148. மரண வாக்குமூலம்

பேயான பின் தவமிருந்து என்னென்னவோ வரமெல்லாம் வாங்கியிருக்கிறாள் போலிருக்கிறது. பேய்களுக்கு அது அத்தனை எளிது என்பது முன்னமே தெரிந்திருந்தால், நாமும்..

வெயில் உக்கிரமாக இருந்தது. இருநூறடி தூரத்தில் கடல் இருந்தும், இடையே ஒரு சவுக்குக் காடு இருந்தும் கோயில் மண்டபத்தில் காற்றே இல்லை. புழுக்கம், உறவுகளைப் போலக் கசகசத்தது. வேறெங்காவது போய் உட்காரலாமா என்று வினோத்திடம் கேட்டேன். எங்கு போனாலும் இப்படித்தான் இருக்கும் என்று சொன்னான். ‘வேண்டுமானால் வீட்டுக்குப் போய் ஃபேன் போட்டுக்கொண்டு உட்காரலாம்’ என்றான். ஆனால் கேசவன் மாமா இருப்பார். அறையில் அம்மா இருப்பாள். திரும்பத் திரும்பப் பேசியவற்றையே பேசவேண்டி இருக்கும்.

‘அதுகூடப் பிரச்னை இல்லை. நாம் வந்திருக்கும் விஷயம் இப்போது வீதியில் அனைவருக்கும் தெரியும். வந்து பார்க்க வரிசையாக வர ஆரம்பித்துவிடுவார்கள்’.

‘ஐயோ. அது இன்னும் கஷ்டம்’.

‘நீ கிளம்பிப் போனதும் எதிர் வீட்டில் இருந்து ஒரு கிழவி வந்தாள். எனக்கு அவளை மறந்தேவிட்டது. என்னைக் கண்டதும் விசிறி எடுத்துவரச் சொல்லி, அதால் என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டாள்’.

‘அடடே. நான் இல்லாமல் போய்விட்டேனே’.

‘உன் சன்னியாசம், விபசாரத்துக்கு சமம் என்று சொன்னாள்’.

‘விடு. அம்மா மீது அவ்வளவு அன்பு’.

‘பிறகு என்ன நினைத்தாளோ, என்னைக் கட்டிக்கொண்டு சிறிது நேரம் அழுதாள். கடைசிவரை எனக்குத்தான் அவள் பெயர் நினைவுக்கு வரவேயில்லை’.

‘எனக்கு நினைவிருக்கிறது. அவள் ஐயர் மாமி. வரலட்சுமி என்று பெயர். அவளுக்கு ஒரு பெண்ணும் ஒரு பிள்ளையும் இருந்தார்கள். அவள் புருஷன் நாவலூர் பள்ளிக்கூடத்தில் கிளார்க்காக இருந்தார்’.

‘நீ எதையுமே மறக்கவில்லை!’ என்று வினோத் சொன்னான்.

‘ஆம். நான் எதையும் மறக்க விரும்புவதில்லை. உனக்குக் கிருஷ்ணன். வினய்க்கு கஞ்சா. எனக்கு மனிதர்களும் நினைவுகளும். அந்நாள்களில் வரலட்சுமி மாமி பஃப் கை வைத்த ரவிக்கை அணிவாள். அக்ரஹாரத்திலேயே அவள் நடந்துபோவது மட்டும் தனியாகத் தெரியும்’ என்று சொன்னேன். வினோத் சிரித்தான். சட்டென்று சம்பந்தமேயில்லாமல் இன்னோர் இடத்தில் இருந்து உரையாடலைத் தொடங்கினான்.

‘நாம் வீட்டை விட்டுப் போவதற்கு முன்னால் அம்மாவிடம் சிறிது பேசியிருக்கலாம்’.

‘போவதைப் பற்றியா?’

‘இல்லை. பொதுவாகச் சொன்னேன். அவளுக்கு நம்மிடம் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன என்று நினைக்கிறேன். பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்திருப்பாள். துரதிருஷ்டவசமாக அது நடக்காமலே போய்விட்டது’.

‘உன்னிடம் என்ன சொன்னாள்?’

‘யோசித்துப் பார்க்கிறேன் விமல். என்னால் ஒரு நேர்க்கோட்டில் அவள் பேசியவற்றைக் கொண்டுவர இயலவில்லை. அவளால் தொடர்ச்சியாகப் பேசவும் முடியவில்லை. ஐந்து நிமிடம் பேசிவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு விடுகிறாள். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் ஏதேதோ பேசுகிறாள். மீண்டும் உறங்கிவிடுகிறாள்’.

எனக்குப் புரிந்தது. அவள் சில சொற்களைச் சேமித்து வைத்திருக்கிறாள். அதை இறக்கி வைத்துவிடப் போக முடிவு செய்திருக்கிறாள். இழுத்துக்கொண்டிருப்பதே அதற்காகத்தான். ஆனால் அந்த ஓலைச்சுவடி விவகாரம் அவளுக்குத் தெரிந்திருக்கிறது என்பது எனக்கு வியப்பாக இருந்தது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போவதற்கு முன்பே தெரியுமா என்று நான் வினோத்திடம் கேட்டேன். அப்படித்தான் அவள் பேசியதில் இருந்து புரிந்துகொண்டேன் என்றான். அப்படியானால் எதற்காக அந்தப் பயணம்?

‘ஒருவேளை அப்பாவின் திருப்திக்காக இருக்கலாம்’.

அப்பாவுக்கும் தெரியாமல் அவள் ரகசியங்களை வைத்திருந்தாள் என்பதை நம்ப எனக்குச் சிரமமாக இருந்தது. அப்படி இருக்குமானால், அண்ணா போனபோது அவள் அப்படிக் கதறியிருக்க வாய்ப்பில்லை. வினய் விலகிச் சென்றபோது பத்து நாள்களுக்கு மேல் அவள் அடுக்களையை விட்டு வெளியே வரவேயில்லை. குமுட்டி அடுப்பின் தணலோடு சேர்ந்து வெந்துகொண்டிருந்தாள். நானே நேரில் கண்டிருக்கிறேன். ஶ்ரீரங்கம் கோயிலில் நான் காணாமல் போன பிறகு பல மாதங்கள் அவள் யாருடனும் பேசக்கூட இல்லை என்று கேசவன் மாமா என்னிடம் சொன்னார். கோயிலுக்குப் போவதையே அவள் அறவே நிறுத்தியிருக்கிறாள். அந்த வருட பிரம்மோற்சவ சமயத்தில் அவள் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை என்றும், தினசரி காலையில் போடும் வாசல் கோலத்தைக்கூடப் போடவில்லை என்றும் அவர் சொன்னார். முன்னறிவிக்கப்பட்ட துக்கத்துக்கு இவ்வாறெல்லாம் எதிர்வினை புரிய இயலுமா? எனக்குச் சந்தேகமாக இருந்தது.

‘இதைக் கேள். நான் வீட்டை விட்டு ஓடிப்போன மறுநாள் திருமணம் நின்றுபோய் சித்ரா தற்கொலை செய்துகொண்டிருக்கிறாள். பத்மா மாமி மூன்று மாதங்கள் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறாள். அவள் வீட்டுக்கு வந்தபின், அம்மா ஒரு வருட காலம் தினசரி பத்மா மாமி வீட்டுக்குப் போய் சமைத்து வைத்து, துணி துவைத்துக் கொடுத்து, வீடு பெருக்கித் துடைத்து, பாத்திரம் தேய்த்துக் கவிழ்த்துவிட்டு வந்திருக்கிறாள்’.

‘எதற்கு?’

‘என்னால் அதைச் செய்யாதிருக்க முடியவில்லை என்று என்னிடம் சொன்னாள்’.

‘குற்ற உணர்வு’.

‘பிராயச்சித்தம் என்று கருதியிருக்கலாம்’.

பத்மா மாமியின் கணவருக்கு அப்போது வலது பக்கம் பக்கவாதம் கண்டு படுத்த படுக்கையாகியிருக்கிறார். அதன் காரணம் பற்றித்தான் அம்மா அவர்கள் வீட்டுக்குப் போய் உதவி செய்ய ஆரம்பித்திருக்கிறாள். அது பொறுக்காமல்தான் கேசவன் மாமா அவர்களுடைய உணவுத் தேவைக்குத் தானே பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

‘இன்னொன்றையும் கேள். நான் போன பின்பு, அப்பா அம்மாவை வீட்டில் சமைக்கவே விடவில்லை. அவரேதான் பல மாதங்கள் அடுக்களையைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்’.

‘அப்படியா?’

‘ஆம். நெருப்பைக் கண்டு எங்கே கொளுத்திக்கொள்ளும் எண்ணம் அம்மாவுக்கு வந்துவிடப் போகிறதோ என்று அப்பா பயந்தாராம். அம்மாவைத் தளிகை பண்ண அவர் அனுமதிக்கவேயில்லை என்று கேசவன் மாமா சொன்னார்’.

‘அம்மா வேறென்ன சொன்னாள்?’

‘சித்ரா இந்த ஊரிலேயே ஆவியாக அலைந்துகொண்டிருக்கிறாள் என்று சொன்னாள்’.

நான் புன்னகை செய்தேன்.

‘ஏன் சிரிக்கிறாய்?’

‘உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். இனி அதற்கு அவசியமில்லை என்று தோன்றுகிறது. நீ காட்டிக்கொடுத்த கிருஷ்ணன், வினய்க்கு சித்ராவைக் காட்டிக்கொடுத்திருக்கிறான்’.

‘அப்படியென்றால்?’

‘நீலாங்கரை வைத்தியர் வீட்டுக்குப் போய்வரும் வழியில் அவன் சித்ராவைச் சந்தித்துவிட்டான்’.

‘உண்மையாகவா?’

‘ஆம். அம்மா சொன்னது சரி. உன்னைக் கொல்லச் சொல்லி அவள் வினய்யிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறாள்’.

வினோத் சிறிது நேரம் அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தான். பிறகு அவனிடம் இருந்து மிக நீண்டதொரு பெருமூச்சு வெளிப்பட்டது. என்னைப் பார்த்துப் புன்னகை செய்தான். ‘எனக்குச் சிறிதும் பதற்றமாக இல்லை’ என்று சொன்னான்.

‘இதில் பதற என்ன இருக்கிறது? மரணத்துக்குப் பதறினால் நீ துறவியே அல்ல. நாமெல்லாம் வாழ்வதற்குத்தான் பதற வேண்டும்’.

‘வினய் அதைச் செய்வதைக் காட்டிலும் சித்ராவே செய்தால் நான் சந்தோஷப்படுவேன்’ என்று வினோத் சொன்னான்.

‘அவள் செய்ய மாட்டாள்’.

‘ஏன்?’

‘அது எனக்குத் தெரியாது. ஆனால் பல்லாண்டுகளாக அவள் இத்தருணத்துக்காகக் காத்திருப்பதாக அவனிடம் சொல்லியிருக்கிறாள். இன்னொரு விஷயம், உன் கிருஷ்ணனால் முடியவே முடியாத ஒரு பெரும் வரத்தை அவள் வினய்க்குக் கொலைச் சம்பளமாகத் தரச் சம்மதித்திருக்கிறாள்’.

‘அப்படியா?’

‘ஆம். அவன் கனவு நனவாக, அவள் தனது தவப்பயன் முழுவதையும் தரத் தயார் என்று சொல்லியிருக்கிறாள். பேயான பின் தவமிருந்து என்னென்னவோ வரமெல்லாம் வாங்கியிருக்கிறாள் போலிருக்கிறது. பேய்களுக்கு அது அத்தனை எளிது என்பது முன்னமே தெரிந்திருந்தால், நாமும் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கலாம்’.

‘என்னால் நம்ப முடியவில்லை விமல். இந்த விஷயம் அம்மாவுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? அதை அவள் என்னிடம் சொல்லவில்லை’.

‘யார் கண்டது? சித்ராவே சொல்லியிருக்கலாம்’.

‘ஆவியாக வந்தா?’

‘ஏன், கூடாதா? ஆவியாகத்தான் அவள் வினய்யைச் சந்தித்திருக்கிறாள்’.

‘நான் அவளைச் சந்திக்க வேண்டும்’.

நான் சிரித்துவிட்டேன். ஏன் சிரிக்கிறாய் என்று வினோத் கேட்டான். நாயாக வந்த சொரிமுத்துவைப் பற்றி அவனிடம் சொன்னேன். ‘நான் அவனைச் சந்திக்க வேண்டும்’ என்று வினய் சொன்னதையும் சொன்னேன்.

‘எனக்கு அது இப்போதும் புதிராகத்தான் உள்ளது. சொரிமுத்து உன்னை அறிவார். வினய் அவரிடம் சில காலம் தங்கிப் பயின்றும் இருக்கிறான். உன்னிடம் அவர் அதிகம் பேசாததுகூடப் பெரிதல்ல. வினய்யை ஏன் அவர் சந்திக்க விரும்பவில்லை?’

‘விருப்பமில்லை என்று ஏன் நாமே எண்ணிக்கொள்ள வேண்டும்? அவசியம் இல்லை என்று அவர் நினைத்திருக்கலாம். ஓலைச்சுவடியைப் பற்றி, நம்மைப் பற்றி அறிந்திருந்த அம்மா, அப்பாவிடம் அது குறித்துக் கடைசி வரை சொல்லாததை எண்ணிப் பார். என்ன காரணம் இருக்க முடியும் அதற்கு?’

‘புரிகிறது. மாமாவுக்குத் தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்று சொல்லிவிட்டாள்’.

‘கேசவன் மாமா உண்மையில் பாவப்பட்ட மனிதர். அவர் நமது குடும்பத்தைச் சேர்ந்தவரே இல்லை. இது தெரிந்தால் நொறுங்கிப் போய்விடுவார்’.

‘அறிவேன். அண்ணா இதை என்னிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் எதற்கு அவருக்குத் தெரிய வேண்டும்? அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்’.

‘நானும் அதைத்தான் நினைத்தேன். வினய் ஒன்றும் உளறி வைக்காதிருக்க வேண்டும்’.

‘அவனிடம் அம்மா பேசாமலேயே இருந்துவிட்டால்கூட நல்லது என்று தோன்றுகிறது’.

நாங்கள் சிறிது நேரம் அமைதியாகக் கோயிலையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தோம். சாப்பிடப் போயிருந்த கடைக்காரர்கள் ஒவ்வொருவராகக் கடையைத் திறக்க ஆரம்பித்திருந்தார்கள். ‘சாமி, இளநி சாப்புடறிகளா?’ என்று ஒரு கிழவன் எங்களை நெருங்கி வந்து கேட்டான். நான் வேண்டாம் என்று சொன்னேன். வினோத் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். வினய் வீட்டுக்குச் சென்று ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது. அங்கே என்ன நடக்கிறது எனப் போய்ப் பார்க்கலாமா என்று தோன்றியது. வினோத்திடம் சொன்னபோது, அவன் அதில் ஆர்வம் காட்டவில்லை. ‘இன்றொரு நாளைக் கடத்திவிட்டால் போதும்’ என்று சொன்னான்.

‘நாளை பகலையும் கடத்தியாக வேண்டும்’ என்று நான் சொன்னேன்.

‘அண்ணா வருவேன் என்று சொன்னான். ஆனால் எப்போது வரப்போகிறான் என்று தெரியவில்லை’.

‘வரட்டுமே, என்ன அவசரம்? நம்மைப்போல் அவனும் முன்னால் வந்து உட்கார்ந்துகொண்டு பொழுதைக் கொல்லக் கஷ்டப்படவா? நிதானமாக வரட்டும். நாளை இரவு வந்தால்கூடப் போதும்’ என்று சொன்னேன். வினோத் என்னை உற்றுப் பார்த்தான்.

‘சரி. இப்போது நாம் பொழுதைக் கடத்துவோம். அம்மா சொன்னவற்றை வரிசை மாற்றாமல் நான் உனக்கு அப்படியே சொல்கிறேன். உனக்கு ஏதாவது புரிகிறதா என்று சொல்’ என்று சொன்னான். நான் ஆர்வமுடன் கேட்க ஆரம்பித்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com