138. ஒரு மரணமும் ஒரு கொலையும்

பாசத்தின் சாறில் என் விரல்கள் தோய மறுக்கின்றன. இந்த உலகில் பாசத்தை நிகர்த்த மாய யதார்த்தம் வேறில்லை என்று எனக்கு எப்போதும் தோன்றும். மனித குலத்துக்குத் தேவையே இல்லாத லாகிரிகளுள் ஒன்று அது.

எனக்கு எல்லாமே வியப்பாக இருந்தது. எல்லாமே புதிதாக இருந்தது. ஊரும் அதன் தோற்றமும். உறவும் அதன் இடைவெளியும். கண்ணுக்குத் தெரியாமல் காலம் உருட்டி விளையாடும் கூழாங்கற்களாக எல்லோருமே ஆகிப் போய்விட்டோமென்று தோன்றியது. ஒரு விதத்தில் அந்த அனுபவம் எனக்குப் பிடித்திருந்தது. இன்னொரு பக்கம் எதற்கு இந்தப் பயணம் என்று தோன்றவும் செய்தது. வினய்யைச் சந்தித்தது, வினோத்தைச் சந்தித்தது, மாமாவைப் பார்த்தது, அம்மாவைப் பார்த்தது, பத்மா மாமி வீட்டில் பெருங்காய மோர் குடித்தது இதெல்லாம் நினைவில் சேர்த்து வைத்துக்கொள்ளக் கிட்டிய சம்பவங்களே அன்றி வேறெதற்காக நிகழ்ந்திருக்கும்? எனக்குப் புரியவில்லை. பாசம் அல்லது பரவசத்தின் சிறு தீண்டல்கூட மனத்துக்குள் நிகழவில்லை என்பதை விழிப்புடன் கவனித்துக்கொண்டிருந்தேன். நான் யாரையும் வெறுக்கவில்லை. யாரும் வேண்டாம் என்று எப்போதுமே எண்ணியதில்லை. ஆனால் எதுவும் இன்றியமையாததென்று எந்நாளும் உணர்ந்ததில்லை. குறிப்பாக உறவுகள். இது என்ன மனநிலை? ஏன் இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை? அதுவும் புரியவில்லை. யோசித்துப் பார்க்கும்போது வினோத்தும் என்னைப் போலத்தான் இருந்தான் என்று தோன்றியது. அம்மாவைக் கண்டபோது அவனிடம் ஏதேனும் சலனம் தென்படுகிறதா என்று உற்றுக் கவனித்தேன். இல்லை. அமைதியாகத்தான் பார்த்தான். அமைதியாகவே அறையை விட்டு வெளியேறினான். மனத்தளவில் அனைத்தையும் உதறிவிட்டுத்தான் வாழ்ந்திருக்கிறோம் என்று தோன்றியது. சிறிது திருப்தியாகவும் இருந்தது. அது ஒரு குரூரமான திருப்தி என்றும் தோன்றியது. உலகம் புறங்கையால் தள்ளிவிடக்கூடிய பிரஜைகள்தாம். சந்தேகமில்லை. ஆனாலும் விலகியிருப்பதன் சொகுசு, வலியற்றுப் போவதில் உள்ளது. அது உலகுக்குப் புரியாது. புரியவும் வேண்டாமே?

நான் கிழக்கு கடற்கரைச் சாலையைக் கடந்து சவுக்குத் தோப்புக்குள் நுழைந்து கடற்கரை மணல் வெளியில் நீலாங்கரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மெயின் ரோடில் நின்றால் பஸ் வரும் என்று கேசவன் மாமா சொல்லியிருந்தார். எனக்கு பஸ்ஸில் போகவேண்டாம் என்று தோன்றியது. தவிர சீக்கிரம் போய், சீக்கிரம் திரும்பி என்ன ஆகப் போகிறது? அம்மா கண்மூடிப் படுத்திருப்பாள். முற்றத்தில் உட்கார்ந்து மாமா பழங்கதைகள் பேசுவார். அடிக்கடி கண்ணீர் வடிப்பார்.

ஒரு கண்ணீரின் எதிர்பார்ப்பை நான் அறிவேன். அது மிருதுவானது. புனிதம் நிரம்பியது. ஒற்றை விரலால் தொட்டு நகர்த்தும் நெருக்கம் எதிர்பார்ப்பது. எனக்குக் கண்ணீரைத் துடைக்கத் தெரியும். மற்ற யாரையும்விட அதைச் சிறப்பாகவே செய்வேன். ஆனால் யாரிடமும் அதில் பிரத்தியேகத்தன்மையை என்னால் வெளிப்படுத்த முடியாது. பாசத்தின் சாறில் என் விரல்கள் தோய மறுக்கின்றன. இந்த உலகில் பாசத்தை நிகர்த்த மாய யதார்த்தம் வேறில்லை என்று எனக்கு எப்போதும் தோன்றும். மனித குலத்துக்குத் தேவையே இல்லாத லாகிரிகளுள் ஒன்று அது. லாகிரியாகப் பயன்படுத்தலாம். எப்போதாவது. ஆனால் விழுந்துவிட்டால் எழுவது கடினம். உள்ளவற்றிலேயே ஆக போதையானது. கிறகத்தில் இருந்து மரணத்தை நோக்கி இட்டுச் செல்லக்கூடியது.

மாமாவுக்காக நான் ஏன் மரணமுற வேண்டும்? அவரோடு இருக்கும் நேரத்தைக் கூடியவரை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் வினய்யை அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டு நடந்தே புறப்பட்டேன். வினய் கிடைக்காவிட்டாலும்கூட மகிழ்ச்சியுடன் மீண்டும் நடந்தே வீடு திரும்புவேன் என்று நினைத்துக்கொண்டேன்.

திருவிடந்தை எல்லை கடந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்திருப்பேன். கடற்கரை மணலில் தனியே யாரோ அமர்ந்திருப்பது தொலைவில் தெரிந்தது. அது வினய்தான் என்று நினைத்தேன். அவனைத் தவிர இந்த ஊரில் உச்சி வெயிலில் சுடு மணலில் அசையாது அமரக்கூடியவர் வேறு யார்? அவன் அப்போது மேல் சட்டையின்றி இருந்தான். இதென்ன உக்கிரமான மத்தியான வேளை தியானம்? எனக்குச் சிரிப்பு வந்தது. நூறடி தூரத்தில் நெருங்கும்போதே அவனைப் பெயர் சொல்லி அழைத்தேன். அது அவன் காதில் விழவில்லை. எனவே மீண்டும் இன்னும் உரக்க அழைத்தேன்.

இப்போது திரும்பிப் பார்த்தான். நான் கையை உயர்த்தி ஆட்டினேன். வேகமாக அவனை நெருங்கினேன். என்னைக் கண்டதும் அவன் சிரித்தான்.

‘என்ன செய்கிறாய்?’

‘ஒன்றுமில்லை. சும்மா’ என்று சொன்னான்.

‘தியானமா?’

‘சேச்சே. அதெல்லாம் இல்லை’.

‘பிறகு?’

‘சொன்னேனே? சும்மாதான்’.

‘அதை நிழலில் போய் அமரக்கூடாதா? எதற்கு இப்படி வெயிலில் காய்கிறாய்?’

‘அதுவும் சும்மாதான்’.

நான் ஒரு கணம் அவனை உற்றுப் பார்த்தேன். அவனருகே அமர்ந்துகொண்டேன். மணல் மிகவும் சுட்டது. எனக்கு அந்தச் சூடெல்லாம் பழக்கமே இல்லை. என்னால் இயல்பாக அமர முடியவில்லை. அவன் அதைக் கவனித்தான். ‘நீ கஷ்டப்படுகிறாய். உனக்காக வேண்டுமானால் நான் எழுந்து வருகிறேன்’ என்று சொன்னான்.

‘எழுந்து எங்கே வருவாய்?’

‘நீ எங்கு சொல்கிறாயோ அங்கு. ஆனால் வீட்டுக்கு இப்போது வேண்டாம்’.

‘நீ நீலாங்கரை வைத்தியர் வீட்டுக்குப் போயிருப்பாய் என்று நினைத்து வந்தேன்’.

‘ஆம். வைத்தியரைக் காலையே பார்த்துவிட்டேன்’.

‘கஞ்சா கிடைத்ததா?’

‘ஓ!’ என்று தன் இடுப்பு மடிப்பில் சுருட்டி வைத்திருந்த ஒரு காகிதப் பொட்டலத்தை எடுத்து பிரித்துக் காட்டினான். வேண்டுமா என்று கேட்டான்.

‘எனக்கு வேண்டாம். உனக்கு வைத்துக்கொள். வைத்தியர் என்ன சொன்னார்?’

‘அவர் சொன்னதை அப்படியே உன்னிடம் சொன்னால் உன்னால் அதைத் தாங்க முடியுமா என்று தெரியவில்லையே?’

‘பரவாயில்லை சொல். நான் நிறைய அதிர்ச்சிகள் பார்த்தவன்’.

‘இது அதிர்ச்சியளிக்கும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் உன் சமநிலையை நிச்சயமாகப் பாதிக்கும்’.

‘அப்படியா?’

‘சரி. சொல்கிறேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நாம் ஊர் திரும்பியது எதற்காக?’

‘அம்மாவின் மரணத்தை எதிர்நோக்கி’.

‘ஆம். ஆனால் ஒரு மரணம் மட்டுமல்ல. ஒரு கொலையையும் நாம் தரிசித்தாக வேண்டும் என்று சொன்னார்’.

இது நான் எதிர்பாராத பதிலாக இருந்தது. ‘யார் யாரைக் கொல்லப் போகிறார்கள்?’ என்று கேட்டேன்.

‘அதை அவர் சொல்லவில்லை. ஆனால் உங்கள் குடும்பத்தில் ஒரு மரணம் நிகழும்போது ஒரு கொலையும் நிகழும் என்று சொன்னார்’.

‘ஓ. என்னவாம் காரணம்?’

‘தெரியவில்லை. ஏதோ ஒரு திட்டம் நடக்கிறது. அதில் அவர் ஏதோ ஒரு மூலையில் ஒரு கண்ணியாகப் பிணைந்திருக்கிறார். அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒன்று சொன்னால் நம்புவாயா? நம் நான்கு பேரில் யாரோ ஒருவர் இன்று அவரைச் சந்திக்க வருவோம் என்று அவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்’.

‘இரு. அவர் வைத்தியர்தானே? வேறொன்றும் இல்லையே?’

வினய் புன்னகை செய்தான். ‘சரியாகப் பிடித்துவிட்டாய். அவர் வெறும் வைத்தியரல்ல’.

‘சித்தரா?’

‘அப்படித் தெரியவில்லை. ஆனால் அத்தகையவர்களுடன் தொடர்பில் உள்ளவர் போலத் தெரிந்தது. நேற்றிரவு நீ சொரிமுத்துவைச் சந்தித்தாயாமே? அவர்தான் சொன்னார். உண்மையா?’

இது எனக்கு அதிர்ச்சியளித்தது. கோவளம் தர்கா அருகே நான் சந்தித்தது சம்சுதீன் இல்லை. சொரிமுத்து. கிழவனுக்கு இது மறுபிறப்பா அல்லது மறு உருவமா? தெரியவில்லை.

‘எனக்குச் சொல்லியிருக்கலாம் நீ.நானும் வந்து பார்த்திருப்பேன்’.

‘அதைவிடு. நான் பார்த்தது இரண்டு நிமிடங்கள். அவர் பேசியது இரண்டு வரி. நான் திரும்ப வந்து படுத்துவிட்டேன். நீ நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததால் உன்னிடம் சொல்லவில்லை. வினோத்துக்குத் தெரியும்’ என்று சொன்னேன்.

‘தவறு செய்துவிட்டாய் விமல். அவரிடம் நீ இன்னும் சிறிது பேச முயற்சி செய்திருக்க வேண்டும். இந்த வைத்தியர் சொல்லாமல் ஆட்டம் காட்டும் சங்கதியை அவனிடம் பெற்றிருக்க முடியும்’.

‘இரு. எனக்கு இந்த வைத்தியரைப் பற்றி ஒன்றும் தெரியாது. நீ ஏதோ பதற்றத்தில் இருப்பதுபோலத் தோன்றுகிறது. சற்று நிதானமாக நடந்ததைச் சொல்’ என்று சொன்னேன்.

அவன் சிறிது நேரம் அமைதியாக யோசித்தபடி இருந்தான். பிறகு என்னைப் பார்த்து சிரித்தான். ‘நான் வந்திருக்கவே வேண்டாம்’ என்று சொன்னான்.

‘ஏன்?’

‘தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் தோன்றுகிறது’.

‘இதோ பார் வினய். அம்மாவின் மரணத்தில் நாம் கலந்துகொள்ள வேண்டும் என்பது நமக்கு விதிக்கப்பட்டது. இதை நீ அறிவாய் அல்லவா?’

‘ஆம்’.

‘பிறகு அதை எப்படித் தவிர்க்க முடியும்?’

‘இல்லை. நான் அதைச் சொல்லவில்லை. எரியூட்டப்படும்போது வந்து நின்றுவிட்டு ஓடியிருக்க வேண்டும் என்று சொன்னேன்’.

‘உன்னை யாராவது கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறாயா?’

‘இல்லை. நான் ஒரு கொலை செய்துவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன்’.

‘நீயா? நீ யாரைக் கொல்வாய்?’

‘தெரியவில்லை. ஒருவேளை வினோத்தாக இருக்கலாம்’ என்று வினய் சொன்னான்.

நான் அதிர்ந்து எழுந்து நின்றுவிட்டேன். அவன் என்னை உட்காரச் சொன்னான். அதிகாலை கோவளம் கடற்கரையில் இருந்து அவன் நீலாங்கரை நோக்கிப் புறப்பட்டது முதல் நடந்தவற்றை வரிசையாகச் சொல்ல ஆரம்பித்தான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com