19. நீயா

சட்டை பாக்கெட்டில் இருந்து இரண்டு புகைப்படங்களை எடுத்துக் கீழே வைத்தான். ஒன்று, மகாலட்சுமித் தாயாரின் படம். இன்னொன்று, ‘நீயா’ திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை ஸ்ரீப்ரியாவின் அரை நிர்வாணப் புகைப்படம்.

சினிமாக்காரர்கள் வந்திருக்கிறார்கள் என்று வினோத் வந்து சொன்னான். உடனே என்ன படம் என்று வினய் கேட்டான்.

‘தெரியலடா. தனாவ பாக்கறதுக்காக அகரம்பட்டு போனேன். வர வழில பாத்தேன். ரோடோரம் நிறைய ரிஃப்ளெக்டர் வெச்சிருந்தது’ என்று வினோத் சொன்னான்.

திருவிடந்தையில் தினமும் படப்பிடிப்புகள் இருக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று எந்த மொழிப் படமாகவும் இருக்கும். கடலை ஒட்டிய சவுக்குக் காடுகளும், கோயிலை அடுத்த பெரிய குளமும் சினிமாக்காரர்களுக்கு மிகவும் விருப்பமான இடங்கள். ஊரில் வேறு எந்த இடமும் அவர்களுக்குப் பொருட்டில்லை. அந்த இரண்டே இரண்டு இடங்கள் போதும். நீண்ட கோள வடிவில் ஒரு குளத்தை வேறு எந்த ஊரிலும் பார்க்க முடியாது. அதுவும் புதையப் புதிய மணல் சரிவுகளை அரணாகக் கொண்ட குளம். படிக்கட்டுகளோ, தடுப்புச் சுவர்களோ அந்தக் குளத்துக்குக் கிடையாது. மணலில் கால் புதைய நடந்துகொண்டே போனால், சட்டென்று ஓரிடத்தில் குளம் நிறுத்தும். என்னைச் சுற்றிக்கொண்டு போ என்று சொல்லும். தரைத் தளத்துக்குப் பத்தடி ஆழத்தில் அலையடிக்கிற குளம். உள்ளே இன்னமும் ரிஷிகள் தவத்தில் இருப்பதை அண்ணா போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறான். ஆனால் அது எனக்கு மட்டுமே தெரிந்த சங்கதி. சினிமாக்காரர்களுக்குக் குளத்தில் மேலே படர்ந்து மலர்ந்திருக்கும் அல்லிப் பூக்கள்தான் வசீகரம். எங்கிருந்தோ ஓடி வரும் கதாநாயகி கரையின் விளிம்பில் சட்டென்று படுத்துக்கொண்டு உருளத் தொடங்கினால் மணல் சரிவில் அவள் கீழே இறங்கி நீர்ப்பரப்பின் விளிம்பைத் தொடப் பதினைந்து விநாடிகள் பிடிக்கும். உருண்டு வரும் கதாநாயகியின் பிம்பம் நீரில் சுருண்டு எழும். நூற்றுக்கணக்கான பாடல் காட்சிகளில் நீங்கள் இதனைப் பார்த்திருக்கலாம். பாரத தேசத்தில் வேறெந்தக் குளக்கரையிலும் இப்படி ஒரு காட்சியைப் படம் பிடிக்க முடியாது. அந்நாள்களில் திருவிடந்தையில் நித்ய கல்யாணப் பெருமாள்தான் பிரபலமில்லையே தவிர, அந்தக் குளம் மிகவும் பிரபலம்.

கோயிலில் காலட்சேபம் இருந்தது. வேளுக்குடி வரதாச்சாரியார் ராமாயணம் சொல்லிக்கொண்டிருந்தார். ஆறேழு தினங்களாக அம்மா அதற்குப் போய்க்கொண்டிருந்தாள். ஏழு மணிக்கு ராமாயணம் ஆரம்பித்தால் முடிவதற்கு ஒன்பது ஆகிவிடும் என்பதால், அதன்பின் வீட்டுக்கு வந்து இரவுக்குச் சமைப்பது சிரமம். எனவே காலட்சேபம் ஆரம்பித்ததில் இருந்து அவள் மாலையே சமைத்து வைத்துவிட்டுப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

‘விமல், கறிகா ஒண்ணுமில்லே. பந்துலு கடைக்குப் போய் என்ன இருக்குன்னு பாரு. வெண்டைக்காய் இருந்தா அரைக்கிலோ வாங்கிண்டு வா’ என்றாள்.

நான் கடைக்குப் போய் வெண்டைக்காய் வாங்கிக்கொண்டு திரும்பும்போது, குளக்கரையில் வினய் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. திருவிடந்தையில் யாரும் படப்பிடிப்புகளை வேடிக்கை பார்க்கமாட்டார்கள். ஒரு திரைப்படம் அளிக்கும் பரவசத்தை, கற்பனையை, ஆர்வத் தூண்டலை நிச்சயமாகப் படப்பிடிப்பு தராது. ஒரே வரி வசனத்தை, அல்லது ஒரு பாடலின் ஏதோ ஒரு வரியைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுத்து நடிக்கச் சொல்லுவார்கள். எப்படித்தான் நடிகர்கள் சலிக்காமல் அதை மீண்டும் மீண்டும் செய்கிறார்களோ என்று தோன்றும். நடிகர், நடிகைகளை சும்மா போய்ப் பார்த்துவிட்டு வருவது என்பது ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். தினமும் படப்பிடிப்பு நடக்கிற கிராமத்தில் அத்தனைக் கலைஞர்களுமே ஏற்கெனவே தெரிந்தவர்களாகிவிடுவார்கள். திரும்பத் திரும்பப் பார்க்க என்ன இருக்கிறது? அதே முகப்பூச்சு. அதே உதட்டுச் சாயம். அதே செண்ட் வாசனை. சிகரெட் வாசனை.

நான் வினய்யை நெருங்கி, ‘இங்க என்னடா பண்றே?’ என்று கேட்டேன். அவன் சற்று திடுக்கிட்டாற்போலத் தெரிந்தது.

‘ம்? ஒண்ணுமில்லே. சும்மாத்தான்’ என்று சொன்னான். நீல நிற ஒயர் பின்னப்பட்ட அலுமினிய சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த நடிகையையே அவன் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அது ஏதோ ஒரு கன்னடப் படம். அந்த நடிகை, குளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொள்வதற்காக வந்திருந்தாள். காப்பாற்றுவதற்குத் தயாராக முன்னதாகக் குளத்துக்குள் மூழ்கியிருந்த கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் அப்போது எடுத்துக்கொண்டிருந்தார்கள். எனக்குத் தெரியும், நடிகைக்கு இன்று வேலை இருக்காது. ஏனெனில் அப்போதே மணி ஐந்தாகியிருந்தது. ஐந்து பத்து நிமிடங்களில் வெளிச்சம் போய்விடும். அதன்பின் அனைத்தையும் வாரிச் சுருட்டி வண்டியில் போட்டுக்கொண்டு படப்பிடிப்புக் குழுவினர் கோவளத்துக்குப் போய்விடுவார்கள். அங்கேதான் தாஜ் கொரமண்டல் ஓட்டல் இருந்தது. படப்பிடிப்புக்கு வரும் கலைஞர்கள் அங்கேதான் எப்போதும் தங்குவார்கள்.

என்ன நினைத்தானோ, வினய் எனக்கு அந்த நடிகையைச் சுட்டிக்காட்டினான். ‘அவளைப் பாரு. பார்த்தா என்ன தோணறது?’ என்று கேட்டான்.

எனக்கு எதுவும் தோன்றவில்லை. சட்டென்று வியக்குமளவுக்கு அவள் பேரழகியாக இல்லாதிருந்தது ஒரு காரணமாயிருக்கலாம். கர்நாடகத்தில் அவள் பெரிய நட்சத்திரமாக இருக்கக்கூடும். பரிச்சயமான முகமாக இல்லாதபடியால், எனக்கு விசேடமாக ஒன்றும் நினைக்க முடியவில்லை.

‘அந்தத் தோலை மட்டும் உரிச்சி எடுத்துட முடிஞ்சா எலும்பும் சதையும் ரத்தம் ஒழுகிண்டு கோரமா இருக்கும் இல்லே? தோலால மூடி வெச்சுட்டா எல்லாம் மறைஞ்சி போயிடறது’ என்று சொன்னான்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பெண்ணை, தோலை உரித்துவிட்டு யோசிக்க முடியுமா? அப்படியே முடியுமென்றாலும், எதற்காக அப்படி யோசிக்க வேண்டும்?

வினய் சொன்னான், ‘விமல், ஒரு ஆடு, ஒரு கோழி, ஒரு மாடு - இதையெல்லாம் சாப்பிடறவா யாரும் தோலோட நினைச்சிப் பார்க்கறது கிடையாது. உரிச்சி யோசிச்சாத்தான் உணவு. மனுஷாளுக்குப் பொம்மனாட்டி ஒரு உணவு. பொம்மனாட்டிகளுக்குப் புருஷா உணவு. ஆனா தோலோடதான் வேணும். சரியா சொல்லணும்னா தோல் மட்டும்தான் உணவு.’

அவன் கெட்டதாக ஏதோ பேசுகிறான் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் சரியாகப் புரியவில்லை. தவிர எனக்கு எதற்கு இது என்றும் கேட்க நினைத்தேன். பேச்சை வளர்க்க விரும்பாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

அந்தச் சம்பவம் நடந்து பத்து நாள்களுக்குப் பிறகு ஒரு நாள் என் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவதற்காக அம்மாவிடம் அனுமதி பெற்றுக்கொண்டு கடற்கரைக்குப் போயிருந்தேன். இருட்டும்வரை விளையாடிக்கொண்டிருந்துவிட்டு, இருட்டிய பின்பு வீட்டுக்குத் திரும்பும் வழியில் சவுக்குத் தோப்புக்குள் வினய் போய்க்கொண்டிருப்பதைக் கண்டேன். கூப்பிடலாம் என்று வாய் நுனிவரை பெயர் வந்துவிட்டது. ஒருவேளை அது வேறு யாராவதாக இருக்கலாம் என்று அதற்குள் தோன்றியபடியால், அழைக்காமல் அவனை நோக்கி ஓடத் தொடங்கினேன்.

சவுக்குத் தோப்பு என்பது முடிவே இல்லாத பெருங்காடு. கோவளத்தின் கடற்கரை எல்லையில் ஆரம்பித்து மகாபலிபுரம் வரைக்கும் இடைவெளி விட்டுவிட்டு நீண்டுகொண்டே இருக்கும். பிற்காலத்தில் அந்தக் காட்டை அழித்து ஏராளமான உல்லாச விடுதிகளும் நட்சத்திர உணவகங்களும் பொழுதுபோக்குக் கேந்திரங்களும் உருவாக்கப்பட்டுவிட்டன. நான் திருவிடந்தையில் வசித்தபோது ஊரின் கிழக்குப் பக்கத்துக் கோட்டைச் சுவர்போல சவுக்குக் காடுதான் உயர்ந்து நின்று காக்கும். வழி தெரியாத யாராவது காட்டுக்குள்ளே போய்விட்டால் மீண்டு வெளியே வருவது சிரமம். குத்துமதிப்பாக திசைக் கணக்கை வைத்து சாலையைப் பிடித்துவிட முடியும்தான். ஆனால் நரிகள் மட்டுமின்றி, கள்ளச் சாராயம் காய்ச்சுவோரும் அங்கேதான் தொழில் செய்துகொண்டிருப்பார்கள் என்பதால், வெறுமனே உலவுவதற்கென்று யாரும் அந்தப் பக்கம் போகமாட்டார்கள்.

எனக்கு வினய் ஏன் காட்டுக்குள் போகிறான் என்று குழப்பமாக இருந்தது. நான் பார்த்தது அவனைத்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள அவனைப் பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்து வெகுதூரம் உள்ளே போய்விட்டேன். அதற்குள் நன்றாக இருட்டவும் தொடங்கிவிட்டபடியால், எனக்கு முன்னால் போனவன் மறைந்தே போய்விட்டான். இப்போது என்ன செய்வதென்று யோசனையாக இருந்தது. வினய், வினய் என்று ஓரிருமுறை குரல் கொடுத்துப் பார்த்தேன். பதில் இல்லை. சரி, திரும்பிவிடலாம் என்று முடிவு செய்து நடக்கத் தொடங்கியபோது, இருளில் ஓர் உருவம் என்னை நெருங்கி வந்து தோளைத் தொட்டது.

அவந்தான்.

‘நெனச்சேன்’ என்று சொன்னேன்.

‘நீ இந்தப் பக்கம் ஏன் வந்தே?’ என்று வினய் கேட்டான்.

‘நீ ஏன் வந்தே?’

‘சும்மாதான். ஒரு சின்ன பரிசோதனை பண்ணவேண்டி இருந்தது’ என்று வினய் சொன்னான்.

எனக்குச் சட்டென்று அண்ணாவின் நினைவு வந்துவிட்டது. அதே காட்டுக்குள்தான் அவன் எனக்கு ஒரு பாறையின் மீது தலை குப்புற நின்று காட்டினான். கால்களை உயர்த்தி விரித்து நரியை நகரவைத்தான். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அண்ணா வீட்டைவிட்டுப் போன பிறகு அவனைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அந்தச் சம்பவம் எனக்குத் தவறாமல் நினைவில் வந்துவிடும். என் அபத்தமான அறியாமையாலும் காரணமற்ற அச்சத்தாலுமே அவனை நாங்கள் இழந்தோம் என்று தோன்றும். கடைசிவரை அம்மாவிடம் நான் அண்ணாவைப் பற்றி அறிந்த எதையுமே சொல்லவில்லை. எனக்கு அதற்குத் துணிச்சல் வரவேயில்லை. என்றைக்காவது பரணில் உள்ள அந்த நாடிச் சுவடி அப்பாவின் கண்ணில் பட்டு, இது என்ன, ஏது என்று விசாரித்தால் அப்போது சொல்லிக்கொள்ளலாம் என்று நிரந்தரமாக அந்த யோசனையைத் தள்ளிப்போட்டிருந்தேன். ஆனால் அந்தக் குற்ற உணர்வு என்னைக் கணம்தோறும் தின்றுகொண்டிருந்தது. அண்ணாவின் மீது அதுவரை எனக்கிருந்த பாசமும் பிரியமும் அவன் பிரிந்து சென்ற பிற்பாடு பல மடங்கு அதிகரித்து, அடிக்கடி என்னைத் தனியே சென்று அழவைத்தது.

சொல்லிவைத்த மாதிரி வினய் ஒரு பரிசோதனைக்காக சவுக்குக் காட்டுக்கு வந்ததாகச் சொன்னது எனக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தது. நான் அவனிடம் என்ன பரிசோதனை என்றெல்லாம் கேட்கவேயில்லை. ‘நீயா எதாவது முடிவு பண்ணியிருந்தேன்னா நான் கண்டிப்பா இன்னிக்கு ராத்திரியே அம்மாட்ட சொல்லிடுவேண்டா’ என்று சொன்னேன்.

இருளில் அவன் சில விநாடிகள் என்னை உற்றுப் பார்த்தான். பிறகு, ‘வா’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

நாங்கள் காட்டைவிட்டு வெளியே வந்து மண் மேட்டில் ஏறி சாலையின் மறுபுறத்தை வந்தடைந்தோம். வடக்குப்பட்டுக்குப் போய்க்கொண்டிருந்த ஒரு மாட்டு வண்டியில் ஏழெட்டுப் பேர் அமர்ந்திருந்தார்கள். முட்டுக்காடில் ஏதோ கலவரம் என்று அவர்கள் பேசிக்கொண்டு போனது காதில் விழுந்தது.

‘கலவரம்னா கல்லால அடிப்பா இல்லே?’ என்று நான் கேட்டேன்.

‘தெரியலே. நீ வா’ என்று வினய் என் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு ஓட்டமாய் ஓடினான். நாங்கள் கோயில் முன் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தபோது அங்கே யாருமில்லை. சுற்றுமுற்றும் ஊரடங்கி ஒடுங்கிவிட்டிருந்தது. எங்கும் நடமாட்டமோ பேச்சுக்குரலோ இல்லை. கோயிலுக்குள் வேளுக்குடி வரதாச்சாரியார் ராமாயணம் சொல்லிக்கொண்டிருப்பார். அந்நாளில் எங்கள் ஊரில் மைக் வைத்து சொற்பொழிவு நடத்தும் வழக்கம் கிடையாது. தாயார் சன்னிதிக்கு முன்னால் கதை சொல்பவர் ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருப்பார். சுற்றி அமர்ந்து நாற்பது ஐம்பது பேர் கேட்டுக்கொண்டிருப்பார்கள். திண்ணைப் பேச்சு போலத்தான் இருக்கும். அண்ணா வீட்டைவிட்டுப் போன பிறகு, அம்மா கோயிலில் நடக்கும் எந்த ஒரு வைபவத்தையும் தவறவிடுவதேயில்லை. அது ராமாயணமோ வேறெதுவுமோ. எதுவுமே இல்லாவிட்டால் சும்மாவேனும் மாலை வேளைகளில் கோயிலுக்குப் போய் சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். சில நாள் கேசவன் மாமாவும் அம்மாவோடு போவார். ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரும் அப்பா, சம்பிரதாயமாக ‘அம்மா எங்க?’ என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் தனக்காகப் போட்டுவைத்திருக்கும் காப்பியை சூடுபடுத்திக் குடித்துவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்.

அண்ணா ஒருவன் இல்லாமல் போன பிறகு, எங்கள் வாழ்க்கை முறையில் எங்களையறியாமல் இறுக்கம் கூடிக்கொண்டே போனது. எதையாவது செய்து எல்லோரும் இயல்பாக இருப்பதுபோலக் காட்டிக்கொள்ளக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தோம் என்று இப்போது தோன்றுகிறது. வினய்கூட அண்ணா காணாமல் போன பிறகு படிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தான். அடுத்து வந்த பரீட்சைகளில் அவன் பெற்ற மதிப்பெண்கள், அதற்குமுன் எப்போதுமே அவன் பெற்றிராதவை. அம்மாவுக்கு மிகுந்த சந்தோஷம்.

‘நன்னா படிடா. நீ படிச்சி பெரிய உத்தியோகத்துக்குப் போகணுன்றதுதான் உங்கப்பாவோட கனவு. நீயாவது அதை நிறைவேத்து’ என்று சொல்வாள்.

மண்டபத்துக்கு வந்து சேர்ந்த பிறகு நான் வினய்யிடம் கேட்டேன், ‘காட்ல என்ன பண்ணிண்டிருந்தே?’

அவன் பதில் சொல்லவில்லை. தன் சட்டை பாக்கெட்டில் இருந்து இரண்டு புகைப்படங்களை எடுத்துக் கீழே வைத்தான். ஒன்று, மகாலட்சுமித் தாயாரின் படம். இன்னொன்று, ‘நீயா’ திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை ஸ்ரீப்ரியாவின் அரை நிர்வாணப் புகைப்படம்.

‘இந்த ரெண்டையும் பார்த்தா உனக்கு என்ன தோணறது?’ என்று வினய் கேட்டான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com