152. கோடிட்ட இடங்கள்

ஏதோ ஒரு பெண் வடிவில் இருந்துதான் எல்லோரும் தோன்றுகிறோம். ஏதோ ஒரு பெண் வடிவை அம்மா என்கிறோம். என்னைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களுமே ஒன்றுதான்.

நாங்கள் வீட்டுக்குப் போனபோது கூடத்தில் கேசவன் மாமா ஒரு ஓரமாகத் துண்டு விரித்துப் படுத்திருந்தார். அம்மாவின் அறைக்கதவு சாத்தியே இருந்தது. வினோத் கதவை லேசாகத் திறந்து பார்த்தான். உள்ளே வினய் இல்லை. அம்மா மட்டும் எப்போதும்போல் கண்மூடிக் கிடந்தாள். ‘அவன் இங்கே இல்லை’ என்று வினோத் என்னிடம் சொன்னான். நான் பின்கட்டுக்குப் போனேன். கொல்லைக் கதவைத் திறந்தபோது வினய் துணி துவைக்கும் கல்லில் சாய்ந்து அமர்ந்து கஞ்சா குடித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். சட்டென்று எனக்கு அண்ணாவின் ஞாபகம் வந்தது. மிகச் சரியாக அதே இடத்தில் அமர்ந்துதான் அண்ணா எனக்கு ஒரு சாளக்கிராமத்தை உடைத்துக் காட்டினான்.

வினய் என்னைப் பார்த்தான். ‘வா’ என்று சொன்னான்.

‘நீ உள்ளே வாயேன்?’

‘மாமா தூங்குகிறார்’.

‘ஆம். பார்த்தேன். நீ அம்மாவுடன் பேசினாயா?’

‘பார்த்தேன். அவள் கண்ணைத் திறக்கவில்லை’ என்று வினய் சொன்னான்.

‘அப்படியா? ஆனால் அவள் வினோத்திடம் பேசியிருக்கிறாள்’.

‘அப்படியா?’

‘எழுந்து உள்ளே வா’ என்று சொல்லிவிட்டு நான் உள்ளே போனேன். கேசவன் மாமா உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்திருந்தார். ‘எங்கேடா போயிட்டேள் எல்லாரும்? இத்தன வருஷம் கழிச்சி ஆத்துக்கு வந்திருக்கேள். அவள அனுப்பிவெக்கற வரைக்குமாவது இங்கேயே இருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்.

‘இருக்க கஷ்டமா இருக்கு. மன்னிச்சிடுங்கோ’ என்று வினோத் சொன்னான். நான் புன்னகை செய்தேன். மாமாவுக்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சட்டென்று அவர் கண் கலங்கிவிட்டார். ‘அவளும் போயிடுவா. நீங்களும் கெளம்பிடுவேள். ஒண்டிக்கட்டையா நான் இருக்கணுமேடா’ என்றார்.

கஷ்டம்தான். என்னால் அவரது துக்கத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் என்ன சொல்லி சமாதானப்படுத்த முடியும்? சட்டென்று வினய், ‘நீங்களும் கிளம்பிடுங்கோ’ என்றான். மாமா அதிர்ச்சியாகிவிட்டார். சிறிது இடைவெளி விட்டு, ‘எங்கே?’ என்று கேட்டார்.

நான் அந்தப் பேச்சை மாற்ற விரும்பினேன். வினய்க்கு கண்ணைக் காட்டிவிட்டு, ‘அம்மா வினோத்கிட்டே கொஞ்ச நேரம் பேசியிருக்கா மாமா’ என்று சொன்னேன்.

‘அப்படியா?’ என்று அவர் வியந்து போனார். வினோத் சட்டென்று, ‘அம்மா அஹோபிலத்துல இருந்தாளாமே? நீங்க அவ அங்க இருக்கறப்ப போனேளா?’ என்று கேட்டான்.

‘அவ அங்க இருந்ததே, அங்கேருந்து கிளம்பறப்ப அவ எழுதின கடுதாசிலதான் தெரிஞ்சிது. எல்லாம் ஒரே பூடகம்’ என்று மாமா சொன்னார்.

‘என்ன பூடகம்?’

‘என்னன்னு எனக்கு சரியா சொல்லத் தெரியலடா. ஆனா உங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் எதோ பிணக்கு இருந்திருக்கு. அப்பறம் அது சரியாப் போச்சு. என்ன பிணக்கு, எப்படி சரியாச்சுன்னு தெரியலே. அந்த காலத்துலதான் அவ அஞ்ஞாத வாசம் மாதிரி எங்கயோ போயிட்டா’.

‘ஓ!’

‘அதையா உன்கிட்டே சொன்னா?’

‘என்னமோ சொன்னா. பாதி புரிஞ்சிது. சிலது சரியா கேக்கலை’ என்று வினோத் சொன்னான். அவன் சற்று ஜாக்கிரதையாக இருக்க விரும்புவதை நாங்கள் புரிந்துகொண்டோம்.

‘ஏன் மாமா, உங்களுக்கும் அம்மாக்கும் எவ்ளோ வயசு வித்தியாசம்?’ என்று வினய் கேட்டான்.

‘அவளுக்கு இப்ப எண்பத்தி ரெண்டு. எனக்கு எழுவத்தி ஒம்போது. கணக்குப் போட்டுக்கோ’.

‘உங்களுக்கு இன்னொரு அக்கா இருந்திருக்கா இல்லே?’

‘அதையும் சொன்னாளா?’ என்று ஆர்வமாகக் கேட்டார்.

‘ஆமா. அவா இப்ப இருக்காளா?’

‘அவ போய்ப் பலகாலமாச்சு. நீங்கள்ளாம் இந்த ஊருக்கு வந்து சேந்தப்பவே அவ போய் சேந்துட்டா’.

‘அவாளுக்குக் குழந்தைகள் உண்டா?’

‘இருக்கானே. ஒரே ஒரு பிள்ளை. அமெரிக்கால எங்கயோ இருக்கான். அதெல்லாம் தொடர்பே இல்லாம போயிடுத்து’.

‘கல்யாணம் ஆயிடுத்தா?’ என்று நான் கேட்டேன்.

‘யாரோ இங்கிலீஷ்காரிய பண்ணிண்டான்னு நினைக்கறேன். சரியா தெரியலே. ஆனா ஆயிடுத்து. அது நிச்சயம்’.

‘ஏன் அப்படி தொடர்பே இல்லாம போச்சு?’ என்று வினோத் கேட்டான்.

‘யாரு? மூத்தவளோடயா? அவ ஆம்படையான் அப்படி. யாரையும் நெருங்கவே விட்டதில்லே பாத்துக்கோ’.

‘ஓ. சண்டையா?’

‘அப்படின்னு இல்லே. என்னமோ முதல்லேருந்தே அவ வாழ்க்கை அப்படி ஆயிடுத்து. அவளுக்குப் பிரசவம் பாக்க எங்கம்மா போனாளாம். ஆனா பேர் வெக்கக்கூட யாரையும் கூப்பிடலே’.

‘கஷ்டம்தான்’.

‘எத்தனையோ பாத்துட்டேண்டா. போதும்னுதான் தோணறது. என்னிக்கு பெருமாள் என் கணக்கை முடிச்சனுப்புவானோ தெரியலே’.

‘அதிருக்கட்டும் மாமா. உங்க சின்ன வயசு ஞாபகத்த எல்லாம் சொல்லுங்களேன்? மூத்த அக்காவோட தொடர்பில்லேன்னாலும் அம்மாவோட இருந்திருப்பேளே’.

‘எனக்கு அக்காவும் அவதான். அம்மாவும் அவதான். என்னன்னு சொல்றது? எம்மேல அவளுக்கு அவ்ளோ பிரியம்’ என்று மாமா சொன்னார். கண்ணைத் துடைத்துக்கொண்டார்.

‘எந்த வயசுலேருந்து?’ என்று வினய் கேட்டான்.

‘நினைவு தெரிஞ்சதுலேருந்தே அப்படித்தாண்டா. மூணு மூணர வயசுல அவ கைய பிடிச்சிண்டு லிங்கிச் செட்டித் தெரு, ஆர்மீனியன் தெரு, தம்புச் செட்டித் தெருவெல்லாம் சுத்தியிருக்கேன்’.

‘அதெல்லாம் ஞாபகம் இருக்கா?’

‘அதுலேருந்துதான் ஞாபகமே ஆரம்பிக்கறது. எங்கப்பா எப்பவாவது அக்காக்கு ஓரணா குடுப்பார். அக்கா அந்த ஓரணாவை அப்படியே சேத்துவெச்சு எனக்குத்தான் கேக்கறதையெல்லாம் வாங்கித் தருவா. கேசவா கேசவான்னு என் கன்னத்த தடவிண்டே இருப்பா. எங்கம்மா பண்ணாதத எல்லாம் அவதான் பண்ணா. பாரு, அந்தப் பாசம்தான் இன்னிக்கு அவ இழுத்துண்டு கெடக்கறப்ப நான் துடிச்சிண்டிருக்கேன்’ என்றவர், சில விநாடிகள் கேவிக் கேவி அழுதார். பிறகு, ‘திரும்பத் திரும்பக் கேக்கறேன்னு நினைச்சிக்காதிங்கோ. நீங்கள்ளாம் ரிஷிகளாயிட்டேள். இருந்தாலும் எனக்கு இந்த சந்தேகம் இருக்கு. அது எப்படிடா பாசம் மொத்தமா வெட்டிண்டு போகும்?’

‘தெரியல மாமா. அம்மாவைத்தான் கேக்கணும்’ என்று வினோத் சொன்னான்.

‘நிஜமாவே அவ பேசினாளா? நானும் எவ்ளவோ நாளா பேச்சு குடுத்துண்டிருக்கேன். ஒரு வார்த்தை வரலியேடா அவ வாய்லேருந்து. உனக்குத்தான் குடுப்பினை போல’ என்று சொன்னார்.

‘ஆனா நான் போனப்போ கண்ணே திறக்கலை’ என்று வினய் சொன்னான்.

‘பேசக் கூடாதுன்னெல்லாம் நினைச்சிருக்கமாட்டா. நீ அப்படி எடுத்துண்டுடாதே. முடியாம போயிருக்கும்’ என்று மாமா அவனுக்கு உடனே சமாதானம் சொன்னார்.

வினய் புன்னகையுடன் அவர் கையைப் பிடித்துக்கொண்டு, ‘இந்த உலகத்துல தப்பா நினைக்க ஒண்ணுமே இல்லை மாமா. சரியா சொல்லணும்னா தப்புன்னே ஒண்ணு இல்லை’.

‘அப்படியா நினைக்கறே நீ?’

‘கண்டிப்பா. ஒவ்வொருத்தர் மனசு ஒவ்வொரு மாதிரி நினைக்கும். அது அவாவா பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, யோசிக்கற சக்தியைப் பொறுத்தது. வளர்ற சூழ்நிலைய பொறுத்தது. தப்பு எது? சரி எது? இந்தாத்துல மீன் சாப்ட்டா தப்பு. கறி சாப்ட்டா தப்பு. உலகத்துல கோடிக்கணக்கான பேருக்கு அதுதான் பிடிச்ச உணவு. அவாளை நாம தப்பு சொல்வோமா?’

‘படவா, நீ சாப்ட்டிருக்கியா?’ என்று மாமா செல்லமாக அவன் வயிற்றில் குத்தினார்.

‘அவனைப் பார்த்தா சாப்பிடறவனாட்டமா தெரியறது? அவன் காத்தைத்தான் பெரும்பாலும் திங்கறான்’ என்று நான் சொன்னேன்.

‘நான் எல்லாமே சாப்பிடுவேன் மாமா’ என்று வினய் சொன்னான்.

‘நெனச்சேன். எதோ கெட்ட நாத்தம் வீசறது உம்மேல’.

‘அது கஞ்சா’ என்று வினோத் சிரித்தபடி சொன்னான்.

‘உடம்ப பாத்துக்கோங்கோடா. உங்களுக்கெல்லாம் நான் என்ன போதனை பண்ண முடியும் வேற? எல்லாருமே சன்னியாசிகள். எல்லாருமே பகவான பாத்தவா. குறைஞ்சது புரிஞ்சுண்டவா. சரியா சொல்றேனா?’

நான் சிரித்தேன்.

‘முயற்சி பண்றவான்னு சொன்னேள்னா சரியா இருக்கும்’ என்று வினோத் சொன்னான்.

‘அதெல்லாம் இருக்கட்டும். இந்த ஞானம் அடையறதுன்றாளே. அதெல்லாம் நடந்துடுத்தா உங்களுக்கு?’ என்று மாமா கேட்டார்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று எங்கள் மூவருக்குமே புரியவில்லை. சிறிது நேரம் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தோம். வினய்தான் மௌனத்தைக் கலைத்தான். ‘ஞானமும் மரணமும் ஒண்ணு மாமா. அடைஞ்சிட்டா அதை விளக்க முடியாது’ என்று சொன்னான்.

‘அடப் போடா! ரொம்ப தெரியுமா உனக்கு? எனக்கு மரணமே ஒரு ரெண்டுங்கெட்டான் நிலைன்னுதான் தோணறது’.

‘அப்படியா?’

‘ஆமா. உங்கம்மா ஒருநாள் சித்ரா ஆவியா வந்து தன்னோட பேசினதா சொன்னா. ரூபமா தெரியலேன்னு சொன்னா. ஆனா பேசினது நிச்சயம்’.

‘அப்படியா?' என்று வினய் ஆச்சரியப்பட்டான். வினோத் புன்னகையுடன் அவனைப் பார்த்தான். ‘நீ சொன்னாயா?’ என்பதுபோல வினய் என்னைப் பார்க்க, நான் ஆம் என்று தலையசைத்தேன். உடனே அவன் அமைதியாகிவிட்டான். அதுவரை இல்லாத ஒரு தீவிரபாவம் அவன் முகத்தில் தெரிந்தது.

‘என்ன சொன்னா அவ?’ என்று நான் மாமாவிடம் கேட்டேன்.

‘அதெல்லாம் அக்கா சொல்லலே. ஆனா சித்ரா பேசினதா சொன்னா. ஒருவேளை அவ பிரமையா இருக்கும்னு முதல்ல நினைச்சேன். அவ இல்லைன்னா. சரி என்னதான் பேசினான்னு சொல்லேன்னு விடாப்பிடியா கேட்டேன். சொல்லவேயில்லை கடங்காரி’.

‘நீங்க பத்மா மாமிட்ட கேட்டிருக்கலாமே மாமா? மெனக்கெட்டு இங்க வந்து அம்மாட்ட பேசிட்டுப் போனவ, அவம்மாட்ட பேசாமலா இருந்திருப்பா?’

‘கேட்டேனே. கேக்காமலா இருப்பேன்? அவளுக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கலியாம். சித்ரா செத்துப் போனதுமே மாமியோட ஆத்துக்காரர் கயாவுக்குப் போய் மொத்தமா ஒரு சிராத்தம் பண்ணிட்டு வந்துட்டார். அவ போய் பெருமாள் திருவடில சேந்துட்டான்னு மாமி சொல்லிட்டா’.

வினய் சிரித்ததை நான் பார்த்தேன். சட்டென்று மாமாவின் பக்கம் திரும்பி, ‘அம்மா உங்ககிட்ட வேற என்னென்ன சொல்லியிருக்கா?’ என்று கேட்டேன்.

ஒருவேளை அவருக்குப் புரியாமல் போய்விடுமோ என்று நினைத்து, ‘எங்களைப் பத்தி என்ன சொல்லியிருக்கா?’ என்று வினோத் கேட்டான்.

‘ஒன்ணுமே சொன்னதில்லே. நாலு பேரும் அவளுக்கு உசிருக்கு சமானம். சரியா சொல்லணும்னா, உங்களுக்கு அப்பறம்தான் உங்கப்பாவே அவளுக்கு’ என்றவர், ‘சரி இருங்கோ. ஒரு காப்பிய போட்டு எடுத்துண்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு எழுந்தார். அவர் சமையல் கட்டுக்குப் போனதும் வினய், வினோத்தைப் பார்த்து, ‘அம்மா என்ன சொன்னாள்?’ என்று கேட்டான். வினோத் அதை எப்படிச் சொல்வதென்று புரியாமல் சிறிது தவித்தான். நான் சட்டென்று சொன்னேன், ‘பதற ஒன்றுமில்லை வினய். மாமா எப்படி அவளுக்குத் தம்பி இல்லையோ, அதேபோல நாமும் அவளுக்கு மகன்கள் இல்லை’ என்று சொன்னேன்.

வினய் வியப்பானான். ‘அடடே’ என்று சொன்னான்.

‘உனக்கு இது அதிர்ச்சியாக இல்லையா?’ என்று வினோத் கேட்டான்.

‘எதற்கு அதிர்ச்சியடைய வேண்டும்? ஏதோ ஒரு பெண் வடிவில் இருந்துதான் எல்லோரும் தோன்றுகிறோம். ஏதோ ஒரு பெண் வடிவை அம்மா என்கிறோம். என்னைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களுமே ஒன்றுதான். எந்தப் பெண் செத்தாலும் நான் கர்மா செய்யத் தயாராக இருக்கிறேன். அது நான் புணர்ந்த பெண்ணாகவே இருந்தாலும் சரி. அம்மாவாக எண்ணிக்கொண்டு செய்ய எனக்கு மனத்தடை ஒன்றுமில்லை’.

வினய்யின் பேச்சு வினோத்துக்கு மிகுந்த அதிர்ச்சியளித்ததை அவனது முகபாவம் சொன்னது. அவன் எதையோ சொல்ல வந்து தவிர்த்ததைக் கவனித்தேன். அது அநேகமாக வினய் மூலம் அவனது மரணம் தீர்மானிக்கப்படும் என்று அம்மா சொன்னதாக இருக்கலாம். அதில் எனக்கு ஒரு சுவாரசியம் இருந்தது. அந்த விஷயத்தை வினோத் முதலில் எடுக்கிறானா அல்லது வினய் சொல்லப்போகிறானா என்று ஆவலுடன் காத்திருந்தேன். இருவருமே வேறு என்னென்னவோ பேசினார்களே தவிர, கவனமாக அதைத் தவிர்த்துக்கொண்டிருந்ததுபோலப் பட்டது. அம்மாவின் மூலம் வினோத் அறிந்த எங்களது பிறப்பின் ரகசியத்தைக் காட்டிலும் அது ஒன்றும் அத்தனை அதிர்ச்சியளிக்கக்கூடிய சங்கதியல்ல என்பதை அவர்கள் இருவருமே அறிவார்கள். இருந்தாலும் ஏன் தயங்குகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு கட்டத்தில் நானே பொறுமை இழந்து வினய்யைக் கேட்டுவிட்டேன், ‘டேய் என்னிடம் சொன்னதை நீயே இவனிடம் சொல்கிறாயா? அல்லது அவனே பேசட்டும் என்று காத்திருக்கிறாயா?’

வினய் என்னை உற்றுப் பார்த்தான். ‘அதைத்தான் நீ கொல்லைப்புறம் வந்தபோது யோசித்துக்கொண்டிருந்தேன்’ என்று சொன்னான்.

'சரி இப்போது சொல். என்னை எப்போது கொலை செய்யப் போகிறாய்?' என்று வினோத் சிரித்துக்கொண்டே கேட்டான். வினய்யும் சிரித்தான்.

‘சிரிக்காதே. பதில் சொல்’.

‘அம்மா காரியம் முடியட்டுமே? இதை அப்புறம் பேசிக்கொள்ளலாம்’ என்று அவன் சொன்னான். எனக்கு அது நியாயமாகப் பட்டது. மாமா எங்கள் மூவருக்கும் காப்பி போட்டு எடுத்துவந்து கொடுத்தார். நாங்கள் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் குடித்தோம்.

‘நன்னாருக்கா?’ என்று மாமா கேட்டார்.

‘பிரமாதம்' என்று சொன்னேன். பிறகு, ‘உங்கப்பா சாகறப்போ உங்ககிட்டே எதாவது சொன்னாரா மாமா?’ என்று கேட்டேன்.

‘ஒண்ணுமில்லியே’ என்றார் கேசவன் மாமா.

‘உங்கம்மா?’

‘அவளும் ஒண்ணும் சொன்னதில்லே. ஏன் கேக்கறே?’

‘ஒண்ணுமில்லை’ என்றுதான் நானும் பதில் சொன்னேன். வினய்தான் பிறகு என்னிடம் சொன்னான், ‘அண்ணா வரட்டும். அவன் சொல்லுவான் மிச்சத்தை’.

எனக்கு இப்போதும் அதுதான் தோன்றியது. அவன் வரப்போவதில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com