8. புறப்பாடு

யோகம், சித்து, தவம், தியானம், பிராணாயாமம் என்று பல சொற்களை நான் அவனிடமிருந்துதான் பெற்றேன். அவன் எல்லோரையும்போல இல்லாமல் வேறு விதமானதொரு வாழ்வை ரகசியமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான்

எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இப்போதுதான் அதைச் சந்தேகம் என்கிறேனே தவிர, அந்த வயதில் அது ஒரு தீர்மானமாகவே எனக்குள் பதிந்திருந்தது. வினய் பீடி குடித்த விஷயத்தில் ஒன்றுமே நடக்காத மாதிரி நடந்துகொண்ட அம்மா, என் மூத்த அண்ணா சம்பந்தப்பட்ட எதிலும் அப்படி இருக்கமாட்டாள் என்றே தோன்றியது. உதாரணத்துக்கு, பீடியைக் குடித்தது வினய் அல்ல; விஜய்தான் என்றால் அம்மா என்ன செய்திருக்கக்கூடும்? நிச்சயமாகக் கதறித் தீர்த்திருப்பாள் என்று நினைத்தேன். அவனை அமரவைத்து மணிக்கணக்கில் நல்ல புத்தி சொல்லியிருப்பாள். அவனுக்காக அவள் விரதமிருப்பாள். உணவில் எதையாவது தவிர்ப்பாள். வெறுந்தரையில் படுப்பாள். கோவளம் தர்கா வாசலில் எப்போதும் அமர்ந்திருக்கும் ஒரு பக்கிரியை அவளுக்குத் தெரியும். வீட்டில் ஏதாவது பெரிய பிரச்னை வரும்போதெல்லாம் அம்மா ரகசியமாக அவரிடத்தில் சென்று ஆலோசனை கேட்டு வருவது வழக்கம். அண்ணாவுக்காக அவரிடம் தாயத்து மந்திரித்து வாங்கிவந்து கட்டினாலும் கட்டுவாள். இதனால் எல்லாம்தான் அவன் பூணூலைக் கழட்டிவிட்ட விவரத்தை நான் அவளிடம் சொல்ல வேண்டாமென்று முடிவெடுத்தேன். அந்த வயதில் அவளது கண்ணீரைத் தாங்குகிற சக்தி எனக்கு இல்லாதிருந்தது.

அண்ணாவிடம் இதைச் சொன்னபோதுதான் அவன் அந்த நாடிச் சுவடியைக் குறித்து முதல் முதலில் என்னிடம் பேசினான். ‘நீ நினைக்கறது தப்பு விமல். நான் கொலையே பண்ணாலும் அம்மா ஒண்ணும் சொல்லமாட்டா. அப்பாவையும் வாயத் திறக்க விடமாட்டா’ என்று சொன்னான்.

‘எப்படி சொல்றே நீ?’

‘சுவடி அப்படித்தான் சொல்றது’ என்றான் அண்ணா. அவன் வைத்திருந்த சுவடியை நான் ஏழெட்டு முறை எடுத்துப் பார்த்திருந்தேன். ஆனால் அதில் எந்தப் பயனும் இல்லை. அதில் எழுதியிருந்ததில் ஒரு சொல்லைக்கூட என்னால் படிக்க முடியவில்லை. மிகவும் பழுப்பேறிப்போயிருந்த புராதனமான சுவடி அது. புதிய சுவடியாக இருந்தாலுமே என்னால் படித்திருக்க முடியாது. ஏனெனில் அந்தத் தமிழ் நான் அறியாததாக இருந்தது. பல எழுத்துகள் பாதி அழிந்திருந்தன.

‘டேய், உண்மைய சொல்லு. ஒனக்கு மட்டும் இது புரியுமா?’ என்று நான் அண்ணாவிடம் கேட்டேன்.

‘புரியாதுதான்’ என்று அவன் பதில் சொன்னான்.

‘அப்பறம் எதுக்கு உனக்கு இது?’

‘இது நம்ம குடும்பத்த பத்தின சுவடி விமல். நாலு வரில நம்மள பத்தித் தெளிவா எழுதியிருக்கா. நமக்கு இதைப் படிச்சி புரிஞ்சிக்கத் துப்பில்லேன்றது வேணா உண்மையா இருக்கலாம். ஆனா இது நம்மள பத்தி எழுதினது. அதனால நமக்கு முக்கியம்.’

‘யார் சொன்னா நம்மள பத்தி எழுதினதுன்னு?’

‘ஒரு சித்தர்.’

‘திருப்போரூர் சாமியா?’

‘அவர்கிட்ட இருந்துதான் எடுத்துண்டு வந்தேன். ஆனா சொன்னது அவர் இல்லே. அது வேற.’

எனக்குப் பல சமயம் அவன் சம்பவங்களைப் புனைந்துவிடுகிறானோ என்ற சந்தேகம் வரும். அனைத்துமே உண்மைதான் என்றால் அதை வீட்டில் அனைவருக்கும் பொதுவாக ஏன் ஒருபோதும் சொல்ல மறுக்கிறான்? ஒவ்வொரு முறையும் ‘யாரிடமும் சொல்லாதே’ என்று சொல்லிவிட்டு என்னிடம் அவன் பேசத் தொடக்கும்போதும் எனக்கு இந்தக் கேள்வி எழும். யோகம், சித்து, தவம், தியானம், பிராணாயாமம் என்று பல சொற்களை நான் அவனிடமிருந்துதான் பெற்றேன். அவன் எல்லோரையும்போல இல்லாமல் வேறு விதமானதொரு வாழ்வை ரகசியமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்று எனக்குப் புரிந்தது. அதைப்பற்றி அறியவும் அவனோடு பேசி, புதிதாக எதையேனும் தெரிந்துகொள்ளவும் எனக்கு விருப்பமிருந்தது. ஆனால் என் விருப்பம் எப்போதும் சந்தேகத்தின் திரைச்சீலையைத் தன் மீது போர்த்திய வண்ணமே வெளிப்படுவதாயிருந்தது.

அண்ணா சொன்னான், ‘வாழற நாள்பூரா சந்தேகம் மட்டும்தான். மனுஷன் செத்தாலும் அவன் சந்தேகம் சிரஞ்சீவியாத்தான் இருக்கும்.’

பல சமயம் எனக்கு அவன் பேசுவது புரியாது. அவன் ரகசியமாக வைத்திருந்த அந்த நாடிச் சுவடியைப் போலவே பேசுவதாகத் தோன்றும். அவன் மட்டும் அதை அப்பாவிடமோ, கேசவன் மாமாவிடமோ கொடுத்தால் கண்டிப்பாக அதில் எழுதியிருப்பது என்னவென்று தெரிந்துவிடும். ஆனால் முடியவே முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.

‘நீ மட்டும் இதை அப்பாட்ட சொன்னேன்னா, அதோட நான் உன்னோட பேசமாட்டேன்.’

அண்ணா அந்தச் சுவடியை மிகவும் ரகசியமான ஓரிடத்தில் வைத்திருந்தான். எங்கள் நான்கு பேரின் பாடப் புத்தகங்கள், துணிமணிகளை வைத்துக்கொள்வதற்காக, இருக்கிற இரண்டு அறைகளில் ஒன்றை அம்மா ஒழித்துவிட்டிருந்தாள். அந்த அறை எப்போதும் களேபரமாகவே காணப்படும். எங்கும் துணிமணிகளும் புத்தகங்களும் இறைந்துகிடக்கும். எழுதிக் கிழித்துப்போட்ட தாள்கள், ஊக்கு உடைந்த பென்சில்கள், ரப்பர் அழித்த தூசுக் குப்பை, பென்சில் சீவிய குப்பை, இங்க் போடும்போது சிந்தியதைத் துடைக்காமல் விட்டதால் உண்டான கறைகள் ஏராளமாக இருக்கும். வினோத்துக்கு சுவரில் கிறுக்கும் பழக்கம் உண்டென்பதால், அந்த அறையின் சுவரெங்கும் கணக்கு, அறிவியல் பாடக் குறிப்புகளால் நிறைந்திருக்கும். அந்த அறையில் ஒரு பரண் உண்டு. அப்பாவின் புராதனமான இரண்டு டிரங்குப் பெட்டிகள் அங்கிருக்கும். அப்பாவின் திருமணத்துக்கு வாங்கிய வேட்டிகள், ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு, சில வெள்ளிப் பாத்திரங்கள், அம்மாவின் முகூர்த்தப் பட்டுப் புடைவை, சில பழைய புகைப்படங்கள் அதில் உண்டு. வருடத்துக்கு ஒருமுறை எப்போதாவது அப்பா அந்த இரு பெட்டிகளையும் கீழே இறக்கிவைத்துத் திறந்து பார்ப்பார். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று எண்ணி வைப்பாரோ என்னவோ. மற்றபடி வருடம் முழுதும் அந்தப் பரணைச் சீந்துவார் கிடையாது. அண்ணா, புத்தக அலமாரியில் கால் வைத்து மேலே ஏறி, அந்தப் பரணில் உள்ள அப்பாவின் பெட்டிக்குப் பின்புறமாக அந்த ஓலைச் சுவடியைப் போட்டு வைத்திருந்தான். அதை அவன் ஒரு சுருணைத் துணியில் சுற்றித்தான் வைத்திருந்தான். இருந்தாலும் அது நாளுக்கு நாள் அழிந்துகொண்டே போவதாகத்தான் எனக்குத் தோன்றியது. ஒவ்வொரு முறையும் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவன் என்னைத் துணைக்குக் கூப்பிட்டுக்கொண்டு பரண் மீதேறி அந்தச் சுவடியை எடுத்துப் பார்க்கும்போதும் எனக்கு பயமாக இருக்கும். எதற்காக அந்தப் பயம் என்று தெரியாது. ஆனாலும் நடுங்கும். வியர்த்துவிடும்.

‘உனக்கும்தான் அதைப் படிக்க முடியல, புரியலன்னு சொல்றியே. அப்பறம் எதுக்கு அடிக்கடி அதை எடுத்து வேற பாக்கற?’ என்று ஒரு நாள் அவனிடம் கேட்டேன்.

‘மனப்பாடம் பண்ண முடியறதான்னு பாக்கறேன். மனசுல ஏத்திண்டுட்டா அப்பறமா மெதுவா புரியறப்போ புரிஞ்சிட்டுப் போகட்டுமே?’

‘இன்னுமா மனப்பாடம் ஆகலை?’

‘ஆகாது விமல். ஆகாதுன்னு சொல்லியேதான் அவர் குடுத்தார்.’

‘அவர்னா யார்?’

‘சொன்னேனே, திருப்போரூர்ல ஒருத்தர்.’

அது என் ஆர்வத்தைத் தூண்டியது. எத்தனை எத்தனை பாடப் பக்கங்களை நான் மனப்பாடம் செய்திருக்கிறேன்! முந்தைய வருடத்துப் பாடங்கள்கூட இன்னமும் நினைவில் இருக்கின்றன. இந்த நான்கு வரிகள் மனத்தில் நிற்காதா. அதையும் பார்த்துவிடலாம் என்று ஒருநாள் அவன் ஓலைச்சுவடியை எடுத்தபோது வாங்கி வைத்துக்கொண்டு வார்த்தை வார்த்தையாகப் படிக்க முயற்சி செய்தேன். அதில் பல சொற்களின் அமைப்பே எனக்கு புரியவில்லை. அச்செழுத்தாக இருந்தால் மனப்பாடம் செய்துவிடுவது சுலபம் என்று தோன்றியது. அது கையால் கிறுக்கப்பட்டது என்பதால் எழுத்துகளே புரியாதிருந்தது.

‘பனை ஓலைல முள்ளால கீறி எழுதி, மஞ்சள் பொடி போட்டு எழுத்தா தெரிய வெப்பா அந்தக் காலத்துல’ என்று அண்ணா சொன்னான். அந்தக் காலம் என்றால் எந்தக் காலம்? அந்தக் காலத்து முறை இவனுக்கு எப்படித் தெரியும்? கேட்டால் திருப்போரூர் சாமி சொன்னதாகச் சொல்லிவிடுவான். என்றைக்காவது ஒருநாள் நான் அந்த சாமியைச் சந்திப்பேன். அப்போது என் அண்ணாவைப் பற்றி அவரிடம் விசாரிப்பேன். பொக்கிஷம் போன்றதொரு ஓலைச் சுவடியை ஒரு பதினேழு வயதுப் பையனிடம் எந்தத் தைரியத்தில் அவர் கொடுத்தனுப்பினார் என்று கேட்பேன். எங்கள் குடும்பத்தைப் பற்றிய வரிகள் கொண்ட சுவடி என்றால், அதை ஏன் என் பெற்றோருக்குக் காட்டாமல் மறைக்கச் சொன்னார் என்று கண்டிப்பாகக் கேட்டறிவேன்.

‘விமல், இந்தச் சுவடி அம்மாக்குப் புரியும். அவ படிச்சிடுவா. ஆனா அது இப்ப நடக்காது’ என்று அண்ணா சொன்னான்.

‘வேற எப்பொ நடக்குமாம்?’

அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு நீண்டதொரு பெருமூச்சு எழுந்தது. சட்டென்று கண்ணை மூடி அமர்ந்து பிராணாயாமம் செய்யத் தொடங்கினான். ஆறு நிமிடங்கள் அதைச் செய்து முடித்துவிட்டு மீண்டும் சுவடியைப் பரணில் பத்திரப்படுத்திவிட்டு இறங்கிவந்து சொன்னான். ‘என்னிக்குன்னு எனக்குத் தெரியாது. ஆனா அன்னிக்கு என் பொறந்த நாளா இருக்கும். அன்னிக்கு யாரோ ஒருத்தர் செத்துப்போன சேதி வரும்.’

‘ஐயோ, என்னடா சொல்றே நீ? இதை யாரு ஒனக்கு சொன்னது? திருப்போரூர் சாமியா?’ என்று கேட்டேன்.

‘இல்லை. நானேதான் சொல்றேன். நடக்கும் பார்’ என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறிச் சென்றான்.

அதுதான் எனக்குத் தீராத வியப்பாகத் தங்கிப்போனது. அண்ணா சொன்னதுபோலத்தான் நடந்தது. அன்றைக்கு அவனது பிறந்த நாள். அவன் எழுவதற்கு முன்னால், தான் எழுந்து குளித்து, வழக்கமான சமையலுக்கு மேலே ஏதாவதொரு இனிப்புப் பண்டம் செய்துவிட வேண்டும் என்று அம்மா மும்முரமாக அடுக்களையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். ஏழு மணிக்கு நான் கண் விழித்துப் பார்த்தபோது அப்பா வெளியே போய்விட்டிருந்தார். வினய்யும் வினோத்தும் ஒரே போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்தார்கள். வழக்கத்துக்கு மாறாக அண்ணா ஏன் இன்றைக்குத் தலையோடு காலாகப் போர்த்திக்கொண்டு உறங்குகிறான் என்று நான்தான் அவன் போர்வையை விலக்கிப் பார்த்தேன். அண்ணா அங்கில்லை. இரண்டு தலையணைகளை ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்து, அதற்குத்தான் தன் போர்வையை அவன் போர்த்திவிட்டிருந்தான்.

அப்போது எனக்கு வித்தியாசமாக ஏதும் தெரியவில்லை. எழுந்து பின்புறம் சென்று பல் துலக்கி, முகம் கழுவிக்கொண்டு அடுக்களைக்குச் சென்று அம்மாவிடம் காப்பி கேட்டேன். வாங்கிக் குடித்துவிட்டு, வாணலியில் வறுபட்டுக்கொண்டிருந்த முந்திரிகளைப் பார்த்தேன். அதன் நறுமணத்தைச் சிறிது அனுபவித்துவிட்டு, ‘எதுக்கு ஸ்வீட்?’ என்று கேட்டேன்.

‘விஜய்க்கு கேசரிதானே பிடிக்கும்? அதான்’ என்று அம்மா சொன்னாள். பொட்டிலடித்தாற்போல் இருந்தது. ஒரு பாய்ச்சலில் மீண்டும் வந்து படுக்கையைப் பார்த்தேன். கொல்லைப்புறம், வாசல், அல்லிக் குளம், வசந்த மண்டபம் என்று கால் போன திக்கெல்லாம் ஓடி ஓடித் தேடிக் களைத்து வீடு திரும்பியபோது ‘எங்கடா போயிட்டே நீ? விஜய் எப்ப எழுந்தான்? காலங்கார்த்தால அவனையும் காணோம். காப்பிகூட சாப்டாம எங்க போய்த் தொலைஞ்சான்னே தெரியல’ என்று அம்மா சொன்னாள்.

எனக்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. நான் அழுதால் அம்மா பதறிவிடுவாள். அண்ணா வீட்டை விட்டுப் போய்விட்டான் என்று நான் சொல்லவேண்டி வரும். அப்பாவும் அம்மாவும் கேசவன் மாமாவும் மாற்றி மாற்றி என்னைக் கேள்வி கேட்டுத் துளைப்பார்கள். எனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிடலாம்தான். ஆனால் அப்போதிருந்த மனநிலையில் என்னால் ஒரு சொல்கூடப் பேச முடியாது போலிருந்தது. உடல் முழுதும் உதறிக்கொண்டிருந்தது. விளையாட்டுப்போல அவன் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டு, ரகசியம் காத்தது எத்தனை பெரிய தவறாகிவிட்டது!

ஒன்றுமே பேசாமல் நான் வீட்டுக்குள் போய்விட்டேன். அம்மா வினயை அழைத்து அண்ணா எங்கே போனான் என்று பார்த்துவரச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவன் சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டபோதுதான், அப்பா வேகவேகமாக வீட்டுக்கு வந்து சஞ்சய் காந்தி இறந்துவிட்டதாக அம்மாவிடம் சொன்னார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com