135. ஊழித் தாண்டவம்

இது ஊழித் தாண்டவமல்லவா? நித்ய கல்யாணப் பெருமாளால் நிச்சயமாக இந்த உக்கிரத்தைத் தாங்க முடியாது. நெடுநேரம் நாங்கள் உறைந்துபோய் அங்கேயே, அப்படியே நின்றிருந்தோம்.

பத்மா மாமி சிறிது நேரம் அழவாவது செய்வாள் என்று எதிர்பார்த்தேன். ஆன வயதுக்குக் கோபம் உறைந்து போயிருக்குமென்றாலும், துக்கத்தின் ஈரத் தேக்கங்கள் இன்னும் மிச்சம் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஒருவேளை அவள் கவனமாகத் தன்னை மறைத்துக்கொண்டு எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறாளோ என்றும் தோன்றியது. ஆனால் அடையாளம் தெரிந்துகொண்ட கணம் தொடங்கி, சிறிதும் அதிர்ச்சியோ பதற்றமோ அடையாமல் அவள் பேசிக்கொண்டிருந்தது வியப்பாக இருந்தது. எதிரியாகவே இருந்தாலும் உட்கார்ந்து பேச இரண்டு பேர் கிடைத்ததே பெரிது என்று நினைத்துவிட்டாளா? என்னால் தாங்கவே முடியவில்லை. வாயைத் திறந்து கேட்டுவிட்டேன்.

‘மாமி, உங்களுக்கு இவனைப் பார்த்தால் கோபமே வரவில்லையா?’

‘கோச்சுண்டு என்ன ஆகப் போறது? அவ போய் இருபத்தஞ்சு வருஷத்துக்கு மேலே ஆயாச்சு. இத்தனை வருஷம் கழிச்சி என்னைத் தேடிவந்து கால்ல விழுந்தாரே, இந்த மனசுதான் எனக்கு முக்கியமாப் படறது’ என்று சொன்னாள்.

நான் உடனே, ‘வினோத், இதை உன் சூழ்ச்சி என்று எடுத்துக்கொள்கிறேன்’ என்று சொன்னேன். அவன் பதறிவிட்டான். ‘இல்லை இல்லை. நிச்சயமாக அப்படி இல்லை. இந்தக் கணம் மாமி என்னைத் தற்கொலை செய்துகொள்ளச் சொன்னாலும் நான் தயாராக இருக்கிறேன்’.

‘அது உன் துறவுக்கு அவமானமல்லவா?’

‘ஆம். சந்தேகமில்லை. ஆனால் நான் தருமம் கொன்றவன். அதனால்தான் கிருஷ்ணன் எனக்கு இன்றுவரை தென்படவில்லை’.

‘புத்தர், வர்த்தமானரெல்லாம்கூட இந்த விதத்தில் தருமம் கொன்றவர்கள்தாம்’ என்று சொன்னேன்.

‘தமிழ்ல பேசறேளா? நேக்குப் புரியலே’ என்று பத்மா மாமி கேட்டாள். நான் அவளுக்கு விளக்கினேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, ‘ஆமாமா. அதென்னமோ ஒரு பொண்ண பலி குடுத்தாத்தான் சன்யாசம் கூடும் போலருக்கு. இவருக்கு எம்பொண்ணு ஒரு கருவியா இருந்திருக்கா. புண்ணியவதி போய் சேந்துட்டா’ என்று சொன்னாள்.

வினோத் சட்டென்று எழுந்தான். ‘சரி மாமி. நாங்க கிளம்பறோம். இன்னும் ஆத்துக்குப் போகலை’ என்று சொன்னான்.

‘கிழவிக்கு ஒரு ஆசை. சொல்லட்டுமா?’

‘சொல்லுங்கோ’.

‘எங்காத்துக்கு வந்துட்டு ஒண்ணும் சாப்டாம போறேங்கறேளே. மனசுக்குக் கஷ்டமா இருக்கு’.

‘பரவால்ல மாமி. பொதுவா நான் கார்த்தாலைகள்ள சாப்பிடறதில்லே’ என்று வினோத் சொன்னான்.

‘நீங்க?’ என்று மாமி என்னைப் பார்த்தாள்.

‘எனக்கு அந்த மாதிரி நியமமெல்லாம் இல்லை. பசி இருந்தா மட்டும் சாப்பிடுவேன்’ என்று சொன்னேன்.

‘ஆனா எனக்காக இன்னிக்கு சாப்பிடலாம்’ என்று மாமி மீண்டும் சொன்னாள். நான் வினோத்தைப் பார்த்தேன்.

‘ஒரு தம்ளர் மோர் குடுங்கோ’ என்று அவன் கேட்டான். மாமிக்கு அதுவே மகிழ்ச்சியளிக்கப் போதுமானதாக இருந்தது. அவள் அடுக்களைக்குப் போனாள்.

‘இது என்னால் மறக்க முடியாத தினம்’ என்று நான் சொன்னேன்.

‘ஆம். மிகவும் நல்ல பெண்மணி’.

‘யோசித்துப் பார்த்தால், இந்த உலகில் நம் நான்கு பேரைத் தவிர அநேகமாக மீதி அனைவருமே நல்லவர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது’.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’

'பார், நீ செய்த அக்கிரமத்துக்குப் பிராயச்சித்தமாகக் கேசவன் மாமா இன்றுவரை பத்மா மாமிக்குக் கோயில் பிரசாதம் சப்ளை செய்து சம்ரட்சித்துக்கொண்டிருக்கிறார்’ என்று நான் சொன்னதும், வினோத் அடக்கமாட்டாமல் விழுந்து விழுந்து சிரித்தான்.

மாமி இரண்டு தம்ளர்களில் மோர் எடுத்து வந்தாள். நாங்கள் நன்றி சொல்லி வாங்கி அருந்தினோம்.

‘நன்னாருந்ததா? பெருங்காயமெல்லாம் போட்டிருந்தேன்’.

‘பிரமாதமாக இருந்தது’ என்று சொன்னேன்.

வினோத் சொன்னான், ‘மாமி, நான் கிருஷ்ணனுக்கு என்னை ஒப்புக் கொடுத்தவன். திருமணத்துக்கு முதல் நாள் நான் ஊரை விட்டுப் போனதற்குக் காரணம் நானல்ல; அவந்தான்’.

நான் அவளுக்கு சுருக்கமாக வினோத்தின் அன்றைய சூழ்நிலையை விளக்கிப் புரியவைக்க முயற்சி செய்தேன். அவசியமில்லைதான். ஆனாலும் சொல்லத் தோன்றியது. மாமி சட்டென்று பக்தி மிகுந்து வினோத்தைப் பார்த்துக் கரம் குவித்தாள்.

‘இதெல்லாம் நாம தீர்மானிக்கறது இல்லே. நான் உங்களை ஒண்ணும் சொல்லப் போறதுமில்லே’ என்று சொன்னாள்.

‘சொன்னால் சந்தோஷப்படுவேன்’.

‘என்ன சொல்லணும்?’

நான் சட்டென்று குறுக்கே புகுந்து, ‘நாசமாப் போன்னாவது சொல்லுங்கோ’ என்று சொன்னேன். மாமி உடனே, ‘எம்பெருமானே!’ என்று சொன்னாள். இது என்ன மனம் என்று வினோத் என்னைப் பார்த்துச் சொன்னான்.

எனக்குத் திரும்பவும் தோன்றியது. எங்களைத் தவிர மீதமுள்ள அனைவருமே நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

‘உங்கம்மாதான் பாவம், ரொம்ப மனசுடைஞ்சி போயிட்டா. நாலுமே இப்படிப் போயிட்டா யாருக்குத்தான் தாங்கும்?’ என்று பத்மா மாமி சொன்னாள். நாங்கள் அமைதியாக இருந்தோம்.

‘இவர் போனப்பறம் ஒரு மூணு நாலு மாசம் அவள வெளில பாக்கவே முடியலே. மூணாங்கட்டைத் தாண்டி வரவேயில்லேன்னு கேசவன் சொன்னார்’.

‘நீங்க எப்படி சாமாளிச்சிண்டேள்?’ என்று கேட்டேன்.

‘தெரியலே. பிராணன் போயிடும்னு அப்ப தோணித்து. ஆனா போகலே. அவர் இருந்தவரைக்கும் ஆறுதலா எதாவது சொல்லி பேசிண்டிருப்பார். அவர் போனதும் அதுக்கும் ஆளில்லாம போச்சு’.

‘மாமா எப்ப போனார்?’

‘ஆயிடுத்து, பன்னெண்டு வருஷம். சர்க்கரை ஜாஸ்தியாயிடுத்து. நிக்க முடியலே. நடக்க முடியலே. நாலு வார்த்த சேந்தமாதிரி பேசக்கூட முடியாம சிரமப்பட்டார். ஒரு வழியா போயிட்டார்’.

‘உங்களுக்கு ஷுகரெல்லாம் இல்லியே?’

‘ஒண்ணுமே இல்லே. பாக்கறேளே எப்படி இருக்கேன்?’

நான் சிரித்தேன்.

‘தள்ளாமை மட்டும்தான். உங்கம்மா வயசுதான் எனக்கும். அவ சீக்கிரம் படுத்துண்டுட்டா. நான் இன்னும் நடமாடிண்டிருக்கேன். படுக்கற நேரம் நெருங்கிடுத்துன்னு தெரிஞ்சுட்டா, ஆத்த பூட்டி மாடத்துல சாவிய வெச்சுட்டு கோயில் வாசலுக்குப் போய் படுத்துண்டுடுவேன்’ என்று சொன்னாள்.

‘எதுக்கு?’

‘பின்னே? இத்தன வருஷமா கஷ்டத்த சுமந்துண்டு இருந்ததுக்கு எனக்கு ஒரு ஆசுவாசம் வேண்டாமா?’

எனக்குப் புரியவில்லை. கோயில் வாசலில் போய் ஏன் படுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டேன்.

‘அந்த நாசமத்துப் போறவன நான் வேற எப்படிப் பழிவாங்குவேன்?’ என்று மாமி சொன்னாள்.

வினோத் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தான்.

‘மாமி, நீங்க சொல்றது புரியலே’.

‘புரியும்படியாவே சொல்றேனே. என்ன இப்போ? ஊருக்குள்ள வர்றப்போ கோயில் வாசல்ல பாத்தேளா? எத்தன கார் நிக்கறது! எவ்ளோ பேர் வரா! எங்கெங்கேருந்தோ வரா’.

‘ஆமா’.

‘நித்ய கல்யாணப் பெருமாள்னு பேர வெச்சுண்டு, தேடி வர்ற அத்தனை பொண்ணுகளுக்கும் கல்யாணப் பிராப்தம் பண்ணிக் குடுத்துண்டிருக்கானா இல்லியா?’

‘சரி’.

‘கட்டைல போறவன் எம்பொண்ணுக்கு ஒரு வழிய காட்டினானா சொல்லுங்கோ? அப்படி என்ன பாவம் பண்ணிட்டேன் நான்? எம்பத்து மூணு வயசாச்சு எனக்கு. இந்த எம்பத்து மூணு வருஷமாவும் இதே மண்ணுலயேதான் புரண்டுண்டிருக்கேன். இன்னொரு கோயிலுக்குப் போயிருப்பேனா, இன்னொரு பெருமாள சேவிச்சிருப்பேனா, இவன் தீர்த்தம் வாங்கிக்காம ஒருவேள சாதம் சாப்ட்டிருப்பேனா?’

மாமி உணர்ச்சிமயமாகப் பொழிந்துகொண்டிருந்தாள். எங்களுக்குப் பேச்சே வரவில்லை. பிரமித்துப்போய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

‘என்னை விடுங்கோ. மாமா நடமாடிண்டு இருந்த வரைக்கும் தெனம் கோயிலுக்குப் போய் பெருக்கித் தள்ளி, குப்பையள்ளிப் போட்டுட்டு வருவேர். என்னன்னு நினைச்சேள்? அவர் அந்தக் காலத்து எம்.ஏ. படிச்சவர். எத்தன பெரிய பெரிய அதிகாரிகளெல்லாம் அவரண்ட வந்து கைகட்டி நிப்பா தெரியுமா? அப்பேர்ப்பட்ட மனுஷன், இந்தக் கழிச்சல்ல போறவன் கோயில்ல குப்பை அள்ளிப் போடறதுதான் புண்ணியம்னு கிடந்தார்’.

மாமி தீவிரமாக எதையோ சொல்ல வருவது புலப்பட்டது. ஆனால் சரியாகப் புரியவில்லை. குறுக்கே ஏதேனும் கேட்டால் கண்ணி அறுந்துவிடுமோ என்று அஞ்சி அமைதியாக இருந்தோம். அவள் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனாள்.

‘ஒரு உற்சவம் தவற விட்டிருப்போமா, ஒரு திருநட்சத்திரத்துக்கு சேவாகாலம் சாதிக்காம இருந்திருப்பாரா, அவன அனுமதி கேக்காம ஒரு முடிவு எடுத்திருப்போமா! ஒண்ணுமே இல்லியே. சித்ராக்கு கல்யாணம்னு முடிவானதும் பத்திரிகைய தூக்கிண்டு ஓடினாரே மனுஷன்! சன்னிதில கொண்டுபோய் வெச்சுட்டு நிலைப்படில முட்டிண்டு முட்டிண்டு அழுதேர்! கடேசில கருணை காட்டிட்டியேடா ஆதிவராகான்னு அவர் கதறின கதறல் இன்னும் என் காதுல நிக்கறது..’

மாமிக்குத் தொண்டை அடைத்தது. ‘உக்காருங்கோ. கொஞ்சம் அமைதியா இருங்கோ’ என்று வினோத் சொன்னான்.

‘என்னத்த வாரிக் குடுத்துட்டான் எங்களுக்கு? எங்கெங்கேருந்தோ ஏரோப்ளேன் ஏறியெல்லாம் பொண்ணுகள கூட்டிண்டு இங்க வரா. ஒரு மாலைய வாங்கி சாத்திட்டு, ஒரு அடிப்பிரதட்சிணம் பண்ணிட்டு நாப்பது நாள்ள கல்யாணம் நடக்கும்னு தீர்மானம் பண்ணிண்டு போயிடறா. நடந்துடறதே? அத்தன பேருக்கும் நடத்தி வெச்சுடறானே படவா ராஸ்கல்! எம்பொண்ண மட்டும்தானே சீரழிச்சான்! அவளத்தானே கதற வெச்சி சாகடிச்சான். அவனையாவது சும்மா விடறதாவது?’

‘மாமி..!’ என்றேன் அதிர்ச்சியுடன்.

‘நான் தீர்மானம் பண்ணிட்டேன். அவ செத்ததுக்கு இவரில்லே காரணம். அவ ஜாதகம்கூட இல்லே. அவளுக்கு தீர்க்காயுசு ஜாதகம். அதுல எனக்கு சந்தேகமே இல்லே. அதையும் மீறி என்கிட்டேருந்து அவள பறிச்சிண்டான் பாரு, அந்தப் பாவிய ஒரு நாள் நான் கதறவிடுவேன்’.

‘ஐயோ!’

‘என்ன ஐயோ? கோவுல் வாசல்ல போய் படுத்துண்டுதான் பிராணன விடுவேன். அன்னிக்குப் பூரா அவனுக்குப் பட்டினி. என் பொணத்த எடுத்துண்டு போய் எரிச்சுட்டு, புண்ணியாவசனம் பண்ணி, சாந்தி பண்ணி, எல்லாம் பண்ணி முடிச்சப்பறம்தான் கோவுல் கதவு திறப்பா. கோவுலானா என்ன, வீடானா என்ன? பொணம் விழுந்த இடத்துக்குத் தீட்டில்லாம போகுமா?’

நான் பேச்சற்றுப் போனேன். கோபமற்றவள், துக்கமற்றவள் என்று எண்ணியதெல்லாம் எப்பேர்ப்பட்ட பிழை! இது ஊழித் தாண்டவமல்லவா? நித்ய கல்யாணப் பெருமாளால் நிச்சயமாக இந்த உக்கிரத்தைத் தாங்க முடியாது. நெடுநேரம் நாங்கள் உறைந்துபோய் அங்கேயே, அப்படியே நின்றிருந்தோம். பத்மா மாமியின் உடலெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. நான் அவளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று நார்க் கட்டிலில் படுக்க வைத்தேன். ‘தூங்குங்கோ செத்த நேரம்’ என்று சொன்னேன்.

‘என்னமோ சொல்ல வந்தேன். என்னென்னமோ சொல்லிண்டிருந்துட்டேன் இல்லே?’ மாமி சிரித்தாள்.

‘நாலு பேரும் ரிஷிகளாயிட்டேள். நல்லபடியா உங்கம்மாவ மோட்ச லோகத்துக்கு அனுப்பிவைங்கோ’ என்று சொன்னாள். நாங்கள் விடைபெற்று வெளியே வந்தபோது, கேசவன் மாமா வேகவேகமாக அந்தப் பக்கம் வந்துகொண்டிருந்ததைக் கண்டோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com