7. அக்னிஹோத்ரம்

அம்மாவுக்கு நான் செய்யக்கூடிய ஒரே பெரிய உபகாரம், எப்படியாவது அவள் கண் மூடுவதற்குள் அண்ணாவைக் கண்டுபிடித்து அழைத்துச்சென்று நிறுத்துவதுதான். ஆனால் என்னால் அது முடியுமா என்று யோசனையாக இருந்தது.

தண்டகாரண்ய வனத்தில் ஐந்து தினங்கள் அலைந்து திரிந்து எந்தப் பயனும் இல்லாது போயிற்று. என்னால், அந்த வனத்தில் வசித்துவந்த சில சாதுக்களை, சில திருடர்களை, சில போதை அடிமைகளைப் பார்த்துப் பேச முடிந்ததே தவிர, யாரும் என் வினாவுக்கு விடை சொல்லக்கூடியவர்களாக இருக்கவில்லை. இரு புருவங்களுக்கு மத்தியில் கறுப்பாகப் பொட்டு வைத்தாற்போன்ற மச்சம் கொண்ட ஒரு மனிதன். அவன் ஒரு யோகியாக இருக்கலாம். சித்தனாக இருக்கலாம். எதுவுமில்லாமல், வெறுமனே காவி தரித்த மனிதனாகவும் இருக்கலாம். ஒரு கொலைகாரனாக. கொள்ளைக்காரனாக. அவன் என்னவாக இப்போது இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது. யோகிதான் என்று நேரில் பார்த்த கிராமவாசி ஒருவன் சொன்னது மட்டும்தான் அவனைப் பற்றி அங்கே கிடைத்த ஒரே தகவல். அது சற்றுத் திருப்தியாக இருந்தது. நேரில் பார்த்து உறுதி செய்துகொள்ள வழியில்லாதுபோனாலும், அண்ணா தான் விரும்பிய ஓரிடத்துக்கே போய்ச் சேர்ந்திருக்கிறான் என்று எண்ணிக்கொள்ளலாம். ஊருக்குச் சென்று மரணப் படுக்கையில் கிடக்கிற அம்மாவிடம் அதைச் சொல்லலாம். அவளை அனுப்பிவைக்க அதுவே இறுதிப் பேருந்தாக அமையக்கூடும்.

சலிப்புடன் நான் ஜகதல்பூர் வந்து சேர்ந்தபோது, கேசவன் மாமாவிடமிருந்து இரண்டாவது தந்தி வந்திருந்ததை என் சீடர்கள் எடுத்துவந்து கொடுத்தார்கள். எனக்குச் சிறு உதறல் இருந்தது. ஆனால் விபரீதமாக ஏதுமில்லை என்று சொல்லித்தான் என் மாணவர்கள் தந்தித் தாளை நீட்டினார்கள். இந்த முறை, ‘கிளம்பிவிட்டாயா, என்றைக்கு வந்து சேருவாய்’ என்று மாமா கேட்டிருந்தார். ஒரு போன் செய்து பேசிவிடுங்களேன் என்று சீடர்கள் சொன்னார்கள். எனக்கு அது யோசனையாக இருந்தது. வெறும் குரலாக என்னை அம்மாவின் செவிகளுக்குக் கொண்டுசேர்ப்பதில் எந்தப் பயனும் இராது என்று தோன்றியது. அது துக்கத்தின் சாறாகத்தான் அவள் தொண்டைக்குள் இறங்கும். இறுதிச் சொட்டுப் பாலில் விஷம் கலந்த பாவத்தை எதற்குச் சேர்த்துக்கொள்வானேன் என்று நினைத்தேன். அம்மாவுக்கு நான் செய்யக்கூடிய ஒரே பெரிய உபகாரம், எப்படியாவது அவள் கண் மூடுவதற்குள் அண்ணாவைக் கண்டுபிடித்து அழைத்துச்சென்று நிறுத்துவதுதான். ஆனால் என்னால் அது முடியுமா என்று யோசனையாக இருந்தது. கடவுளை உதவிக்குக் கூப்பிடவும் தயங்கினேன். எனக்கும் அவனுக்குமான உறவு பெரும்பாலும் சிறப்பாக இருந்ததில்லை. தோற்றங்களில் என்ன இருக்கிறது? மனத்துக்குள் என் அறிவின் தீப்பொறிகளைப் புதைத்து நான் அடுக்கிய கருங்கற் சுவர்க் கோட்டையின் எல்லைக் கதவுகளுடன் அவனது இருப்பு வரையறுக்கப்பட்டிருக்கிறது. அவன் உள்ளே வந்ததில்லை. அங்கேயேதான் இருக்கிறான். வெகு காலமாக. முற்றிலுமாக நான் அவனை வெளியேறச் சொன்னதில்லை. கூப்பிட்டு அமரவைத்துக் கொஞ்சிய நினைவும் இல்லை.

நினைத்துப்பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. அன்றைக்குப் பூணூலைக் கழற்றிவிட்டதாக அண்ணா சொன்ன இரவெல்லாம் எனக்கு உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. அண்ணாவுக்கு விபரீதமாக ஏதாவது நிகழ்ந்துவிடுமோ என்று அச்சமாக இருந்தது. உறங்கவேயில்லை. அவன் செய்தது சந்தேகமில்லாமல் ஒரு மாபெரும் பாவம் என்று எனக்குத் தோன்றியது. அதை வீட்டில் சொல்லி, கண்டிக்க வைப்பதையோ, அல்லது நானே நல்லது எடுத்துச்சொல்லி அவனைத் திருத்தப் பார்ப்பதையோ நடக்கக்கூடிய ஒன்றாக நான் கருதவில்லை. என்னால் முடிந்ததெல்லாம், மறுநாள் லஷ்மிவராகர் சன்னிதிக்குச் சென்று மனமார அவனுக்காகப் பிரார்த்தனை செய்தது மட்டும்தான்.

வீட்டில் இருந்து இருபதடி தூரம்தான் கோயில். வாசல் கதவைத் திறந்தாலே கோயில் மதில் சுவர் காவிப் பட்டைகளைத்தான் பார்த்தாக வேண்டும். தப்பித் தவறிக்கூட லஷ்மிவராகனுக்குத் தெரியாமல் யாரும் எதையும் செய்துவிட முடியாது. சன்னிதியில் அவனைக் கிட்டத்தில் பார்க்கும்போதெல்லாம் அந்நாள்களில் எனக்குச் சிலிர்ப்பேற்படும். ஒரு ஆளைப் போலவேதான் இருப்பான். ஒரு காலைச் சற்றே மடக்கி, தொடையில் தாயாரை உட்கார வைத்துக்கொண்டு, காதலுடன் அவள் முகத்தைத் திரும்பிப்பார்க்கிற கோலம்தான் என்றாலும், அந்தக் காதலின் கம்பீரம் சொற்களுக்கு அப்பாற்பட்டது. எந்த ஒரு மனிதப்பிறவிக்கும் அப்படியொரு பார்வை சாத்தியமில்லை. எந்தக் கணமும் அவன் தன் தேவியை இறக்கிவைத்துவிட்டு ‘என்ன விஷயம்?’ என்று நம்மைத் திரும்பிக் கேட்டுவிடுவான் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.

நான் பட்டாச்சாரியாரிடம் ஒரு சமயம் கேட்டிருக்கிறேன், ‘எப்பவும் இவ்ளோ பக்கத்துல நிக்கறேளே, உங்களுக்கு பயமாவே இருக்காதா?’

அவர் சிரித்தார். ‘எதுக்கு பயப்படணும்? அவன் நமக்கெல்லாம் அப்பா. தப்பு பண்ணா மட்டும்தான் அப்பா கண்டிப்பார். நாம சரியாவே இருந்துட்டா அப்பாட்ட என்ன பயம்?’

அதனால்தான் நான் பயந்தேன். என் அண்ணா ஒரு தவறு செய்திருக்கிறான். மந்திரம் சொல்லி, லஷ்மிவராகப் பெருமாள் சாட்சியாகக் கோயில் மண்டபத்தில் வைத்து அவனுக்கு அப்பா உபநயனம் செய்திருக்கிறார். நான் பார்த்து அவன் சந்தியாவந்தனமெல்லாம் செய்ததில்லை. அவன் மட்டுமா. நாங்கள் நான்கு பேருமே பூணூல் போட்ட கொஞ்ச காலத்துக்கு அப்பாவுக்காக, அவர் கண்ணில் படும்படியாக சந்தி செய்துகொண்டிருந்தோம். பிறகு இயல்பாக அது விடுபட்டுப்போனது. என்றைக்காவது அப்பா அதைச் சொல்லி வருத்தப்படுவார். ‘ஒழுங்கா பண்ணிங்கன்னா நன்னா படிப்பு வரும். அதுக்காகத்தான் சொல்றேன்’ என்று சொல்லுவார். அவரது திருப்திக்காக நான் மட்டும் எப்போதாவது அவரெதிரே சந்தி பண்ணுவேன். அண்ணாக்கள் யாரும் மந்திரங்களை நினைவில் வைத்திருந்தார்களா என்றே எனக்குத் தெரியவில்லை.

அம்மா இதைப்பற்றியெல்லாம் என்றுமே எங்களிடம் கேட்டதில்லை. ஒழுக்கம் சார்ந்த அவளது வரையறைகள் என்னவாக இருந்தன என்பது எப்போதும் எனக்குப் புரிந்ததில்லை. ஒரு சமயம் வினய், யாரோ நண்பனோடு சேர்ந்து பீடி குடித்திருக்கிறான். அது ஒரு ஆர்வம். அந்த வயதில் யாருக்குத்தான் இல்லாதிருந்திருக்கும்? வாய் குவித்துப் புகையை உள்ளே இழுத்து உலவவிட்டு, பிறகு அதை வளையம் வளையமாக வெளியேற்றிப் பார்த்து மகிழ்வது அனைவருக்குமே பிடித்தமான ஒன்று. வினய் அதைத்தான் செய்திருக்கிறான். துரதிருஷ்டவசமாக, தையூர் சந்தைக்கு அந்நேரம் கொள்முதலுக்குப் போய்க்கொண்டிருந்த கேசவன் மாமாவின் பார்வையில் அது பட்டுவிட்டது. மாமா அதிர்ந்துபோய்விட்டார். ‘ஐயோ மகாபாவி! என்னடா இது கோலம்!’ என்று அங்கேயே வினய்யை இழுத்துப்போட்டு மிதி மிதி என்று மிதித்திருக்கிறார். ஆத்திரம் அடங்காமல், அவனைத் தரதரவென்று இழுத்துக்கொண்டுபோய் தையூர் பண்ணையின் பம்ப் செட்டில் முக்கிக் குளிக்கவைத்து ஈரம் சொட்டச் சொட்ட வீட்டுக்கு இழுத்துவந்தார்.

என்ன என்று அப்பா கேட்டார்.

‘மோசம் போயிட்டேள் அத்திம்பேர். இந்த மகாபாவி உங்க பேரக் கெடுக்கறதே குறியா வெச்சிண்டிருக்கான்’ என்று ஆரம்பித்து அரை மணி நேரம் நடந்ததைப் புலம்பிக் கொட்டிவிட்டு, கண்ணைத் துடைத்துக்கொண்டு வெளியேறிச் சென்றார்.

அப்பா வெகுநேரம் ஒன்றும் பேசவில்லை. வினய் ஒரு குற்றவாளியின் தோரணையில் தீர்ப்பு வெளிவரக் காத்திருந்தான். விஷயம் அப்போது அம்மாவுக்குத் தெரியாது. அவள் கோயிலுக்குப் போயிருந்தாள். அவள் வரும்வரை அப்பா ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அம்மா வீட்டுக்குள் நுழைந்ததுமே, வினோத் அவளுக்கு விஷயத்தைத் தெரியப்படுத்திவிட்டான். அவள் கையில் எடுத்துவந்திருந்த குங்குமப் பிரசாதத்தை எங்கள் நான்கு பேர் நெற்றியிலும் இட்டுவிட்டாள். பிறகு அப்பாவிடம் சென்று குங்குமத்தை நீட்ட, அவர் எடுத்துத் தன் நெற்றியில் வைத்துக்கொண்டார்.

‘சொல்லு, உம்புள்ளைய என்ன பண்ணலாம்?’ என்று கேட்டார். அம்மா சிறிது நேரம் யோசித்தாள். பிறகு அடுக்களைக்குள் சென்று இரவு உணவுக்கு ஆயத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

‘கேக்கறேனே, என்ன பண்ணப்போறே அவனை?’ அப்பா மீண்டும் உரக்கக் கேட்டார்.

‘விட்டுடுங்கோ. அவனுக்குச் சரின்னு பட்டதாலதானே செஞ்சிருக்கான்? தப்புன்னு அவனுக்கே தோணும்போது நிறுத்திடுவான்’ என்று சொல்லிவிட்டு, சாப்ட வாங்க எல்லாரும் என்றாள்.

வினய் அப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை என்று தோன்றியது. உண்மையில் அவனை அப்பாவும் அம்மாவும் அடித்தும் திட்டியும் அழுதும் தீர்த்திருந்தால் மிகவும் திருப்தியாகியிருப்பான். மாமாவுக்கு வந்த கோபத்தில் ஒரு சதவீதத்தைக்கூட அம்மாவிடம் காணமுடியாதது அவனுக்கு மிகுந்த ஏமாற்றமளித்திருக்க வேண்டும்.

அன்றிரவு நாங்கள் நான்கு பேரும் உறங்கியிருப்போம் என்று நம்பி, அப்பாவும் அம்மாவும் வாசல் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் பயத்தின் வசப்பட்டிருந்த வினய் மட்டும்தான் உறங்கிப்போயிருந்தான். அண்ணாவோ, வினோத்தோ, நானோ சற்றும் உறக்கமின்றி வெறுமனே படுத்துத்தான் இருந்தோம்.

‘நீங்க ஏதாவது கண்டிச்சேளா?’ என்று அம்மா அப்பாவிடம் கேட்டாள்.

‘இல்லே. பேசவேயில்லே.’

‘அது போதும். பேசாம இருக்கறதும் கண்டிக்கறதும் ஒண்ணுதான். விட்டுடுங்கோ’ என்று அம்மா சொன்னாள்.

‘கஷ்டமா இருக்கு அகி. எங்க வம்சத்துல ஆசாரசீலர்னு யாருமில்லேன்னாலும் உங்கப்பா, தாத்தாவெல்லாம் நாள் தவறாம அக்னிஹோத்ரம் பண்ணி வாழ்ந்தவா. இந்தப் பிள்ளை இப்படி பண்ணுவான்னு எதிர்பாக்கலே.’

‘பரவால்லேங்கறனே?’ என்று அம்மா சொன்னது என் காதில் விழுந்தது. சற்று அதிர்ச்சியாக இருந்தது. உடனே நான், அண்ணா கவனித்துக்கொண்டிருக்கிறானா என்று திரும்பிப் பார்த்தேன். எங்கள் வீட்டில் முற்றத்தின் வடக்கு நடையோடியில்தான் நாங்கள் நான்கு பேரும் படுப்பது வழக்கம். சுள்ளிக்கட்டைப் பிரித்துப் போட்டாற்போல வரிசையாக எங்கள் படுக்கைகள் அங்குதான் விரிக்கப்பட்டிருக்கும். அப்பாதான் தினமும் எங்களுக்குப் படுக்கை போட்டு வைப்பார். மூன்று பாய்களை விரித்து, அதன் மீது முதலில் ஒரு போர்வையை விரிப்பார். சுருக்கங்கள் இல்லாமல் அதை நேர்த்தியாகப் பாய்களை மூடும்படி அமைத்து, அதன் மீது அம்மாவின் பழைய ஒன்பது கஜம் புடவை ஒன்றை இரண்டாக மடித்துப் போடுவார். மீண்டும் அமர்ந்து அதன் சுருக்கங்களை மெதுவாகப் பிரித்து ஒழுங்கு செய்வார். அதன்பின் நான்கு தலையணைகளை எடுத்து வந்து அருகருகே போட்டுவிட்டு, ‘மணியாச்சு, வந்து படுங்கோ’ என்று ஒரு குரல் கொடுப்பார். இதெல்லாம் இரவு ஒன்பது மணிக்கு நடந்துவிடும். நாங்கள் படுத்து அரை மணி ஆன பின்புதான், அப்பாவும் அம்மாவும் சாப்பிட உட்காருவார்கள். பேசியபடி சாப்பிட்டுவிட்டு, மேலும் சிறிது நேரம் வாசல் திண்ணைக்குப் போய் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். பொதுவாக, அவர்கள் இரண்டு பேரும் எப்போது படுக்க வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. காலை கண் விழிக்கும்போது அப்பா மீண்டும் அதே வாசல் திண்ணையில் பேப்பர் படித்துக்கொண்டிருப்பார். அம்மா சமையலறையில் காப்பி போட்டுக்கொண்டிருப்பாள்.

இந்த ஒழுங்கு என்றுமே மாறியதில்லை. எனக்குத் தெரிந்து முதல் நாளாக அன்றைக்குத்தான் நாங்கள் தூங்காமல் அவர்கள் இருவரும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தோம். அண்ணா கண்ணை மூடிக்கூட பாவனை செய்யவில்லை. கொட்டக்கொட்ட விழித்தபடியேதான் படுத்திருந்தான். இரு கைகளையும் தலைக்கு அடியில் கொடுத்து, மேலே சுழலும் மின் விசிறியைப் பார்த்தபடி சும்மா கிடந்தான். வினோத் போர்வையைத் தலையோடு காலாக இழுத்துப் போர்த்திக்கொண்டு தன் விழிப்பை மறைக்கப் பார்த்துக்கொண்டிருந்தது புரிந்தது. நான் எழுந்து உட்கார்ந்து அண்ணாவைப் பார்த்தேன். அவன் திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகை செய்தான். ‘தூக்கம் வரலியா?’ என்று கேட்டான்.

‘அம்மா என்னடா இப்படி சொல்றா? பீடி பிடிக்கறது தப்பில்லியா?’ என்றேன் நம்பமுடியாத வியப்புடன். அவன் மீண்டும் புன்னகை செய்தான். ‘தப்பா இல்லியான்னு உனக்கு சரியா புரியணுன்னா, நீயும் ஒரு தடவை மாமா எதிர்ல நின்னு பிடிச்சிப் பாரு.’

‘ஐயோ வினய்ய மாமா போட்டுப் பின்னி எடுத்திருக்கார். நான் மாட்டேன்.’

‘அப்ப ஒண்ணு செய். அம்மா எதிர்லயே நின்னு பிடி.’

‘ஐயோ!’ என்றேன் அலறலுடன்.

‘உன்னையும் ஒண்ணும் சொல்லமாட்டா விமல். பயப்படாத’ என்று அண்ணா சொன்னான்.

‘அதான் ஏன்?’ நான் விடாமல் கேட்டேன்.

அண்ணா அதற்கு பதில் சொல்லவில்லை. வெளியே கதவு அடைக்கப்படும் சத்தம் கேட்டது. அப்பாவும் அம்மாவும் பேசி முடித்து உள்ளே வந்தார்கள். நான் சட்டென்று படுத்து போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு முழு இரவும் உறக்கமில்லாமல் போய்விட்டது. அப்பாவும் அம்மாவும் விளக்கை அணைத்துவிட்டு வந்து எங்கள் நான்கு பேருக்கும் அந்தப் பக்கம் ஒருவரும் இந்தப் பக்கம் ஒருவருமாகப் படுத்தார்கள்.

சரியாகத் தெரியவில்லை என்றாலும் இரவெல்லாம் அம்மா அழுதுகொண்டிருந்ததாகத்தான் எனக்குத் தோன்றியது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com