22. உரித்தெடுத்தல்

அண்ணாவாவது தெளிவாக இருந்தான். தெளிவாகப் பேசினான். தான் எதைத் தேடுகிறோம் என்று என்னிடமாவது அவனால் எடுத்துச்சொல்ல முடிந்தது. சந்தேகமில்லாமல் அவன் ஒரு பக்திமான்.

தோல், தோல், தோல் என்று பைத்தியம்போல் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தான். தனக்கு மட்டும் சக்தி இருந்தால், நெற்றியில் இருந்து பாதம் வரை மூடியிருக்கும் தோலை உரித்தெடுத்துவிட விரும்புவதாக வினய் சொன்னபோது, எனக்கு மிகுந்த அச்சமாகிவிட்டது. அவனுக்கு ஏதோ ஆகிவிட்டதென்று தோன்றியது. வீட்டுக்குப் போவதற்கு முன்னால் அல்லிக் குளத்தில் குதித்து நன்றாகத் தேய்த்துக் குளித்தான். கரை ஏறி வந்து அப்படியே கோவணத்துடன் சிறிது நேரம் நின்று தன்னை உலர்த்திக்கொண்டு பிறகு உடைகளை எடுத்து அணிந்துகொண்டான். ‘சாம்பலெல்லாம் போயிடுத்தோல்யோ?’ என்று கேட்டான்.

‘எதுக்காகடா நீ அப்படி செஞ்சே?’

‘தெரியல விமல். ஆனா எல்லாத்தையும் உரிச்சிப் பாத்துடணும்னு ஒரு வெறி. இப்ப கொஞ்ச நாளாத்தான் இப்படியெல்லாம் தோணறது. நடிகைங்கள பாத்தா தோலை உரிச்சிப் பாக்கத் தோணறது. பத்மா மாமி பொண்ண பாத்தாலும் அதான் தோணறது. என்னையே உரிச்சிப் பாத்துடமாட்டமான்னு இருக்கு. முடியலியே. அதான் சட்டை பேண்ட்டையாவது கழட்டிப் போட்டுடத் தோணிடுத்து.’

‘எதுக்காகடா உரிக்கணும்? உரிக்க வேணாம்னுதானே பெருமாள் உடம்பை மூடிக் குடுத்திருக்கார்?’

அவன் சிரித்தான். ‘உரிக்க முடியறதா பார்னு சவால் விட்டிருக்கார்டா’ என்று சொன்னான்.

எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அவனுக்குத் தீவிரமாக ஏதோ பிரச்னை உள்ளதென்று தோன்றியது. அண்ணா விஷயத்தில் நடந்துகொண்டதைப்போல, இவன் விஷயத்தில் நான் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன். அண்ணாவாவது தெளிவாக இருந்தான். தெளிவாகப் பேசினான். தான் எதைத் தேடுகிறோம் என்று என்னிடமாவது அவனால் எடுத்துச் சொல்ல முடிந்தது. சந்தேகமில்லாமல் அவன் ஒரு பக்திமான். அதைத்தாண்டி அவனிடம் ஒரு ஞானத்தேடல் இருந்தது. இதெல்லாம் பின்னால் எனக்கென்று ஒரு பக்குவம் வந்தபோது புரிந்த விஷயங்கள்தாம் என்றாலும் வினய் விஷயத்தில் எனக்கு அந்த வயதிலேயே தீர்மானமாகத் தோன்றியது. இவனுக்குப் பைத்தியம் பிடிக்கவிருக்கிறது.

‘ஆமால்ல? பைத்தியம்தான் போலருக்கு’ என்று அவன் சொன்னான்.

அன்று மாலை அப்பா ஆபீஸ் முடித்துத் திரும்பியபோது, அவரிடம் நான் பார்த்ததைச் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். எனக்கு வசதியாக அம்மா, மாமாவோடு தையூர் சந்தைக்குப் போய்வருவதாகச் சொல்லிவிட்டுப் போயிருந்தாள். வினோத் வீட்டில்தான் இருந்தான். ஆனால் அது ஒரு பிரச்னையில்லை. பொதுவாக அவன் அப்பா இருக்கும் இடத்தின் பக்கம் வரவே மாட்டான். பசியெடுக்கும்போது ‘அம்மா பசிக்கறது’ என்று குரல் கொடுப்பானே தவிர, என்னைப்போல் அடுக்களைக்கு உள்ளே போய்ப் பேசுகிற வழக்கம் அம்மா விஷயத்தில்கூட அவனுக்குக் கிடையாது. வினய் எல்லோரிடமும் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறவன். அவன் தையூர் தோப்பில் பீடி குடித்ததைப் பார்த்துவிட்டு கேசவன் மாமா வீட்டுக்கு வந்து சொன்னதன் மறுநாள், ஒன்றுமே நடக்காததுபோல மாமாவிடமே கிரிக்கெட் விளையாட வருகிறீர்களா என்று கேட்டான். மாமா அப்போதும் அவனுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லி, கெட்டுப் போகாதிருக்கும்படிக் கெஞ்சியிருக்கிறார்.

‘பீடி பிடிச்சா கெட்டுப் போய்டுவேனா மாமா? அப்ப ஒரு நாளைக்கு பதினாறு சிகரெட் பிடிச்ச விவேகானந்தர் கெட்டவரா?’ என்று வினய் கேட்டதாக மாமா வந்து சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தார்.

எனக்கு அந்தத் தகவல் மிகவும் புதிதாக இருந்தது. நான் அம்மாவிடம் ரகசியமாகக் கேட்டேன், ‘விவேகானந்தர் சிகரெட் பிடிப்பாராம்மா?’

‘எனக்குத் தெரியலடா. அவனுக்கு யாரோ அப்படி சொல்லியிருக்கா’ என்று சொன்னாள்.

‘ஆனா சிகரெட்டெல்லாம் கெட்டவாதானே பிடிப்பா?’

அம்மா சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு, ‘வினய் நல்லவன்’ என்று சொன்னாள்.

கேசவன் மாமாவுடன் அம்மா சந்தைக்குப் போய் முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது. அப்பா வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து டிரான்சிஸ்டரில் செய்தி கேட்டுக்கொண்டிருந்தார். நான் அவர் அருகே சென்று அமர்ந்துகொண்டேன். சில நிமிடங்கள் அப்பா என்னைப் பொருட்படுத்தவில்லை. செய்தியிலேயே கவனமாக இருந்தார். பிறகு என்ன நினைத்தாரோ, டிரான்சிஸ்டரின் வால்யூமை குறைத்துவிட்டு, ‘என்ன?’ என்றார்.

நான் சற்றும் யோசிக்கவில்லை. ‘வினய் நிறைய தப்பு பண்றாம்ப்பா. அவனை ஒரு டாக்டர்ட்ட கூட்டிண்டு போய்க் காட்டணும். கோவிந்தராஜ் டாக்டர் இல்லே. மெட்ராஸ்ல இருக்கற யாராவது நல்ல டாக்டர்’ என்று சொன்னேன்.

‘தப்பு பண்ணா டாக்டர் எதுக்கு?’

‘இது வேற மாதிரி தப்பு’ என்று சொன்னேன்.

அப்பா இப்போது ரேடியோவை நிறுத்தினார். ‘என்ன பண்ணான் சொல்லு’ என்று கேட்டார்.

மயானக் கொள்ளையில் அவன் வெறும் கோவணத்துடன் மரத்தின் மீதிருந்து குதித்த காட்சியை நான் பார்த்தபடியே விவரித்து முடித்தேன். ‘உடம்பெல்லாம் சாம்பல் பூசிண்டு பாக்கவே பயங்கரமா இருந்தான்ப்பா. எனக்கு அழுகையே வந்துடுத்து. ஏண்டா இப்படின்னு கேட்டதுக்கு எல்லாத்தையும் உரிக்கறேன்னு சொல்றாம்ப்பா.’

அன்றிரவு அப்பா வினய்யை நடுக்கூடத்தில் நிறுத்திவைத்து அடி அடியென்று அடித்துத் தீர்த்தார். அம்மாவும் மாமாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். குறுக்கே விழுந்து தடுத்தார்கள். அப்பா நிறுத்தவேயில்லை. ‘பாவி, மகாபாவி! ஏண்டா உம்புத்தி இப்படி போறது? இதுக்காடா எனக்குப் பிள்ளையா வந்து பொறந்தே?’ என்று கதறிக்கொண்டே அடித்தார். இரண்டு பிரம்புகள், ஒரு ஸ்கேல் உடைந்தன. அப்போதும் அவரது ஆத்திரம் தீரவில்லை. ‘எங்க என் பெல்ட்டு? எடு அதை’ என்று உக்கிரமாக பெல்ட்டைத் தேடத் தொடங்கியபோது, மாமாதான் வினய்யைப் பிடித்து இழுத்துச் சென்று ஓர் அறைக்குள் தள்ளிக் கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டார். மறக்காமல் வெளிப் பூட்டை எடுத்துவந்து அந்த அறைக் கதவுக்குப் போட்டு, பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியே போய்விட்டார்.

எனக்கு மிகவும் பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது. வினோத் என்னைத் தனியே கூப்பிட்டுப் பத்து நிமிடங்களுக்குத் திட்டினான். ‘நீ அதை அம்மாட்ட சொல்லியிருக்கணும். இப்பப் பாரு, அப்பா அவனை எப்படிப் போட்டு அடிச்சிருக்கார்’ என்று சொன்னான். வினய் என்னோடு பேசப் போவதில்லை என்பது தெரிந்துவிட்டது. இருந்தாலும் அன்றைக்கு அது நடந்தது நல்லதற்கே என்று நினைத்தேன். மாமா கேட்டபோதுகூட, ‘அவன் நடந்துண்டது பாக்க பயமா இருந்தது மாமா. அதனாலதான் சொன்னேன்’ என்று சொன்னேன்.

அன்றிரவு அம்மா, அப்பா, மாமா மூவரும் நெடுநேரம் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் வினோத்தும் உறங்கிவிட்டோமா என்று பார்க்க, அப்பா ஐந்து நிமிடங்களுக்கொரு முறை உள்ளே வந்து வந்து போய்க்கொண்டிருந்தார். நாங்கள் இரண்டு பேருமே உறங்கியிருக்கவில்லை. ஆனால் வெளியே அவர்கள் பேசுவதைக் கேட்கவும் முடியாதவர்களாக இருந்தோம். அப்பா திட்டமிட்டு மிகவும் ரகசியமான குரலில் பேசுவதுபோலத் தோன்றியது. சரி, என்ன முடிவெடுத்தாலும் விடிந்தால் தெரியத்தானே போகிறது என்று நினைத்துக்கொண்டு தூங்கிப் போய்விட்டேன்.

மறுநாள் விடிந்து நான் கண் விழித்தபோது கேசவன் மாமா வினய்யை அடைத்து வைத்திருந்த அறையின் பூட்டைத் திறந்தார். வினய் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். மாமா அவனைத் தட்டி எழுப்பி, பல்லைத் தேய்த்துவிட்டு வரச் சொன்னார். ‘அப்படியே கக்கூஸ் போயிட்டு குளிச்சிட்டு வரச் சொல்லு’ என்று அப்பா சொன்னார்.

வினய் பதிலே சொல்லாமல் அவர் சொன்னபடி செய்தான். குளித்து தலைவாரிக்கொண்டு அப்பா முன்னால் வந்து, ‘ரெடிப்பா’ என்று சொன்னான்.

அம்மா அவனுக்குக் காப்பி கொடுத்தாள். அதை வாங்கிக் குடித்துவிட்டு, ‘சொல்லுங்கோ’ என்று நின்றான். எதற்கும் தயாராக இருந்தான் என்று எனக்குத் தோன்றியது. அது எப்படி முடியும் என்றுதான் புரியவில்லை. அப்பா அடித்தபோது அவன் சற்றும் முகம் சுளிக்கவில்லை. வலியில் கத்தவில்லை. எதிர்ப்புக் காட்டவில்லை. மாமா அவனை இழுத்துச்சென்று அறைக்குள் தள்ளிப் பூட்டியபோதும் கதவை இடிக்கவில்லை. எனக்குத் தெரிந்து அந்த இரவு அவன் சாப்பிட்டிருக்கவில்லை. ஒருவேளை நான் உறங்கிய பிறகு அம்மா பூட்டைத் திறந்து சாப்பிட ஏதாவது கொடுத்திருக்கலாம். அநேகமாக அப்பா அதை அனுமதித்திருக்க மாட்டார் என்று தோன்றியது. வினோத் சொன்னதுபோல, நான் அம்மாவிடமோ அல்லது மாமாவிடமோ சொல்லியிருக்கலாமோ என்று நினைத்தேன். இருந்தாலும் நான் அப்படியொன்றும் தவறு இழைக்கவில்லை என்றுதான் திரும்பத் திரும்பத் தோன்றியது.

அம்மாதான் சொன்னாள், ‘வினய், அப்பா உன்னை ஸ்கூல்லேருந்து நிறுத்திட முடிவு பண்ணியிருக்கார்.’

அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘ஐயோ ஏம்ப்பா?’ என்று வினோத் கேட்டான்.

‘இது படிச்சது போதும்னு நினைக்கறார். ஒன்ன காஞ்சீபுரத்துல பாடசாலைல போடப் போறார்’ என்று கேசவன் மாமா சொன்னார்.

வினய் ஒன்றுமே சொல்லவில்லை. நான்தான் தாங்கமுடியாமல் கேட்டேன், ‘இங்கேருந்து எப்படி மாமா டெய்லி காஞ்சீபுரம் போயிட்டு வர முடியும்? பஸ் கிடையாதே.’

‘அங்கயேதான் இருக்கணும். படிப்பு முடியறவரைக்கும் வீடு கிடையாது. உறவு கிடையாது. ஒண்ணும் கிடையாது’ என்று அப்பா சொன்னார்.

நான் உடனே அம்மாவைப் பார்த்தேன். அதிர்ச்சியோ வேதனையோ வருத்தமோ சற்றும் அந்த முகத்தில் தெரியவில்லை. அதே சமயம், எப்போதும் படர்ந்திருக்கும் புன்னகையும் இல்லை. எனக்கு மிகுந்த அச்சமாகிவிட்டது. ‘இதெல்லாம் வேணாம்மா. அப்பாட்ட சொல்லும்மா’ என்று திரும்பத் திரும்பக் கேட்டேன். எனக்கு அழுகை வந்தது. எப்போதுமில்லாத வினோத வழக்கமாக, எனக்கே தோன்றும்படி வினய்யின் கைகளை இழுத்து இறுக்கிப் பிடித்துக்கொண்டே பேசினேன்.

‘நான் சும்மா சொன்னேம்ப்பா. வினய் பாவம்ப்பா. இப்படியெல்லாம் பண்ணவேணாமே? இனிமே அவன் ஒழுங்கா இருப்பான்ப்பா.’

அப்பா தன் முடிவில் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்பது அந்த வயதில் எனக்குப் புரியவில்லை. அதைவிடப் புரியாத விஷயம், அம்மா எப்படி எதிர்க்கவே செய்யாமல் ஒப்புக்கொண்டாள் என்பது.

நான் வினய்யிடம் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். ‘நீ நடந்துண்டத பாத்து பயந்து போய்த்தாண்டா நான் அப்பாட்ட சொன்னேன். அவர் இப்படி பண்ணுவார்னு எனக்குத் தெரியலைடா.’

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

அன்று காலை அம்மா பொங்கலும் தேங்காய்ச் சட்னியும் செய்திருந்தாள். அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். சாப்பிடும்போது யாரும் எதுவும் பேசவில்லை. சாப்பிட்டு முடித்ததும், ‘கெளம்பறோம்க்கா’ என்று மாமா சொன்னார். வினய், இரண்டு செட் உடுப்புகள் மட்டும் எடுத்துக்கொண்டு தயாராக நின்றான். ‘மடத்துக்கு எஸ்டிடி போட்டுப் பேசிட்டேன். போய் சேர்த்து விட்டுட்டு வந்துடறோம்’ என்று சொல்லிவிட்டு அப்பாவும் மாமாவும் அவனை அழைத்துக்கொண்டு கிளம்பிச் சென்றார்கள்.

நான் நெடுநேரம் அழுதுகொண்டே இருந்தேன். அது நான் சற்றும் எதிர்பாராதது. வினய்யைக் கண்டித்து அல்லது தண்டித்து ஒழுங்கு செய்ய அப்பாவால் மட்டுமே முடியும் என்று எண்ணித்தான் நான் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் நடந்துகொண்ட விதமும் எடுத்த முடிவும் எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அம்மா எப்படி அதற்கு ஒப்புக்கொண்டாள் என்ற வினா எனக்கு வெகுகாலம் பதிலற்று அப்படியே இருந்தது. எத்தனையோ முறை அம்மாவிடம் நான் அதைப்பற்றிக் கேட்டுப் பார்த்திருக்கிறேன். அவள் எனக்குச் சரியான பதில் சொன்னதில்லை. என்றைக்கோ ஒரு நாள் வினோத் இதைக் கேட்டபோது மட்டும், ‘அவன் சொல்லிக்காம போனான். இவனை நாம கொண்டுபோய் விட்டோம்னாவது இருந்துட்டுப் போகட்டுமே’ என்று பதில் சொல்லியிருக்கிறாள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com