எச்சரிக்கை! விவகாரத்து மனிதர்களின் வாழ்நாளைக் குறைக்கும் என்கிறது புதிய ஆய்வு முடிவு, எப்படி?!

மனிதர்களின் நீண்ட வாழ்நாளைத் தீர்மானிப்பது பெரும்பாலும் ஆரோக்யமான உடல்நலனும், சந்தோஷமான இல்லற வாழ்வுமே. அந்த இரு விஷயங்களிலும் சறுக்கல் நேர்ந்தால் பிறகு மனித வாழ்நாள் குறைவது சகஜம் தானே என்கிறது
எச்சரிக்கை! விவகாரத்து மனிதர்களின் வாழ்நாளைக் குறைக்கும் என்கிறது புதிய ஆய்வு முடிவு, எப்படி?!

விவாகரத்து இன்று சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது.

விவாகரத்து என்ற விஷயம் உண்மையில் ஏற்படுத்தப்பட்டது. மணவாழ்க்கை என்ற பெயரில் கொடுமைகளை அனுபவித்து வரும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் விமோசனம் தேடித்தரவே!

ஆனால் இன்றைய தலைமுறையினர் அதன் அர்த்தம் உணர்ந்து சரியாகத்தான் அந்த சட்டப்பூர்வமான உறவுமுறை விடுதலையை பயன்படுத்துகிறார்களா? என்றால்? பெரும்பாலான விவாகரத்துகள் அப்படி அல்ல என்கின்றன. இன்றைக்கு விவாகரத்துக்கான காரணங்களில் பலவும் உப்புப் பெறாத விஷயங்களாகவும் இருக்கின்றன. திருமண உறவின் மூலம் வாழ்வின் சரிபாதியாக அங்கம் வகிக்கத் தொடங்கும் சக மனுஷியைப் பற்றியும், மனுஷனைப் பற்றியதுமான புரிதல் ஆண், பெண்களுக்குள் குறைந்து கொண்டே வருகின்றன. விளைவு; கணவரின் குறட்டைச் சத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் மேலை நாட்டு மனைவிகளுக்கு சற்றும் குறைவின்றி இந்திய மனைவிகளும் சிறுசிறு குடும்பச் சண்டைகளுக்காகக் கூட கோர்ட் படி ஏறி விடுகிறார்கள். விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட் முன் கூடும் கூட்டங்களே இதற்கான சாட்சிகள்.

விவாகரத்துக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக முன் வைக்கப் படுவது நடத்தைக் கோளாறுகள், இந்த நடத்தைக் கோளாறுகளைப் பொறுத்தவரை கணவனோ, மனைவியோ தங்களுக்கிடையே மற்றொரு சாய்ஸ் வர ஏன் இடமளிக்க வேண்டும்? அப்படியானால் அவர்கள் பூரணமான அன்பில் இணையவில்லை. அல்லது திருமண பந்தத்தில் இணைந்த பிறகும் ஒருவருக்கொருவர் பூரண அன்பைப் பெற முயலவில்லை என்று தான் அர்த்தம். இப்படி உறவின் மீது அக்கறையும், பொறுப்புணர்வும் இல்லாமலிருந்தால் இவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு மட்டும் அந்த பொறுப்புணர்வு எங்கிருந்து வரும்? இப்படித்தான் தலைமுறைகள் சீரழிகின்றன என்கிறார் விவாகரத்து வழக்குகளைக் கையாளும் பெண் வழக்கறிஞர் ஒருவர்.

விவாகரத்துக்கு ஏனைய காரணங்களாக; கணவர்களின் குடிப்பழக்கம், புகைப்பழக்கம், மனைவியின் மீதான வன்முறைகள் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து உதைப்பது, வார்த்தைகளால் குதறுவது, குழந்தைகளை அடித்துச் சித்ரவதை செய்வது, வரதட்சிணை கொடுமை, கணவன் அல்லது மனைவியின் தீர்க்கவே முடியாத உடல்நலக் கோளாறுகள், தீராத வியாதி, இருசாரரிடையே நிலவும் மலட்டுத்தன்மை, தாம்பத்யத்தில் ஈடுபாடின்மை என்பன போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தனை காரணங்களும் திருமண பந்தத்தை உடைப்பதற்கான சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெறுவதற்கான காரணிகள். இவற்றில் ஏதாவதொன்றை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இருப்பின் மனமொத்து வாழ முடியாத தம்பதிகள் சட்டப்பூர்வமாகப் பிரிந்து வாழ கோர்ட் அனுமதி வழங்கும்.

கஷ்டப் பட்டு விவாகரத்து  வாங்கியாயிற்று, விவாகரத்துப் பெற்றவர்கள் இனியாவது நிம்மதியாக இருக்கலாம், அவரரவர்க்குப் பிடித்த வாழ்க்கைத்துணைகளைத் தேடிக் கொண்டு வாழ்வை அமைதியான முறையில் கழிப்பார்கள் என்று பார்த்தால் அது தான் இல்லை என்கிறது இந்தப் புதிய மனோதத்துவ ஆய்வு.

விவாகரத்துப் பெற்ற ஆண்களில் சரிபாதி பேருக்கு புகைப்பழக்கமும், குடிப்பழக்கமும் இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக திருமணம் ஆகி ஒத்த மனதுடன் இணைந்து வாழும் தம்பதிகள் மற்றும் விவாகரத்துப் பெற்றவர்கள் எனச் சுமார் 5,786 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் நடத்திய சோதனையில் விவாகரத்துப் பெற்றவர்களிடம் தான் குடிப்பழக்கமும், புகைப்பழக்கமும் அதிகமிருப்பது தெரிய வந்திருக்கிறது. காரணம் அவர்களுக்குக் கிடைத்த கட்டுப்பாடற்ற சுதந்திரம். உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த விதமான கெட்ட பழக்கங்களாகட்டும் அவற்றை நிர்பந்தம் செய்து நிறுத்தக் கோருவது கணவனோ அல்லது மனைவியோவாகத் தான் இருக்கிறார்கள். விவாகரத்தானவர்கள் விஷயத்தில் அந்தத் தடை அகன்று விடுவதால் அவர்களது வாழ்க்கைமுறை கட்டுப்பாடற்ற ஒழுங்கீனங்கள் நிறைந்ததாகி விட 100 % வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எனக்கூறும் அந்த ஆய்வு இவர்களில் 46% பேர் திருமணமாகி இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் அதிகமான அளவில் குறுகிய வாழ்நாளைப் பெற்றவர்களாகி விடுகிறார்கள் என்று எச்சரிக்கிறது.

எதற்காக விவாகரத்தை... மனித வாழ்நாளை அளக்கப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு இந்த மனோதத்துவ ஆய்வு தரும் பதில்.

மனிதர்களின் நீண்ட வாழ்நாளைத் தீர்மானிப்பது பெரும்பாலும் ஆரோக்யமான உடல்நலனும், சந்தோஷமான இல்லற வாழ்வுமே. அந்த இரு விஷயங்களிலும் சறுக்கல் நேர்ந்தால் பிறகு மனித வாழ்நாள் குறைவது சகஜம் தானே என்கிறது அந்த ஆய்வு. இந்த ஆய்வுக் கட்டுரையை சமர்பித்திருக்கும் கெலி போரஸ்ஸா, மனிதர்கள் சட்டப்பூர்வமான உறவுமுறையில் பிணைந்திருக்கும் போது ஒருவர் மற்றொருவர் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அது உணவுப் பழக்கமாகட்டும், குடிப் பழக்கமாகட்டும், புகைப்பழக்கமாகட்டும், உடற்பயிற்சி செய்யும் விஷயமாகட்டும் அனைத்திலும் கணவன் அல்லது மனைவியின் தாக்கம் இருக்கிறது. இருவர் இணைந்து வாழும் போது மேற்கண்ட பழக்கங்களில் ஒருவருக்கொருவர் விருப்பு, வெறுப்பு இருப்பினும் ஒருவருக்காக மற்றவர் என விட்டுக் கொடுத்து அனுசரித்து முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள். இதனால் அவர்களது வாழ்வின் ஆரோக்யம் நிலை நிறுத்தப் படுகிறது. அதுவே விவாகரத்தானவர்கள் விஷயத்தில் இந்த பொறுப்புணர்வோ, கண்டிப்போ இல்லாமலாகி விடுவதால் விவாகரத்து மனிதர்களின் வாழ்நாளைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகத் தனது ஆய்வு முடிவில் தான் கண்டறிந்ததாகக் கூறுகிறார்.

போரஸ்ஸாவின் ஆய்வு முடிவை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

விவாகரத்து மனிதனின் வாழ்நாளைக் குறைக்குமா? 

மாற்றுக் கருத்து இருப்பவர்கள் அதையும் எங்களுடன் கருத்துரை வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

Image courtesy: trenzy.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com