108. பசித்தவன்

மரணங்களில் இருந்து முற்றிலுமாக நகர்ந்து நிற்கவே நான் விரும்பினேன். மனிதர்களிடம் இருந்தும்கூட.

பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்குச் சற்று முன்னதாக வண்டி நின்றுகொண்டிருந்தது. சிக்னல் கிடைக்கவில்லை அல்லது சிக்னலில் ஏதோ கோளாறு. முக்கால் மணி நேரமாக ரயில் ஒரே இடத்தில் நின்றது எரிச்சலாக இருந்தது. ‘நாம் இறங்கி நடந்து சென்றுவிடலாமா?’ என்று வினய்யிடம் கேட்டேன். அவன் உடனே சரி என்று சொன்னான்.

இருவரும் வண்டியை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தோம். நான் சென்னையைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. இடையில் வாய்ப்பு வந்தபோதெல்லாம்கூட கவனமாகத் தவிர்த்து வந்தேன். இது ஏன் என்று எனக்குப் புரியவேயில்லை. நான் யாரிடமும் அச்சம் கொண்டிருக்கவில்லை. யாருக்கும் கடன் பட்டிருக்கவும் இல்லை. யாரைக் கண்டும் ஓடி ஒளிய அவசியமற்றவன். இருந்தபோதிலும் அந்தத் தயக்கம் எனக்கு இருந்தது. இத்தனைக்கும் சென்னையில் இருந்து திருவிடந்தை நாற்பத்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் இடம். ஊர்க்காரர்களுக்கு டவுன் என்றால் திருப்போரூர். இன்னும் பெரிய டவுன் வேண்டுமென்றால் செங்கல்பட்டுக்குத்தான் போவார்கள். அவர்களுடைய சென்னை அதிகபட்சம் அடையாறில் முடிந்துவிடும். ஆனாலும் எனக்கு சென்னைக்கு வர தயக்கமாகவே இருந்தது.

வினய்யிடம் இதனைச் சொன்னபோது, ‘நீ நகரத்தை அம்மாவாக உருவகித்துக்கொள்கிறாய் என்று நினைக்கிறேன். அதனால்தான் நெருங்க அச்சப்படுகிறாய்’ என்று சொன்னான்.

இருக்கலாம் என்று தோன்றியது. அப்பா இறந்த செய்தி கிடைத்தபோது ஊருக்குப் போகலாம் என்று ஒருநாள் முழுதும் தோன்றிக்கொண்டே இருந்தது. மறுநாள் காலை வேண்டாம் என்று தோன்றிவிட்டது. மரணங்களில் இருந்து முற்றிலுமாக நகர்ந்து நிற்கவே நான் விரும்பினேன். மனிதர்களிடம் இருந்தும்கூட.

‘ஆனால் நீ கூட்டங்களின் நாயகன் அல்லவா?’

நான் சிரித்தேன். ‘உண்மை. என் குரலை, என் சிந்தனையைக் கூட்டங்களில் உலவவிட்டுவிட்டு நான் நகர்ந்து சென்று வெளியே அமர்ந்துவிடுவேன்’.

‘அது எப்படி முடியும்? உன்னைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்கும் அல்லவா?’

‘அதைத்தான் சொல்கிறேன். என் சொற்கள் அவர்களுக்குப் போதும். நான் தேவையில்லை’.

‘நீயும் உன் சொற்களும் வேறா?’

‘இதில் என்ன சந்தேகம்? நூறு சதம் ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லை’.

‘மறுபடியும் நீ ஒரு சன்னியாசி இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது’.

மீண்டும் சிரித்தேன். ‘வினய், என் சன்னியாசம் முற்றிலும் சுயநலம் சார்ந்தது. என் சுதந்திரமே என் விழைவு. என் மகிழ்ச்சியே என் தியானப் பொருள். என் தேவைகளைத் தீர்த்துவைக்க மட்டுமே எனக்கு மனிதர்கள் வேண்டியிருக்கிறார்கள். என் தேவைகள் விரிந்து பரந்தவை என்பதால், உலகெங்கும் நான் அவர்களை விதைத்து வைக்கிறேன்’.

‘இதை உன் குரு அறிவாரா?’

‘நிச்சயமாக. நான் அவரிடம் எதையுமே மறைத்ததில்லை’.

‘அவர் உன்னை ஏற்றுக்கொண்டாரா?’

சிறிது யோசித்தேன். ‘அநேகமாக இல்லை என்றே நினைக்கிறேன். எனக்கும் அவருக்கும் பொருந்திப்போன விஷயங்கள் பல உண்டு. ஆனால் சில குறைந்தபட்ச சன்னியாச ஒழுக்கங்களைக்கூட நான் கடைப்பிடிப்பதில்லை என்பதில் அவருக்கு மிகுந்த வருத்தம் உண்டு’.

‘அதில் உனக்கு என்ன கஷ்டம்?’

‘அதுவும் ஒரு நிபந்தனையாகி விடுகிறதல்லவா? சுதந்திரம் என்பது எந்தத் தளையும் இல்லாதது. சன்னியாசத்தின் தளை உள்பட’.

அவன் அமைதியாக யோசித்தபடி நடந்துகொண்டிருந்தான். ரயில் பாதையில் நடக்கச் சற்று சிரமமாக இருந்தது. இருவருமே செருப்பு அணிந்திருந்தோம் என்றாலும், சரளைக் கற்களின் மீது நடக்கக் கஷ்டமாக இருந்தது. பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை அடைந்துவிட்டால் அங்கிருந்து மின்சார ரயில் பிடித்து சென்ட்ரலுக்குப் போய்விடலாம் என்று நினைத்துத்தான் நடக்க ஆரம்பித்தோம். ஆனால் நாங்கள் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்னால் சிக்னல் கிடைத்து வண்டியே கிளம்பிவிடுமோ என்று இப்போது தோன்றியது.

‘ஒருவிதத்தில் நாம் இருவருமே கடவுளைத் தொந்தரவு செய்ய விரும்பாதவர்களாக இருந்திருக்கிறோம்’ என்று வினய் சொன்னான்.

‘ஆமாம். ஆனால் என்னைவிட இந்த விஷயத்தில் நீதான் சிறந்தவன்’.

‘எப்படிச் சொல்கிறாய்?’

‘நான் நம்பாதவன். நான் தொந்தரவு செய்யாதது இயல்பானது. ஆனால் நீ கடவுள் நம்பிக்கை உள்ளவன். அப்படி இருந்தும் போய்க் காலில் விழாதிருப்பது பெரிய விஷயம்’.

‘உண்மைதான். என்னவோ ஒரு வெறுப்பு. ஒரு கோபம்’.

‘கடவுள் மீதா?’

‘ஆம். என்னைச் சக்கையாகப் பழிவாங்கிவிட்டான் பரதேசி’.

நான் சிரித்தேன். ‘அவனைத் தப்பு சொல்லாதே. நீ அவன் பழிவாங்க இடம் கொடுத்திருக்கிறாய். அது உன் தவறு’.

‘உண்மைதான். அண்ணா எனக்கு இன்னொரு வழியும் சொன்னான். மத்தியப் பிரதேசத்தில் ஏதோ ஒரு மலைக்குகை. இப்போது அதன் பெயர் மறந்துவிட்டது. அங்கே சென்று ஒரு வாரம் தங்கியிருக்கச் சொன்னான்’.

‘எதற்கு?’

‘எனக்கு ஒரு பாதை புலப்பட்டுவிடும் என்று சொன்னான்’.

‘அங்கே யாராவது சித்தர் இருந்தாரா?’

‘அதெல்லாம் இல்லை. ஆனால் பல சித்தர்களுக்கு அந்தக் குகை ஒரு அடைக்கல ஸ்தலம் என்று அவன் சொன்னான். அங்கே போனால் வெளிச்சம் பிறக்குமாம்’.

‘போக வேண்டியதுதானே?’

‘இதைத்தான் சொன்னேன், தக்க சமயத்தில் கடவுள் என்னைப் பழிவாங்கிவிடுவான் என்று’.

‘ஏன்? என்ன ஆயிற்று?’

‘அப்போது நான் அஸ்ஸாமில் இருந்தேன். அங்கிருந்து மத்தியப் பிரதேசம் போய்ச் சேரக் கையில் பணம் இல்லை’.

‘ஆனால் உன் இடாகினி உதவியிருக்க முடியுமே?’

‘அந்தப் பேச்சை எடுக்காதே. யாரும் உதவவில்லை என்பதுதான் இறுதி லாபம்’.

‘சரி. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திருக்கலாமே?’

‘அதற்கு விருப்பமில்லாமல் நடந்தே போக முடிவுசெய்து கிளம்பினேன்’.

‘அதுவும் நல்ல வழிதான்’.

‘அதுதான் முடியாமல் போய்விட்டது. வழியில் எனக்குக் காய்ச்சல் வந்தது. ஒரு மாதம் எழுந்திருக்கவே முடியாதபடி அடித்துப் போட்டுவிட்டது. உடல் எடை முப்பத்து ஒன்பது கிலோவுக்கு இறங்கிவிட்டது’.

‘அடப்பாவமே’.

‘ஒருவேளை மருந்தும் உட்கொள்ளவில்லை. ஒரு மாத காலமும் தண்ணீர் மட்டுமே குடித்துக்கொண்டிருந்தேன். எப்போதாவது ஒன்றிரண்டு வாழைப்பழம். வேறு உணவும் இல்லை’.

‘ஐயோ’.

‘கையில் ஒரு காசுகூட இல்லை. பிச்சை எடுக்கப் பிடிக்கவில்லை. திருட மனம் வரவில்லை. வேறு என்னதான் செய்வேன்?’

‘என்னதான் செய்தாய்?’

‘பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு காசிக்குப் போய் தங்கிவிட்டேன். ஏதாவது ஒரு தரும சத்திரத்தில் உணவு கிடைத்துவிடும். நதிக்கரையில் கட்டையைச் சாய்த்தால் கேட்பாரில்லை’.

நான் சிரித்தேன். ‘நினைவிருக்கிறதா வினய்? அண்ணா உணவை உத்தேசித்து திருப்பதிக்கு ஓடிப்போயிருப்பான் என்று நீதான் சொன்னாய்!’

‘ஆம். நான் உணவை உத்தேசித்துத்தான் காசிக்குப் போனேன். மூன்று வேளையும் அங்கே திருப்தியாகச் சாப்பிட்டேன். ஒரு கட்டத்தில், உணவுதான் பரம்பொருள் என்று நினைத்துவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்’.

எனக்கு அவன் மீது மிகவும் பரிவு உண்டானது. என் உடன் பிறந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த உலகில் யார் ஒருவனுக்கு இப்படிப்பட்ட தோல்வி ஏற்பட்டிருந்தாலும் நான் இப்படித்தான் வருந்துவேன் என்று தோன்றியது. இந்தக் காரணத்தாலேயே எனக்கு அண்ணாவின் மீது கட்டுக்கடங்காத கோபம் உண்டானது. எத்தனை பெரிய மடத்தனம் செய்திருக்கிறான்! வினய்யை அவன் வீட்டை விட்டு நகர்த்தியதில் இருந்து ஒரு கோடி பிழைகள். தன்னுடனாவது அவனை வைத்துக்கொண்டிருக்கலாம். அருகே இருந்து சொல்லிக்கொடுத்து ஏதாவது ஒரு வழியில் திருப்பிவிட்டிருக்கலாம். இப்படிப் பாதி வாழ்க்கை முடிந்த வயதில், புறப்பட்ட இடத்தில் இருந்து ஓரடி கூட முன்னேறாதிருப்பதன் அவலம் எத்தனை பெரிது!

‘அவன் வர வேண்டும் வினய். நான் அவனைச் சந்தித்தே தீர வேண்டும். நாக்கைப் பிடுங்கிக்கொள்கிறாற்போலக் கேட்கப்போகிறேன்’ என்று சொன்னேன்.

வினய் சிரித்தான்.

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘பிழை என்னுடையது. தவறுகளும் குற்றங்களும் என்னுடையவை. இதில் அவன் என்ன செய்ய முடியும்?’

‘பிழைபட்ட ஒரு வழியில் நீ போகத் தொடங்கியதுமே தடுத்திருக்க வேண்டும். அந்தக் கடமை தனக்கு இல்லை என்று நினைத்திருந்தால் உன் பக்கமே முதலில் இருந்து அவன் திரும்பியிருக்கக் கூடாது’.

‘அதெப்படி? உன்னைக்கூட அந்தத் திருவானைக்கா சித்தன் பக்கம் அவன்தானே திருப்பினான்?’

‘யார் சொன்னது? என்னைப் பற்றி அவன் சொரிமுத்துவிடம் சொல்லியிருக்கிறான். அவ்வளவுதான். கோயிலில் சொரிமுத்து என்னைக் கண்டது தற்செயல். கண்ட மாத்திரத்தில் அவன் என்னை அழைத்துக்கொண்டு போய்விட்டான்’.

‘எனக்கென்னவோ வினோத்தும் சொரிமுத்துவைப் பார்த்திருப்பான் என்றுதான் தோன்றுகிறது’.

இதற்கு நான் வாய்விட்டுச் சிரித்தேன். ‘இருக்கலாம். நம் குடும்பத்தின் நம்பகமான டிராவல் ஏஜெண்ட்’.

வினய்யும் சிரித்தான்.

‘அவன் மட்டும் சாகாதிருப்பானேயானால், நிச்சயமாக நான் திருச்சிக்குச் சென்று அவனைச் சந்தித்துவிட்டுத்தான் ஊர் திரும்புவேன்’ என்று சொன்னேன்.

‘சந்தித்தால் என்ன கேட்பாய்?’

‘கேட்க என்ன இருக்கிறது? அவனுக்கு ஆசி வழங்கிவிட்டுப் போவேன். அடுத்த பிறப்பிலாவது அவன் திருந்தி வாழப் பிரார்த்தனை செய்வேன். அவ்வளவுதான்’.

வினய் அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தான்.

‘ஏன் அப்படிப் பார்க்கிறாய்? சன்னியாசம் என்பது ஒரு மனநிலை. ஒரு ஏடு சொல்லிவிட்டது என்பதற்காக நான்கு பேர் மீது அதனைத் திணிப்பது நியாயமான செயலே அல்ல’ என்று சொன்னேன்.

‘திணிக்கப்பட்டதாகவா நீ உணர்கிறாய்?’

‘என்னை விடு. என் வழி வேறு. இது நான் விரும்பி அடைந்தது. ஆனால் நீ அப்படியல்ல. நிச்சயமாக அல்ல’.

‘அண்ணாவும் விரும்பித்தானே போனான்?’

&யார் கண்டது? சிறு வயதிலேயே அவனை யாராவது மூளைச் சலவை செய்திருக்கலாம்’.

‘அப்படிச் சொல்லாதே. அவன் ஒரு யோகி’.

‘வரட்டும் பேசிக்கொள்கிறேன்’.

நாங்கள் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை அடைந்து களைப்புத் தீர சிறிது நேரம் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தோம். அங்கிருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்தோம். முகம் கழுவிக்கொண்டு ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.

‘எனக்கு வியப்பாக இருக்கிறது. இங்கே உன்னை அடையாளம் கண்டுகொண்டு இதுவரை யாருமே அருகே வரவில்லை’ என்று வினய் சொன்னான்.

‘சொன்னேனே. தமிழ்நாட்டில் நான் பிரபலம் இல்லை’.

‘இருந்தாலும் முகம்கூடவா தெரிந்திருக்காது?’'

‘தெரியாத வரை சந்தோஷம். வா போகலாம்’ என்று கிளம்பினேன். அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் வரை செல்லும் ரயில் ஒன்று வந்து நின்றது. நாங்கள் அதில் ஏறப்போன சமயம், அந்த ரயிலில் இருந்து வினோத் இறங்கினான்.

அது வினோத் தானா என்று எனக்குச் சிறிது சந்தேகம் உண்டானது. வினய் பார்த்ததுமே ‘வினோத்’ என்று கத்திவிட்டான். அவனால் நம்பவே முடியவில்லை. வினோத்தும் எங்களைப் பார்த்தான். எத்தனை வயதானால் என்ன, வருடங்கள் ஆனால் என்ன? ஒரு புன்னகையில் உதிர்ந்த காலங்களை எழுப்பிக் கட்டிவிட முடிகிறது.

வினோத் எங்களை நெருங்கி வந்தான். புன்னகை செய்தான். ஹரே கிருஷ்ணா என்று சொன்னான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com