137. விதியும் ஸ்மிருதியும்

அவளது கண்கள் இரண்டும் இரண்டு சிப்பிகளுக்குள் வைத்து மூடினாற்போலக் குழிந்து கிடந்தன. உதடுகளும் கன்னமும் ஒரே நிறமாயிருந்தன. முகத்தின் சுருக்கங்களை நீவி விரித்தால் முழு உடலுக்கும் போர்த்திவிடலாம்.

‘அக்கா, யாரு வந்திருக்கா பார்’ என்று கேசவன் மாமா சொன்னார்.

அம்மா கண்ணைத் திறக்கவில்லை. நானும் வினோத்தும் அவள் அருகே சென்று அமர்ந்துகொண்டோம். ‘தொடுங்கோடா. அப்ப கண்ண முழிப்பா’ என்று மாமா சொன்னார். நான் சிறிது தயங்கினேன். வினோத் யோசிக்கவேயில்லை. ‘தொந்தரவு பண்ண வேண்டாம் மாமா’ என்று சொன்னான்.

‘ஓ! தொடப்படாதோ?’ என்று மாமா கேட்டார்.

‘சேச்சே. அப்படியெல்லாம் இல்லை’ என்று சொல்லிவிட்டு நான் அம்மாவின் தலையை மெல்ல வருடிக் கொடுத்தேன். அவளிடம் சுவாசம் தவிர வேறெந்த அசைவும் இல்லை. அவளது கண்கள் இரண்டும் இரண்டு சிப்பிகளுக்குள் வைத்து மூடினாற்போலக் குழிந்து கிடந்தன. உதடுகளும் கன்னமும் ஒரே நிறமாயிருந்தன. முகத்தின் சுருக்கங்களை நீவி விரித்தால் முழு உடலுக்கும் போர்த்திவிடலாம் போலிருந்தது. ஒரு கொடிக் கயிறு போல இளைத்துவிட்டிருந்தாள்.

‘சாப்பிடறதே கிடையாது. நாலு வாய் தயிருஞ்சாம். அவ்ளோதான். போதும்னுடுவா. இன்னிக்கி நேத்தில்லே. அஞ்சாறு வருஷமாவே அவ்ளோதான்’.

‘நினைவிருக்கா?’ என்று வினோத் கேட்டான்.

‘சமயத்துல முழிச்சிண்டு பாப்பா. ஒரு வார்த்த, ரெண்டு வார்த்த பேசுவா. அடையாளம் தெரிஞ்சிண்டு பேசறாளா, தெரியாம பேசறாளான்னு கண்டுபிடிக்க முடியாது’.

‘ஃபேன் போட்டுக்கறதில்லியா?’ என்று கேட்டேன்.

‘இருக்கே. ஆனா போடறதில்லே. குளுர் தாங்காது அவளுக்கு’ என்று மாமா சொன்னார். நான் அம்மாவின் நாடி பிடித்துப் பார்த்தேன். உடனே, ‘என்ன தெரியறது?’ என்று மாமா கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. அறையை விட்டு எழுந்து வெளியே வந்தேன். வினோத் என்னிடம் வந்து ‘என்ன’ என்று கேட்டான்.

‘நீ சொன்னதுதான். மிஞ்சினால் இன்னும் ஒருநாள் தாங்குவாள். நாடி கிட்டத்தட்ட விழுந்துவிட்டது’ என்று சொன்னேன். அவன் நெடுநேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தான். மாமா அவன் பக்கத்தில் சென்று அமர்ந்துகொண்டு, ‘எத்தன வருஷம் கழிச்சி ரெண்டு பேரும் வந்திருக்கேள்? சந்தோஷமா உக்கார்த்தி வெச்சி தளிகை பண்ணிப் போடமாட்டமான்னு இருக்குடா. ஆனா முடியலியே!’ என்று கண்ணைத் துடைத்துக்கொண்டார்.

‘சிரமப்படாதிங்கோ. சாப்பிடறது எனக்கு ஒரு விஷயமே இல்லே’ என்று வினோத் சொன்னான். மாமா என்னைப் பார்த்தார். ‘ஒம்போது நாள் சாப்டாம இருப்பேன் மாமா. பசிக்காது’ என்று சொன்னேன்.

‘உடம்பு போயிடப் போறது பாத்துக்கோங்கோடா’.

‘உடம்பு போகத்தான் செய்யும்’ என்று வினோத் சொன்னான்.

மாமா சட்டென்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு, ‘எத்தனையோ வருஷம் எங்கெங்கோ சுத்தி, என்னென்னமோ கத்துண்டு வந்திருக்கே. பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடணும்னு தோணற மாதிரி முகத்துல தேஜஸ் தெரியறது. இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. அது ஏண்டா நம்மாத்துக்கு மட்டும் இப்படி ஒரு விதி? உலகத்துல எந்தக் குடும்பத்துலயும் இப்படி மொத்தமா வாரிக் குடுத்ததில்லியேடா!’

‘தெரியல மாமா’ என்று வினோத் சொன்னான்.

‘எதாவது சாபம் இருக்கும். இல்லேன்னா எந்தத் தலைமுறையிலயோ, யாரோ கேட்டு வாங்கின வரமா இருக்கும்’ என்று நான் சொன்னேன்.

‘வரமா! பெத்துப் போடறதையெல்லாம் சன்னியாசி ஆக்கறேன்னு எந்தத் தாய் சொல்லியிருப்பா? அதெல்லாம் சும்மா’.

‘ஆனா அந்த சுவடியிலே தெளிவா எழுதியிருக்கு மாமா’.

‘என்னன்னு?’

‘இந்தக் குடும்பத்துல பொறக்கற அத்தன பிள்ளைகளும் சன்னியாசியாத்தான் போவான்னு’.

‘நிஜமாவா?’

‘அப்படித்தான் அண்ணா சொன்னான். இந்த வம்சம் இதோட முடியறதுதான் விதி’.

‘அப்போ பகவான்னு ஒருத்தன் விதின்னு ஒண்ணை எழுதிண்டுதான் இருக்காங்கறியா?’

மாமா இப்படிக் கேட்டதும் நான் வெடித்துச் சிரித்துவிட்டேன்.

‘எதுக்கு சிரிக்கறே?’

‘கோயில்லயேதான் இருக்கேள். கைங்கர்யம்தான் பண்ணிண்டிருக்கேள். இத்தன வயசுக்கப்பறம் இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு வரலாமா?’

மாமா சட்டென்று சுருங்கிப் போனார். ‘தப்புதான். ஆனா நாளாக நாளாக, விரக்திதாண்டா ஏறிண்டே போறது. என்ன பெரிய கோயில், என்ன பெரிய பெருமாள்னு சமயத்துல தோணிப் போயிடறது’.

நாங்கள் இதற்கு பதில் சொல்லவில்லை. அமைதியாகவே இருந்தோம். சட்டென்று மாமா கேட்டார், ‘இந்த மாதிரி சன்யாசத்துல விரக்தி உண்டோ? எதுக்கு இது தண்டத்துக்குன்னு தோணுமோ?’

‘திணிச்சிருந்தா தோணும். சன்யாச மனசு தானா உண்டாகியிருந்தா தோணாது’ என்று சொன்னேன்.

‘இதைப் போய் யார் திணிப்பா?’

‘உண்டே. வினய் எப்படி சன்யாசியானான்னு நினைக்கறேள்?’

‘என்னடா சொல்றே?’

‘அண்ணா திணிச்சது அது. அவன் பாட்டுக்கு காஞ்சீபுரத்துல வேதபாடசாலைல படிச்சுட்டு எதாவது சேவாகால கோஷ்டில சேந்துண்டு, கல்யாணம் பண்ணிண்டு போயிருப்பான். வம்படியா அவனை வாலாஜாபாத் பஸ் ஸ்டாண்ட்ல பஸ்ஸை விட்டுக் கீழே இறக்கி நடுத்தெருவுக்கு இழுத்துண்டு போய் விட்டுட்டுப் போயிட்டான் ராஸ்கல்’ என்று சொன்னேன்.

‘அடக்கடவுளே. நிஜமாவா சொல்றே?’

‘அவனே சொன்னதுதான்’.

‘இல்லே மாமா. அவன் விதி மாறிடாம அண்ணா காபந்து பண்ணியிருக்கான். இவன் அதை வேற விதமா சொல்றான்’ என்று வினோத் சொன்னான்.

‘மாறித்துன்னா அது விதியா? ஸ்மிருதி’.

வினோத் இதற்கு பதில் சொல்லவில்லை. மாறாக மாமாவைப் பார்த்து, ‘எதுவும் தப்பாகலே மாமா. எங்க போனாலும் என்னவா ஆனாலும் அனுப்பி வெக்கறதுக்கு சரியா வந்துட்டோமா இல்லியா?’ என்று கேட்டான்.

‘சந்தோஷமா வாழ வெச்சிருக்கலாமேடா. அதவிடவா இது பெரிசு?’ என்று மாமா சொன்னார்.

நாங்கள் இருவருமே சிறிது யோசித்தோம். எதிர்பாராத விதமாக ஒரே சமயத்தில் பதில் சொன்னோம். ‘ஆமா. அதுல சந்தேகமே வேண்டாம்’.

மாமா ஒன்றும் சொல்லவில்லை. சிறிது நேரம் அழுதார். பிறகு எழுந்து சென்று ஸ்டவ்வை மூட்டி, வென்னீர் வைத்து டிக்காஷன் போட ஆரம்பித்தார்.

‘காப்பியெல்லாம் வேண்டாம் மாமா’ என்று நான் சொன்னேன்.

‘எனக்கு வேணும்டா’ என்று சொல்லிவிட்டு மூவருக்கும் காப்பி எடுத்து வந்து வைத்துவிட்டு மீண்டும் அமர்ந்துகொண்டார். ‘எடுத்துக்கோங்கோ’.

நாங்கள் அருந்தி முடிக்கும்வரை அவர் ஒன்று பேசவில்லை. ‘காப்பி நன்னாருக்கா?’ என்று கேட்டார்.

‘ருசி பாக்கறதில்லே’ என்று வினோத் சொன்னான்.

‘பிரமாதமா இருக்கு மாமா’ என்று நான் சொன்னேன்.

‘அதுசரி, வந்ததும் வராததுமா நேரா பத்மா மாமியாத்துக்குப் போயிட்டேளே, என்ன சமாசாரம்?’

நான் சிரித்தேன். ‘இவனுக்காகத்தான்’ என்று சொன்னேன்.

‘அவளே பாவம் தள்ளாம கெடக்கறா. நீ போய் நின்னதுல செத்துகித்துப் போயிட்டான்னா என்னடா பண்றது?’

‘கொள்ளி போட்டுட்டுப் போவேன் மாமா’ என்று வினோத் சொன்னான்.

‘ஐயோ. என்னடா இது?’

‘சொன்னேனே? வாழ வெக்கறதுன்னு நீங்க சொன்னதைவிட அதுதான் பெரிசு. இந்த உலகத்துல உள்ள அத்தன பொம்மனாட்டிகளும் எனக்கு தாயார் ஸ்தானம்’ என்று அவன் சொன்னதும். நான் வினோத்தை இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டேன். அரை மணி நேரம் இப்படியே பேசிக்கொண்டிருந்த பின்பு மாமா சற்று சகஜமானார். வினோத்தைத் தேடி அவர் இலங்கைக்குப் போன கதையைச் சொன்னார். என்னைப் பார்க்க மடிகேரிக்கு வந்ததைச் சொன்னார். திருப்பதியில் அண்ணாவைப் பார்த்தது, வினய்யைத் தேடிக்கொண்டு ராமேஸ்வரத்துக்குப் போனது, ரேணிகுண்டாவுக்குப் போனது, திருவானைக்காவுக்குப் போனது என்று என்னென்னவோ சொன்னார்.

‘அடடே, நீங்க திருவானைக்கா போனேளா? எப்போ?’ என்று கேட்டேன்.

‘அதை ஏன் கேக்கறே? உங்கப்பா ஒரு நாள் யாரோ ஒரு ஜோசியரைப் போய்ப் பார்த்துட்டு வந்தார். எண்ணி எட்டு நாள்ள உம்ம நாலு பிள்ளைகள்ள ஒருத்தன் இருக்கற இடத்த பத்தி தகவல் தெரியும்னு அவர் சொல்லியிருக்கார். சொல்லி வெச்ச மாதிரி கோடாங்கி ஒருத்தன் ஆத்து வாசல்ல வந்து நின்னுண்டு திருவானைக்காவுக்குப் போய் ரெண்டாவது பிள்ளைய பாத்துட்டு வான்னு சொல்லிட்டுப் போயிருக்கான்’.

எனக்கு மிகவும் ஆர்வமாகிவிட்டது. ‘நிஜமாவா!’ என்று கேட்டேன்.

‘நான் ஏண்டா பொய் சொல்லப் போறேன்? இந்த மனுஷன் கெளம்புடா திருவானைக்காவுக்குன்னு என்னையும் அழைச்சுண்டு அன்னிக்கு ராத்திரியே வண்டி ஏறிட்டார்’.

‘அப்பறம்?’

‘அங்க போய் நாயா அலைஞ்சதுதான் மிச்சம். பர்ஸ் தொலைஞ்சி போயி கையில தம்பிடி காசு இல்லாம ரயில்வே லைன்ல நடந்தே திருச்சினாப்பள்ளி வரைக்கும் போனோம்’.

‘தப்பு பண்ணிட்டேள் மாமா’.

‘ஏண்டா?’

‘திருவானைக்கா ரயில்வே கேட் பக்கத்துலயேதான் அப்போ வினய் இருந்தான். தண்டவாளத்துல நின்னு பாத்தாலே அவன் இருந்த வீடு தெரியும்’.

‘எம்பெருமானே! என்னடா சொல்றே?’

‘நானும் ரெண்டு நாளோ மூணு நாளோ அந்த வீட்ல இருந்திருக்கேன்’.

‘யார் வீடு அது?’

‘சொரிமுத்துன்னு ஒரு சித்தர். அப்பவே ரொம்ப வயசானவர். அநேகமா போய்ச் சேர்ந்திருப்பார்’.

‘அப்படியா?’

‘அண்ணாவோட ஃப்ரெண்ட். அண்ணாதான் வினய்யை அங்க அனுப்பினது. என்னைப் பத்தி அவர்கிட்டே சொல்லி என்னை வந்து கூட்டிண்டு போகச் சொன்னதும் அவன்தான்’.

‘அடக்கடவுளே’.

‘ஞாபகம் இருக்கா உங்களுக்கு? ரங்கநாதர் கோயில்ல, சேவிக்கப்போன வரிசைல நின்னுண்டிருந்தேன். திடீர்னு காணாம போயிருப்பேன்’.

‘ஆமா, ஆமா!’

‘சொரிமுத்துதான் பொங்கல்ல அபின் கலந்து குடுத்து என்னைக் கூட்டிண்டு போனது’.

மாமாவால் இதையெல்லாம் நம்பவே முடியவில்லை. நெடுநேரம் பிரமை பிடித்தாற்போல இருந்தார். பிறகு சட்டென்று, ‘வினய் வருவானாடா?’ என்று கேட்டார்.

‘அவன் வந்துட்டான் மாமா. நேத்து ராத்திரி நாங்க மூணு பேரும் செல்லியம்மன் கோயில் திருவிழாவிலேதான் இருந்தோம்’.

‘அப்படியா? சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேனேடா’.

‘கவலைப்படாதிங்கோ. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்’ என்று வினோத் சொன்னான்.

ஆனால் மதியம் வரை வினய் வரவில்லை. எங்கே போயிருப்பான் என்று மாமா கவலைப்படத் தொடங்கினார். நான் வினோத்திடம் மட்டும் சொல்லிவிட்டு, வினய்யைப் போய் அழைத்து வரப் புறப்பட்டேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com