வளர்ப்பு பிராணிகளா அல்லது செல்ல அடிமைகளா?

மேற்கண்ட விடியோக்களைக் காண்கையில் வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் நம்மை விட மேற்கத்தியர்கள் மேலும் கரிசனையோடும், மிருகங்களுக்கும் சம உரிமை வழங்கி நடந்து கொள்வதாகத் தோன்றுகிறது
வளர்ப்பு பிராணிகளா அல்லது செல்ல அடிமைகளா?

வளர்ப்புப் பிராணிகளைப் போஷிப்பதில் என்ன இருந்தாலும் நம்மை விட மேற்கத்தியர்களுக்கு நாட்டம் அதிகம் தான். அதென்ன அப்படி சொல்லி விட்டீர்கள்? கண்ணும் கருத்துமாக வளர்க்கிறோம் பாருங்கள் எங்கள் வளர்ப்புப் பிராணிகளை  என்று ஊருக்கு உரக்கச் சொல்லி விளம்பரமெல்லாம் தேடாமலே நம் கடையெழு வள்ளல்களில் ஒருவரும் பழந்தமிழ் சிற்றரசர்களில் ஒருவருமான பேகன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மயிலுக்குப் போர்வை தந்த கதையை மறந்து விட்டீர்களா? என்று யாரேனும் குரலுயர்த்தலாம். ஆம் ஐயா! ஆனால் அதெல்லாம் பழங்கதை தானே?! இப்போது பாருங்கள்... கடந்த மாதம் கூட வளர்ப்பு நாயை பால்கனியில் கட்டிப் போட்டு விட்டு, கடுங்கோடையும் அதுவுமாக அதற்குப் போதுமான தண்ணீர் கூட வைக்காமல் கதவைச் சாத்திக் கொண்டு ஊருக்குப் போன குடும்பத்தைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தோமே?! அதை அதற்குள் மறந்து விட முடியுமா? அப்படி, இன்று நாம் நமது அந்தஸ்தைப் பறைசாற்றிக் கொள்ளவும், ஆசைக்கும் தான் வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கிறோமே தவிர... உண்மையில் அந்தந்த மிருகங்களின் பால் உள்ள அக்கறையாலும், பாசத்தாலும் அவற்றை வளர்க்கத் தலைப்படுகிறோமா என்றால், பெரும்பாலும் இல்லையென்றே பதில் கூற முடிகிறது. ஆனால், இந்த விடியோக்களைப் பார்க்கையில் மேலை நாடுகளில் அப்படியல்ல என்று தோன்றுகிறது. 

நாமெல்லாம் மிஞ்சிப் போனால் நாய், பூனை, கிளி, முயல், பஞ்சவர்ணக்கிளி, லவ் பேர்ட்ஸ் என்று வேண்டுமானால் பெட் அனிமல்ஸை வளர்க்க விரும்பலாம். இந்தியாவில் இப்படியான வளர்ப்பு பிராணிகளின் சதவிகிதமே அதிகம். இவற்றைத்தவிர குரங்காட்டிகள் காடுகளில் இருந்து பிடித்து வந்த குரங்குகளை வைத்து வித்தை காட்டி காசு சம்பாதிக்கலாம். அதை வளர்ப்புப் பிராணிகள் லிஸ்டில் வைப்பதென்றால் அதை அதன் உரிமையாளர்கள் பாசத்துடன் அணுகுவதில்லையே ஒரு அடிமையைப் போலல்லவா நடத்துகிறார்கள் என்றிருக்கிறது. கேரளாவில் யானை வளர்க்கிறார்கள். அதை அவர்கள் அங்கு வளர்ப்புப் பிராணிகள் லிஸ்டில் வைத்திருக்கிறார்களோ? அல்லது தமிழ்நாட்டில் பசுக்களையும், ஆடுகளையும் வீட்டு விலங்குகளாக வளர்த்து வருகிறோமே அப்படி வைத்து வளர்க்கிறார்களா? என்பது மலையாளிகளுக்கே வெளிச்சம். வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் நமது லட்சணம் இப்படி.

ஆனால்... இந்த மேற்கத்தியர்களைப் பாருங்கள்... 

அணில், குரங்கு, குள்ளநரி, கங்காரு, எலி, காட்டெருமை, மான், முள்ளம்பன்றி, கடற்கரையோரங்களில் மட்டுமே வாழக்கூடிய சீல்கள், எறும்புத்தின்னி, ஆமைகள், ஓணான், கரடி, பாம்பு, சிங்கம், புலி, சிறுத்தை, அலபகா( ‘இந்தியன்’ திரைப்படத்தில் கவுண்டமணியை கடித்து வைக்குமே ஒரு ஆஸ்திரேலிய மிருகம் அதன் பெயர் தான் அல்பகா, காட்டுப்பூனை, தேவாங்கு, வெள்ளைப் பன்றிகள் என்று பலவற்றையும் அவர்கள் வளர்ப்பு மிருகங்களாக வளர்த்து வருகிறார்கள். பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. 

சிலவற்றை ஆபத்தான மிருகங்கள் என்று நாம் ஒதுக்கி வைத்திருக்கிறோம். நம் நாட்டில் அவற்றை வீடுகளில் வளர்க்க நமக்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லையென்பதால் மட்டுமல்ல நமக்கே அவற்றையெல்லாம் வீடுகளில் வைத்து வளர்க்கப் பிடிப்பதில்லை என்பதும் நிஜம். இந்தியர்களைப் பொறுத்தவரை நாய், பூனை, கிளி, முயல், சிலர் விதிவிலக்காக புறாக்கள் வளர்ப்பார்கள். அரிதாகத்தான் இந்த வளர்ப்பு பிராணிகளைத் தாண்டி வேறு சிலவும் இங்கு இடம்பிடிக்ககூடும். தமிழில் பல்லவி என்றொரு நடிகை இருந்தார்... அவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவரது நடிப்பை பற்றி பேசினார்களோ இல்லையோ அவர் வளர்த்த குரங்கைப் பற்றி பேசியவர்கள் அதிகம். ஏனென்றால் தமிழ்நாட்டில் அப்போதெல்லாம் குரங்குகளை வளர்ப்புப் பிராணிகள் லிஸ்டில் வைத்துப் பார்ப்பவர்கள் எவருமிருந்திருக்கவில்லை.

நாமெல்லாம் ராமநாராயணம் திரைப்படங்களில் மட்டுமே விலங்குகளுக்கு விதம் விதமாக ஆடைகள் அணிவிக்கப்பட்டு பார்த்திருப்போம். நிஜத்தில், வீட்டில் வளரும் வளர்ப்புப் பிராணிகளுக்கு ஆடைகள் எல்லாம் கிடையாது. அவை தேமேவென அலைந்து கொண்டிருக்கும். ஆனால், மேற்கத்தியர்கள் வளர்ப்புப் பிராணிகளுக்கு ஆடை அணிவிப்பதில் இருந்தெல்லாம் பல படிகள் முன்னேறி கங்காருவுக்கு நாப்கினும், பன்றிகளுக்கு கவுனும் அணிவித்து பழக்குவது வரை வந்து விட்டார்கள். நம்மூரில் வெள்ளைப் பன்றிகளை போர்க் பிரியாணிக்காக மட்டும் தான் பண்ணைகளில் வளர்க்கக் கூடும்.

சரி சரி இந்தக் கதையெல்லாம் எதற்கு? வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் இந்திய வழக்கத்தை மட்டம் தட்டுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். 

என்ன இருந்தாலும் இந்தியர்களான நமக்கு வீட்டு விலங்குகளாக இருந்தாலும் சரி, காட்டு விலங்குகளாக இருந்தாலும் சரி அல்லது பெட் அனிமல்ஸ் என்று சொல்லக்கூடிய வளர்ப்பு விலங்குகளாகவே இருந்தாலும் சரி... நம்மால் அவற்றின் மீது 100 சதம் பாசத்தைக் கொட்டவே முடிந்ததில்லை. அவற்றை நம் ஆசைகளுக்கான, அல்லது அந்தஸ்தைக் காட்டிக் கொள்வதற்கான அல்லது மன அழுத்தத்தை தீர்த்துக் கொள்வதற்கான வடிகால்களாகவே பயன்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறதே தவிர அவற்றையும் நமது சக ஜீவன்களாக நடத்த முடிந்ததே இல்லை என்பதே!

அதென்னவோ மேற்கண்ட விடியோக்களைக் காண்கையில் வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் நம்மை விட மேற்கத்தியர்கள் மேலும் கரிசனையோடும், மிருகங்களுக்கும் சம உரிமை வழங்கி நடந்து கொள்வதாகத் தோன்றுகிறது. எத்தனை பேருக்கு இப்படித் தோன்றுமெனத் தெரியவில்லை. வளர்ப்புப் பிராணிகளை செல்ல அடிமைகளாக நடத்தும் நமது மனப்போக்கு மாற வேண்டும் என்று தோன்றியதால் இந்தக் கட்டுரை உருவானது. 

அட வளர்ப்புப் பிராணிகளின் நிலைக்காக வருத்தப்பட வந்து விட்டீர்கள் நம்மூரில் குழந்தைகளையே நாம் செல்ல அடிமைகளாகத்தானே வளர்த்து வருகிறோம் என்கிறீர்களா? அதுவும் நிஜம் தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com