70. கொன்றவன்

கொலை என்பது ஒரு செயல். மரணம் என்பது ஒரு நிகழ்வு. காரணம் இதில் தேவையில்லாதது. ஒரு பூவைப் பறிப்பது போல. ஒரு பழத்தை மரத்தில் இருந்து கொய்வதுபோலத்தான் உடலில் இருந்து உயிரைப் பிடுங்குவதும்.

மிருதுளா பயந்திருந்தாள். பேரச்சத்தின் மைய மின்சாரப் புள்ளியை அவள் கண்களில் நான் பார்த்துவிட்டேன். இருள் பிரியாத அதிகாலை நேரத்தில் ஒன்பது உயிர்கள் நடுச் சாலையில் உடலை விட்டுப் பிரிந்திருக்கின்றன. அவர்கள் யார்? அத்தனை பேரையும் மொத்தமாகக் கொன்று குவிக்கும் வெறி எப்படி ஒரு மனிதப் பிறவிக்கு ஏற்படும்? கொள்கையா? யுத்தமா? பழிவாங்கும் வெறியா? வேறென்னவாகவும் இருக்கட்டும். ஒரு உயிர் என்பது பெரிதல்லவா?

நான் சொன்னேன். ‘உயிர் பெரிதுதான். உயிர் துறத்தல் அதைவிடப் பெரிது.’

‘குருஜி அவர்கள் வெறும் கொள்ளைக்காரர்களாக இருப்பார்களா? பணத்துக்காகவோ, பொருளுக்காகவோ இதை அவர்கள் செய்திருப்பார்கள் என்றால் சத்தியமாக நான் சாகும்வரை அவர்களை மன்னிக்கமாட்டேன்’ என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாள்.

‘பெண்ணே, கொலை என்பது ஒரு செயல். மரணம் என்பது ஒரு நிகழ்வு. காரணம் இதில் தேவையில்லாதது. ஒரு பூவைப் பறிப்பது போல. ஒரு பழத்தை மரத்தில் இருந்து கொய்வதுபோலத்தான் உடலில் இருந்து உயிரைப் பிடுங்குவதும். இது பாவமென்றால் நீ வாழைப்பழம் சாப்பிடுவதும் பாவம். இதனை நீ மன்னிக்கமாட்டாய் என்றால், நீ பூஜைக்காக தினமும் வீட்டுத் தோட்டத்தில் பூப்பறிப்பதையும் மன்னிக்க இயலாமல் போய்விடும்.’

அவள் அதிர்ந்துவிட்டாள். ‘என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? மனிதன் மகத்தானவன் அல்லவா!’

‘சந்தேகமில்லை மிருதுளா. மரணம் அதனினும் மகத்தானது’ என்று சொன்னேன். எனக்கு அப்போது வினய் அந்த மார்த்தாண்டத்துக்காரனுக்கு எள்ளுருண்டை எடுத்துச் சென்ற கதை தெரியாது. அவனை முன்னதாகச் சந்தித்திருந்தால் அந்தச் சம்பவத்தை நான் மிருதுளாவிடம் சொல்லியிருப்பேன். அவளுக்கு நான் வேறொரு கதை சொன்னேன்.

அது நான் என் குருநாதருடன் வாழ்ந்துகொண்டிருந்த காலம். ஒரு பனிக்காலத்தில் அவரைத் தேடி ஓர் இசைக்கலைஞர் எங்கள் ஆசிரமத்துக்கு வந்தார். குருநாதருக்குத் திரைப்படமெல்லாம் தெரியாது. நடிகர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் குறித்தெல்லாம் அறிந்துகொள்வதில் அவர் ஆர்வம் செலுத்தியதில்லை. ஆசிரமத்துக்கு வருபவர் யாராக இருந்தாலும் கூப்பிட்டு உட்காரவைத்துப் பேசுவது அவர் வழக்கம். அப்படித்தான் அவர் அந்த இசைக்கலைஞருடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் இந்தியா முழுதும் பிரபலமான ஒரு பாடகர். லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கொண்டவர். செல்வத்துக்கோ புகழுக்கோ பஞ்சமற்ற பெருவாழ்வு வாழ்ந்துகொண்டிருந்தவர். ஆனாலும் அவருக்கு வாழ்வில் நிம்மதி இல்லாமல் இருந்தது. காரணம் அவருக்கு இருந்த ஒரு வியாதி. அது என்ன வியாதி என்று குருஜி எங்களிடம் இறுதிவரை சொல்லவில்லை. நிச்சயமாகப் புற்று நோயாக இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றியது. ஒரு புற்று நோயாளிக்குரிய தோற்றம் அவருக்கு இல்லை. மினுமினுப்பிலும் ஊட்டச் செழுமையிலும் குறைவற்றிருந்தார். இருந்தாலும் ஒரு வியாதி. வேறு ஏதோ ஒன்று. அது முக்கியமல்ல.

குருவிடம் அவர் தனது வியாதியைக் குறித்து நெடு நேரம் புலம்பிக்கொண்டிருந்தார். ‘இதில் இருந்து எனக்கு விடுதலை வேண்டும்’ என்று சொன்னார்.

குருஜி திரும்பத் திரும்ப அவரிடம் கேட்டதெல்லாம் ஒரே ஒரு வினாதான். ‘உண்மையிலேயே நீங்கள் விடுதலையை விரும்புகிறீர்களா?’

அவர் ஆம் என்று தீர்மானமாகச் சொன்ன பிறகு அன்றிரவு மட்டும் அவரை எங்கள் ஆசிரமத்திலேயே குருநாதர் தங்கச் சொன்னார். மறுநாள் அதிகாலை அவருக்குத் தன் கையாலேயே ஏதோ ஒரு மூலிகையை அரைத்துக் கொடுத்து மோருடன் விழுங்கச் சொல்லி ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்.

ஓரிரு வாரங்களில் செய்தித் தாள்களில் அவர் காலமான செய்தி வந்தது. நான் அதை குருவிடம் சொன்னபோது, ‘நான் என்ன செய்ய? விடுதலை என்பதே அவரது கடைசி ஆசையாக இருந்தது. மிகவும் வற்புறுத்தியதால் செய்யவேண்டியதாகிவிட்டது’ என்று சொன்னார்.

மிருதுளாவுக்கு நான் இந்தக் கதையைச் சொன்னபோது அவள் அதிர்ச்சியில் பேச்சற்றுப் போய்விட்டாள். உண்மையாகவா, உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் கேட்டாள்.

‘பெண்ணே, நான் பொய் சொல்வதில்லை. அது ஒரு சுமை.’

‘கொலை பாவமே இல்லையா?’

‘பாவம் என்றே ஒன்றில்லை என்கிறேன்.’

‘அப்படியானால் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் உங்களை பாதிக்கவேயில்லையா?’

‘நிச்சயமாக பாதித்தது மிருதுளா. ஆனால் அது உன்னை பாதித்ததற்கும் என்னை பாதித்ததற்கும் ரக வித்தியாசம் உண்டு.’

‘அப்படியென்றால்?’

‘ரத்தம் உன்னை நிலைகுலைய வைத்தது. சரியா?’

‘ஆம்.’

‘நான் சுட்டுக் கொன்றவனின் மன வரைபடத்தை யோசிக்கிறேன். இறந்தவனின் இயலாமையின் பின்னணி என்னவாயிருக்கும் என்று யோசிக்கிறேன். இரண்டுமே கோரமானவை. இரண்டுமே சகிக்க முடியாதவை. இரண்டின் பின்னாலும் இருந்திருக்கக்கூடிய மோசமான வளர்ப்பு, மோசமான கல்வி, மோசமான சமூகச் சூழலைப் பற்றிச் சிந்திக்கிறேன்.’

‘ஆக, கண்ணீருக்கு உங்களிடம் வேலையில்லை.’

‘ஒரு மரணத்துக்குக் கண்ணீர் சிந்துபவன் துறவியாக இருக்க முடியாது பெண்ணே. மரணம் ஒரு விடுதலை. துறவு வேறுவித விடுதலை.’

எப்படி முடியும், எப்படி முடியும் என்று அவள் திரும்பத் திரும்பக் கேட்டாள். ஒரு மனிதனின் மரணம் நிலைகுலையச் செய்யாமல் போய்விடுமா? அங்கேயும்கூட அறிவுதான் தீட்டிக்கொண்டு முன்னால் நிற்குமா? மனித வாழ்வைக் காட்டிலும் மகத்தான ஒன்று வேறென்ன உள்ளது?

நான் புன்னகை செய்தேன். ‘மனிதன் மகத்தானவன் என்று உனக்கு யார் சொன்னது?’

‘எனில், வேறு எதுதான் மகத்தானது?’

‘மகத்தான எதையும் படைக்காமல் கவனம் காக்கும் இயற்கையை வேண்டுமானால் சொல்லலாம்.’

அவளுக்கு நான் சொன்னது புரியவில்லை. ஆனால் நிச்சயமாக யோசிப்பாள் என்று தோன்றியது.

உண்மையில் மரணத்தைக் குறித்த எனது தீர்மானங்கள் யாராலும் எளிதில் ஜீரணிக்கத் தகுந்ததாக இருக்காது என்பது எனக்குத் தெரியும். அம்மா இறக்கப் போகிறாள் என்று கேசவன் மாமாவிடம் இருந்து தகவல் வந்ததும் நான் இதையெல்லாம்தான் எண்ணிப் பார்த்துக்கொண்டேன்.

அன்றைக்கு மிருதுளா மிகவும் குழப்பமாக இருந்தாள். அவளால் ஓரிடத்தில் அமரக்கூட முடியவில்லை. விடுதி அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டே இருந்தாள். அந்தச் சம்பவம் நடந்த இருபது நிமிடங்களுக்குப் பிறகு மெக்சிகன் போலிசார் அங்கே வந்து சேர்ந்தார்கள். பிணங்களை அப்புறப்படுத்திவிட்டு, சாலையில் படர்ந்திருந்த உதிரத்தைத் தண்ணீர் ஊற்றிக் கழுவ ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்கள். யாரும் விழித்திருந்த சமயமல்ல என்பதால் அவர்களால் அதிகம் பேரை விசாரிக்க முடியவில்லை. என்னைக் கேட்டிருந்தால் நான் ஒரு தகவல் சொல்லியிருப்பேன். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் நான் ஓடிச் சென்று ஜன்னலைத் திறந்து பார்த்தேன். சுட்டுக்கொண்டிருந்தவர்களுள் ஒருவனது தலை சரி பாதி சிரைத்திருந்தது. ஒரு பக்கம் மட்டும் முடி வைத்திருந்தான். அந்தத் தோற்றம் எனக்கு வினோதமாக இருந்தது. ஒருவேளை மெக்சிகோவில் இது இளைஞர்களிடையே புழக்கத்தில் உள்ள நாகரிகமாயிருக்கும் என்று எண்ணினேன். அப்படி இல்லாத பட்சத்தில், அந்தத் தகவல் நிச்சயமாகக் காவல் துறைக்கு உதவிகரமாக இருக்கும். ஒரு பக்கம் மழுங்கச் சிரைத்தவன். தேடிக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமம் இராது என்று தோன்றியது.

எட்டு மணி ஆனபோது நான் கிளம்ப வேண்டும் என்பதை மிருதுளாவுக்கு நினைவுபடுத்தினேன். அவள் நெடுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, ‘மன்னித்துக்கொள்ளுங்கள் குருஜி. நீங்கள் மட்டும் போய் வாருங்கள். என்னால் இன்று யாருடனும் சகஜமாகப் பேச முடியும் என்று தோன்றவில்லை. நான் மிகவும் உடைந்திருக்கிறேன்’ என்று சொன்னாள்.

நான் அவளை வற்புறுத்த விரும்பவில்லை. குளித்துவிட்டு நான் மட்டும் தயாரானேன். ஒரு காப்பி மட்டும் அருந்திவிட்டு, மிருதுளாவுக்கு காலை உணவுக்குச் சொல்லிவிட்டு வண்டி வருவதற்காகக் காத்திருந்தேன். சரியாக ஒன்பது மணிக்கு எனக்கான வண்டி வந்துவிட்டது. கீழே இருந்து என்னைக் கூப்பிட்டார்கள். வருகிறேன் என்று சொல்லிவிட்டு, மிருதுளாவிடம் கதவைப் பூட்டிக்கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றேன்.

முதல் நாள் வந்தபோது நான் அந்த விடுதியைச் சரியாகப் பார்க்கவில்லை. இப்போதுதான் பார்த்தேன். அது ஒரு புராதனமான தங்கும் விடுதி. சுவர்களுக்கு அவர்கள் சுண்ணாம்பு அடித்திருக்கவில்லை. பெரிய பெரிய பாறாங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவர்கள் அப்படி அப்படியே விடப்பட்டிருந்ததால், ஒரு தோற்றத்தில் அந்த விடுதியே ஒரு பெரும் குகை போலிருந்தது. தரையெங்கும் மரத்தால் இட்டு நிரப்பியிருந்தார்கள். எனவே நடக்கும்போது பலத்த சத்தம் எழுந்தது. எந்தச் சுவரிலும் விளக்குகள் இல்லை. மாறாக ஆங்காங்கே தரையிலேயே விளக்குகளை எரியவிட்டு அதன்மீது பின்புறம் ஓட்டையிடப்பட்ட மண் பானைகளைக் கவிழ்த்திருந்தார்கள். ஜப்பானியர்களைப் போலப் பாய்களைத் தொங்கவிட்டு அலங்காரம் செய்திருந்தார்கள். முயற்சி புரிந்தது. ஆனால் அந்த விடுதி என்னை அவ்வளவாகக் கவரவில்லை. நான் குடித்த காப்பி நன்றாக இல்லாததும் ஒரு காரணமாயிருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

வரவேற்பரையில் இருந்த பெண்ணிடம் நான் கிளம்புவதாகச் சொன்னேன். என்னோடு வந்திருக்கும் பெண் அறையில்தான் இருக்கிறாள்; அவளைக் கவனித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடுதியைவிட்டு வெளியே வந்தேன். எனக்காகக் காத்திருந்த நீண்ட நெடிய கறுப்பு நிற வேனில் ஏறி அமர்ந்தபோது வண்டி ஓட்டுநர் என்னைத் திரும்பிப் பார்த்து வணக்கம் சொன்னான்.

அவன்தான். எனக்குப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது. தலையை ஒரு பக்கம் மட்டும் மழுங்கச் சிரைத்தவன். என் அடையாளத்தை உறுதிப் படுத்திக்கொண்டதும் அவன் சிநேகமாக என்னைப் பார்த்துச் சிரித்தான். மெக்சிகோவுக்கு நல்வரவு என்று சொன்னான்.

‘இதே இடத்துக்கு இன்று நீ இரண்டு முறை வரவேண்டியதாகிவிட்டதல்லவா?’ என்று கேட்டேன்.

அவன் சற்றும் யோசிக்கவில்லை; திடுக்கிடவும் இல்லை. ‘ஓ, அதிகாலை விழித்திருந்து பார்த்தீர்களா?’ என்று கேட்டான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com