஆசைப்படறா தெரியுமா?’

‘இல்லை விமல். அம்மாக்கு நான் வாத்யாராகணுன்னெல்லாம் விருப்பம் கிடையாது. அவளுக்குப் பிள்ளையா என்னிக்கும் இருக்கணும்னு மட்டும்தான் விருப்பம்.’

‘அப்படின்னா?’

அப்போதுதான் அவன் அதைச் சொன்னான். ‘என்னிக்கோ ஒருநாள் நான் விட்டுட்டுப் போயிடுவேன்னு அவளுக்குத் தெரியும்.’

‘ஐயோ!’ என்றேன். பிறகு, ‘நீ போயிடுவியா?’ என்று கேட்டேன்.

‘போய்த்தான் தீரணும். ஆனா எப்போன்னு தெரியலை.’

‘வேணாம்டா!’ என் கண்கள் கலங்கிவிட்டன. ‘நீ வாத்யாராகலன்னாலும் பரவால்லடா. கோயில்ல பட்டாச்சாரியாராயிடு. நீதான் ஸ்லோகமெல்லாம் சொல்றியே.’

அவன் சிரித்தான். நடு நெற்றியில் குறுக்காக ஒரு கோடிழுத்துக் காட்டினான். ‘நீ சின்னவன். உனக்கு இப்போ புரியாது. வா, போகலாம்’ என்று சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com