18. துளி வாழ்வு, துளி சாவு

தனது கடைசிச் சொல்லை அவர் எனக்காகச் சேமித்திருந்தார். அது என்னவாக இருக்கும் என்றறியக்கூட நான் விரும்பவில்லை. என் குரு ஒரு சொல்லில் இல்லை எனக்கு.

அன்றைக்கு வெள்ளிக்கிழமை, கிருஷ்ண பட்சம், நவமி திதி. சிறிது நேரத்தில் அவர் இறந்துவிடுவார் என்று நாங்கள் அறிந்திருந்தோம். இறந்துவிடுவேன் என்று அவர் சொல்லிச் சரியாக இருபது தினங்கள் கழிந்திருந்தன. படிப்படியாக அவரது பேச்சு குறைந்துகொண்டே வந்தது. நடமாட்டம் ஒரு வாரத்துக்கு முன்னாலேயே இல்லாது போயிருந்தது. பெரும்பாலும் அவரது கண்கள் மூடியே இருந்தன. எப்போதாவது ஒரு சுவரில் விழும் விரிசலைப்போல் அவை திறக்கும். கணப்பொழுது யாரையாவது தேடுவார். சீடர்கள் மொத்தமாக முண்டியடித்து முன்னால் வந்து குழுமி நிற்பார்கள். தேர்ந்தெடுப்பதற்குள் கண்கள் மீண்டும் மூடிக்கொள்ளும். எனக்குத் தெரியும், அவர் என்னைத்தான் தேடினார். தனது கடைசிச் சொல்லை அவர் எனக்காகச் சேமித்திருந்தார். அது என்னவாக இருக்கும் என்றறியக்கூட நான் விரும்பவில்லை. என் குரு ஒரு சொல்லில் இல்லை எனக்கு. மேலும், அவர் சொல்லித்தராத அந்த ஒரு சொல்லைப் பற்றிக்கொண்டுதான் எனது பயணத்தைத் தொடங்க வேண்டும் என்றும் நான் தீர்மானித்திருந்தேன். எனவே, அவர் கண்ணைத் திறக்க முயற்சி செய்தபோதெல்லாம், நான் அவர் தலைக்கு அருகே சென்று நின்றுகொண்டேன்.

குருகுலத்தில் என்னைவிட மூத்தவர்கள் ஆறு பேர் இருந்தார்கள். எனக்குப் பிறகு வந்து சேர்ந்தவர்கள் பத்துப் பேர் உண்டு. இதில் இரண்டு பெண்களும் அடக்கம். அவர்களுள் கார்த்திகாயினி மிகவும் அழகாக இருப்பாள். அவளெல்லாம் சன்னியாசம் வாங்கிக்கொண்டு என்ன செய்யப்போகிறாள் என்பது அந்நாள்களில் எனக்குப் பெரிய வியப்புக் கலந்த வினாவாக இருந்தது. வீட்டைத் துறந்து, உறவுகளைத் துறந்து, படித்த படிப்பை, அது தரக்கூடிய உத்தியோகத்தை, சம்பளத்தை, சௌகரியங்களை ஒதுக்கி எதைத் தேடி அவள் அங்கே வந்தாள் என்று அநேகமாக தினமும் ஒருமுறை அவளிடம் கேட்பேன். அவள் தினமும் ஒரு பதிலைச் சொல்லுவாள். எனது காவியும், குருவோடு எனக்கிருந்த நெருக்கமும் அவளைச் சலிப்புறாமல் என்னுடன் பேசவைத்தன. என்னோடு சேர்த்து மூன்று பேருக்குத்தான் குருஜி அப்போது சன்னியாச தீட்சை வழங்கியிருந்தார். மீதமிருந்தவர்கள் அத்தனை பேரும் எப்போது தமக்கு அக்காலம் வரும் என்று காத்திருந்தார்கள். எனவே, தீட்சை பெற்ற சீடர்களுக்கு மற்றவர்கள் மத்தியில் ஒரு மரியாதை இருந்தது. எத்தனை முயன்றும் தமக்கு இன்னமும் கிட்டாத தீட்சை இவனுக்குக் கிடைத்துவிட இவன் என்ன செய்திருப்பான் என்கிற வினா ஒவ்வொருவருக்கும் இருந்தது. கார்த்திகாயினி என்னிடம் ஒரு நாள் கேட்டாள், ‘நீங்கள் குருவைப்போல் இல்லை. அவரது குணாதிசயம் எதுவும் உங்களிடம் இல்லை. நீங்கள் ஒரு துறவிக்கான ஒழுக்க நியமங்களையும் பின்பற்றுவதில்லை. உங்களைப்போல் வேறு யாராவது இருந்தால், நிச்சயமாக குருஜி அவர்களை சகித்துக்கொண்டிருப்பார் என்று தோன்றவில்லை. உங்களை மட்டும் எப்படி அவர் தன்னருகே வைத்துக்கொண்டிருக்கிறார்?’

நான் புன்னகை செய்தேன். அது ஒரு சிறந்த வினா. நான் குருகுலத்தில் இணைந்த நாள் முதல் அங்கு வசித்துவந்த, வந்து சென்ற அனைவருக்கும் ஒரு கணமாவது அந்த வினா நெஞ்சில் எழாதிருந்திருக்காது. எனது ஒழுங்கீனங்களின் ஊழித் தாண்டவத்தைக் கண்ட யாரும் என்னைக் கொல்ல வேண்டும் என்று எண்ணாதிருந்திருக்க முடியாது. ஒரு விதத்தில், குரு என்னை சக்கர வியூகத்துக்குள் நிறுத்தி அடைகாத்துக்கொண்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். என்னை அவருக்கு மட்டும்தான் தெரியும். என்னை ஏன் அவர் அங்கீகரித்தார் என்பதும் எனக்கு மட்டும்தான் தெரியும்.

பெருமைப்பட்டுக்கொள்ள எல்லோரிடமும் சொல்லிக் காட்டலாம்தான். ஆனால் நான் செய்ததில்லை. ஒரு புன்னகையில் அனைத்தையும் கடந்துவிட நான் அறிவேன். அதுதான் குருவுக்கு நான் செலுத்திய நன்றியாக இருந்தது. என்னால் வேறென்ன முடியும்? அவர் இன்னும் சற்று நேரத்தில் இறந்துவிடுவார் என்று அனைவருக்குமே தெரிந்த கணத்தில் நான் அறிவித்தேன்: ‘சரி நண்பர்களே, நான் புறப்படுகிறேன்.’

‘எங்கே?’ என்று கேட்டார்கள். குரல்களில் பதற்றமும் அச்சமும் இருந்தன.

‘எனக்கெப்படித் தெரியும்? அதை குரு தீர்மானிப்பார். ஆனால் இப்போது நான் கிளம்பியாக வேண்டும்.’

‘ஐயோ, அவரது இறுதிக் கணத்தில் நீங்கள் இல்லாமல் எப்படி?‘

நான் சிரித்தேன். ‘பாதியில் வந்தவன் நான். பாதியில் போவதுதான் சரி.’

உண்மையில், என்னால் அந்த மரணத்தை எதிர்கொள்ள முடியாது என்று தோன்றியது. நான் சிதறி, சின்னாபின்னமாகிவிடுவேன் என்று நினைத்தேன். உட்கார்ந்து அழுகிற ரகமல்ல நான். ஆனால் அவரது மரணத்துக்கு முன் நான் விடைபெற்றுச் சென்றுவிட்டால்தான், நான் சேகரித்த சொற்கள் என்னுடையவையாக இருக்கும். அல்லாத பட்சத்தில், அவரது சமாதிக்கடியில் அவையும் சேர்த்துப் புதைக்கப்பட்டுவிடும் என்று எனக்கு நிச்சயமாகத் தோன்றியது. அதன்பின் நான் அங்கே இருந்தால் என்ன, எங்கே இருந்தால் என்ன? என்னிடம் அப்போது ஒரே ஒரு சொல் மட்டும்தான் இருக்கும். அது அவர் இறுதியாகச் சொன்னதாக இருக்கும்.

இதனால்தான், அந்த இறுதிச் சொல்லை நான் தவிர்க்க நினைத்தேன்.

இருபது தினங்கள். ஒரு முதியவர் தாங்கக்கூடிய வலியாக அது நிச்சயமாக இருந்திருக்காது. அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழந்துகொண்டிருந்ததைக் கண்டேன். முதலில் நகங்கள் கறுத்தன. பின் விரல்கள் மடங்க மறுத்தன. பிடித்து நீவிவிட்டுப் பார்த்தும், எண்ணெய் தேய்த்து உருவிப் பார்த்தும் பயனில்லாமல் போனது. அதன்பின் கை மூட்டுகளும் கால் மூட்டுகளும் செயலிழந்தன. அவரைப் புரட்டிப் போட்டுப் படுக்கவைக்கக்கூட முடியாமல் போனது. நான்கு பேர் சேர்த்துத் தள்ளினால்தான் அவரது உடல் அசைந்தது. வேதனையின் வெளிப்பாட்டை மிகச் சிறு முனகலாகத்தான் அவரிடம் பெற முடிந்தது. முடிந்தவரை, முனகக்கூட செய்யாமல் சகித்துக்கொண்டிருந்தார். படுத்தவாக்கில் மலஜலம் கழிக்க வேண்டியிருந்ததுதான் அனைத்திலும் கொடூரம். சீடர்கள் சற்றும் அருவருப்படையாமல் உடனுக்குடன் அவரைத் துடைத்து சுத்தம் செய்து பவுடர் போட்டுவிட்டார்கள்.

நான் அனைத்தையும் வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அவர் அருகே செல்லவேயில்லை. வந்த நாள் முதலே அப்படித்தான். இன்னொரு மூச்சுக்காற்றின் சூட்டை என்னால் தாங்க முடியாது. அதுவும் கண்களால் மூச்சு விட்டு, செவிகளால் பேசுகிறவர்களின் பக்கம் நெருங்காதிருப்பது எப்போதும் நல்லது. துறப்பது என்று முடிவு செய்ததும் நான் முதலில் துறந்தது துறவு நிலையைத்தான். இதை என் குரு அறிவார் என்பதற்கு அப்பால் வேறெதுவும் எனக்கு முக்கியமாகப் படவில்லை. கார்த்திகாயினிக்கு இது புரிய வேண்டுமென்றால், அவள் என்னைத் தேடி வந்து சிஷ்யை ஆவது தவிர வேறு வழியில்லை.

நான் கிளம்பிவிட்டேன். குருகுலத்தில் இருந்த அத்தனை பேரும் என் காலைப் பிடிக்காத குறையாகக் கதறித் தீர்த்தார்கள். ‘தயவுசெய்து போகாதீர்கள். இப்போது நீங்கள் கிளம்பினால் அது துரோகம். குருஜியின் ஆன்மா என்றுமே உங்களை மன்னிக்காது’ என்று மிரட்டிக்கூடப் பார்த்தார்கள். ஒரு புன்னகையில் நான் அனைத்தையும் கடந்து வெளியேறிச் சென்றேன். நான் இன்னும் சிறிது காலம் முன்னதாகக் கிளம்பியிருக்க வேண்டும் என்றுதான் குரு நினைத்தார். என்னிடம் அதைச் சில சமயம் சொல்லவும் செய்தார்.

‘விமல், இது உனக்கேற்ற இடமில்லை. உனக்கேற்ற இடத்தை இன்னொருவர் உனக்குக் காண்பிக்கவே முடியாது. நீ மலைகளும் சமவெளிகளும் பள்ளத்தாக்குகளும் நீர்நிலைகளும் கடலும் பாலையுமற்ற ஒரு பிரதேசத்தைச் சமைக்கவேண்டி இருக்கும். அநேகமாக அதுதான் உன் முதல் பணியாக இருக்கும்.’

‘ஆம் ஐயா. நான் சூனியத்தில் இருந்து பூரணத்தை எடுக்கத்தான் வேண்டும்’ என்று பதில் சொன்னேன். ஆசிரமத்தில் இருந்து நான் வெளியேறியபோது அதைத்தான் எண்ணிக்கொண்டேன். சூனியத்தை அங்கே விட்டுவிட்டு, பூரணத்தை எடுத்துக்கொண்டுவிட்டதாக.

அன்று முழுதும் சாலையில் தென்பட்ட பல வாகனங்களைக் கைநீட்டி நிறுத்தி, அவை போன வழியிலேயே கொஞ்ச கொஞ்ச தூரம் போய் இறங்கிக்கொண்டேன். இரவு எட்டு மணிக்கு நான் பெங்களூர் வந்து சேர்ந்ததும் ஆசிரமத்துக்கு போன் செய்தேன். கார்த்திகாயினிதான் எடுத்தாள்.

‘அவர் போய்விட்டாரா?’ என்று கேட்டேன்.

அவள் குமுறிக் குமுறி அழத் தொடங்கினாள். என்னிடம் அதிகம் பணமில்லை அப்போது. வெகுநேரம் பொதுத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க முடியாது. எனவே அவள் அழுகையைப் பாதியில் தடுத்து, ‘அடக்கம் செய்வதற்கு முன்னால் மறக்காமல் அவருக்கு ஷவரம் செய்துவிடுங்கள்’ என்று மட்டும் சொல்லிவிட்டு வைத்துவிட்டேன். அவளுக்கு என்ன புரிந்ததோ. எப்படியும் கன்னடத்தில் அவளறிந்த ஒரு சில கெட்ட வார்த்தைகளையேனும் பயன்படுத்தி என்னைத் திட்டியிருப்பாள் என்று தோன்றியது. கார்த்திகாயினி கோவப்படும்போதும் அழகாகத்தான் இருப்பாள். பேசும்போது அவளது மூக்கின் இரு புறமும் ஒரு பானிபூரியைப்போல் விரிந்து விரிந்து அடங்குவது பார்க்க மிகவும் ரசமாக இருக்கும்.

எனக்கென்னவோ, அம்மாவின் இறுதித் தருணம் நெருங்கிவிட்ட செய்தி கிடைத்தபோது, நான் அண்ணாவைத் தேடிச் சென்றது பலவிதங்களில் என் குருவின் மரணத்தின்போது நான் ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டதை ஒத்திருந்ததாகவே பட்டது. துக்கத்தின் நிழலில் நிற்க விரும்பாத சுயநலமல்ல அது. சொல்லப்போனால், அருகே இல்லாதவனுக்குத்தான் அனைத்துத் துயரங்களும் ஆசியாக உச்சந்தலையில் இறங்கும். மேலே விழுந்து புரண்டு கதறிவிட்டால் அதன்பிறகு ஒன்றுமேயில்லை. விலகி நின்று வாழ்வின் ஒரு துளி சாறெடுத்து சாவின் சாற்றில் கலந்து அருந்தி, நினைவில் சாசுவதமாக்கிக்கொள்வது ஒரு கலை. அதைத்தான் நான் செய்தேன்.

ஆனால் ஒரு விருப்பம் இருந்தது. அம்மா என் குருவைப்போல வலிகளுடன் போய்ச் சேரக் கூடாது. எனக்கு நன்றாகத் தெரியும். தனது இறுதித் தினங்களில் அவரால் ஒரு கணம்கூட தியானத்தில் இருந்திருக்க முடியாது. அவரது நூற்று எண்பத்து ஒன்பது தெய்வங்களுள் ஒருவரைக்கூட அழைத்துப் பேசியிருந்திருக்கமாட்டார். வாழ்நாள் முழுதும் அவர் ஓதியறிந்த வேதங்களில் இருந்தோ, உபநிடதங்களில் இருந்தோ ஒரு வரி, ஒரு சொல்லைக்கூட அவர் எண்ணியிருக்கமாட்டார். தேகமும் உலகமும் வலியாலானதாக மட்டுமே நினைத்திருப்பார்.  அந்த இறுதி இருபது தினங்களில் அவரிடமிருந்து வெளிப்பட்ட முனகல் எனக்கு அதைத்தான் தெரிவித்தது. எத்தனை உற்சாகமாக சாதுர்மாஸ்ய விரதம் இருக்கப் புறப்பட்ட மனிதர்! துங்கபத்திரையின் கரையில் ஒரு கூழாங்கல்லைப் போலாகிப்போனார். உண்மையில் எனக்கு அப்படித்தான் தோன்றியது. ஒரு கல்லைக் கொண்டுபோய்த்தான் ஆசிரம வளாகத்தில் அவர்கள் அடக்கம் செய்திருப்பார்கள்.

டெல்லியில் இருந்து சென்னைக்குச் செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில்தான் நான் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போபால் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் ஒருமுறை கேசவன் மாமாவுக்கு போன் செய்தேன். அவள் இறந்துவிட்டாள் என்று ஒருவேளை அவர் சொல்லிவிட்டால், என் பயணத்தை ரத்து செய்துவிட்டு மைசூருக்குப் போய்விடலாம் என்றுகூடத் தோன்றியது. ஆனால் நான் சற்றும் எதிர்பாராவிதமாக மாமாவின் குரலில் ஒரு தெம்பு தெரிந்தது. ‘கெளம்பிட்டியா? நல்லது. வா. சீக்கிரம் வந்து சேரு’ என்று சொன்னார்.

‘மாமா, அம்மா...’

‘இருக்கா. இன்னும் போகலே. இன்னிக்கி கார்த்தாலேருந்து எனக்கு வேற மாதிரி தோணறதுடா. ஒருவேள பொழச்சிண்டுடுவாளோ என்னமோ.’

‘எப்படி மாமா?’ என்று கேட்டேன்.

‘பின்னே? நீ வரியே?’

சட்டென்று எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com