முகநூலால் வந்த வினை... 88 லட்ச ரூபாய் பூஜை விவகாரத்தில் வகையாக சிக்கிக் கொண்ட பெங்களூரு புரோக்கர்!

'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி' என்றொரு பழமொழி சொல்வார்கள். அதற்கேற்ப, பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் இந்த முகநூலால் இப்போது பட்டுக் கொண்டிருக்கும் பாட்டைக்
முகநூலால் வந்த வினை... 88 லட்ச ரூபாய் பூஜை விவகாரத்தில் வகையாக சிக்கிக் கொண்ட பெங்களூரு புரோக்கர்!

முகநூலில் புகைப்படத்துடன் எதையெல்லாம் பகிர்ந்து கொள்வது? எதையெல்லாம் பகிர்ந்து கொள்ளக் கூடாது! என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. முதலில் தங்களது புகைப்படங்களைக் கூட பகிரப் பயந்து கொண்டிருந்த இந்திய மெண்டாலிட்டி இப்போது தனது புகைப்படத்துடன் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது புகைப்படங்களையும் கூட பகிர்ந்து கொள்ளத் தயங்குவதே இல்லை. சிவ கார்த்திகேயனின் காக்கிச் சட்டை திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். திருடனான மயில்சாமி தனது முகநூல் நண்பரது வீட்டில் கொள்ளையடித்து மாட்டிக் கொண்டு நீதிபதியிடம் பேசுவதாக ஒரு காட்சி வரும். அதில் தனது முகநூல் நண்பரான அந்த பாதிக்கப் பட்ட நபர் எப்படியெல்லாம் தன்னை கொள்ளையடிக்கத் தூண்டினார் என சுவாரஸ்யமாகச் சொல்லிக்காட்டுவார். பெரும்பாலானோரின் முகநூல் தம்பட்டங்கள் எல்லாம் அப்படித்தானாகி விடுகிறது இப்போதெல்லாம்!

முன்பெல்லாம் நண்பர்களோ, உறவினர்களோ நேரில் சிக்கினால் தான் சுய தம்பட்டம் அடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்போதெல்லாம் சுய தம்பட்ட ஆர்வலர்களுக்கு நண்பர்களும், உறவினர்களும் கூடத் தேவையில்லை. கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோன், அதில் ஒரு முகநூல் கணக்கு. அதில் கணிசமான ஃபாலோயர்கள் இருந்தால் போதும். உடனே உங்கள் வீட்டில் நீங்கள் தும்மினாலும், விக்கிக் கொண்டு தண்ணீர் குடித்தாலும் உடனுக்குடன் முகநூலில் புகைப்படங்களுடன் அப்டேட் செய்து விடலாம். அதைப் பார்த்து வாவ்... விக்கல், ஹே தும்மல்... ஃபைன், லவ்லி, lol, ROFL, என்றெல்லாம் பின்னூட்டமிட்டு லைக் செய்ய கியூவில் வந்து விடுவார்கள் உங்கள் கண் காணாத நண்பர் பட்டாளத்தார். இது ஒரு வகையிலான மாய நட்பு வட்டம். ஆனால் இந்த மாய வலையில் சிக்கிக் கொண்டு அவஸ்தையில் உழல்பவர்கள் எண்ணிக்கையிலடங்காதோர்.

'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி' என்றொரு பழமொழி சொல்வார்கள். அதற்கேற்ப, பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் இந்த முகநூலால் இப்போது பட்டுக் கொண்டிருக்கும் பாட்டைக் கேட்டால் உங்களுக்கே தெரிய வரும் முகநூலின் ஆபத்தான தன்மை. பெங்களூரைச் சேர்ந்த சூரியநாராயண என்ற ரியல் எஸ்டேட் புரோக்கர் கடந்த வாரம் தனது வீட்டில் ஒரு பூஜை ஏற்பாடு செய்கிறார். அது நல்ல விஷயம் தானே என்கிறீர்களா? பூஜை நல்ல விஷயமாக இருக்கலாம்... ஆனால் அந்தப் பூஜைக்காக அவர் செய்த ஆடம்பர ஏற்பாடுகளை எல்லாம் புகைப்படமெடுத்து  முகநூலில் பகிர்ந்து கொண்டது தான் இப்போது அவரை சிக்கலில் மாட்டி விட்டது. சுமார் 88 லட்சம் ரூபாய் செலவு செய்து அந்தப் பூஜையை ஏற்பாடு செய்திருக்கிறார். பூஜை அறையில் அவரும், அவரது மனைவியும் நின்று கொண்டிருக்க உள்ளே 88 லட்சம் ரூபாய் பணம் கட்டுக்கட்டாக ஸ்வாமி பீடத்தின் கீழ் அடுக்கப் பட்டிருந்தது. பணம் மட்டுமா வெள்ளிக்கலசங்களில் சுமார் 1.23 கிலோ தங்க ஆபரணங்கள் வேறு பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்து விட்டு முகநூல் நண்பர்கள் வேண்டுமானால் ஆஹா... ஒஹோ எனப் பாராட்டி இருக்கலாம். ஆனால் இப்போது முகநூலைப் பயன்படுத்துபவர்கள் லிஸ்டில் நண்பர்கள் மட்டும் தானா இருக்கிறார்கள். பலரது முகநூல் நட்பு வட்டத்தில் காவல்துறையினர், வணிக வரித்துறை அதிகாரிகள், நீதிபதிகள், என எல்லோரும் தானே இப்போதெல்லாம் முகநூல் பயன்படுத்துகிறார்கள். சூரியநாராயண அந்த விஷயத்தை மறந்து விட்டார் போல! இவர் தனது ஆடம்பர பூஜையை புகைப்படத்துடன் முகநூலில் பகிர்ந்ததால்... உடனே கேள்விக்கணைகள் பாயத் தொடங்கி விட்டன.

  • ரியல் எஸ்டேட் புரோக்கர் என்றால் மட்டும் அளவு மீறி வீட்டில் கட்டுக் கட்டாக பணம் வைத்துக் கொள்ள முடியுமா?
  • எங்கிருந்து வந்தது அவருக்கு இத்தனை பணம்? 
  • நேர்மையான வழியில் வந்த பணம் தானா அது? அதற்கு என்ன கணக்கு வைத்திருக்கிறார்?
  • பெங்களூரில் முறையற்ற வகையில் அரசாங்கத்தை ஏய்த்து கட்டுக் கட்டாக கணக்கில் வராத பணம் வைத்துக் கொண்டிருந்தவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்ட போது இவரால் மட்டும் எப்படி தைரியமாக இப்படிப் புகைப்படம் எடுத்து அதை முகநூலில் வேறு பகிர்ந்து கொண்டு தம்பட்டம் அடித்துக் கொள்ள முடிந்தது?
  • இதற்குப் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா?
  • இந்தப் பணம் முறைகேடான வழியில் வந்த பணமா? 
  • என்றெல்லாம் ஆயிரமாயிரம் கேள்விகள் அவரை நோக்கி முளைத்த வண்ணம் இருக்கின்றன.

அந்தப் பணம் தன்னுடைய சொந்த உழைப்பில் சம்பாதித்த பணம் தான். ஆரம்பத்தில் ஆட்டோ டிரைவராக இருந்த தான், படிப்படியாக உழைத்து, முன்னேறி நேர்மையான வழியில் சம்பாதித்த பணம் தான் அது. பூஜைக்காகத் தான் அப்படி மொத்தப் பணத்தையும் கொண்டு வந்து வீட்டில் வைத்திருந்தேன், நான் வருடா வருடம் முறையாக வருமான வரி கட்டி வருகிறேன். கடந்த வருடத்தில் மட்டும் 13 லட்சம் ரூபாய் வரி கட்டியிருக்கிறேன், என்னுடைய மொத்த சொத்து மதிப்பு 15 கோடி ரூபாய், என்றெல்லாம் சூரியநாராயண அதற்கு என்ன விளக்கம் கொடுத்தாலும் இப்போதைக்குப் பிரச்னை தீர்வதாக இல்லை. 

Image courtesy: google, FB
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com