9. மூல மந்திரம்

அவன் ஓடிப்போனதைவிட, அவன் ஓடிப்போகப்போகிறான் என்பது தெரிந்தும் நான் யாரையும் எச்சரிக்காதிருந்திருக்கிறேன் என்பது மிகப்பெரிய குற்றமாகிவிடும்.

சிதையிலிருந்து உருவியெடுத்த தழல் துண்டுகளைப்போலத் தகித்துக்கொண்டிருந்தன அம்மாவின் விழிகள். அவள் அழுவதுபோலவும் இல்லை, அழாததுபோலவும் இல்லை. சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் அந்தக் குரலுக்குள் தடம் புரண்ட ரயிலின் பெட்டிகளைப் போன்றதொரு கோர பிரம்மாண்டம் இருப்பதாகப் பட்டது. தனது பதற்றத்தை அவள் உரக்கப் பேசி மறைத்துக்கொள்வதாகத் தோன்றியது. எல்லாமே சரிதான், எல்லாமே வரக்கூடியதுதான், எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால்தான் தவறு என்கிற தொனியை ஒரு போர்வையாகப் போர்த்திக்கொண்டு, யாருக்கோ தேறுதல் சொல்லுகிற பாவனையில் தனக்குத்தானே இடைவிடாது பேசிக்கொண்டிருந்தாள். அப்பா வாயே திறக்கவில்லை. வினய்யும் வினோத்தும் என்ன நடந்திருக்கிறது என்பதை உள்வாங்கவே சிரமப்பட்டுக்கொண்டிருப்பதுபோலப் பட்டது. கேசவன் மாமாதான் முற்றத்துத் தூணில் முட்டிக்கொண்டு முட்டிக்கொண்டு அழுதார்.

‘பாவி பாவி, மகாபாவி. இதுக்காக்கா அவனைப் பெத்தே? இதுக்கா அவன் இஷ்டத்துக்கு வளரவிட்டே? ஒரு வார்த்தை கண்டிச்சிருப்பியா? தப்பா எதாவது சொல்லியிருப்பியா? மார்க் சரியில்லே, அது சரியில்லேன்னு திட்டியிருப்பியா?’ ஆற்றமாட்டாமல் அரற்றிக்கொண்டிருந்த கேசவன் மாமாவின் அருகே சென்று அப்பா அவரது தோளைத் தொட்டார்.

‘கேசவா, கண்டிக்கிற அளவுக்கு அவன் பொறந்ததுலேருந்து எந்தத் தப்பும் பண்ணதில்லடா. பள்ளிக்கூடத்துல எந்தப் பரீட்சையிலயும் அவன் தொண்ணூறு மார்க்குக்குக் கீழ வாங்கினதே இல்லை’ என்று சொன்னார்.

மாமா, போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்துப் பார்க்கலாம் என்று சொன்னார். எங்கே, எவ்வளவு தூரம் போயிருக்கமுடியும்? எப்படியும் பிடித்துவிடலாம் என்று அவர் நம்பினார். அம்மாவிடம் இதனைச் சொன்னபோது அவள் பதில் சொல்லவில்லை. அதிர்ச்சியில் சித்தம் கலங்கி நின்றுவிட்ட பாவனையில், அவள் தீவிரமாக ஏதோ யோசித்துக்கொண்டிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. நான் ஒரு முடிவெடுத்தால் அத்தனை பேரின் குழப்பங்களையும் தீர்த்துவைத்துவிடமுடியும். தேடிப் பயனில்லை. அண்ணா ஒரு தீர்மானத்துடன் போயிருக்கிறான். இனி அவன் திரும்பி வரமாட்டான்.

சொல்லிவிடலாம்தான். ஆனாலும் எனக்கு அச்சமாக இருந்தது. அவன் ஓடிப்போனதைவிட, அவன் ஓடிப்போகப்போகிறான் என்பது தெரிந்தும் நான் யாரையும் எச்சரிக்காதிருந்திருக்கிறேன் என்பது மிகப்பெரிய குற்றமாகிவிடும். அம்மாவால் அதனைத் தாங்கவே முடியாது என்று தோன்றியது.

எனக்குத் தீராத வியப்புகளாக அன்றைக்கு இரண்டு மிச்சமிருந்தன. நான் எப்படி அத்தனை அழுத்தக்காரனாக இருந்திருக்கிறேன் என்பது முதலாவது. சந்தேகத்தின் நெல்லளவு நிழல்கூட யாருக்கும் படராத வண்ணம் அண்ணா எப்படித் தன்னை அத்தனைக் காலமாக மறைத்துவந்திருக்கிறான் என்பது அடுத்தது. அவன் செய்துகொண்டிருந்த யோகப்பயிற்சிகளை நான் அறிவேன். ஆனால் ஒரு நாளும் அவன் அவற்றை வீட்டில் அமர்ந்து செய்து பார்த்ததில்லை. பெரும்பாலும் மாலை வேளைகளில் சவுக்குத் தோப்பில்தான் செய்வான். நரிகளுக்கு பயந்து யாரும் நுழைய விரும்பாத நேரம் அது. அவனிடம் சில விநோதமான புத்தகங்கள் இருந்தன. எல்லாம் செல்லரித்த, மிகப் பழங்காலத்துப் புத்தகங்கள். இரவுப் பொழுதுகளில் வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு, ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவன் பின்கட்டுக்குப் போய் கிணற்றடி விளக்கைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து படிப்பான். ஒரு சில சமயம் நான் சிறுநீர் கழிக்க நள்ளிரவு எழுந்து செல்லும்போது அதைப் பார்த்திருக்கிறேன்.

முதல் முறை அவன் அப்படிப் படித்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தபோது அவன் சற்றே திடுக்கிட்டுப் புத்தகத்தை மறைத்ததுபோலிருந்தது. ஆனால் விரைவில் சகஜமாகிவிட்டான். ‘வா, இப்படி உக்காரு’ என்று என்னிடம் சொன்னான்.

‘என்னடா படிக்கறே? கெட்ட புஸ்தகமா?’ என்று கேட்டேன்.

‘நீயும் வேணா படிச்சிப் பாரு’ என்று என்னிடம் அதை நீட்டினான். அந்தப் புத்தகத்துக்கு அட்டை இல்லை. எழுத்துருக்கள் மிகவும் புராதனமாக, ஒடுங்கி நெளிந்து உருக்குலைந்திருந்தன. பழுப்புத் தாள்களைப் புரட்டப் புரட்ட எனக்கு மிகவும் விநோதமாக இருந்தது. அந்த மொழி எனக்குப் புரியவில்லை. நாலைந்து வரிகளில் ஏதேதோ மந்திரங்களும் அதன் அடியில் கட்டம் போட்டு, அதே மந்திரங்களின் சொற்களை ஒவ்வொரு கட்டத்தில் இட்டு நிரப்பியும் இருந்தது.

‘நீ மந்திரவாதி ஆகப் போறியாடா?’ என்று ஆர்வமுடன் கேட்டேன். அவன் இல்லை என்று தலையசைத்தான்.

‘அப்பறம் எதுக்கு இதெல்லாம் படிக்கறே? இது எதோ மந்திர தந்திர புஸ்தகம் மாதிரி இருக்கே?’

‘இது சித்து. இது என்னன்னு எனக்குத் தெரிஞ்சிக்கணும்’ என்று அவன் சொன்னான்.

‘இந்தப் புஸ்தகம் ஏது உனக்கு?’

‘திருப்போரூர் சாமி வெச்சிருந்தார்.’

எனக்கு அதுதான் பெரிய குழப்பமாக இருந்தது. அந்தத் திருப்போரூர் சாமியை ஒரு நாளாவது நான் சந்தித்தே தீர வேண்டும் என்று தோன்றியது. இவன் எப்போது அவரிடம் சென்று அறிமுகமானான், எப்படி நெருக்கமானான் என்றே எனக்குப் புரியவில்லை. புராதனமான நூல்களையும் ரகசிய ஓலைச் சுவடிகளையும் கொடுத்தனுப்பும் அளவுக்கு அப்படி என்ன சிறப்பைக் கண்டார் இவனிடம்?

என்னை அவரிடம் அழைத்துச் செல்லும்படி விஜயிடம் கேட்டேன். அவன் சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்துவிட்டு, ‘வேணாம் விமல். நீ நன்னா படி. நீ நன்னா வந்தாத்தான் அம்மாக்கு சந்தோஷம்’ என்று சொன்னான்.

‘ஏன் நீ நன்னா படிக்கறதில்லியான்ன? அப்படி ஒண்ணும் தெரியலியே. நல்ல மார்க் எல்லாம் வாங்கறியே?’ என்று சொன்னேன்.

அவன் சிரித்தான். ‘அப்பாம்மா படிக்கவெக்கறதால படிக்கறேன். மார்க் வாங்கினாத்தான் அவாளுக்கு சந்தோஷம். அதனால வாங்கிக் குடுத்துடறேன். ஆனா இந்தப் படிப்பு எனக்குப் பிடிக்கலை’ என்று பதில் சொன்னான்.

எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அவன் வைத்திருந்த புத்தகத்தை மீண்டும் ஒருமுறை புரட்டிப் பார்த்தேன். ‘இதையெல்லாம் ரகசியமாத்தான் படிக்கணுமா? அம்மாக்குத் தெரிஞ்சா பிரச்னையாயிடுமா?’ என்று கேட்டேன்.

‘அப்படியெல்லாம் இல்லை. ஆனா, அம்மா பயந்துடுவா.’

‘நீ எப்படி பயப்படாம இருக்கே?’

‘தெரியலடா’ என்று விஜய் சொன்னான். சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், என்ன நினைத்தானோ, ‘நாளைக்கு சாயங்காலம் வசந்த மண்டபத்துக்கு ஆறு மணி சுமாருக்கு வா. நான் அங்கதான் இருப்பேன். உனக்கு ஒண்ணு காட்டறேன்’ என்று சொன்னான். அதைச் சொல்லிவிட்டு, ‘நாளைக்கு அந்த அற்புதம் உனக்குத் தெரியணும்னா, இன்னிக்கு நான் இதை இங்க படிச்சிண்டிருந்ததை நீ யார்கிட்டேயும் சொல்லக் கூடாது!’ என்று சொன்னான்.

அற்புதம்!

அப்படியொன்றை அவன் எனக்குக் காட்டுவதென்றால் நான் ஏன் அம்மாவிடம் எதையும் சொல்லப்போகிறேன்! படிப்பைத் தாண்டி அன்றைக்கு எங்கள் கிராமத்தில் என் வயதுச் சிறுவர்களுக்கு வேறொன்றும் தெரியாது. எப்போதாவது வீதியில் கூடி விளையாடுவது உண்டுதான். ஆனால் அதெல்லாம் சில மணித் துளிகளுக்குள் முடிந்துவிடக்கூடிய வைபவம். ஏனோ சிறுவர்கள் ஒன்றுகூடி விளையாடுவதை அன்றைய பெரியவர்கள் அதிகம் விரும்பாதவர்களாக இருந்தார்கள். படி, படி என்பதைத் தாண்டி அவர்கள் வேறெதையும் மறந்தும் சொல்லமாட்டார்கள். மல்லையிலோ திருப்போரூரிலோ படூரிலோ கோயில் திருவிழா வந்தால் மட்டும் குடும்பத்தோடு கிளம்பிச் செல்வோம். வருடம் ஒருமுறை நடக்கும் படூர் மயானகொள்ளைத் திருவிழா எனக்கு ரொம்பப் பிடிக்கும். மற்றபடி கேவலம் நான்கு மாங்காய் அடித்துத் தின்ன விரும்பினால்கூட சைக்கிள் எடுத்துக்கொண்டு தையூர் தோப்புக்குப் போனால்தான் உண்டு. திருவிடந்தையில் கடலையும் சவுக்குக் காட்டைத் தவிர இன்னொன்று கிடையாது.

எனவே மறுநாள் அண்ணா எனக்குக் காட்டவிருந்த, நானறியாத அந்த அற்புத அனுபவத்துக்கு அந்தக் கணத்தில் இருந்தே தயாராக ஆரம்பித்தேன். வரும்போது அம்மாவுக்குத் தெரியாமல் ஒரு பொட்டலத்தில் பிடி சர்க்கரை எடுத்துவரச் சொல்லியிருந்தான். மறக்காமல் அதை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

வசந்த மண்டபம் எங்கள் வீட்டில் இருந்து பதினைந்து நிமிட நடை தூரம்தான். சுற்றிலும் வயல்களும் ஒரு பெரிய ஏரியும் சிறிதாக ஒரு அல்லிக் குளமும் வழியேறத் தென்னை மரங்களும் நிறைந்திருக்கும். அங்கே போய்ச் சேர சரியான பாதை கிடையாது. ஒற்றையடி மண் பாதை முழுதும் சரளைக் கற்கள் நிரம்பியிருக்கும். உற்சவ காலங்களில் பெருமாள் வீதி உலா போகும்போது அந்த மண்டபத்தில் சிறிது நேரம் இளைப்பாறுவார் என்று அப்பா சொல்லியிருக்கிறார். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து நான் எங்கள் ஊரில் எந்தத் திருவிழாவும் நடந்து பார்த்ததில்லை. உற்சவர் நித்யகல்யாணப் பெருமாளை வேண்டிக்கொண்டு விரதம் இருந்தால், கல்யாணம் ஆகாதவர்களுக்கு உடனே குதிர்ந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அதைப் பிடித்துக்கொண்டு எப்போதாவது, யாராவது வண்டி கட்டிக்கொண்டு குடும்பத்தோடு கோயிலுக்கு வருவார்கள். சிறிய கோயில்தான் என்பதால் சுற்றிப்பார்க்க உள்ளே ஒன்றும் இருக்காது. காடாக முளைத்துக்கிடக்கும் புல்லின் மீது நடந்து மூன்று சந்நிதிகளைச் சேவித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? பத்து நிமிடங்களில் அர்ச்சனை முடித்து பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே வந்துவிட்டால், திரும்பக் கிளம்பும்வரை பொழுது போக வேண்டுமே? ஊரைச் சுற்றிக் காலார நடந்துவிட்டு வரலாம் என்று புறப்படுகிறவர்கள் அந்த மண்டபத்தில் அமர்ந்து புளியோதரையோ, தயிர் சாதமோ சாப்பிடுவார்கள். குளத்தில் இறங்கி, தண்ணீர் அள்ளிக் குடித்துவிட்டு ஒன்றிரண்டு அல்லிப் பூக்களைப் பறித்துக்கொண்டு ஊர் திரும்புவார்கள்.

அன்று மாலை அண்ணா சொன்ன ஆறு மணிக்குச் சரியாக நான் வசந்த மண்டபத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது அவன் அல்லிக் குளத்தின் நடுவே நீந்திக் குளித்துக்கொண்டிருந்தான். ‘டேய் நான் வந்துட்டேண்டா’ என்று மண்டபத்தில் நின்றுகொண்டு கத்தினேன். அவன் அதைக் கண்டுகொள்ளவில்லை. சுமார் இருபது நிமிடங்கள் ஏகாந்தமாகக் குளம் முழுதும் பரவி நீந்திக்கொண்டே இருந்தான். பிறகு கரையேறி வந்து என்னைப் பார்த்துச் சிரித்தான். அவிழ்த்து மடித்து வைத்திருந்த தனது வேட்டியைக் குளத்து நீரில் நனைத்துப் பிழிந்து இடுப்பில் சுற்றிக்கொண்டு மண்டபத்துக்கு வந்தான்.

‘என்னடா இது ஈர வேஷ்டி! துண்டு எடுத்துண்டு வரலியா? இப்படி சொட்டச் சொட்ட நிக்கறியே!’ என்று நான் சொன்னேன்.

‘பரவால்ல. நீ உக்கார்’ என்று சொல்லிவிட்டு அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த நேரத்தில் தென்பட்டு போகிறவர்களோ, திருவிடந்தைக்கு அங்கிருந்து வருகிறவர்களோ யாரும் இருக்கமாட்டார்கள் என்பது எனக்கே தெரியும். அந்தச் சாலை பகல் பொழுதிலேயே பொளேரென்று வெறுமையாகத்தான் கிடக்கும். எப்போதாவது சவுக்குக் கட்டைகள் ஏற்றிய மாட்டு வண்டிகள் சரளைக் கற்களை அரைத்துக்கொண்டு போகும். ஆனந்தமாக பீடி குடித்தபடி ஹேய் ஹேய் என்று மாட்டை விரட்டும் வண்டிக்காரர்கள், வசந்த மண்டபத்தை தாண்டிக் கோயில் கண்ணில் பட ஆரம்பித்ததுமே வலித்துக்கொண்டிருக்கும் பீடியை விசிறி எறிந்துவிடுவார்கள். அப்படி அவர்கள் வீசியெறியும் பீடிகளால் ஈர்க்கப்பட்டுத்தான் முதல் முதலில் குடித்துப் பழகியதாக வினய் பின்பொரு சமயம் என்னிடம் சொன்னான்.

‘யாரும் வரலை. என்ன அற்புதம்?’ என்று நான் அண்ணாவிடம் கேட்டேன். ஆர்வம் எனக்குக் கட்டுக்கடங்காது பெருகிக்கொண்டிருந்தது.

அவன் ஒன்றும் பேசவில்லை. மண்டபத்தின் ஒரு ஓரமாக மடித்துவைத்திருந்த தனது சட்டையின் பாக்கெட்டில் இருந்து ஒரு சாக்பீஸை எடுத்தான். கண்மூடி தியானம் செய்துவிட்டு, மண்டபத் தரையில் ஓரடி நீள அகலத்துக்கு ஒரு சதுரக் கட்டம் வரைந்தான். பிறகு அந்தப் பெரிய சதுரத்துக்குள் ஐந்து, ஐந்தாக இருபத்து ஐந்து சிறு சதுரங்களை வரைந்தான். அதன்பின் ஒவ்வொரு கட்டமாக, வ-லம் எ-றீயும் 15 / ந-ஐம் அ-ஐயும் 9 / சி-நம் உ-சவ்வும் 4 என்று தொடங்கி விறுவிறுவென்று ஏதோ எழுத ஆரம்பித்தான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. மிகவும் குழப்பமாகவும் சிறிது பதற்றமாகவும் இருந்தது. ‘என்னடா பண்ற?’ என்று அடிக்குரலில் சொற்களை நசுக்கிக் கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் அந்த இருபத்து ஐந்து கட்டங்களையும் நிரப்புவதில் குறியாக இருந்தான். ம-ஈம். ய-சௌம். சி-நம். ந-ஐம். வ-லம். திரும்பத் திரும்ப இதே சொற்கள்தாம். ஆனால் இரண்டாவது வரிகளில் அ-ஐயும், உ-சவ்வும், எ-றீயும், ஓ-ஸிரீயும் என்று கட்டத்துக்கொன்றாக வேறெதையோ மாற்றி எழுதிக்கொண்டு போனான்.

எழுதி முடித்துவிட்டு என்னைப் பார்த்துச் சிரித்தான்.

‘என்னது இது?’

‘சொல்றேன். கொஞ்ச நேரம் பேசாம இரு’ என்று சொல்லிவிட்டு பத்மாசனமிட்டு அமர்ந்துகொண்டான். ‘சர்க்கரை கொண்டுவரச் சொன்னனே?’

நான் என் நிஜார் பாக்கெட்டில் இருந்து பொட்டலத்தை எடுத்து அவன்முன் வைத்தேன். அவன் அதைப் பிரித்து அந்தப் பெரிய சதுரத்தின் வடகிழக்கு மூலையில் வைத்தான். கண்ணை மூடி, கைகளைக் கூப்பிக்கொண்டு மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தான்.

ஓம்-றீயும்-ஐயும்-சவ்வும்-ஸ்ரீயும்-கிலியும்-ஆக்ருஷ்ணாய-ஸ்வாஹா.

ஓம்-றீயும்-ஐயும்-சவ்வும்-ஸ்ரீயும்-கிலியும்-ஆக்ருஷ்ணாய-ஸ்வாஹா.

ஓம்-றீயும்-ஐயும்-சவ்வும்-ஸ்ரீயும்-கிலியும்-ஆக்ருஷ்ணாய-ஸ்வாஹா.

ஓம்-றீயும்-ஐயும்-சவ்வும்-ஸ்ரீயும்-கிலியும்-ஆக்ருஷ்ணாய-ஸ்வாஹா.

நான் பயந்துவிட்டேன். இது நிச்சயம் ஏதோ பேய் வரவழைக்கும் மந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அண்ணா அந்த ஒரு வரி மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை மூச்சு விடாமல் உச்சரித்து நிறுத்தினான். அதுவரை நடுக்கமுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். பேய் வந்து என்னை அடித்தாலும் பரவாயில்லை; அவனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்று கவலைப்பட்டேன். இவன் மட்டும் ஏன் எல்லோரையும்போல இருக்கமாட்டேனென்கிறான்? யாருக்கும் தெரியாத எதையெதையோ எங்கிருந்தோ அறிந்துவைத்திருக்கிறான். அதெல்லாம் எப்படி முடிகிறது என்றுதான் தெரியவில்லை.

கண்ணைத் திறந்து என்னைப் பார்த்தவன் புன்னகையுடன் சொன்னான், ‘இது பேய் மந்திரம் இல்லை. ஆகர்ஷண மூல மந்திரம்.’

எனக்கு அடிவயிற்றில் பகீரென்று பந்து திரண்டு எழுந்தது. பேய் மந்திரம் என்று நான் நினைத்ததை அவன் எப்படி அறிந்தான்? ‘ஐயோ... நீ முழு மந்திரவாதியாவே ஆயிட்டேடா!’ என்று கத்திக்கொண்டே எழுந்து ஓட ஆரம்பித்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com