12. போனவன்

விக்கிரக சம்பவத்துக்குப் பிறகு என் எண்ணம் சற்று மாறித்தான் இருந்தது. ஆனாலும் ஏனோ திரும்பத் திரும்ப அம்மாதிரியான அற்புதங்கள் ஏதாவது நடக்குமா என்று எதிர்பார்த்தே அவனோடு சுற்றிக்கொண்டிருந்தேன்.

என்னால் அதை அன்றைக்கு நம்ப முடியவில்லை. இன்றுவரை அண்ணாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம், எனக்கு அப்பத்தில் இருந்து விக்கிரகங்கள் விழுந்த காட்சி நினைவில் வராதிருப்பதில்லை. அவன் சில சித்து வேலைகள் அறிந்துவைத்திருந்தான் என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன். ஆனால் எப்போதும் புரியாத விஷயம், யாரிடமிருந்து அவன் அதையெல்லாம் கற்றான் என்பதுதான். அடிக்கடி சவுக்குக் காட்டுக்கு அவன் தனியாகச் சென்று சில பயிற்சிகள் செய்வது, வீட்டிலேயே இரவுப் பொழுதுகளில் எழுந்து சென்று பின்புறம் அமர்ந்து தியானம் செய்வது, ரகசியமாகச் சில புத்தகங்களைப் படிப்பது, சுவடி வைத்திருப்பது இதெல்லாம் என் சிறு வயதுகளில் அவன் மீதான ஆர்வம் தூண்டக்கூடிய அம்சங்களாக விளங்கின. ஒரு துப்பறியும் கதைப் புத்தகம் அளிக்கக்கூடிய ஆர்வம். ஒரு சாகசக் காட்சியைக் கண்டுகளிக்கிற ஆர்வம். குளத்துக்கு அடியில் முனிவர்களைக் காண்பதாக அவன் சொல்லும்போதெல்லாம், மனத்துக்குள் அதனை ஒரு காட்சியாக விரித்துவைத்து முனிவர்கள் நிறைந்த சபையொன்றில் அண்ணா அவர்களோடு உரையாடிக்கொண்டிருப்பதுபோல எண்ணிப்பார்ப்பது எனக்கு அப்போது பிடித்திருந்தது. பிடிமானம் ஏதுமின்றி, பாறையின் மீது அவன் சிரசாசனம் செய்தபோது, ஒரு சர்க்கஸ் காட்சியைக் காணுகிற உணர்வுதான் அன்றைக்கு எனக்கு இருந்திருக்க வேண்டும். அவனோடு இருந்த தருணங்களை சிறந்த பொழுதுபோக்கு அனுபவங்களாகவே நான் உள்வாங்கியிருக்கிறேன் என்பது எனக்குப் பிறகுதான் புரிந்தது. சரியாகச் சொல்லுவதென்றால், அப்பத்தில் இருந்து விக்கிரகங்கள் விழுந்தபோது.

அன்று எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. தானொரு மந்திரவாதி இல்லை என்றுதான் அவன் சொன்னான். ‘அப்ப நீ சித்தரா?’ என்று கேட்டதற்கு, ‘அதெல்லாம் ரொம்பப் பெரிய வார்த்தை. நான் அதெல்லாம் இல்லை’ என்று பதில் சொன்னான். ‘அப்ப நீ யாரு?’ என்று கதறியேவிட்டேன்.

‘அதுதான் கேள்வி. கண்டுபிடிச்சிட்டு சொல்றேன்’ என்று சொன்னான். எனக்கு அது முற்றிலும் புரியவேயில்லை.

‘எனக்கு அதெல்லாம் வேண்டாம். அப்பத்துலேருந்து எப்படி விக்கிரகம் எடுத்தே? அதை மட்டும் சொல்லு’ என்று விடாப்பிடியாகக் கேட்டேன். அவன் புன்னகை செய்தான்.

‘நீ சொல்லாம விடமாட்டேண்டா. இப்ப நீ சொல்லலைன்னா நிச்சயமா நான் இதை அம்மாகிட்ட சொல்லிடுவேன்’ என்றும் சொன்னேன்.

‘விமல், உன்னை ஒண்ணு கேக்கறேன். பதில் சொல்லு. அப்பாக்கு என்ன சம்பளம்?’

‘தெரியாதே.’

‘சரி, நான் சொல்றேன். ரெண்டாயிரத்து முந்நூறு.’

‘சரி.’

‘மாசக் கடைசி ஆனா செலவுக்குப் பணமில்லேன்னு எல்லா மாசமும் புலம்பறாரா இல்லியா?’

‘ஆமா.’

‘அப்ப ஆத்துல என்ன நடக்கறது?’

‘என்ன நடக்கறது?’

‘திட்டிண்டோ, முணுமுணுத்துண்டோ அம்மா உள்ளேருந்து பணம் எடுத்துண்டு வந்து குடுக்கறா. அப்பப்ப பிரச்னை தீந்துபோயிடறது. இல்லியா?’

‘ஆமா.’

‘அப்பா மட்டும் சம்பாதிக்கற இடத்துல அம்மாகிட்ட எப்படி ரகசியமா பணம் இருக்கு? அதுவும் அப்பா சம்பாத்தியம்தானே?’

‘ஆமா.’

‘ஆனா அம்மா தன்கிட்ட குடுக்கற காசுல கொஞ்சத்த எடுத்து தனியா டப்பால போட்டு வெக்கறா. சுத்தமா பணம் தீர்ந்துபோகும்போது எடுத்துத் தரா.’

‘ஆமா. சிறுசேமிப்பு. ஸ்கூல்ல சொல்லிக் குடுத்திருக்கா.’

‘இது அந்த மாதிரிதான். விக்ரகமோ, வேற ஒண்ணோ. எடுத்து ஒரு இடத்துல போட்டு வெச்சிடறது. தேவைப்படறப்ப அதை இன்னொரு இடத்துலேருந்து எடுத்துக் காட்றது.’

‘இல்லே. இது அது இல்லே. அம்மா அடுக்களைல உளுத்தம்பருப்பு டப்பாலதான் பணம் போட்டு வெக்கறா. அங்க போய்தான் எடுத்துண்டு வந்து குடுக்கறா. அடுக்களைல வெச்ச பணத்த அப்பா சட்டைப்பைலேருந்து எடுத்துத் தந்தாத்தான் நீ சொல்றது பொருந்தும்.’

அவன் சிரித்தான். ‘சரியாத்தான் சொல்றே. அடுக்களைல வெச்சத, அடுக்களைலேருந்தே எடுக்கறது எல்லாரும் பண்றது. அதை அப்பா சட்டைப் பையிலேருந்து எடுக்கறதுதான் வித்தை. அதைத்தான் நான் கத்துக்கறேன்.’

‘வித்தைன்னா மேஜிக்தானே?’

உண்மையில் எனக்குப் புரியவைக்க வேண்டும் என்றெல்லாம் அவன் அன்று விரும்பியதாகத் தெரியவில்லை. ஆனால் நான் விடாமல் நச்சரித்துக்கொண்டே இருந்தேன். ஏனென்றால் அந்த விக்கிரகம் விழுந்த கணத்தில் நான் அடைந்த அதிர்ச்சியும் வியப்பும் ஒரு முழு வாழ்நாளுக்குமானது. யாரோ ஒரு சித்தர் அதைச் செய்தபோது எனக்கு வியப்பு மட்டும்தான் இருந்தது. பெரிய மகான் என்று நினைத்துக்கொண்டேன். அதையே என் அண்ணா செய்தபோது இவன் ஏதோ தந்திரம் செய்கிறான் என்று தோன்றியது. ஆனால் தந்திரமே என்றாலும் ஒரு கிருஷ்ணர் விக்கிரகம் விழுந்தது சரி. எப்படி நான் கேட்டதும் ஒரு பிள்ளையார் விக்கிரகமும் விழுந்தது?

அவன் மீண்டும் சிரித்தான். ‘கிருஷ்ணர் விக்கிரகத்த நான் காட்டினதும் நீ அடுத்தபடியா அதைத்தான் கேப்பேன்னு எனக்குத் தெரியும். ஏன்னா அன்னிக்கு சித்தர் வந்தப்போ நான் அவரை மடக்கினத நீ கவனிச்சிண்டிருந்தே.’

‘ஆமா, ஆமா’ என்றேன். ‘அவரால ஏன் அன்னிக்கு பெருமாள் விக்கிரகம் எடுக்க முடியலை?’

‘ஏன்னா அவர் சேத்து வெச்ச விக்கிரகங்கள்ல பெருமாள் விக்கிரகம் இல்லை. அன்னிக்கு அவரால பிள்ளையார் விக்கிரகம் மட்டும்தான் முடிஞ்சது. அன்னிக்கு சாயந்திரமே அவர் பெருமாள் விக்கிரகம், லஷ்மி விக்ரகம், சிவலிங்கம்னு நாலஞ்சு விதமா வாங்கி ஸ்டாக் வெச்சிருப்பார்.’

‘ஐயோ எனக்குப் புரியவேயில்லைடா’ என்று சொன்னேன்.

மேற்கொண்டு அவன் விளக்கம் சொல்லவில்லை. ஆனால், ‘புரிய வெப்பேன். கொஞ்ச நாளாகும் அதுக்கு. ஆனா அதுவரைக்கும் ஆத்துல யார்ட்டயும் நீ இதையெல்லாம் சொல்லக் கூடாது. சொன்னேன்னா...’

அந்த வரி இல்லாமல் அவன் எந்த ஒரு உரையாடலையும் நிறைவு செய்ததில்லை.

‘ஆனா, மாமா பிடுங்கிப் போடலேன்னா விக்கிரகத்த எடுத்து அம்மாட்டயே குடுத்திருப்பேன்னு சொன்னியே? அப்ப மட்டும் தெரிஞ்சிடாதா?’ என்று கேட்டேன்.

அவன் சட்டென அமைதியாகிவிட்டான். வெகுநேரம் யோசித்துக்கொண்டே இருந்தான். பதில் வரட்டும் என்று நான் காத்திருந்தேன். அன்றைக்கு அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. அடுத்த நாளோ, அதற்கும் மறுநாளோகூட சொல்லவில்லை. அந்தச் சம்பவம் நடந்த நான்காம் நாள் அவன் என்னைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றான். தாயார் சன்னிதியில் நாங்கள் அமர்ந்திருந்தோம். சேவிக்க வந்த யாருக்காகவோ சன்னிதியைத் திறந்து கற்பூரம் காட்டி, ஒரு சிட்டிகை குங்குமம் கொடுத்துவிட்டு, பட்டர் மீண்டும் சன்னிதியைப் பூட்டிக்கொண்டு போய்விட்டார்.

இப்போதைக்கு அவரோ வேறு யாருமோ அங்கு வரப்போவதில்லை என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டு அண்ணா சொன்னான், ‘என் மனசுல அப்படி பட்டுது விமல். அன்னிக்கு நான் என்னவாகப்போறேன், எங்கே போகப்போறேன்னு அம்மாக்கு குறிப்பா புரியவெச்சிடலான்னு தோணித்து. என்னிக்கோ ஒருநாள் எப்படியோ தெரியப்போறதை நானே சுட்டிக்காட்டிடலாம்னு நினைச்சேன்.’

‘என்ன தெரியப்போறது? நீ சித்தர் ஆயிடுவேன்னா?’

அவன் இல்லை என்று திடமாகத் தலையசைத்தான்.

‘பின்னே?’

‘சித்தெல்லாம் ஒண்ணுமில்லே. நான் தேடறது வேற.’

‘எனக்கு நீ பேசறதெல்லாம் புரியலடா. ஆனா பயம்மா இருக்கு. எதுக்கும் நீ அம்மாட்ட சொல்லிடேன்? சொல்லாம இதெல்லாம் பண்ணாதடா’ என்று சொன்னேன். அவன் நெடுநேரம் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பிறகு, ‘அன்னிக்கு என்னமோ சொல்லிடணும், இல்லேன்னா தெரியப்படுத்திடணும்னு தோணித்து. அப்பறம் வேணாம்னு பட்டுடுத்து.’

‘ஏண்டா?' நான் அதிர்ந்துபோயிருந்தேன்’

‘தெரியலே. அவளுக்கே தெரிஞ்சத நாம ஏன் கிளறிக்காட்டணும்னு தோணிடுத்து’ என்று சொன்னான்.

கடைசிவரை அண்ணா தீர்மானமாக இருந்தான். அவன் வீட்டை விட்டுப் போகத்தான் போகிறான் என்பது அம்மாவுக்குத் தெரியும் என்று அதன்பின்பும் நாலைந்து முறை என்னிடம் சொல்லியிருக்கிறான். ஏனோ எனக்குத்தான் அதைச் சரியான பொருளில் உள்வாங்க அன்றைக்குத் திறனில்லாது இருந்தது. சொன்னேனே. எனக்கான பொழுதுபோக்கு அமானுஷ்யக் கதையை ஒரு நிகழ்கலையாக அவன் நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருந்ததாகவே எண்ணியிருக்கிறேன். விக்கிரக சம்பவத்துக்குப் பிறகு என் எண்ணம் சற்று மாறித்தான் இருந்தது. ஆனாலும் ஏனோ திரும்பத் திரும்ப அம்மாதிரியான அற்புதங்கள் ஏதாவது நடக்குமா என்று எதிர்பார்த்தே அவனோடு சுற்றிக்கொண்டிருந்தேன்.

அவன் இல்லாமல்போன தினத்தன்றுதான் என் பிழை எனக்குப் புரிந்தது. நான் வீட்டில் அவனைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும். அல்லது அவனிடமாவது முழுதும் கேட்டறிந்திருக்க வேண்டும். ஒரு கதையாக, கனவாக எண்ணிப் பார்க்கப் பரவசம் தருகிற எல்லாம் உண்மையில் எத்தனை வீரியமுடன் தாக்கக்கூடியது என்பதை அன்றுதான் அறிந்தேன்.

அப்பா குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்தார். கேசவன் மாமா முற்றத்துத் தூணில் முட்டிக்கொண்டு அழுதார். வினய்யும் வினோத்தும் பிரமை பிடித்தாற்போலாகிவிட்டார்கள். மாமாதான் சத்தம் போட்டார், ‘ஏண்டா இங்க நிக்கறிங்க? போய்த் தேடுங்களேன்? அவன் எங்க போனான்னு பாருங்களேன்!’

காத்திருந்தாற்போல், அண்ணாவின் சைக்கிளை வினய் எடுத்துக்கொண்டு கிளம்ப, வினோத் பின்னால் ஏறிக்கொண்டான். திருவிடந்தை முழுவதும் சுற்றித் தேடிவிட்டு, கோவளம், கேளம்பாக்கம், தையூர் வரை போய் அண்ணாவின் வகுப்பில் படிக்கிற பையன்களையெல்லாம் பார்த்து விசாரித்துவிட்டு, அவர்கள் பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். யாருக்குமே அவனைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. மாமா செங்கல்பட்டில் இருந்து நாவலூர் வரை போகும் காண்டீபன் பஸ் சர்வீஸின் முதலாளியை நேரில் சென்று பார்த்து விவரம் சொல்லி, அந்த கம்பெனியின் அனைத்து கண்டக்டர்களையும் கூப்பிட்டு விசாரித்திருக்கிறார். ஒரு பையன். பதினெட்டு வயதுப் பையன். நெடுநெடுவென்று ஒல்லியாக, உயரமாக இருப்பான். இரு புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைத்தாற்போலக் கறுப்பாக ஒரு மச்சம் இருக்கும். அவனை யாராவது பஸ்ஸில் பார்த்தார்களா? எங்கே போய் இறங்கினான் என்று தெரியுமா?

கண்டக்டர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே, கேசவன் மாமா கோவளம் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு புகார் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார்.

அன்றைக்கு முழுவதும் வீடு ரணகளப்பட்டது. அப்பா நினைத்து நினைத்து அழுதுகொண்டிருந்தார். திடீர் திடீரென்று ஆவேசம் வந்தாற்போல உரத்த குரலில் கத்தினார். பூஜையறைக்குச் சென்று சுவாமி படங்களையெல்லாம் விசிறியடித்தார். ‘நீயெல்லாம் ஒரு தெய்வமா? ஒழி. எங்கயாவது போயிடு. இனிமே என் வீட்ல ஒனக்கு இடமில்லே’ என்று திட்டினார். திருவிடந்தை முழுதும் விஷயம் தெரிந்து யார் யாரோ வீட்டு வாசலுக்கு வந்து விசாரித்துவிட்டுப் போனார்கள். கேசவன் மாமாதான் அவர்களையெல்லாம் சமாளித்து அனுப்பிக்கொண்டிருந்தார்.

அம்மா அடுக்களையைவிட்டு வெளியே வரவேயில்லை. அண்ணா வீட்டை விட்டுப் போய்விட்டான் என்பது தெரிந்த கணம் அதிர்ந்துபோய் உட்கார்ந்தவள்தான். அவள் எழுந்திருக்கவேயில்லை அங்கிருந்து. யாருடனும் பேசவும் இல்லை.

எனக்கு பயமும் பதற்றமும் சம விகிதத்தில் உடலெங்கும் பரவி நிறைந்திருந்தது. பரண் மீது ஏறி அந்த நாடிச் சுவடியை எடுத்துக் காட்டிவிட்டால், எல்லோருக்கும் எல்லாம் புரிந்துவிடும். ஆனால் அதைச் செய்வதற்கு எனக்குத் துணிவு வரவில்லை. அப்பாவின் முழுக் கோபமும் என் மீது திரும்பிவிடும் என்று நினைத்தேன். இன்னொன்றும் நான் செய்திருக்கலாம். சுவடிகூட அவசியமில்லை. அன்றைக்கு அப்பத்தில் இருந்து அண்ணா எடுத்துக் காட்டிய கிருஷ்ணர் விக்கிரகம், பிள்ளையார் விக்கிரகம் இரண்டையும் நான் பத்திரமாக என்னுடைய புத்தகப் பைக்குள்தான் பொட்டலம் கட்டி வைத்திருந்தேன். அதைக் காட்டி அன்றைக்கு நடந்ததைச் சொன்னால்கூடப் போதும்.

கடைசிவரை நான் அந்த இரண்டையும் செய்யவேயில்லை. கவனமாக, விக்கிரகங்களை மட்டும் எடுத்துச்சென்று அல்லிக் குளத்தில் வீசிவிட்டு, மானசீகமாக அம்மாவின் மடியில் படுத்து அரை மணி நேரம் அழுதேன். பிறகு அண்ணா நிச்சயம் ஒருநாள் திரும்பி வருவான் என்று நினைத்துக்கொண்டு, வரும்போது அவன் எப்பேர்ப்பட்ட ரிஷியாகியிருப்பான், என்னெல்லாம் வித்தைகள் கற்றுத் தேர்ந்திருப்பான், ஊரைக் கூட்டி அவனைக் காண்பித்து அம்மா எப்படியெல்லாம் பரவசப்படுவாள் என்று கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com