150. மைதிலி

அவள் திரும்புவதற்குள் அவளது கணவர் திரும்பிப் பார்த்தார். அம்மாவுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ரயிலில் இருந்து குதித்துவிடலாமா என்று நினைத்தாள். ஆனால்..

அம்மாவுக்கு நாராயண ஐயங்கார் இருபதாவது வயதில் திருமணம் செய்து வைத்தார். அப்பா அப்போது செகந்திராபாத்தில் ஒரு சேட்டுக் கடையில் கணக்காளராக உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தார். பெரிய முத்து வியாபாரி. அந்நாளில் ஆந்திரத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் அந்த சேட்டுக்கு வியாபாரம் இருந்தது. அப்பா மாதத்தில் பாதி நாள் சரக்கு எடுத்துக்கொண்டு வடஇந்தியாவுக்குப் போகும்படி இருக்கும். பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரம் என்று சுற்றிக்கொண்டே இருப்பார். சரக்குகளைச் சேர்த்துவிட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டு வந்து சேட்டிடம் கணக்கு ஒப்பித்துவிட்டால் ஒரு வார விடுமுறை தருவார் சேட்டு. அப்படிக் கிடைத்த ஒரு விடுமுறையில்தான் அப்பா மதராசுக்கு வந்து அம்மாவைப் பெண் பார்த்துத் திருமணம் செய்துகொண்டார்.

‘நாம செகந்திராபாத்திலேதான் இருக்கப் போறோமா?’ என்று அம்மா அப்பாவிடம் முதலிரவின்போது கேட்டாள்.

‘கொஞ்சநாளைக்கு நீ எங்காத்துல இரு. ஊர் சுத்தற வேலையைக் குறைச்சிண்டு வந்து உன்னைக் கூட்டிண்டு போறேன்’ என்று சொல்லிவிட்டுப் பத்து நாளில் அப்பா புறப்பட்டுப் போனார். அப்பா அடுத்த முறை மதராசுக்கு வருவதற்கு ஆறு மாதங்கள் ஆயின. அதற்குள் அம்மாவுக்குப் புகுந்த வீட்டு மனிதர்கள் பழகிவிட்டிருந்தார்கள். அன்பான மாமியார், மாமனார். அப்பாவுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளுக்குத் திருமணமாகி பெரம்பூரில் வசித்துக்கொண்டிருந்தாள். வாரம் ஒருமுறையாவது அவள் அம்மாவைப் பார்க்க வந்துவிடுவாள். அம்மா அவளுடனும் சிநேகமானாள். அத்தனை வீட்டு வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்தாள். மிக விரைவில் அந்த வீட்டில் அவள் இல்லாமல் எதுவும் நடக்காது என்றாகிப் போனது.

‘உங்க பிள்ளைக்கு ஒரு கடுதாசி போடுங்கோ. அவன் சேட்டுக்கு சேவகம் பண்ணதெல்லாம் போதும். கடைய கட்டிண்டு மெட்ராசுக்கே வந்துடச் சொல்லுங்கோ’ என்று அம்மாவின் மாமியார் தனது கணவரிடம் சொன்னாள். அவருக்கும் அது சரி என்று பட்டதால் மகனுக்கு ஒரு கடிதம் எழுதித் தபாலில் சேர்த்துவிட்டு, ஒன்றிரண்டு தினங்களில் அவன் வந்துவிடுவான் என்று காத்திருக்க ஆரம்பித்தார். ஆனால் அப்பா வரவில்லை. மேலும் மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரிடம் இருந்து ஒரு தபால் வந்தது. ஒரு கடிதத்துடன் அம்மா செகந்திராபாத்துக்கு வந்து சேர ஒரு டிக்கெட்டும் எடுத்து அனுப்பியிருந்தார் அப்பா. வேறு வழியில்லாமல் அம்மாவின் புக்கக மனிதர்கள் அவளை ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று வண்டி ஏற்றி அனுப்பிவைத்தார்கள்.

‘குடும்பம் நடத்தறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கானா ஒண்ணும் தெரியலியே. பாத்திரம் பண்டமெல்லாம்கூட இருக்காது அவனண்ட. என்ன பண்ணப் போறியோ’ என்று அம்மாவின் மாமியார் கவலைப்பட்டாள்.

‘நான் பாத்துக்கறேம்மா. நீங்க கவலைப்படாதேங்கோ’ என்று அம்மா நம்பிக்கை சொன்னாள்.

மறுநாள் அவள் செகந்திராபாத் சென்று இறங்கியபோது ஸ்டேஷனுக்கு அப்பா வந்திருந்தார். ‘வா’ என்று புன்னகையுடன் அவளை அழைத்துச் சென்று ஒரு ஜட்கா வண்டியில் ஏற்றி, தானும் ஏறிக்கொண்டார். ‘சேட்டு வேலைய விட்டு அனுப்ப மாட்டேன்னுட்டாரா?’ என்று அம்மா கேட்டாள்.

‘எதுக்கு விடணும்?’

‘இல்லே.. உங்கப்பா உங்களுக்கு ஒரு கடுதாசி போட்டிருந்தாரே..?’

‘அப்பாக்கு என்ன தெரியும்? ஒரு உத்தியோகம் கிடைக்கறதே குதிரைக் கொம்பு. இதுல கிடைச்சதை யாராவது விடுவாளோ?’

‘அதுவும் சரிதான். ஆனா பெரியவாளுக்கு நீங்ககூட இருக்கணும்னு ஆசை’.

இதற்கு அப்பா ஒன்றும் சொல்லவில்லை. ஜட்கா வண்டி ஒரு வீட்டின்முன் போய் நின்றது.

‘இதான், இறங்கு’ என்று அப்பா சொன்னார்.

வீடு மிகவும் சிறியதுதான். ஆனால் வெளிச்சமும் காற்றோட்டமுமாக இருந்தது. இரண்டு பேர் வசிக்கப் போதுமான வீடுதான் என்று அம்மாவுக்குத் தோன்றியது. அப்பா தயாராக சமைப்பதற்குப் பாத்திரங்கள் வாங்கி வைத்திருந்தார். ஒரு கட்டில் வாங்கிப் போட்டிருந்தார். அம்மாவை அன்று மாலையே கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்று நான்கு புடைவைகள், ரவிக்கைகள், உள்பாவாடைகள் வாங்கிக் கொடுத்தார்.

‘என்ன வேணுன்னாலும் சொல்லு. ஊர்ல இருந்தேன்னா உடனே கடைக்குப் போய் வாங்கிண்டு வந்துடலாம். வெளியூர் போயிருந்தேன்னா, வந்ததும் பண்ணிடுறேன்’ என்று அப்பா சொன்னார்.

‘எப்ப வெளியூர் போவேள்?’

‘அது எப்ப வேணா இருக்கும். நாளைக்கேகூட கிளம்புவேன்’ என்று அப்பா சொன்னார்.

இரண்டு நாளில் ஜலந்தருக்குப் போகவேண்டியிருப்பதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனார்.

செகந்திராபாத்தில் அம்மாவுக்கு முதல் சில வாரங்கள் மிகவும் சிரமமாக இருந்தன. இங்குமங்குமாகப் பல தமிழர்கள் இருந்தார்கள் என்றாலும் அவர்கள் குடியிருந்த பகுதியில் தெலுங்கு பேசுவோர் மட்டுமே இருந்தார்கள். அம்மாவுக்கு அந்த மொழி சரியாகப் பிடிபடவில்லை. அவசியத் தேவைகளுக்கான சில சொற்களை மட்டும் கற்றுக்கொண்டு ஒருவாறு சமாளித்துக்கொண்டிருந்தாள். ஆனால் தனக்காக மட்டும் பொங்கிச் சாப்பிடுவது அவளுக்கு மொழிப் பிரச்னையைவிடப் பெரும் பிரச்னையாக இருந்தது. சில நாள் அவள் சமைக்கவே மாட்டாள். பழங்கள் உண்டு தண்ணீர் குடித்துவிடுவாள். நாளெல்லாம் பொழுது போகாமல், வெளியே எங்கு போவதென்றும் தெரியாமல் மிகவும் தடுமாறிக்கொண்டிருந்தாள்.

சற்று அறிமுகமாகியிருந்த பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், அருகே என்ன கோயில் இருக்கிறது என்று ஒருநாள் கேட்டுத் தெரிந்துகொண்டு அங்கிருந்த ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய்வர ஆரம்பித்தாள். மாலைப் பொழுதுகளில் கோயிலுக்குப் போய் ஓரிரு மணிநேரம் அங்கு உட்கார்ந்திருந்துவிட்டு வந்தது சற்று ஆசுவாசமாக இருந்தது. கோயிலுக்குப் போகிற வழியில் தபால் ஆபீஸ் இருப்பதைத் தெரிந்துகொண்டு ஒரு கட்டு போஸ்ட் கார்டுகள் வாங்கி வந்து வைத்துக்கொண்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தாள். அப்பாவுக்குத் தனியாக, அம்மாவுக்குத் தனியாக, மாமியாருக்குத் தனியாக, மாமனாருக்குத் தனியாக, பெரம்பூர் நாத்தனாருக்குத் தனியாக. சலிக்காமல் எழுதி எழுதி அஞ்சலில் சேர்த்துக்கொண்டே இருந்தாள். ஆனால் ஜலந்தருக்குப் போன அப்பா அங்கே தான் எங்கே தங்கியிருக்கிறோமென்ற விவரத்தை அம்மாவுக்குச் சொல்ல மறந்திருந்தார். அதனால் அப்பாவுக்கு அவளால் அப்போது கடிதம் எழுத முடியாமல் போனது. இருந்தாலும் திரும்பி வந்ததும் காட்டலாம் என்று எண்ணி அவருக்கும் நான்கைந்து கடிதங்கள் எழுதி வைத்திருந்தாள்.

இந்நாள்களில் அவளுக்கு ஆஞ்சநேயர் கோயிலில் மைதிலி என்ற தமிழ்ப் பெண் ஒருத்தி அறிமுகமாகியிருந்தாள். அவள் மிகவும் அழகாக இருப்பதாக அம்மாவுக்குத் தோன்றியது. அதை அவளிடமும் சொன்னாள். அம்மாவைவிட வயதில் மூத்தவளான மைதிலிக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே திருமணமாகிக் குழந்தைகள் இருந்தன. பட்டுக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட மைதிலி சிறு வயதிலேயே செகந்திராபாத்துக்கு வந்து சேர்ந்துவிட்டதாகச் சொன்னாள். அவளது தந்தை சமஸ்தானத்தில் உத்தியோகஸ்தராக இருந்தார். கணவரும் சமஸ்தானத்திலேயே காரியஸ்தராக இருப்பதாகவும் அவருக்கு அப்பா அம்மா உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் தங்கள் வீட்டிலேயே அவரும் வசிப்பதாகவும் சொன்னாள்.

‘உங்களுக்கு அதிர்ஷ்டம்’ என்று மைதிலியிடம் அம்மா சொன்னாள்.

அவள் சிரித்தாள். ‘ஆம். அதிர்ஷ்டம்தான். என் கணவர் என்மீது மிகுந்த அன்பு கொண்டவர். சமஸ்தானக் காரியாலயத்தில் தினமும் மதியம் ராஜ போஜனம் இருக்கும். என் அப்பா அங்கேதான் சாப்பிடுவார். ஆனால் என்னோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாம் என்பதற்காகவே என் கணவர் தினமும் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து விடுவார்’ என்று சொன்னாள்.

ஒருநாள் தங்கள் வீட்டுக்கு வரச் சொல்லி மைதிலி அம்மாவுக்குத் தனது முகவரியை எழுதிக் கொடுத்தாள். அது அம்மாவுக்காக அப்பா பார்த்துவைத்த வீட்டில் இருந்து நான்கு மைல் தள்ளி இருந்த முகவரி.

‘அவ்வளவு தூரத்தில் இருந்தா தினமும் நீங்கள் இந்தக் கோயிலுக்கு வருகிறீர்கள்?’ என்று அம்மா ஆச்சரியப்பட்டாள்.

‘என்ன கஷ்டம்? வீட்டில் ஒன்றுக்கு இரண்டு ப்ளெஷர் இருக்கிறது. என் உபயோகத்துக்காகவே என் கணவர் ஒன்றை எனக்குத் தந்திருக்கிறார்’.

‘நீங்கள் புண்ணியம் செய்தவர்’.

‘ஆம். சந்தேகமில்லை. நீங்கள் அவசியம் என் வீட்டுக்கு வர வேண்டும். அம்மா மிகவும் சந்தோஷப்படுவாள்’ என்று அவள் சொல்லிவிட்டுப் போனாள்.

அப்பா ஜலந்தரில் இருந்து வந்ததும் அவரை அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்று அம்மா முடிவு செய்துகொண்டாள். ஆனால் அம்முறை அப்பாவுக்குப் போன காரியம் அத்தனை எளிதில் முடியவில்லை. தான் ஊர் திரும்ப மேலும் இருபது நாள்கள் ஆகலாம் என்று அம்மாவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்திலும் ஜலந்தர் என்று ஊர் பெயரை மட்டும் எழுதி, தேதி குறிப்பிட்டிருந்தாரே தவிர முகவரியைத் தரவில்லை. இதனால் அம்முறையும் அம்மாவால் அப்பாவுக்கு பதில் கடிதம் எழுத முடியாமல் போய்விட்டது.

ஊரில் இருந்து அப்பா ஒரு கடிதம் எழுதியிருந்தார். நவராத்திரி வருகிறது. நீ ஒரு நடை மதராசுக்கு வந்து போக முடியுமானால் நன்றாக இருக்கும் என்று அதில் சொல்லியிருந்தார். இருபது நாள் தனியேதானே இருக்க வேண்டும் என்று யோசித்த அம்மா, ஊருக்குப் போய்வரலாம் என்று முடிவு செய்தாள். மறுநாள் கோயிலில் மைதிலியைப் பார்த்தபோது இந்த விஷயத்தைச் சொல்லி, தனக்கு ரயில் டிக்கெட் எடுத்துத் தர யாரையாவது அனுப்பி உதவ முடியுமா என்று கேட்டாள்.

‘இதென்ன பிரமாதம்? நான்கூட நாளை மறுநாள் என் கணவரோடு விசாகப்பட்டினத்துக்குப் போகப் போகிறேன். உங்களுக்கு மதராசுக்கு ஒரு டிக்கெட் சேர்த்து எடுத்துவிடும்படி அவரிடமே சொல்லிவிடுகிறேன்’ என்று சொன்னாள். சொன்னபடி மறுநாள் மாலை கோயிலில் சந்தித்தபோது டிக்கெட்டைக் கொடுத்தாள். அம்மா டிக்கெட்டுக்குப் பணம் கொடுத்தபோது வேண்டவே வேண்டாம் என்று அன்போடு மறுத்துவிட்டாள். இந்தக் காலத்தில் இப்படியும் நல்லவர்கள் இருப்பார்களா என்று அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம்.

‘நான் ஊருக்குப் போய்விட்டு வந்ததும் நிச்சயமாக ஒருநாள் உங்கள் வீட்டுக்கு வருகிறேன்’ என்று சொல்லி விடைபெற்றுக் கிளம்பினாள்.

மறுநாள் அம்மா ஹைதராபாத் ரயில் நிலையத்துக்குப் போனபோது அங்கே மைதிலியைப் பார்த்தாள். அவள் தனது கணவருடனும் நான்கு சிறு குழந்தைகளுடனும் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கக் கண்டாள். மதராஸ் போகிற ரயில் கிளம்பத் தயாராக இருந்தபடியால், அவள் அருகே போய்ப் பேசவோ விடைபெறவோ அப்போது அம்மாவுக்கு அவகாசமில்லாமல் இருந்தது. தவிர அவள் ஏற வேண்டிய பெட்டியும் பிளாட்பாரத்தின் மறுமுனையில் இருந்தது. உரக்கக் குரல் கொடுத்துக் கத்திப் பாத்தாள். மைதிலிக்கு அது காதில் விழவில்லை. சரி போ என்று அம்மா தான் ஏற வேண்டிய பெட்டியை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள். மூச்சிறைக்க அவள் ஏறி, இருக்கை தேடி அமர்ந்த மறுகணமே வண்டி கிளம்பிவிட்டது. ஜன்னல் வழியே திரும்பிப் பார்த்தபோது இப்போது மைதிலியின் கணவர் கடையில் எதோ தின்பண்டம் வாங்கிக்கொண்டு இருக்கைக்குத் திரும்புவது தெரிந்தது. ரயிலும் அவர்கள் இருக்கும் திசை நோக்கித்தான் மெல்ல ஊர்ந்து நகர்ந்துகொண்டிருந்தது. இப்போது அம்மாவால் மைதிலியையும் அவளது கணவரையும் நன்றாகவே பார்க்க முடிந்தது.

‘மைதிலி, நான் போயிட்டு வரேன்’ என்று ஜன்னல் வழியே கைநீட்டி அம்மா உரக்கச் சொன்னாள். அவள் திரும்புவதற்குள் அவளது கணவர் திரும்பிப் பார்த்தார். அம்மாவுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ரயிலில் இருந்து குதித்துவிடலாமா என்று நினைத்தாள். ஆனால் வண்டி வேகமெடுத்து பிளாட்பாரத்தைத் தாண்டிவிட்டது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com