145. சம்ஹார தேவி

உன்னை நான் அந்தத் தெய்வங்களுள் ஒன்றென நியமிக்கிறேன். உன்னைப் பிறப்பற்றவன் ஆக்குகிறேன். அழிவற்றவன் ஆக்குகிறேன். பிரபஞ்சம் முழுதும் ஆளும் தகுதியை உனக்கு நான் உருவாக்கித் தருகிறேன்.

‘எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது’ என்று வினய் சொன்னான்.

‘இரு’ என்று சொல்லிவிட்டு சித்ரா எழுந்து கடலருகே சென்றாள். மணலை அள்ளி ஒரு பானை செய்து, அதில் கடல் நீரை ஏந்தி எடுத்து வந்தாள். இந்தா என்று அவனிடம் நீட்டினாள். வினய் புன்னகையுடன் வாங்கிக்கொண்டான்.

‘உப்பெல்லாம் கரிக்காது. குடி’ என்று சொன்னாள்.

‘நானே பல பேருக்கு இந்த மேஜிக்கை செய்து காட்டியிருக்கிறேன், எனக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டு அவன் நீரைக் குடித்தான்.

‘உனக்கே முடியுமென்றால் என்னை ஏன் கேட்டாய்?’

‘நான் எந்தத் தந்திரங்களையும் பிரயோகிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்’.

‘ஏன்?’

‘சித்ரா, நான் ஒரு உச்சத்தைக் குறி வைத்தேன். அதை எப்படி விளக்கிச் சொன்னாலும் உனக்குப் புரியாது. முழுக்க முழுக்க மனித குலத்துக்காக நான் என்னை ஆகுதியாக்க நினைத்தேன். ஆனால் என் வயிற்றுப்பாட்டைத் தீர்ப்பது ஒன்றே பணி என்று ஆகிப் போனது’ என்று அவன் சொன்னான்.

ஐயோ என்று பரிதவித்துப் போனாள் சித்ரா.

‘நான் தெய்வங்களால் கைவிடப்பட்டவன். தேவதைகளால் உதாசீனம் செய்யப்பட்டவன். நான் வசியம் செய்து வைத்திருந்த சாத்தான்களும் ஆவிகளும் ஒரு கட்டத்தில் எனக்குப் பிடிக்காமல் போயின. மிஞ்சிப் போனால் அவர்களால் இப்படி ஒரு சொம்பு உப்பு நீரை நல்ல நீராக்கித் தர முடியும். ஆனால் நான் மகா சமுத்திரத்தையே நன்னீராக்க நினைப்பவன்’ என்று வினய் சொன்னான்.

‘அது எப்படி முடியும்?’

‘முடியும். அதற்கான முனைப்பு என்னிடம் இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தேன். என் தவங்களை உனக்குச் சொல்லி விளக்க முடியாது. நெருப்பிலும் நீரிலும் முள்ளிலும் நின்று தவம் புரிந்த சித்தர்களை நீ அறிந்திருக்கலாம். நான் ஒரு ஈர்க்குச்சியின் நுனியில் நின்று தவம் புரிய முயற்சி செய்தவன். தெரியுமா?’

சித்ரா புன்னகை செய்தாள். ‘நான் உன்னை நம்புகிறேன்’ என்று சொன்னாள்.

‘விளையாட்டே இல்லை சித்ரா. ஒரு ஈர்க்குச்சியின் கனத்தைக் காட்டிலும் எனது தேகத்தின் கனத்தைக் குறைப்பதற்கு ஆறு ஆண்டுகள் கடும் முயற்சி செய்தேன். முற்றிலும் சதையற்றுப் போய் எலும்பின் கனத்தையும் குறைக்க ஆரம்பித்தேன். வெறும் காற்று. எனக்கு வேறு உணவே தேவையில்லை என்றானபோது காற்றின் அளவையும் கணிசமாகக் குறைத்தேன்’.

‘ஐயோ! பயங்கரம்’.

‘ஆம். என்னால் மண்ணில் புதைத்த ஒரு ஈர்க்குச்சியின் மீது ஏறி நிற்க முடிந்தது. ஒற்றைக்காலில் மணிக்கணக்கில் நிற்க முடிந்தது. ஆனால் என் சிந்தை கூடவில்லை. எல்லாம் அமையும் தருணம் எதுவோ ஒன்று என்னைப் பிடித்துக் கீழே தள்ளிவிடும்’.

‘பரிதாபமாக இருக்கிறது’.

‘உண்மையிலேயே பரிதாபப்பட வேண்டியவன்தான் நான். உனக்கு கோரக்கர் தெரியுமா?’

‘சித்தர்’.

‘ஆம். பெரிய சித்தர். அவரது சித்த சித்தாந்த பத்ததியைப் பயில்வதற்காக நேபாளம் சென்றேன். ஹட யோகத்தின் அடிப்படையே அந்தப் பிரதிதான். அதைக் கற்றுத்தரக் கூடிய நாத சைவ முனி ஒருவரை அங்கே நான் கண்டேன். ஒரு வருடம் அவருக்குக் கோவணம் துவைத்துப் போட்டு, சமைத்துக் கொடுத்து, கால் பிடித்துவிட்டு குருகுல வாசம் செய்தேன். ஒருநாள் அவர் எனக்கு மனமிறங்கி நாளை முதல் ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். அன்றிரவு அவர் காலமாகிவிட்டார்’.

இதைச் சொல்லும்போது வினய் கண் கலங்கியிருந்தான். ‘எனக்கு உன்னை நெருங்கி உன் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று தோன்றுகிறது’ என்று சித்ரா சொன்னாள்.

‘வேண்டாம் பெண்ணே. நான் எந்த அரவணைப்புக்கும் தகுதியற்றவன். அடிப்படையில் ஒரு கலைஞனின் மனத்துடன் கடவுள் என்னை சிருஷ்டி செய்யத் தொடங்கி, இறுதியில் ஒரு கொலைகாரனின் வாள் முனையால் என் விதியை எழுதிவிட்டான்’.

‘நீ என்னைப் பெண்ணே என்று அழைப்பது எனக்குப் பிடித்திருக்கிறது’.

‘ஏன், நீ பெண்தானே?’

அவள் சிரித்தாள். ‘உனக்கு நான் பேயாகத் தோன்றவேயில்லையா?’

‘உணராமலா உன்னை உட்கார வைத்துப் பேசிக்கொண்டிருப்பேன். பேயானாலும் பெண் என்பதுதான் எனக்கு முக்கியம். ஒன்றைப் புரிந்துகொள். பெண் என்பது சக்தி ரூபம். சக்தி அழிவற்றது. முடிவற்றது. அதன் ஆற்றல்கள் நிகரற்றவை. ஆவியாக அலையும்போதும் தவம் புரிந்ததாகச் சொன்னாயே, இது ஒரு ஆணால் முடியாது’.

‘அப்படியா?’

‘என்ன அப்படியா? என்னைப் பார். நான் உயிருடன் இருப்பவன். ஆனாலும் தோற்றேன். நீ செத்தபின் ஜெயித்ததாக நீயேதான் சொன்னாய்’.

அவள் அமைதியாகிப் போனாள். ஏதோ யோசித்துக்கொண்டிருப்பதாக வினய் நினைத்தான். தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவனும் ஒரு மரத்தின் மீது சாய்ந்து கால் நீட்டி அமர்ந்துகொண்டான். அவள் எடுத்து வந்த நீரில் மிச்சம் இருந்ததைக் குடித்துவிட்டுப் பாண்டத்தைத் தூக்கி எறிந்தான். அது மணலாகி உதிர்ந்து இல்லாமல் போனது.

சித்ரா இப்போது பேசத் தொடங்கினாள். ‘நான் கேட்டதற்கு நீ பதில் சொல்லவில்லை’.

‘என்ன கேட்டாய்?’

‘உனக்கு என்னால் உதவ முடியும் என்றேன்’.

வினய் சிரித்தான்.

‘ஏன் சிரிக்கிறாய்? நான் பொய் சொல்லவில்லை’.

‘நீ பொய் சொல்வாய் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் என் விதி எப்படியாக எழுதப்பட்டது என்பதை இவ்வளவு நேரம் உனக்கு விளக்கிய பின்புமா இப்படிக் கேட்கிறாய்?’

‘ஆம். உனக்கு நேர்ந்தவற்றை நீ சொன்னபின்பு எனக்கு அதில் இன்னமும் வெறி ஏறுகிறது. உன்னை வெல்ல வைத்துப் பார்க்க நான் மிகவும் ஆசைப்படுகிறேன்’.

அவன் புன்னகையுடன் அவளைப் பார்த்தான். ‘நீ பெண்ணாக இருந்தால் இப்போது உன்னை அருகே அழைத்து முத்தமிட்டிருப்பேன்’ என்று சொன்னான். ‘சித்ரா, அன்பைக் காட்டிலும் பரிவின் பலத்தை நீ எனக்குக் காட்டிக்கொண்டிருக்கிறாய். உயிரற்ற ஒன்று உயிருள்ள ஒன்றின்மீது கவியும் இந்தத் தருணத்தை நான் நினைவில் சேமிக்கிறேன். உன்னை நான் மறக்கவே மாட்டேன்’.

‘இப்போதும் நீ பதில் சொல்லவில்லை’.

‘எப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்க்கிறாய்? நான் ஒரு துறவி. நான் யாருக்கும் கடமைப்பட முடியாது’.

‘கடமையாக எண்ணித்தானே உன் தாயின் இறுதிச் சடங்குக்கு வந்தாய்?’

‘ஆம். அது பிறவி எடுத்தபோது என் மீது ஏற்றி வைக்கப்பட்டது. அதை நான் ஒன்றும் செய்ய முடியாது’.

‘அப்படியானால் என்னை உன் தாயாக எண்ணிக்கொள்’.

‘அது என்னால் முடியாது’.

‘ஏன்?’

‘என் தாயின் முலைகளை நான் என்றுமே ரசித்ததில்லை. அவளைக் கட்டித்தழுவி முத்தமிட்டதில்லை. அவளது குறியை நான் சிந்தித்ததில்லை. ஆண், பெண், நபும்சகம் என்பது போலத் தாய் என்பவள் ஒரு பிறப்பு. அவள் ஆணோ பெண்ணோ நபும்சகியோ அல்ல. அது ஒரு தனிப் பிறப்பு. அவள் தாய். அவ்வளவுதான். அவள் ஒருத்தியாக மட்டும்தான் இருக்க முடியும்’.

சித்ரா மீண்டும் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு, ‘நான் கேட்ட விதம் தவறோ என்று இப்போது நினைக்கிறேன்’ என்று சொன்னாள்.

வினய் புன்னகை செய்தான்.

‘நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நேரடியாகக் கேட்டிருந்தால் செய்திருப்பாய் அல்லவா?’

‘முடிந்தால் செய்திருப்பேன்’.

‘நான் என் நோக்கத்தை மறைத்துக்கொண்டு உன் ஆசைகளைத் தூண்டுவது போலப் பேசியது பிழை. என்னை மன்னித்து விடு’ என்று சொன்னாள்.

‘தூண்டினாயா? உன்னால் தூண்ட முடிந்ததா?’

‘இல்லை. நீ அசையவேயில்லை. அதுதான் எனக்கு வியப்பாக உள்ளது. ஆனால் இப்போதும் சொல்கிறேன். உன் லட்சியம் எத்தனை பெரிதாக இருந்தாலும் என்னால் அதை நிறைவேற்றிவைக்க முடியும். நீ உருகும் சக்தி ரூபம் உன் சிந்தையில் வந்து அமரும். உனக்கு அது கட்டுப்படும். நீ விரும்பியதைச் செய்து தரும். என் மொத்தத் தவத்தின் பலனை நான் உனக்காகத் தாரை வார்ப்பேன்’.

‘அப்படியா? சரி, சொல். முடிகிறதா பார்க்கிறேன்’ என்று வினய் சொன்னான்.

அவள் சட்டென்று எழுந்துகொண்டாள். தரை மட்டத்தில் இருந்து ஒன்பதடி உயரத்தில் சென்று நின்றுகொண்டு கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொன்னாள். பிறகு தனது இடக்கையைத் தரையைப் பார்த்து நீட்டினாள். அதிலிருந்து பீறிட்ட ஓர் ஒளிச்சரடு மணலைத் துளைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தது. உடனே அவள் சுட்டிய இடத்தில் இருந்து ஒரு சுனை பீறிட்டது. பீறிட்டெழுந்த நீர், ஒளிச்சரடு பாய்ந்த அதே வேகத்தில் மேலெழுந்து சென்று அவள் கரத்தில் சென்று தேங்கி நிறைந்தது.

சித்ரா அந்த நீரைத் தாரையாக வார்த்து சத்தியம் செய்தாள். ‘இருபத்தைந்தாண்டுக் காலமாக நான் புரிந்த உக்கிரத் தவத்தின் இறுதியில் தேவி எனக்கு வரமளித்தாள். ஒன்று நான் மோட்சத்துக்குச் செல்லலாம். இனி பிறக்காதிருக்கலாம். அல்லது நான் சுட்டிக்காட்டும் யாரோ ஒருவருக்கு அந்த வரத்தை நானே அளிக்கலாம். என் அன்பான வினய்! உனக்கு நான் அந்த வரத்தைத் தாரை வார்த்துத் தருகிறேன். தெய்வங்களால் கைவிடப்பட்டவன் என்று நீ சொன்னாய். உன்னை நான் அந்தத் தெய்வங்களுள் ஒன்றென நியமிக்கிறேன். உன்னைப் பிறப்பற்றவன் ஆக்குகிறேன். அழிவற்றவன் ஆக்குகிறேன். பிரபஞ்சம் முழுதும் ஆளும் தகுதியை உனக்கு நான் உருவாக்கித் தருகிறேன். நீ ஒரு சக்தி. நீ ஒரு விசை. நீ ஒரு பிரகிருதி. அழிவற்ற பேரானந்தப் பெருந்திருவின் உதிரத்தின் ஒரு சொட்டை என் சிரசில் நான் ஏந்தியிருக்கிறேன். அதை உனக்கு நான் மாற்றித் தருகிறேன். எனக்காக நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். என் பெண்மையை மலினப்படுத்திவிட்டுப் போன உன் தம்பியை நீ கொன்றுவிடு’.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com