74. சிவன் செயல்

பதினெட்டாம் பெருக்குக்கு திருச்சி போயிருந்தோம். கொள்ளிடத்துல குளிச்சிண்டிருந்தப்போ என் கையிலே ஒரு லிங்கம் தட்டுப்பட்டுது.

அம்மா ஒரு குருவியைப் போலாகிவிட்டாள் என்று கேசவன் மாமா சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாளே அவள் கல்யாணத்துக்கு ஆயத்தமாகத் தொடங்கிவிட்டாள். ‘கல்யாணப் பரபரப்பு பொண்ணாத்துக்காராளுக்கு. நீ எதுக்கு இப்படி அலைஞ்சிண்டே இருக்கே?’ என்று அப்பா கேட்டார். அம்மா அதையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. பத்மா மாமியும் அவரது கணவரும் புடைவை வாங்கக் கிளம்பியபோது, அம்மாவும் அவர்களோடு கடைக்குப் போனாள். நகை வாங்க, பத்திரிகை அச்சடிக்க, சமையல்காரனுக்குச் சொல்ல - எதையுமே அவள் விடவில்லை. பத்மா மாமியே அம்மாவிடம் கேட்டிருக்கிறாள், ‘பொண்ணும் பிள்ளையும் இடம் மாறிப் பொறந்துட்ட மாதிரின்னா இருக்கு?’ அம்மா சிரித்தாளே தவிர எதையும் நிறுத்திக்கொள்ளவில்லை. திருவிடந்தை முழுதும் ஒரு வீடு மிச்சமில்லாமல் படியேறிச் சென்று பத்திரிகை கொடுத்துவிட்டு வந்தாள்.

திருமணத்துக்கு முன்பு நான்கு முறை வினோத், சித்ராவை அழைத்துக்கொண்டு வெளியே போய்வந்ததாக கேசவன் மாமா சொன்னார். ஒரு முறை கேளம்பாக்கம் ராஜலட்சுமி தியேட்டருக்கு. மறுமுறை மகாபலிபுரம் போய்வந்திருக்கிறான். மூன்றாம் முறை அவன் வெளியே போவதாகச் சொன்னபோது, ‘எதுக்குடா?’ என்று அம்மா கேட்டிருக்கிறாள். ‘சித்ரா ஆசைப்படறாம்மா’ என்று வெட்கப்பட்டுக்கொண்டே வினோத் பதில் சொன்னான். அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அம்முறை அவன் சித்ராவோடு மெரினா கடற்கரைக்குப் போயிருக்கிறான். அன்றிரவெல்லாம் மாமாவிடம் தனது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஆர்வத்தோடு பேசியிருக்கிறான்.

‘எனக்குப் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லே மாமா. அம்மா அப்பா காலம் வரைக்கும் அவாளோடகூட இருக்கணும். கடன் இல்லாம வாழணும். வீதியிலே இறங்கி நடந்துபோனா நாலு பேர் கையெடுத்துக் கும்பிடலைன்னா பரவால்லே. ஆனா போறான் பாரு சனியன்னு சொல்லிடக் கூடாது.’

மாமாவுக்கு அவன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் ஆனதில் மிகுந்த பெருமிதம் உண்டாகியிருந்தது. பி.டி. பரீட்சையில் அவன் தேறிய தினத்தன்று, கோயிலில் அவர் தனது செலவில் சர்க்கரைப் பொங்கல் தளிகை விட்டார். ‘இவ்ளோதாண்டா வினோத். எவ்ளோ சம்பாதிக்கறோம்ன்றது பெரிசே இல்லை. ஆயிரத்துலயும் வாழ முடியும். பத்தாயிரத்துலயும் வாழ முடியும். லட்சத்துலயும் வாழ முடியும். ஆனா வாழறோமா? அவ்ளோதான்’ என்று கேசவன் மாமா சொன்னார்.

வினோத் திருமணத்தை முன்னிட்டு, அப்பா வீட்டைச் செப்பனிட முடிவு செய்தார். கட்டிய நாளாக எங்கள் வீட்டில் எந்த மராமத்துப் பணியும் நடந்ததில்லை. கட்டப்பட்டபோது அந்தச் சுவருக்கு என்ன நிறம் இருந்திருக்கும் என்று குத்துமதிப்பாக யூகிக்கலாமே தவிர, கண்ணுக்குத் தெரியாது. தரை பல இடங்களில் விரிசல் கண்டிருக்கும். முற்றத்தை ஒட்டிய நான்கு தூண்களுமே பூச்சி அரித்து உதிர ஆரம்பித்திருந்தன. கதவுகள், சன்னல்கள் யாவும் புராதனமானவை. கறுப்பேறியவை. பொதுவாகக் கோயிலைச் சுற்றியுள்ள வீடுகள் அனைத்துமே இப்படித்தான் இருக்கும். அவரவர் வசதிக்கு ஏற்பச் செப்பனிட்டுக் கொள்ளலாமே தவிர, அவற்றின் தோற்றத்தில் பெரிய மாறுதல்கள் வராது.

ஏனோ எங்கள் வீட்டில் எக்காலத்திலும் மராமத்துப் பணிகள் நடைபெற்றதில்லை. நாங்கள் மூன்று பேர் ஒவ்வொருவராக வீட்டை விட்டுப் போனது காரணமாயிருக்கலாம். மொத்தமாக இடிந்து தலையில் விழுந்தால் இனியும் யாரும் ஓடிப் போகமாட்டார்கள் என்று அப்பா கருதியிருக்கலாம். ஒரு வழியாக வினோத் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதில் அந்த வீட்டுக்கு ஒரு கதி மோட்சம் கிடைத்தது.

கேசவன் மாமா திருப்போரூரில் இருந்து ஒரு மேஸ்திரியை அழைத்து வந்து வீட்டைக் காட்டினார். இரண்டு மணி நேரம் அவன் வீட்டை அலசிவிட்டு அறுபதாயிரத்துக்குச் செலவுக் கணக்கு சொல்லிவிட்டுப் போனான். அப்பா அதிகம் யோசிக்கவில்லை. அந்த வாரத்திலேயே ஒரு நல்ல நாள் பார்த்து அவனை ஆள்களோடு வரச் சொல்லிவிட்டார். அம்மா மொத்த வீட்டையும் ஒழித்து எடுத்துக்கொண்டு, ஓர் அறைக்குள் சென்று அடைந்துகொண்டாள். அங்கேயேதான் சமையல். அங்கேயேதான் படுக்கை. நாளெல்லாம் வேலை நடந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத அளவுக்கு வீடெங்கும் தூசு நிரம்பித் ததும்பிக்கொண்டிருந்ததாகக் கேசவன் மாமா சொன்னார்.

சுண்ணாம்புத் தூசு மிக அதிகம் இருந்ததில் வினோத்துக்கு ஜலதோஷம் பிடித்துக்கொண்டது. அம்மா மிகவும் கவலையாகிவிட்டாள். உடனே மாமாவை அனுப்பி எங்கிருந்தோ சித்தரத்தை இலைகளைப் பறித்து வரச்சொல்லி கஷாயம் போட்டுக் கொடுத்தாள். அப்பா வெந்நீரில் நீலகிரித் தைலத்தைப் போட்டு அவனை ஆவி பிடிக்கச் சொன்னார். அவன் உறங்கி வெகு நேரம் ஆனபின்பும் அருகே உட்கார்ந்து அவனுக்குத் தலை பிடித்துவிட்டதாகக் கேசவன் மாமா சொன்னார்.

இடைப்பட்ட நாள்களில் அம்மாவும் பத்மா மாமியும் முன்பைக் காட்டிலும் மிகுந்த சிநேகம் கொண்டுவிட்டிருந்தார்கள். நொடிக்கொருதரம் மாமி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுப் போவாள். உங்கள காணமேன்னுதான் நானே வந்தேன் என்றபடி அம்மா அவர்கள் வீட்டுக்குப் போக ஆரம்பித்தாள். தினசரி குழம்பு, சாற்றமுது வரை இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் போக வரத் தொடங்கியது மாமாவுக்கே மிகவும் புதிதாக இருந்திருக்கிறது.

‘ஏதேது, சம்மந்தியாகப் போறவா இப்படியா இருப்பா?’ என்று யாரோ கோயிலில் பார்த்து அம்மாவிடம் கேட்டிருக்கிறார்கள். ‘ஒண்ணும் தப்பில்லே. கண்ணு போடாதிங்கோ’ என்று அம்மா சொல்லிவிட்டாள்.

திருவிடந்தையில் கல்யாண மண்டபமெல்லாம் கிடையாது. பத்மா மாமிக்கு எப்படியாவது நித்ய கல்யாணப் பெருமாளின் கண் பார்வைக்கு உட்பட்ட இடத்துக்குள் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று ஆசை. ஆனால் கோயிலில் கல்யாணம் நடத்தும் வழக்கம் கிடையாது. மண்டபம் பார்த்துத்தான் செய்தாக வேண்டும். என்ன செய்யலாம் என்று மாமியும் அவரது கணவரும் அப்பாவிடம் வந்து கேட்டார்கள்.

‘மண்டபம் பார்த்துத்தான் பண்ணனும்னெல்லாம் இல்லே. நீங்க உங்காத்துலேயே வெச்சாக்கூட எங்களுக்குப் பிரச்னை இல்லை. என்னடா வினோத்?’ என்று அப்பா, வினோத்தைக் கேட்டிருக்கிறார். இறுதியில் அப்படித்தான் முடிவு செய்தார்கள். சித்ரா வீட்டு வாசலில் பந்தல் போட்டுக் கல்யாணம். நான்கு மாட வீதிகளையும் சுற்றி ஜானவாச ஊர்வலம் நடத்த வேண்டும் என்று கேசவன் மாமா சொன்னார்.

‘ஓ பேஷா! நான் இன்னிக்கே படூருக்குப் போய் ஜானவாச கார் புக் பண்ணிட்டு வந்துடறேன்’ என்று சித்ராவின் அப்பா அங்கிருந்தே எழுந்து ஓடினார்.

பத்து நாள்களில் வீட்டில் மராமத்துப் பணிகள் யாவும் நிறைவு பெற்றன. பளிச்சென்று மஞ்சள் சுண்ணாம்பு பூசி வீடு அமர்க்களமாகிவிட்டது. வினோத்தின் அறைக்கு மட்டும் அப்பா மொசைக் தரை போடச் சொல்லியிருந்தார். அந்த அறையின் சுவர்களுக்கு மட்டும் நீல நிற சுண்ணாம்பு. யாரிடமோ சொல்லிவைத்து செகண்ட் ஹேண்டில் அப்பா ஒரு ஏர் கண்டிஷனர் பெட்டி வாங்கி வந்து அந்த அறைக்குள் பொருத்தினார்.

‘எதுக்குப்பா இதெல்லாம்?’ என்று வினோத் சங்கடப்பட்டான்.

‘இருக்கட்டும்டா. வேர்த்துதுன்னா நானும் வந்து உக்காந்துப்பேன்’ என்று அப்பா சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு நகர்ந்து போனார்.

வினோத்திடம் அப்போது நான்கு சிறுவர்கள் ட்யூஷன் படித்துக்கொண்டிருந்தார்கள். எட்டாவது, ஒன்பதாவது வகுப்புப் பையன்கள். அம்மா அவர்களுக்கும் கல்யாணத்துக்குப் புதிய சட்டை எடுத்திருந்தாள். ஊரில் இருந்த உறவுக்காரர்கள் ஒவ்வொருவரையாக நினைவுகூர்ந்து உறவைப் புதுப்பித்து நேரில் சென்று பத்திரிகை கொடுத்துத் திருமணத்துக்கு அழைத்துவிட்டு வந்தார்கள்.

மூன்று நாளில் கல்யாணம் என்று நெருங்கி வந்தபோது, வினோத் நான்காவது முறையாக சித்ராவை அழைத்துக்கொண்டு வெளியே போனான். இம்முறை அவன் யாரிடமும் சொல்லிவிட்டுச் செல்லவில்லை. கோவளத்தில் தன்னோடு படித்த பெண்களுக்குப் பத்திரிகை கொடுத்துவிட்டு சித்ரா வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பள்ளிக்கூடம் விட்டு வந்துகொண்டிருந்த வினோத் அவளை வழியில் பார்த்தான். ‘நீலாங்கரை வரைக்கும் போயிட்டு வரலாமா?’ என்று கேட்டபோது அவள் மறுக்கவில்லை. வினோத் தன் சைக்கிளில் அவளை ஏறிக்கொள்ளும்படிச் சொன்னான். இருவரும் சைக்கிளிலேயே நீலாங்கரைக்குப் போனார்கள்.

வினோத்தின் நண்பன் ஒருவன் அங்கே ஒரு ஓட்டல் வைத்து நடத்திக்கொண்டிருந்தான். கடற்கரையோரத்தில் ஓலைக் கூரை வேய்ந்த ஓட்டல். அந்நாள்களில் அம்மாதிரியான உணவகங்கள் பிராந்தியத்தில் வேறு கிடையாது. கடலைப் பார்த்துக்கொண்டே காப்பி அருந்தலாம். சூடாக போண்டா, பஜ்ஜி, மசால் தோசை கிடைக்கும். மகாபலிபுரத்துக்கு வருகிற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அம்மாதிரியான உணவகங்களே மிகவும் பிடித்திருப்பதாக யாரோ வினோத்தின் நண்பனிடம் சொல்லியிருக்கிறார்கள். அவனுக்கு மகாபலிபுரத்தில் ஓட்டல் நடத்த வசதி இல்லை என்பதால் நீலாங்கரையில் ஆரம்பித்திருந்தான்.

வினோத், சித்ராவுடன் அந்த உணவகத்துக்கு சைக்கிளில் சென்று இறங்கினான். நண்பனுக்குப் பத்திரிகை கொடுத்து திருமணத்துக்கு அழைத்துவிட்டு, இருவரும் ஒரு மேசையின் எதிரெதிரே அமர்ந்து காப்பி சாப்பிட்டார்கள். அப்போதுதான் வினோத் அவளிடம் தன்னைக் குறித்த ஒரு தகவலை வெளிப்படுத்தியிருக்கிறான்.

‘சித்ரா உன்கிட்டே ஒண்ணு சொல்லணும்.’

‘உம்.’

‘ஐயங்காராத்துப் பையன்னாலும் நான் ஒரு சிவ பக்தன்.’

‘அப்படியா?’ என்று சித்ரா கேட்டாள். அவள் பார்வையில் மிகுந்த வியப்பு இருந்ததை வினோத் கவனித்தான்.

‘இந்த விஷயம் இத்தன காலமா ஆத்துல யாருக்கும் தெரியாது. நான் சொல்லிண்டதில்லை.’

‘அதெப்படி முடியும்?’

‘முடிஞ்சிருக்கே. மனசுக்குள்ள எனக்கு ஒரே கடவுள் சிவன்தான். வேற யாரையும் சேவிக்கறதில்லை. ஒண்ணு தெரியுமா? நான் நம்ம கோயிலுக்குப் போயே பல வருஷமாச்சு.’

‘நம்பவே முடியலே. எப்பலேருந்து இது?’

‘சின்ன வயசுலேருந்தே. ஒருவாட்டி, பதினெட்டாம் பெருக்குக்கு திருச்சி போயிருந்தோம். கொள்ளிடத்துல குளிச்சிண்டிருந்தப்போ என் கையிலே ஒரு லிங்கம் தட்டுப்பட்டுது.’

‘வெச்சிருக்கேளா?’

‘இருக்கு. பத்திரமா என் பெட்டிக்குள்ள வெச்சிருக்கேன். தெனம் ராத்திரி எடுத்து வெளில வெச்சிண்டு பூஜை பண்ணி ஏளப்பண்ணிடுவேன்.’

‘உங்கம்மாக்கு தெரியாதா?’

‘சொன்னதில்லை.’

‘ஏன்?’

‘ஏன்னு சட்டுனு சொல்லத் தெரியலை. என்னமோ அப்ப சொல்லத் தோணலை. அப்பறம் அப்படியே பழகிடுத்து.’

‘ஒண்ணு கேக்கறேன். லிங்கம் கிடைச்சதால சிவ பக்தரானேளா? இல்லே அதுக்கு முன்னாடியேவா?’

வினோத் ஒரு கணம் யோசித்தான். பிறகு, ‘லிங்கம் கிடைச்சப்பறம்தான்’ என்று சொன்னான்.

சித்ராவுக்கு அதற்குமேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. ஒன்றும் பேசாதிருப்பது சரியில்லை என்று தோன்றியிருக்கும் போல. ‘ஒண்ணும் தப்பில்லியே. சிவனும் ஒரு கடவுள்தானே’ என்று சொன்னாள்.

‘அப்ப நீ என்னைத் தப்பா நினைக்கமாட்டே இல்லியா?’

‘இதை எதுக்கு தப்பா நினைக்கணும்? நீங்க நாஸ்திகரா இருந்தாலும் நான் தப்பா நினைக்கமாட்டேன். அதெல்லாம் அவாவா இஷ்டம்.’

மறுநாள் காலை முதல் இரு வீடுகளும் உறவினர்களால் நிரம்ப ஆரம்பித்துவிட்டன. மாப்பிள்ளை அழைப்பு முடிந்து வினோத் ஜானவாச காரில் ஏறி அமர்ந்தபோது, கேசவன் மாமா எங்கிருந்தோ ஓடிவந்து அவன் கையில் ஒரு பூச்செண்டைக் கொடுத்தார். பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வெளிச்சத்தில் ஜானவாச கார் நான்கு மாட வீதிகளையும் மெல்லச் சுற்றி வந்ததை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அள்ளிப் பிடிக்க முடியாத சந்தோஷம். அப்பா நாகஸ்வர வித்வானிடம், ‘இதை வாசி அதை வாசி’ என்று அமர்க்களப்படுத்திக்கொண்டே வந்தார். அன்றைய ஜானவாச விருந்து உலகத்தரத்தில் இருந்ததாகக் கேசவன் மாமா சொன்னார்.

‘அந்த மனுஷனுக்கு எப்பேர்ப்பட்ட மனசு தெரியுமா? நடக்காமலே போயிடுமோன்னு நினைச்ச பொண்ணு கல்யாணமோல்யோ? அதான், அமர்க்களப்படுத்திப்பிட்டார்’ என்று சொன்னார்.

மறுநாள் காலை ஏழு மணிக்கு முகூர்த்தம். எனவே அனைவரும் சீக்கிரமே வீடு திரும்பிப் படுத்துவிட்டார்கள். படுக்கப் போகுமுன் அம்மா வினோத்திடம் ‘மூணு மணிக்கெல்லாம் எழுந்துடணும்’ என்று சொல்லியிருந்தாள்.

இரண்டரைக்கே அலாரம் வைத்து அவள் எழுந்து காப்பி போட்டுவிட்டு, சரியாக மூன்று மணிக்கு வினோத்தை எழுப்பப் போனபோது, அவன் அறையில் இல்லை. அவனது பெட்டி மட்டும் திறந்திருந்தது. அதில் லிங்கம் இருந்தது. வினோத் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com