20. படக்கதை

இப்படியெல்லாம் வாயைத் திறந்து ஒருவனால் அசிங்க அசிங்கமாகப் பேசிவிட முடியுமா! இது கொலையைவிடப் பெரும் பாவமல்லவா! ஏழேழு ஜென்மத்துக்கும் நரகம்தான், சந்தேகமில்லை.

நான் ‘நீயா’ திரைப்படம் பார்த்ததில்லை. வினய்யும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. கேளம்பாக்கம் ராஜலட்சுமியில் ஒரு வெள்ளிக்கிழமை மாலைக் காட்சியாகத் திரையிடப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலைக் காட்சியுடன் எடுத்துவிட்டார்கள். ஆனால் அந்தப் படத்தில் நடித்த ஸ்ரீப்ரியாவின் அந்தப் புகைப்படம் மிகவும் பிரபலமானது. நாகங்கள் யாவும் அவரைப் பார்த்துத்தான் நெளியக் கற்றுக்கொண்டன என்று நினைக்கத் தூண்டும் அளவுக்குத் தத்ரூபமாக இருக்கும். பல பத்திரிகைகளில் வெளிவந்தது. சுவரொட்டிகளிலும் கண்டிருக்கிறேன். வினய்க்கு எங்கிருந்து அந்தப் புகைப்படம் கிடைத்திருக்கும் என்று யோசித்தேன். தவிர, அந்தப் படத்தை ஒரு தாயார் படத்துடன் சேர்த்துவைத்து சிந்திக்குமளவுக்கு என்ன பிரச்னை ஆயிருக்கும் என்பதும் புரியவில்லை.

‘யோசிச்சிப் பாருடா விமல். ரெண்டும் பொம்மனாட்டி போட்டோ. ஒண்ணு தெய்வம். இன்னொண்ணு மனுஷி. ஆனா போட்டோல ரெண்டும் ஒண்ணுதான்.’

‘சரி’

‘லட்சுமி படத்த பாத்தா தொட்டு கண்ணுல ஒத்திக்கறோம். ஸ்ரீப்ரியா படத்துல மட்டும் ஏன் கண்ணு மார் மேலயே நிக்கறது?’

எனக்குக் கூச்சமாக இருந்தது. பெண்களின் ஒரு சில அங்கங்களை நான் சில காலம் முன்னதாகத்தான் ரசிக்க ஆரம்பித்திருந்தேன். எப்போது அந்தப் பழக்கம் ஏற்பட்டது என்று சரியாக நினைவில்லை. ஆனால் பள்ளிக்கூடத்தில், கோயிலில், சாலையில் போகிற என் வயதுப் பெண்கள் யாரைக் கண்டாலும் உற்று நோக்க ஆரம்பித்திருந்தேன். கண்ணைத்தான் பார்ப்பேன். என்னையறியாமல் பார்வை சரிந்து நெஞ்சில் வந்து நிலைத்துவிடும். இது பாவம், இது நரகத்துக்கு இட்டுச் செல்லக்கூடியது என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். ஆனாலும் பார்க்காதிருந்ததில்லை. பார்த்த மார்புகளைத் தனியே வந்து அமர்ந்து சிந்திக்காதிருந்ததில்லை. அது ஒரு அழகிய திருட்டுத்தனம். அற்புதமான சண்டாளத்தனம். அம்மாவுக்குத் தெரியாமல் அந்த வயதில் நான் செய்துகொண்டிருந்த காரியம் அது ஒன்றுதான். இஷ்டப்பட்டுத்தான் செய்தேன். பிறகு செய்ததை எண்ணி வருந்தி அழுதும் இருக்கிறேன். ஆனாலும் அடுத்தப் பெண்ணைப் பார்க்கும்போது பார்வை நெஞ்சில் இறங்கி நிற்காதிருந்ததில்லை.

ஆனால், வினய் எப்படி இதைப்போய் பட்டவர்த்தனமாகப் பேசுகிறான்? அதுவும் தம்பியிடம் யாராவது இதையெல்லாம் பேசுவார்களா? எனக்கு அவன் அதைச் சொன்னதைவிட, சொன்ன தொனி விநோதமாகப் பட்டது. நாளெல்லாம் முலைகளின் மீதே படுத்துப் புரண்டெழும் வழக்கம் கொண்டவனின் அலட்சியத் தொனி. இதெல்லாம் பெரிய விஷயமா என்பதைப்போல. எனக்கு அவன் அப்படிக் கேட்டது ஓர் அதிர்ச்சி என்றால், என் பதிலை அவன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது இன்னும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

‘சொல்லு விமல். ஸ்ரீப்ரியா படத்துல நீ மாரைத்தானே பாக்கறே? லட்சுமி படத்துல மட்டும் ஏன் கண்ணைப் பார்த்துட்டு உடனே பாதத்தைப் பார்க்கறே?’

‘ஏன்னா அது காட்.’

‘நான் சொல்றேன், ரெண்டுமே வெறும் போட்டோ. ரெண்டுமே கேர்ள்ஸ். அப்பறம் என்ன?’

‘எனக்கு நீ பேசறது பிடிக்கலை. நான் ஆத்துக்குப் போறேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போய்விட்டேன். அவன் பீடி குடிப்பவன். நடிகைகளின் புகைப்படங்களைத் திருட்டுத்தனமாக வைத்துப் பார்த்து ரசிப்பவன். யாருக்கும் தெரியாமல் இன்னும் வேறென்னென்ன பழக்கங்கள் அவனுக்கு இருக்குமோ என்று பயமாக இருந்தது. அம்மாவுக்கு இதெல்லாம் தெரிந்தால் செத்தே போய்விடுவாள் என்று தோன்றியது.

நாலைந்து தினங்கள் கழித்து ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்குப் போகிற வழியில் சொன்னேன், ‘வினய், அண்ணா காணாம போனப்பறம் அம்மா உன்னைத்தான் ரொம்ப நம்பிண்டிருக்கா. தப்பு வழியில மட்டும் போயிடாதடா.’

அவன் சிரித்தான். ‘மார பாக்கறது தப்புன்னா, பகவான் ஏன் அதைப் பொம்மனாட்டிகளுக்குக் குடுத்தான்?’ என்று கேட்டான்.

‘ஏன் குடுத்தான்?’

‘அதுதான் அவன் சாமர்த்தியம்! நமக்கு அவன் வெக்கற டெஸ்ட்.’

‘என்ன டெஸ்ட்?’

‘மாரைப் பாக்கறப்போ உனக்கு அதுக்குள்ள இருக்கற எலும்பும் சதையும் தெரியறதான்னு யோசி. அது தெரிஞ்சிடுத்துன்னா, மார பாக்கறப்போ உன் குஞ்சு எழுந்துக்காது.’

எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. இது நான் சற்றும் எதிர்பாராதது. இப்படியெல்லாம் வாயைத் திறந்து ஒருவனால் அசிங்க அசிங்கமாகப் பேசிவிட முடியுமா! இது கொலையைவிடப் பெரும் பாவமல்லவா! ஏழேழு ஜென்மத்துக்கும் நரகம்தான், சந்தேகமில்லை.

அதற்குமேல் எனக்கு அவனோடு பேச இஷ்டமில்லாமல் போய்விட்டது. வேகவேகமாக நடையை எட்டிப் போட்டு முன்னால் போய்விட்டேன். மதிய உணவு இடைவேளையின்போது வினோத்தை அவன் வகுப்புக்குப் போய்ப் பார்த்தேன். ‘உன்கிட்ட ஒண்ணு பேசணும், வா’ என்று தனியே மைதானத்துக்கு அழைத்துச் சென்று, ‘வினய் சரியா இல்ல. அசிங்க அசிங்கமா பேசறான். கெட்டத்தனம் நிறைய பண்றான் போலருக்கு’ என்று சொன்னேன்.

நான் அவ்வளவுதான் சொன்னேன். ஆனால் மாலை நான் விளையாடிவிட்டு வீடு போய்ச் சேர்வதற்குள் அவன் அம்மாவிடம் நான் சொன்னதைத் தெரியப்படுத்திவிட்டிருந்தான். அம்மா எனக்குக் காப்பியைக் கொடுத்து, குடித்து முடிக்கும்வரை அமைதியாக இருந்தாள். நான் தம்ளரை வைத்துவிட்டுக் கிளம்பியதும், ‘வினயைப் பத்தி எதோ சொன்னியாமே? என்ன?’ என்று கேட்டாள்.

எனக்கு உண்மையிலேயே மிகவும் அச்சமாகிவிட்டது. நான் ஏன் அதை வினோத்திடம் சொன்னேன் என்று வருந்தினேன். உண்மையில் அம்மாவை மனம் வருந்தச் செய்யும் எதையுமே செய்யக் கூடாது என்று எண்ணியிருந்தேன்.

‘சொல்லு விமல். வினய் என்ன பண்ணான்?’ அம்மா விடாமல் கேட்டாள்.

‘இல்லேம்மா. அவன் நடிகை படமெல்லாம் வெச்சிண்டிருக்கான்’ என்று தட்டுத்தடுமாறி, கேட்ட மரியாதைக்கு ஒரு பதிலைச் சொல்லி வைத்தேன்.

‘நடிகை படமா? யாரோட படம்டா?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘ஸ்ரீப்ரியா.’

‘அட! பய நம்மள மாதிரி டேஸ்ட் உள்ளவனா! சர்தான். எனக்கும் அவள ரொம்பப் பிடிக்கும்க்கா’ என்று மாமா சொன்னார்.

‘போதுமே? ஆன வயசுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்’ என்று சிடுசிடுத்துவிட்டு, என்னை மட்டும் சமையல் கட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

‘நடிகை படம் வெச்சுக்கறதெல்லாம் தப்பில்லேடா விமல். அவன் வயசு வரும்போது உனக்கும் யார் போட்டோவாவது வெச்சுக்கலாம்னு தோணும். அதெல்லாம் தப்பே இல்லே.’

இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தது. அம்மா இப்படிப் பேசுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நான் அவனைப் போன்றவனில்லை என்று அவளுக்குப் புரியவைத்துவிட விரும்பினேன்.

‘எனக்கு அப்படி ஒரு போட்டோ வெச்சுக்கணும்னு தோணித்துன்னா நான் உன் போட்டோவத்தான் வெச்சுப்பேன்’ என்று சொன்னேன்.

அம்மா சிரித்தாள். என்னை அப்படியே வாரி அணைத்துக்கொண்டு உச்சந்தலையில் முத்தமிட்டாள். ‘என் கண்ணு. உன்கிட்ட அம்மா போட்டோ இருக்கா?’

‘இல்லை. ஆனா அப்பா பொட்டியிலே, ஆல்பத்துல இருக்கு. அத பிச்சி எடுத்துண்டுடுவேன்’ என்று சொன்னேன்.

‘ரொம்ப வருஷம் முன்னாடி அதே கல்யாண ஆல்பத்துலேருந்து ஒரு போட்டோவ விஜய் பிச்சி வெச்சிண்டிருந்தான். அத எங்க போட்டானோ தெரியலே.’

நான் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் அழுவதுபோலத் தெரிந்தது. ஆனால் முகம் கோணாமல், குரல் உடையாமல், கண்ணீரை வெளியே சிந்தாமல் அழ முடியுமா என்று தெரியவில்லை. ஒரு கணம் யோசித்தேன். சட்டென்று அறைக்குள் ஓடி, அண்ணாவின் புத்தக அடுக்கைக் கலைத்துப்போட்டு வேகவேகமாகத் தேடினேன். அவனிடம் அம்மாவின் அந்தப் போட்டோ இருந்தது எனக்குத் தெரியும். ஆனால் அடிக்கடி எடுத்துப் பார்ப்பதெல்லாம் கிடையாது. என்றைக்கோ தோன்றி, ஆல்பத்தில் இருந்து எடுத்து வைத்திருக்கிறான். பிறகு எடுத்ததையே மறந்திருப்பான் என்று தோன்றியது.

ஐந்து நிமிடங்கள் அவனது அனைத்துப் புத்தகங்களையும் புரட்டிக் கவிழ்த்து ஒரு வழியாக அந்தப் போட்டோவைக் கண்டுபிடித்துவிட்டேன். ‘அம்மா, கிடைச்சுடுத்து’ என்று கத்திக்கொண்டே அடுக்களைக்குள் அதை எடுத்துக்கொண்டு ஓடினேன்.

‘என்னதுடா?’

‘அண்ணா எடுத்து வெச்சிருந்த போட்டோ’ என்று அவளிடம் நீட்டினேன்.

ஒரு கணம்தான். அம்மாவின் முகம் குப்பென்று பூரித்துப்போனது. நெடுநேரம் அந்தப் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அது அம்மாவின் திருமணத்தன்று எடுத்த கறுப்பு வெள்ளைப் புகைப்படம். அம்மா குனிந்து நின்றிருக்க, அப்பா அவள் காலில் மெட்டி அணிவித்துக்கொண்டிருப்பார். உறவுக்கார ஜனம் சுற்றி நின்றிருக்கும். அண்ணாவுக்கு மொத்தப் படங்களில் அந்த ஒரு போட்டோ மட்டும் ஏன் பிடித்தது என்று தெரியவில்லை. அத்தனை ஒன்றும் சிறப்பாக எடுக்கப்பட்ட படமும் அல்ல. என்னமோ அவனுக்குத் தோன்றியிருக்கிறது. கவர்ந்திருக்கிறது.

அம்மா கண்ணைத் துடைத்துக்கொண்டாள். ‘இந்தா, உள்ள கொண்டுபோய் வை’ என்று என்னிடம் திருப்பிக் கொடுத்தாள்.

அப்போதுதான் போட்டோவின் பின்பக்கம் அண்ணா பென்சிலால் ஏதோ எழுதியிருப்பதை நானே பார்த்தேன்.

‘குடு அதை’ என்று அம்மா மீண்டும் வாங்கி, எழுதியிருந்ததைப் படித்தாள். அண்ணாவின் கையெழுத்துத்தான். நிறுத்தி, நிதானமாக, மிகச் சரியாகத்தான் எழுதியிருந்தான்.

‘ஒரு கடமைக்காக ஒருநாள் வருவேன்.’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com