விஜயால் இன்னொரு பலி! சென்னை, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நிகழ்ந்த சோகம்!

விஜயுடன் பிற காட்டெருமைகள் சண்டையிட்டுத் தோற்று மரணம் நேர்வது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பு, 2011 ஆம் ஆண்டில் மணி என்ற 20 வயது காட்டெருமை இதே விதமாக சண்டையிட்டு மாண்டது,
விஜயால் இன்னொரு பலி! சென்னை, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நிகழ்ந்த சோகம்!

இந்திய வனப்பகுதிகளிலும், அரசு விலங்குகள் காப்பகங்களிலும் நமக்குக் காணக் கிடைக்கும் காட்டெருமைகள், வீட்டு விலங்குகளாகப் பழக்கப் பட்டு தற்போது புழக்கத்தில் இருக்கும் இந்திய எருமைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அவை மிக, மிக மூர்க்கமானவை. அவற்றைப் பழக்குவது மிகக் கடினம். எனவே தான் அவற்றை ஆபத்தான விலங்குகள் பட்டியலில் வைத்திருக்கிறார்கள்.

அவற்றின் மூர்க்கத்தனம் எப்படிப்பட்டது என்பதை நான்கு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பாகுபலி-1 திரைப்படத்தில் நீங்கள் கண்டிருக்கலாம். கிட்டத்தட்ட அதற்கு இணையான காட்டெருமைச் சண்டையொன்று கடந்த சனியன்று சென்னை அறிஞர் அண்ண உயிரியல் பூங்காவிலிருக்கும் காட்டெருமை பாதுகாப்பு வளாகத்தில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த மோதல் மனிதனுக்கும், மிருகத்துக்குமானது அல்ல. இது இரண்டு காட்டெருமைகளுக்குள்ளான யுத்தம்.

ஞாயிறு அன்று சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், ஆண் காட்டெருமை ஒன்று மற்றொரு இளம் ஆண் காட்டெருமையுடனான மூர்க்கமான சண்டையில் தோல்வியுற்று மாண்டது. கடந்த சனிக்கிழமையன்று பூங்காவின் ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென காட்டெருமைகள் பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் இருந்து பிற காட்டெருமைகளின் ஒலி வழக்கத்தைக் காட்டிலும் வித்யாசமாக ஒலிக்கவே அங்கு சென்று பார்த்தபோது இரு காட்டெருமைகளுக்குள் பலத்த சண்டை மூண்டிருந்தது தெரிய வந்தது. 

அங்கு 20 வயதான ரத்னம் எனும் காட்டெருமையுடன், விஜய் எனும் இளம் காட்டெருமை கடுமையாக மோதிக் கொண்டிருந்தது. உயிரியல் பூங்காவில், விலங்குகளைப் பராமரிக்கும் சிறப்புப் பணியாளர்கள் உடனடியாக அங்கு விரைந்து அதிகக் காயங்களுடன் சண்டையில் தோற்று சோர்வுற்றிருந்த ரத்னம் எனும் காட்டெருமையை மீட்டு அரசு சரணாலய வளாகத்திலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரத்னத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், ஞாயிறு காலையில் ரத்னம் உயிரிழந்து விட்டதாக உயிரியல் பூங்கா பணியாளர்கள் தெரிவித்தனர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இளம் காட்டெருமையான விஜயுடன் பிற காட்டெருமைகள் சண்டையிட்டுத் தோற்று மரணம் நேர்வது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பு, 2011 ஆம் ஆண்டில் மணி என்ற 20 வயது காட்டெருமை இதே விதமாக சண்டையிட்டு மாண்டது, அப்போது விஜய்க்கு வயது 6 என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com