4 ஆண்டுகளாக மழைநீரை மட்டுமே குடிநீராக அருந்தி உயிர்வாழும் ‘மழைநீர் மனிதர்’ தேவராஜ்!

2014 ஆம் ஆண்டு முதலாக மழைநீரை மட்டுமே குடிநீராகப் பயன்படுத்தி வரும் தேவராஜ், மழைநீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்த முடியும் என்பதற்கு அரசு குடிநீர் ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட சான்றிதழையும் தனது 
4 ஆண்டுகளாக மழைநீரை மட்டுமே குடிநீராக அருந்தி உயிர்வாழும் ‘மழைநீர் மனிதர்’ தேவராஜ்!

தமிழகம் இனி வரும் ஆண்டுகளில் கடுமையான குடிநீர் பஞ்சத்தைச் சந்திக்கவிருக்கிறது, என்று ஊடகங்கள் தொடர்ந்து முழங்கிக் கொண்டு இருக்கின்றன. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மக்கள் காலிக் குடங்களுடன் சாலைகளில் அமர்ந்து அரசிடம் தங்களது குடிநீர் தேவையை நிறைவேற்றச் சொல்லி பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளக்காலத்தை தவிர அடுத்து வந்த ஆண்டில் போதுமான மழை இல்லை. அதாவது விவசாயிகளின், தமிழக மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் அளவுக்கு இங்கே மழைப்பொழிவு இல்லை. குடிநீருக்காக மட்டுமல்ல விவசாயிகள் தங்களது பாசனத் தேவைக்காகவும் கூட பல்லாண்டுகளாக அண்டை மாநிலத்தின் கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய சூழலே இங்கு இப்போதும் நீடித்து வருகிறது.

எல்லாப் பிரச்னைகளும் ஒருபக்கம் அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்க, அரசோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பல சமயங்களில் இவ்விஷயத்தில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறது. இதில் நேரடி பாதிப்பு மக்களுக்குத் தான்.  ‘நீரின்றி அமையாது உலகு’ அப்படிப்பட்ட நீருக்காக நாம் அரசாங்கத்தை நம்பி இராமல் ஒவ்வொரு தனி மனிதனும் எவ்விதம் தனக்கான நீர்த்தேவையை நிறைவேற்றிக் கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்தால் மட்டுமே இவ்விஷயத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு கிட்டும் என்பதே தற்போதைய நிஜம்.

இதை மெய்பிக்க நிகழ்கால உதாரணமாக நம் கண் முன்னே நடமாடுகிறார் ஈரோடு சூரம்பட்டி வலசைச் சேர்ந்த நிலத்தரகரான தேவராஜ். 

இவரும், இவரது குடும்பத்தினரும் தொடர்ந்து பல வருடங்களாக மழைநீரை மட்டுமே அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக மழைநீரை சேமித்து வைத்துக் கொண்டு, அவற்றைத் தேதியிட்டு பத்திரப்படுத்தி இவர்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மழைநீர் மிகவும் சுத்தமானது என்பதோடு, அதை வடிகட்டி பாத்திரங்களில் சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் அதிக மழைப்பொழிவுக் காலங்களில் இப்படி சேமிக்கக் கூடிய குடிநீரானது கிட்டத்தட்ட 6 மாதங்கள் வரை தங்களது குடும்பத்தின் அன்றாடத்தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாக இருப்பதாக தேவராஜும், அவரது மனைவியும் கூறுகின்றனர்.

வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரிக்கப் போகிறது. ஆறுகளில் தண்ணீர் இல்லை, நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்குப் போய் விட்டது. வரப்போகும் குடிநீர் பஞ்சத்தைத் தவிர்க்க மக்கள் மழை நீரைக் குடிநீராகப் பயன்படுத்தியே ஆக வேண்டும். மழை நீர் மிகவும் சுத்தமானது, அதில் எந்த விதமான பாதிப்பை உண்டாக்கக் கூடிய காரணிகளும் இல்லை. சுத்தமான துணியில் வடிகட்டி சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் மழைநீர் மிகச்சிறந்த குடிநீராக விளங்கும். நீங்கள் எத்தனை பெரிய பணக்காரராக இருந்தாலும் இனி வரும் காலங்களில் மழைநீரை குடிநீராகப் பயன்படுத்தித் தான் ஆகவேண்டும். ஏனெனில் வரவிருக்கும் தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க அதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் தேவராஜ். 

தேவராஜ் தனது வீட்டுக் கூரை வழியாக மழைநீரை சேமித்து, அதை தேதி வாரியாக பாத்திரங்களில் சேமித்து வைத்துப் பயன்படுத்தி வருவதால், அவரது வீடு முழுவதும் மழைநீர் சேமிக்கப் பட்ட பாத்திரங்கள் நிரம்பி வழிகின்றன. மழைநீரை வடிகட்டி, தகுந்த முறையில் மூடியிட்டுப் பயன்படுத்தும் போது அது எத்தனை நாட்களானாலும் கெடாது என்கிறார் தேவராஜ். அதுமட்டுமல்ல மழை வரும் போது அது சிறு தூரல் மழையானாலும் சரி, பெருமழையானாலும் சரி வீட்டுக் கூரை வழியாக வழ்ந்தோடும் மழைநீரை சேமித்து வைக்க தான் மறப்பதில்லை. ஏனெனில் பிறிதொரு மழை எப்போது வரும் என்பது நமக்குத் தெரியாது.... அதனால் எப்போது மழை வந்தாலும் மழைநீரைச் சேமிப்பதை தான் வழக்கமாக்கிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல; மழைநீரைச் சேமிப்பை மக்களிடையே பரவலாகக் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இவர் ‘மழைநீர் உயிர் நீர்’ என்ற வாசகத்தை தனது நெற்றியில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அந்த அளவுக்கு மழைநீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்தவராக இருக்கிறார் இந்த தேவராஞ். அதனால் தான் இப்பகுதி மக்கள் இவரை மழைநீர் மனிதர் என்று அழைத்துச் சிறப்பிக்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டு முதலாக மழைநீரை மட்டுமே குடிநீராகப் பயன்படுத்தி வரும் தேவராஜ், மழைநீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்த முடியும் என்பதற்கு அரசு குடிநீர் ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட சான்றிதழையும் தனது ஆதாரமாகக் காட்டுகிறார். இதுவரை இவர் சேமித்த மழைநீரில் 700 லிட்டர் என்பதே அதிக அளவு. குறைந்த பட்சம் 20 லிட்டர் மழைநீர் கிடைத்தாலும் கூட அதையும் இவர் சேமிக்கத் தவறுவதே இல்லை. கடந்த 4 ஆண்டுகளாக இவரது குடும்பம் மொத்தமும் இந்த மழைநீரைப் பயன்படுத்தியே தங்களது நீர் தேவையை நிறைவு செய்து வருகிறது எனும் போது இன்று தேவராஜ் சுயசார்பு வாழ்க்கை முறைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக நம் கண் முன்னே நிற்கிறார்.

தேவராஜ் தன் குடும்பத்திற்காக மட்டுமே இந்தச் சேமிப்பைச் செய்யவில்லை. இதே முறையைப் பின்பற்றி அனைத்து மக்களும் தங்களது குடும்பத்துக்குத் தேவையான குடிநீரைச் சேமித்துக் கொள்ளலாம் என்பதை ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரமாகவே செய்து வருகிறார். அதற்காக இவரைப் பாராட்டி அரசு பாராட்டுச் சான்றிதழும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


News source: Sun t.v.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com