‘டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்’ நமது இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது இத்தகைய மனிதர்களைத் தான்!

பிளாஸ்டிக் சர்ஜரியை காஸ்மெடிக் சர்ஜரியாக இன்ஸூரன்ஸ் கம்பெனிகள் அணுகுவதைத் தவிர்க்க வேண்டும். மிக ஏழ்மையானவர்கள் உதட்டுப் பிளவு அறுவை சிகிச்சைக்காகவோ அல்லது வேறு ஏதேனும் பிறவிக் குறைபாடு காரணமாகவோ
‘டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்’ நமது இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது இத்தகைய மனிதர்களைத் தான்!

தினமணி கொண்டாட்டத்தில் ‘அம்மா’ எனும் சிறப்புத் தொடரில், டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன் தனது தாயாரும் தீக்காய சிகிச்சை சிறப்பு நிபுணரும் பிளாஸ்டிக் சர்ஜனுமான டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணனைப் பற்றி சிறப்புரப் பகிர்ந்திருந்தார். அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலில் கூகுள் செய்து பார்த்ததில் இணையத்தில் தகவல்கள் கொஞ்சமே கிடைத்தன. ஒரு பிரபலமற்ற நடிகைக்கு கிடைக்கும் அளவுக்கான இணையத் தகவல்கள் கூட இவரைப் பற்றி இல்லையா என்று மேலும் கொஞ்சம் தேடிப் பார்த்ததில்... யூ டியூபில் அவரது உரையாடல் ஒன்று ஆங்கிலத்தில் பார்க்கக் கிடைத்தது.

உண்மையில் இன்றைய இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது இத்தகைய மனிதர்களைத் தானில்லையா? பிறகு ஏன் இவரைப் பற்றிய அதிகப்படியான தகவல்களை நாம் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. தேடியதில் கிடைத்ததை தினமணி இணையதள வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது நிச்சயம் அனைவருக்கும் உபயோகமானதொரு நேர்காணல்.

இதுவரை டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணனைப் பற்றிய அறியாதவர்களுக்கு அவரைப் பற்றிய சிறு அறிமுகம்...

மனிதர்களான நாம், நமது உள் உறுப்புகளால் ஏற்படும் உடல்நலக் குறைபாட்டை ஏதோ ஒருவகையில் எதிர்கொள்ளப் பழகிக் கொள்கிறோம். ஆனால், தீ விபத்து, வாகன விபத்து, சமையலறைக் காயங்கள் என எதிர்பாராத விபத்துக்களால் முகம் மற்றும் உடலில் ஏற்படும் கோரங்களை சுமந்துகொண்டு வெளிவரத் தயங்கி, முடங்குபவர்கள் நம்மில் பலருண்டு. கிட்டத்தட்ட 46 வருடங்களாக, அப்படி ஆயிரக்கணக்கானவர்களை, தன் மருத்துவ சிகிச்சையால், சேவையால், வெளியுலகைத் தைரியமாக எதிர்கொள்ள வைத்து, தன்னம்பிக்கையுடன் நடமாடவைத்துக் கொண்டிருக்கிறார், டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்.

பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத்துறையில் தொண்டாற்றி வரும் இவர், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட்’ மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர். இவருடைய சேவைகளைக் கௌரவிக்கும்விதமாக, 2014-ம் ஆண்டுக்கான 'ஒளவையார் விருது’ வழங்கி கெளரவித்தது தமிழக அரசு!

''சிறுவயதில் இருந்தே, மற்றவர்களின் கஷ்டத்தை ஏதோ ஒரு வகையில் தீர்க்கும்போதெல்லாம், என் மனம் உணரும் மகிழ்ச்சி அலாதியானது. அந்த அர்ப்பணிப்புதான், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் 'பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடென்ட்’ என்கிற சிறப்புத் தகுதியுடன் எம்.பி.பி.எஸ். முடிக்க வைத்தது. பிளாஸ்டிக் சர்ஜரி மீதான அளவில்லாத ஆர்வமும், சேவை எண்ணமும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தில் 'டாக்ட்ரேட் ஆஃப் சயின்ஸ்' பட்டம் பெற்ற, தமிழகத்தின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன் என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

கீழ்ப்பாக்கம் மெடிக்கல் கல்லூரியின் 'பிளாஸ்டிக் அண்ட் ரீகன்ஸ்ட்ரக்டிவ்’ துறைத் தலைவராக நான் இருந்தபோதுதான், தென்னிந்தியாவிலே முதல் முறையாகவும், மிகப்பெரியதுமான 50 பெட் வசதிகளை கொண்ட 'பர்ன் யூனிட்' (Burn unit) மற்றும் அதற்கான தனி கட்டடத்தையும் எழுப்பினோம். அன்றிலிருந்து ரிட்டயர் ஆகும்வரை, கிட்டத்தட்ட 25 வருடங்களாக, என் மனமும் மூளையும் இடைவிடாமல் இயங்கிய இடம் அது'' என்று சிலிர்ப்பவர், அதன்பிறகுதான் 'காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட்’ பொறுப்பேற்றிருக்கிறார். இவருடைய கணவர் ராமகிருஷ்ணன், எழும்பூர் மருத்துவமனையின் முன்னாள் முதன்மை மருத்துவர். மகள் ப்ரியா ராமச்சந்திரன், குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர்.

இனி டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன் அவர்கள் யூ டியூப் உரையாடலில் பகிர்ந்துகொண்ட விஷயங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் தீக்காயங்களால் பெரிதும் அவதிக்குள்ளாகக் கூடியவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்.

தீவிபத்துகள் தற்செயலானதாகவோ அல்லது குடும்ப வன்முறையால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பாதிப்பு எண்ணிக்கையில் பெண்களும், குழந்தைகளுமே அதிகமாக இருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள், தீவிபத்தில் சிக்கிய பெண்களை காப்பாற்றி அழைத்து வந்ததாகக் கூறி எங்களிடம் அவசர சிகிச்சை பெற வருவார்கள். உண்மையில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முயன்றிருந்தால் காயம் உள்ளங்கையில் இருக்க வேண்டும். பலருக்கு அப்படி இருப்பதில்லை. அதை வைத்தே அது விபத்தா? தற்கொலை முயற்சியா? அல்லது கொலை முயற்சியா? என்பதை எளிதில் கண்டறிய வாய்ப்பிருக்கிறது.

தீவிபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

  • புடவை அணிந்து கொண்டு சமையலறையில் வேலையில் ஈடுபடும் பெண்கள் ஏப்ரன் அணிந்து கொள்வது நல்லது. எதற்காக என்றால் புடவை என்பது மிகத் தளர்வான உடைகளில் ஒன்று. காற்றுக்கு எளிதில் விலகும். சரியாக இழுத்துச் சொருகிக் கொள்ள மறந்ததாலோ, அல்லது வேலை மும்முரத்தாலோ புடவை காற்றில் பறந்து ஸ்டவ் மீது விழ அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே ஏப்ரன் அணிவது நல்லது. அதோடு தரை மட்டத்தில் அடுப்பு அல்லது ஸ்டவ் வைத்து பலகாரங்கள் செய்ய முயற்சிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகள் விளையாட்டுத் தனமாகப் பின்புறமிருந்து இடித்தால் பலகாரம் செய்யும் வேலையிலிருப்பவர்கள் நேராக கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெய்ச் சட்டியில் தான் விழ வேண்டும். சில நேரங்களில் குழந்தைகளே கூட தெரியாத்தனமாக அவசரத்தில் ஓடி வந்து அடுப்பின் மீது விழக்கூடிய சந்தர்ப்பங்களும் அமைந்து விடலாம். இவையெல்லாம் நொடியில் நடந்து விடக்கூடிய சமாச்சாரங்கள். நடந்து முடிந்த பிறகு எண்ணி எண்ணி அவஸ்தைப் படுவதைக் காட்டிலும் முன்னெச்சரிக்கையாக சிந்தித்து நடப்பது நல்லது.
  • சமையலுக்குப் பயன்படுத்தும் அத்தனை மசாலா ஐட்டங்களையும் மைக்ரோ வேவ் ஓவனின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
  • கேஸ் அடுப்புக்கும் சிலிண்டருக்குமான இணைப்புக் குழாய் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். சோம்பலினாலோ அல்லது அலட்சியத்தினாலோ இந்த வேலையை நாம் தள்ளிப்போடவோ அல்லது நிராகரிக்கவோ கூடாது. ஏனெனில் பெரும்பாலான தீ விபத்துகளுக்கு இந்த இணைப்புக் குழாயில் ஏற்படும் பழுதுகளும் முக்கியக் காரணங்களாக அமைந்து விடுகின்றன. கேஸ் சிலிண்டர்களில் எப்போதும் பெரிதாக பழுதுகள் வருவதில்லை. ஆனால் இந்த இணைப்புக் குழாய் பழுதால் கேஸ் லீக் ஆகி அதனால் தான் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தார் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஒவ்வொரு முறையும் பாம்ப்லெட்டுகள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் அப்படித் தான் செய்து வருகிறார்கள் என்றாலும் மேலும் அதிகமான விழிப்புணர்வை இது விஷயமாகப் பொதுமக்கள் பெற வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

பட்டாசு வெடிப்பதால் நேரும் தீவிபத்துகள்...

தீபாவளி, புது வருடப்பிறப்பு, திருமணம், போன்ற விழாக்காலங்களில் பட்டாசு வெடிக்கிறோம். அது ஒரு கலாச்சாரமாகி விட்டது. ஆனால், தீபாவளிக்கு முதல் நாளும் தீபாவளி முடிந்த மறுநாளும் இந்த பட்டாசு வெடிப்பாளர்கள் செய்யும் அட்ராஸிட்டிகள் இருக்கின்றனவே அது மிகக் கண்டிக்கத் தக்கது. குறைந்த பட்சம் இந்த பட்டாசுகள் மற்றும் வெடிபொருட்களைத் தயாரிப்பவர்களாவது இது விஷயத்தில் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். தாங்கள் தயாரிக்கும் பட்டாசுகளில் இது இன்னின்ன வயதுக் குழந்தைகள் தான் வெடிக்க வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்டோருக்கானது, 10 வயதுக்கு மேற்பட்டோருக்கானது என்று அவர்கள் தங்களது தயாரிப்புகளை லேபிள் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் அந்தக் கடமையை வெறும் சம்பிரதாயமாகவே செய்து வருகிறார்கள். அதனால் இப்போது பாருங்கள் பட்டாசில் விருப்பமுடைய குழந்தைகள் எனில் அவர்கள் வயதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதே இல்லை. எல்லா வயதினரும் எல்லாவிதமான பட்டாசுகளையும் வெடிக்கத் தொடங்கி விடுகிறார்கள். இதனால் தான் தீபாவளி சமயங்களில் பட்டாசுகளால் தீக்காயமுற்று மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தீபாவளி சமயத்தில் பார்த்தீர்களானால் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 20 பேஷண்டுகளுக்காவது அதிகபட்ச தீக்காயங்களுடன் நாங்கள் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறோம்.

அசட்டுத்தனமான மத நம்பிக்கைகளால் நேரும் தீவிபத்துகள்...

மத நம்பிக்கை, இறை வழிபாடு என்று சொல்லிக் கொண்டு சிலர் கையில் கற்பூரம் கொளுத்தி ஆரத்தில் காட்டி வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனால் உள்ளங்கை பொத்துப் போகிறது. அங்கு தீயால் கருகிய தோல் பகுதியை எப்படியாவது சரி செய்யுங்கள் என்று இங்கே வந்து மன்றாடுகிறார்கள். அம்மாதிரியான சந்தர்பங்களில் காலின் உட்பாதப் பகுதியில் இருந்து சதையை எடுத்து அறுவை சிகிச்சை மூலம் உள்ளங்கையின் கருகிய பகுதியைச் சீரமைக்க வேண்டியதாகி விடுகிறது. இவையெல்லாம் ஏன்? கடவுளை இத்தனை உக்கிரமாக வழிபடச் சொல்லி அவர் யாரிடமும் சொல்லவில்லை. மதத்தின் பெயரால் தீச்சட்டி எடுப்பது, தீக்குளி இறங்குவது, கையில் கற்பூரம் கொளுத்திக் கொள்வது போன்றவற்றை எல்லாம் பெரியவர்கள் செய்யும் போது சில தற்காப்புமுறைகளை அவர்கள் கையாளக்கூடும். ஆனால் சிறுவர்களுக்கு அது தெரியாதே... அவர்களையும் இத்தகைய மூடநம்பிக்கை வழிபாட்டு முறைகளில் பெரியவர்கள் ஆழ்த்தும் போது அது பலசமயங்களில் மிகக் கோரமான தீவிபத்தாகி விடுகிறது. உதாரணத்திற்கு, 2 வயதுக் குழந்தை ஒன்றை அதன் பெற்றோர் தம்முடன் சேர்த்து தீக்குளியில் நடக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். இது இந்துமத சம்பிரதாயம் என்று சொன்னாலும் குழந்தை அதில் நடக்கத் தெரியாமல் தீயின் உக்கிரம் தாங்க முடியாமல் கீழே விழுந்து விட்டது. எங்களிடம் சிகிச்சைக்கு வந்த போது அதன் உடலில் 70 % தீக்காயங்கள் இருந்தன. எப்படியாவது குழந்தையக் காப்பாற்றித் தாருங்கள் என்று அழுதார்கள். நாங்கள் காப்பாற்றி விட்டோம். ஆனாலும்... இதன் பாதிப்பை நினைத்துப் பாருங்கள்.

நெருப்பில் இறங்குவது என்பது இந்தியாவில் தொன்று தொட்டு மனிதர்களின் பரிசுத்தத்தை நிரூபிக்கும் ஒரு செயலாக கையாளப்பட்டு வருகிறது. இதில் நமக்கு புராணங்களின் துணையும் உண்டு. அதன் வெளிப்பாடுகள் தான் சதி மற்றும் உடன்கட்டை ஏறும் வழக்கங்கள். அங்கிருந்து தொடங்குகின்றன நெருப்பின் மூலமாக தாம் வெறுப்பவர்கள் அல்லது தம்மை வெறுப்பவர்களைத் தண்டிக்கும் முறைகள். வெறுப்பவர்களை அயர்ன் பாக்ஸால் சுடுவது, சிகரெட்டால் சுட்டுக் கொடுமைப் படுத்துவது, அமிலத்தை முகத்தில் வீசுவது போன்ற முயற்சிகள் எல்லாம் அவற்றின் நீட்சியே. நெருப்பின் மூலமாக ஒருவரை எளிதில் கொல்ல முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. எனவே நெருப்பை எந்த வடிவத்திலாவது ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி தண்டனை தரும் வழக்கம் மனிதர்களிடையே ஒரு புரையோடிப் போன பழக்கமாக நீடிக்கிறது. இப்போது தற்கொலை செய்து கொள்ளப் புதிய பல முறைகளை மனிதர்கள் கண்டுபிடித்து விட்டார்கள், ஆனால் ஆதியில் நெருப்பு மட்டுமே அவர்களது ஒரே மார்க்கமாக இருந்தது.

திரைப்படங்களில் நெருப்பைக் கையாளும் முறை மிக கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது. நெருப்பு உண்மையில் மனிதனின் நண்பன். ஆனால், அதை எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தக் கூடாதோ அப்படியெல்லாம் பயன்படுத்தி நெருப்பின் தீயஅம்சங்களைக் கற்றுத்தருவனவாக இன்றைய திரைப்படங்கள் இருக்கின்றன. இதை எடுத்துச் சொன்னால், எங்கள் வேலையில் தலையிடாதீர்கள் என்கிறார்கள் அவர்கள். அந்த மனப்பான்மை தவறு. 

தீவிபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று விழிப்புணர்வு பிரச்சாரங்களை நிகழ்த்துகிறோம். ஒருமுறை எக்மோர் அரசுப் பள்ளியொன்றில் நான் பேசிய போது அங்கிருந்த குழந்தைகள் தீ விபத்து குறித்தும் அதை எப்படி புத்திசாலித்தனமாக எதிர்கொள்வது என்பது குறித்தும் மிக அருமையான கேள்விகள் பல கேட்டார்கள். அம்மாதிரியான விழிப்புணர்வுக் கேள்விகள் எல்லாக் குழந்தைகளின் மனதிலும் எழ வேண்டும். தங்களது பாடத்திட்டங்களோடு சேர்த்து குழந்தைகள் இப்படியான தற்காப்பு கல்வியையும் பெற வேண்டும். நாங்கள் எங்களோடு வரும் பயிற்சி பெற்ற தீயணைப்புத்துறை அலுவலர்கள் மூலமாக தீவிபத்துகளை எப்படி சாமர்த்தியமாக எதிர்கொள்வது என்பதை செயல்முறையில் விளக்குவது உண்டு. அப்போது ஆர்வமுள்ள குழந்தைகள் பலர் அதில் அஞ்சாமல் கலந்துகொண்டு அந்த டெமோ நிகழ்ச்சியை பயமின்றி எதிர்கொண்டார்கள். நமது அரசாங்கள் தீயணைப்புத் துறையில் சாதிக்கும் வீரர்களுக்கும் கூட பத்மஸ்ரீ போன்ற கெளரவமிக்க விருதுகளை அளிக்கலாம். ஆபத்துக் காலங்களில் அவர்களது பணி மகத்தானது. கும்பகோணம் பள்ளித்தீவித்தின் போது தீயணைப்புத் துறை வீரர்கள் மிக அருமையாகச் செயல்பட்டார்கள்.

குடும்ப வன்முறை தீவிபத்துகள்...

வரதட்சிணைத் தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி மருமகள் எரிப்பு, கேஸ் ஸ்டவ் லீக்காகி இளம்பெண் மரணம், என்பது போன்ற குடும்ப வன்முறையில் பெண்கள் பாதிப்படையும் போது பெரும்பாலும் அதை விபத்து என்றோ தற்கொலை முயற்சி என்றோ கூறி குற்றவாளிகள் தப்பிக்க முயல்கிறாரகள். பெண்ணைப் பெற்றவர்களும், அப்படிப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை கமிஷனர்களும் அத்தகைய குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக முயன்றால் மட்டுமே அந்த விபத்துகளில் தண்டனை பெற்றுத் தர முடிகிறது. இது விஷயத்தில் பெண்களுக்கும் சரி, பெற்றோருக்கும் சரி மேலும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அவர்கள் தவறு செய்தவர்களை எக்காரணம் கொண்டும் மன்னிக்கக் கூடாது.

அரசியல் தீ விபத்துகளும் ஆசிட் முட்டை எரிதலும்...

இந்தியாவில் தலைவர்களின் ராஜினாமா, கைது மற்றும் மரணத்திற்காக தொண்டர்கள் தீக்குளிப்பு என்ற விஷயம் இன்று ஒட்டுமொத்த உலகையை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்யும் விதத்தில் இருக்கிறது. தீக்குளிப்பில் ஒருவர் மரணமடைவதே பெரும் சோகம் அதிலும் தீக்குளித்தவர் குற்றுயிரும், குலையுயிருமாக மீட்கப் பட்டால் அப்போது அவர்கள் படும் அவஸ்தைகள் நரகத்திற்கு ஒப்பானவை. அதைப் பற்றிய முன்கூட்டிய ஞானம் இருந்தால் நிச்சயம் தொண்டர்கள் தங்களது தலைவர்களுக்காக இம்மாதிரியான சாகஸ முயற்சிகள் இறங்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். தீக்குளிப்பு இந்தியாவில் மட்டுமே இருக்கிறது என்று சொல்ல முடியாது. உலகம் முழுவதும் இது வெவ்வேறு பரிமாணங்களில் நிகழ்த்தப்படுகிறது. மலேசியாவிலிருந்து ஒரு பேஷண்ட் எங்களிடம் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவரது விரோதி அவர் மீது ஆசிட் பல்பை வீசியதில் உடலெல்லாம் ஆசிட் காயங்களுடன் கிட்டத்தட்ட முக்கால்பாகம் எரிந்து போன உடலுடன் அவர் இங்கு கொண்டு வரப்பட்டிருந்தார். அவரைக் காப்பாற்றினோம். பல்பில் மிக நுண்ணிய துளையிட்டு அதில் ஆசிட்டை நிரப்பி எதிரிகளின் மீதோ வெறுப்பவர்களின் மீதோ வீசி தண்டிப்பது அங்கே ஒரு பழிவாங்கும் முறையாக பின்பற்றப்படுகிறது. சூடான பாத்திரத்தில் தெரியாமல் கை பட்டுவிட்டாலே நாம் எப்படித் துடித்துப் போகிறோம். அப்படி இருக்கையில் உடல் முழுக்க நெருப்பில் வெந்து போவது கொடுமையானது. இதை ஏன் தீக்குளிப்பு, ஆசிட் வீச்சு போன்ற செயல்களில் ஈடுபடக்கூடியவரகள் உணரவில்லை என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. இம்மாதிரியான விபத்துகளில் வலி மட்டுமல்ல தீக்காயங்களால் உடலில் உண்டாகும் எரிச்சல், நமைச்சலை எந்தச் சொல்லாலும் விவரிக்க முடியாது.

தீக்குளிப்பைக் கண்டு அஞ்சும் உலக தற்கொலை ஆர்வலர்கள்... 

யூ.கே வில் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் தற்கொலை அமைப்புகள் பல உள்ளன. அவற்றில் உறுப்பினர்களாக இருக்கும் விந்தையான மனிதர்கள் பலர், எப்படியெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என அவ்வப்போது அந்த அமைப்புகள் வாயிலாகப் பகிர்ந்து கொள்வார்கள். அதை நமது மீடியாக்கள் துப்பறிந்து செய்தியாக்கி இருந்தார்கள். அந்த அமைப்பினரே கூட தற்கொலை செய்துகொள்ள தயவு செய்து நெருப்பை மட்டும் தேர்ந்தெடுத்து விடாதீர்கள் என தங்களது சக உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்களாம். பெண்டதால் சோடியம் மருந்தை இஞ்ஜெக்‌ஷன் வாயிலாக உடலில் ஏற்றினால் இரண்டே நொடிகளில் வலிக்காமல் மரணித்து விடுவார்கள். பல மருத்துவர்கள் வலியின்றி தற்கொலை செய்து கொள்ள இந்த வழியைத் தான் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். ஒருவர் தற்கொலை செய்து கொள்வது என்று தீர்க்கமாக முடிவெடுத்து விட்டால் இப்படி முயற்சிக்கலாம். அனாவசியமாக நெருப்பைத் தேர்ந்தெடுத்து உயிரோடு சித்ரவதைக்கு உள்ளாகத் தேவையில்லை என்பதாக இருந்தது அந்த சங்கத்தினரின் கலந்துரையாடல்.

நெருப்பை தற்கொலைக்கான மார்க்கமாகத் தேர்ந்தெடுத்த பெண்ணொருவர் எங்களிடம் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துக் கண்காணித்துக் கொண்டு இருந்தோம். கணவர் மீதான கோபத்தில் தன்னைத்தானே எரித்துக் கொண்டு மிக மோசமான தீக்காயங்களுடன் அவர் அட்மிட் ஆகியிருந்தார். கணவரைப் பயமுறுத்த இந்தச் செயலில் இறங்கும் போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை இது மரண விளையாட்டு என. ஆனால், இங்கே மருத்துவமனையில் தீவிரமான தீக்காயங்களுடன் போராடும் போது அந்தப் பெண்ணுக்கு பயம் வந்துவிட்டது. நான் உள்ளே நுழைந்ததும் என் கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுதார். என்னை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் என்று மன்றாடினார். ஆனால், என்ன செய்வது? காப்பாற்றவே முடியாத அளவுக்கு உடலில் பெரும்பகுதி நெருப்புக்கு இரையான பின் எப்படிக் காப்பாற்ற முடியும். அவர் இறந்து விட்டார். இந்தச் சம்பவம் மறக்க முடியாத அளவுக்கு பல ஆண்டுகளாக என்னில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக நிலைபெற்று விட்டது.

கொதிக்கும் எண்ணெயால் தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீர் ஊற்றி அதை அணைக்கக் கூடாது. எண்ணெயும், தண்ணீரும் கலந்து உடலில் காயத்தை இன்னும் ஆழமானதாக்கி விடும். எல்பிஜி கேஸால் விபத்து எனில் ஜன்னல் மற்றும் கதவுகளை விரியத் திறந்து வைக்க வேண்டும். அதோடு எல்பிஜிகாரர்கள் ஒவ்வொருமுறையும் கேஸ் சிலிண்டர் விபத்துகள் நிகழ்வதற்கான முகாந்திரங்களைப் பட்டியலிட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கலாம். அலுவலகங்கள் மற்றும் திரையரங்குகளில் தீயணைப்பு சாதனங்கள் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 

சில சமயங்களில் மக்களின் அறியாமையும் கூட தீவிபத்துகளுக்கு காரணமாகி விடுகிறது.

உதாரணமாக ஒரு சம்பவத்தைப் பற்றிச் சொல்கிறேன். அப்போது கடுமையான மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவிய காலகட்டம். மக்கள் கெரோசினுக்காக அலைமோதிக் கொண்டிருந்தார்கள். வடநாட்டில் இருந்து மேற்கு வங்காளத்திலிருந்து மண்ணெண்ணெய் லோடு ஏற்றி வந்த லாரியொன்று ஒதிஷா, ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருந்தது. இடையில் ஆந்திராவில் ஏதோ தகராறு காரணமாக அந்த லாரி தடுத்து நிறுத்தப்பட்டதில் பொதுமக்களுக்கு அந்த லாரியில் மண்ணெண்ணெய் லோடு இருப்பது தெரிய வருகிறது. உடனே மக்கள் என்ன செய்கிறார்கள்? அந்த லாரியில் இருந்த கெரோசினை ஆளாளுக்கு பிரித்து எடுத்துக் கொள்ள ஆளாய் பறந்து கிடைத்த பொருட்களில் எல்லாம் மண்ணெண்ணெய் நிரப்பிக் கொண்டு செல்கிறார்கள். அந்த வழியாக வந்த பால்காரர் ஒருவர் தன்னிடமிருந்த பாலைக் கேனில் இருந்து கொட்டி விட்டு அதில் மண்ணெண்ணெய் நிரப்பிக் கொள்ளும் அவலமும் அங்கே நடக்கிறது. அப்படி நிரப்பியவர் அந்த கேனை கவனமாக எடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால், போதிய விழிப்புணர்வு இன்மையாலும், அறியாமையாலும் என்ன நடந்தது என்றால்? பால்காரரோடு இருந்த நண்பர் ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டே சென்றவர் மிஞிய சிகரெட்டை யோசிக்காமல் பால்கேனைத் தாண்டி வீச முயற்சிக்க கேன் மொத்தமும் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் அந்த இருவருக்குமே கடுமையான தீக்காயங்கள். வெடிக்கக் கூடிய, எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற போதிய விழிப்புணர்வு நம் மக்களுக்கு வேண்டும் இல்லாவிட்டால் இப்படித்தான் தாங்களாகவே தங்களை விபத்துக்கு உள்ளாக்கிக் கொள்ளும் அவலம் நடந்து விடுகிறது.

மறக்க முடியாத கும்பகோணம் பள்ளியின் கோர தீவிபத்து!

தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் தீவிபத்தின் போது நாங்கள் அங்கே விரைந்த போதே அங்கே பெரும்பாலான குழந்தைகள் இறந்து விட்டார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 20% பேரை மட்டுமே எங்களால் காப்பாற்ற முடிந்தது. பாக்கியுள்ள குழந்தைகள் அத்தனை பேருக்கும் உடல் உள்ளுறுப்புகள் நெருப்பால் வெந்து போயிருந்தன. அப்படிப்பட்டவர்களில் பலரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. எங்களுக்கென்று ஒரு கூட்டமைப்பு இருக்கிறது. பர்ன்ஸ் அசோஸியேசன் ஆஃப் இந்தியா மற்றும் பர்ன்ஸ் அகாதெமி ஆஃப் இந்தியா என்ற பெயரில் இயங்கும் எங்களது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். அவர்களும் அப்போது அங்கே உதவிக்கு வந்திருந்தார்கள். ஆனால், கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. சிலர் அரசு மருத்துவமனைகளிலும், சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரைந்தார்கள். ஆனால், கும்பகோணம் பள்ளியில் நிகழ்ந்த தீவிபத்து மிகக்கோரமான தீவிபத்துகளில் ஒன்று.

இந்தியாவின் தோல்வங்கி குறித்து சில தகவல்கள்...

நம் நாட்டில் மகாராஷ்டிராவில் மட்டும் தான் முன்பு தோல்வங்கி இருந்தது. இங்கே கடுமையான தீக்காயம் அடைந்தோருக்கு மாற்றுத்தோல் பொருத்த நாம் அவர்களைத் தான் நம்பியிருந்தோம். தோல் வங்கிகள் எப்படிச் செயல்படுகின்றன என்றால், இறந்தவர்களின் சடலங்களில் இருந்து அவரது பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர் அனுமதியுடன் பெறப்படும் தோல் மைனஸ் 30 டிகிரி குளிர்பதனத்தில் பாதுகாக்கப்படும். தோல்வங்கிகள் பொதுவாக இறந்தவர்களின் சடலங்களில் இருந்து உடலின் பின்பாகத்தில் உள்ள தோலையே எடுத்து பதப்படுத்துவதால் மீண்டும் அந்த உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்படும் போது அதிலிருந்து தோல் நீக்கப்பட்டிருப்பதே தெரியாத அளவுக்கே தோல்தானம் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இது ஒரு நல்ல திட்டம். ஏனென்றால் உலகிலேயே நெதர்லாந்தில் தான் முதல்முறையாக மிகப்பெரிய தோல்வங்கி இருந்தது. இப்போது இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் தவிர தென்னிந்தியாவில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு உறுப்பு தான ஆணையம் மற்றும் தேசிய உறுப்பு திசு மாற்றுதல் எனும் இரு அமைப்புகளின் முயற்சியில் அரசு தோல்வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இதுவே தென்னிந்தியாவின் முதல் தோல்வங்கி.

தீக்காயத்தில் மேல் தோல் முற்றிலுமாகக் கருகும் போது மாற்றுத்தோல் தேவைப்படுகிறது. இந்த மாற்றுத்தோலை நோயாளியின் உடலில் இருந்து எடுப்பதென்றால் மிக நல்லது. நோயாளியின் உறவினர் அல்லது பெற்றோர் தோல் தானம் செய்கிறார்கள் என்றால் அதை  ஹோமோகிராஃப்டிங் என்போம் அதுவும் கூட  நல்லதே. ஆனால், இதை நாம் தமிழ்நாட்டில் காண முடியாது. குஜராத் மாநிலத்தில் யாரோ ஒருவருக்கு கடுமையான தீக்காயம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அங்கே பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தோல் தானம் செய்ய அத்தை, மாமா, தாத்தா, பாட்டி என்று எல்லோருமே ஓடி வந்து தங்களது தோலை தானமாகத் தர முன்வருவார்கள். அந்த தோலை வைத்துக் கொண்டு நாங்கள் இரண்டு, மூன்று வாரங்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். அவருக்கு வலி குறையும். மனிதத் தோலின் இயல்புப்படி அது வளரவும் தொடங்கும் எனவே அம்மாதிரியான சந்தர்பங்களில் உறவினர்கள் தோல்தானம் அளிப்பது வரவேற்கத் தக்க அம்சம்.

தோல் தானம்...

அப்படியல்லாமல் தோல் தானம் பெற பிறரை நம்பி இருப்பவர்கள் விஷயத்தில் தாமதத்தை சமாளிக்க நாங்கள் கொலாஜன் மெம்பரேனைக் கண்டுபிடித்தோம். இந்த மெம்பரேனை நோயாளியின் காயத்தின் மீது தகுந்த சிகிச்சை முறையில் அப்ளை செய்து விட்டால் குறிப்பிட்ட கால இடைவெளியில் அது மேற்புறத்தோலை வளரச் செய்து தடிமனாக்கி தோல் பாதிப்படையும் விகிதத்தைக் குறைக்கும். தீக்காயங்களில் மூன்று விதம் உண்டு. 1, 2,3 இதில் முதல் இரண்டு கேட்டகிரியைச் சேர்ந்தவர்களை எங்களால் நிச்சயம் காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பி விட முடியும். 3 தான் மிகக் கடுமையானது. ஆரம்பத்தில் நாங்கள் ஆம்னியாட்டிக் மெம்பரேன் பொருத்துதல் எனும் சிகிச்சைமுறையைப் பின்பற்றி வந்தோம். ஆனால், உலகில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் அந்த முறை தடை செய்யப்பட்டு விட்டது. ஆம்னியாட்டிக் மெம்பரேன் என்பது தாயின் தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து பெறப்படும் மெம்பரேனை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைமுறை. அதற்குப் பிறகு தான் கொலாஜன் மெம்பரேன் முறையைப் பின்பற்றத் தொடங்கினோம். அது மிகச்சிறந்த முறையாக இன்றளவும் கருதப்படுகிறது. இறந்த ஆடு, கன்று போன்றவற்றின் தோல் சீரத்தில் இருந்து பெறப்படும் இந்த மெம்பரேன் மிகப்பாராட்டப் பட வேண்டிய முறைகளில் ஒன்று.

பிளாஸ்டிக் சர்ஜனாகும் தகுதி...

ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜன் ஆக வேண்டுமென்றால் முதலில் அடிப்படை மருத்துவ முதுநிலைக் கல்வியான எம் எஸ் முடிக்க வேண்டும். அதன் பிறகு மூன்றாண்டு தோல் மருத்துவப் படிப்பான எம்சிஹெச் முடிக்க வேண்டும். அதையடுத்து 6 ஆண்டுகள் கழித்தே அவர் ஒரு தகுதி வாய்ந்த பிளாஸ்டிக் சர்ஜனாகக் கருதப்படுவார். பிளாஸ்டிக் சர்ஜனாகும் தகுதி வந்ததால் அவர் ஒரு சிறந்த அனுபவமிக்க பிளாஸ்டிக் சர்ஜன் என்று கருத முடியாது. அந்த நிலையை அடைய அவர் ஒரு மருத்துவக் கல்லூரியில் துணைப்பேராசிரியராக இணைந்து பணியாற்றி இத்துறையில் போதிய அனுபவம் பெற வேண்டும்.

இன்சூரன்ஸ் கம்பெனிகளின் கவனத்துக்கு... 

பிளாஸ்டிக் சர்ஜரியை காஸ்மெடிக் சர்ஜரியாக இன்ஸூரன்ஸ் கம்பெனிகள் அணுகுவதைத் தவிர்க்க வேண்டும். மிக ஏழ்மையானவர்கள் உதட்டுப் பிளவு அறுவை சிகிச்சைக்காகவோ அல்லது வேறு ஏதேனும் பிறவிக் குறைபாடு காரணமாகவோ பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள வேண்டிய நிலை வந்தால் அதற்கான தொகையை சேமிப்பதற்காக அவர்கள் மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. சில சமயங்களில் காத்திருப்பே உபயோகமற்றதாக மாறி விடக்கூடும். இதை சம்மந்தப்பட்ட இன்ஸூரன்ஸ் நிறுவனங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். நான் யுனைடேட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியிடம் இது குறித்து பெர்சனலாகக் கோரிக்கை வைத்தபோதும் அவர்கள் இதை உயிர்காக்கும் அறுவை சிகிச்சைமுறைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் என்பதே நிஜம்.

நியாயமான காரணங்களுக்காக காஸ்மெடிக் சர்ஜரிகள்...

உலகநாடுகளிடையே இந்தியப் பெண்களுக்கு அத்தனை சீக்கிரத்தில் வயோதிகம் வருவதில்லை. மேலை நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியப் பெண்கள் இளமையாகத் தான் தோன்றுகிறார்கள். இந்தியர்களை விட சீனப் பெண்கள் 80 வயதிலும் கூட 40 வயது போல தோற்றமளிக்கக் கூடியவர்கள் உண்டு. அது அவரவர் நாட்டின் சீதோஷ்ண நிலை மற்றும் மக்களின் வாழ்க்கை முறை சார்ந்தது. அழகியல் காரணங்களுக்காக பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொள்வதை சில சமயங்களில் நியாயப் படுத்த முடியும். ஒரு இளைஞர், தான் ஒரு விளம்பர மாடல் என்றும் தன் முகத்தில் இருக்கும் வடு தனது மாடலிங் தொழிலுக்கு உறுத்தலாக இருப்பதால் அதை சரி செய்ய வேண்டுமென்றும் சொல்லி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள விரும்புவதை நாம் தவறெனச் சொல்ல முடியாது. அதில் ஒரு நியாயமான காரணம் இருக்கிறது. இதுவே சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். ஆனால், எப்போது இது தவறாகிறது என்றால் ஒருவர் தொடர்ந்து லிப்போ சக்‌ஷன் என்றும், ஃபேஸ் சர்ஜரி என்றும் மீண்டும் மீண்டும் முயன்று உடல் ஆரோக்யத்தைக் கெடுத்துக் கொள்ள முயலும் போது தான் இது ஆபத்தானதாகிறது. அது தவறு.

தீவிபத்தின் காரணமாக உடல் மற்றும் தோற்றக் குறைபாடு அடைந்தவர்களை சகஜமாக அணுகும் மனப்பான்மை...

தீக்காயங்களால் உடலுறுப்புகளை இழந்த குழந்தைகள், முகம் சிதைந்த குழந்தைகள் பிற குழந்தைகளுடன் இணைந்து பழகலாம். அதனால் ஒன்றும் இல்லை. அவர்கள் நார்மல் பள்ளிகளில் பயிலலாம். அவர்களால் பிற குழந்தைகளைப் போலவே நார்மலாக செயல்படமுடியும். அந்தக் குழந்தைகள் இயல்பான வாழ்வை எதிர்கொள்ள பொதுமக்களும் தங்களாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும். அது என்னவென்றால் அவர்களை பேதம் பார்த்து தங்களது குழந்தைகளை அணுக விடாமல் தடுப்பதை தவிர்த்தாலே போதும்.

தீவிபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு...

குழந்தைகள் மட்டுமல்ல தீவிபத்துகளால் மோசமான உடல் குறைபாடுகளுக்கு ஆளானவர்களை பணியில் வைத்துக் கொள்வதும், வேலை வாய்ப்பு தருவதும் சமூகத்தில் குறைவு. அவர்களுக்கான வேலை வாய்ப்புகளைத் தருவதில் சுய விருப்பு, வெறுப்புகள், கற்பனைகள் தேவையற்றவை. அவர்களுக்குத் தங்களால் சுயகால்களில் நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வு தருவது நம் ஒவ்வொருவருடைய கடமையும் கூட. இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே! என்ன செய்வது இம்மாதிரியான புறக்கணிப்புகளை இந்த சமூகம் தவிர்க்க வேண்டும்.

உண்மையில் தீவிபத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களை இந்த சமூகம் அணுகும் விதம் மாற வேண்டும். சிலரை இந்த விஷயத்தில் பாராட்டலாம்,  ஒருமுறை ஒரு பெண்ணின் சிகிச்சைக்கு அதிகத் தொகை தேவைப்பட்டது. உதவி பெறுவதற்காக நாங்கள் விளம்பரம் கொடுத்திருந்தோம் அதைப் பார்த்து பலவிதமான மனிதர்கள் சிகிச்சைக்காகப் பணம் அனுப்பியிருந்தார்கள். அவர்களில் ஒரு மனிதர் திருப்பூரில் கார்மெண்ட் ஃபேக்டரி வைத்திருப்பவர். அவர் 1 லட்சம் ரூபாய்க்கு செக் அனுப்பி விட்டு, டாக்டர்,  சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் என் மகனுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றினீர்கள். அப்போது என்னிடம் அத்தனை பணமில்லை. ஆனால், இப்போது இருக்கிறது நீங்கள் பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம். அவர்களது சிகிச்சைக்காக என்னிடம் தொகை நிரப்பப்பட்ட செக் தயாராக இருக்கும் என்றார். இப்படிப்பட்ட தயாள குணம் கொண்ட மனிதர்களும் நம்மிடையே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆத்ம திருப்தி...

தீக்காயத்தால் கடுமையாகக் காயமுற்ற நோயாளிகளை நாம் சிகிச்சையளித்துக் காப்பாற்ற முடிவது கூட சமயங்களில் பெரிதாகத் தோன்றவில்லை. சிகிச்சைக்குப் பிறகு அவர்களது வாழ்க்கை என்னவாகும்? அவர்கள் தங்களது குறைபாடுகளுடன் இந்த உலகை எதிர்கொள்ள எத்தனை தூரம் அஞ்சுகிறார்கள்? மனதளவில் இந்த உலகை எதிர்கொள்ள அவர்கள் எத்தனை தூரம் கடுமையாகத் துன்புறுகிறார்கள் என்பதில் இருக்கிறது விஷயம். அவர்கள் தங்களது சவால்களை எதிர்த்துப் போராடி இந்த உலகில் தமக்கான வாழ்தல் உரிமையை மீட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிப் போராடி வென்ற நோயாளிகள் அனேகம் பேர் இருக்கிறார்கள். 

அப்படி வென்றவர்களின் கடிதமோ, வாழ்த்தோ, நன்றியுரைத்தலோ அவ்வப்போது எனது மேஜையில் இருக்கும். அதைக் காணும் போதெல்லாம் நான் தேர்ந்தெடுத்த எனது மருத்துவ சேவையின் பால் எனக்குப் பெருமிதமும் தோன்றும். அது தான் எனது வேலையின் மூலமாக எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவ விருது எனக் கருதுகிறேன் நான்.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 நோயாளிகளுடன் தொடங்கிய தீக்காய சிகிச்சைத்துறை இன்றைக்கு இத்தனை வளர்ச்சியுற்று தனிச் சிறப்புமிக்க சிகிச்சையளிக்கக் கூடிய மருத்துவமனைகளில் ஒன்றாக வளர்ந்து நிற்பதைக் கண்டு நான் பெருமையுறுகிறேன். 

டாக்டர் அப்துல் கலாமின் பாராட்டு...

டாக்டர் அப்துல் கலாம் கையால் பத்மஸ்ரீ விருது பெறும் போது அவர் எனக்குச் சொன்னது;

நான் ஏன் இந்த விருதுக்கு உங்களைத் தேர்ந்தெடுத்தேன் என்று தெரியுமா? என்று கேட்டார்.

நான் தெரியாது என்றேன், அதற்கு அவர் அளித்த பதில்;

இந்த விருதை உங்களது சான்றிதழ்களுக்காகவும், நீங்கள் பெற்றுள்ள மற்றை பிற கெளரவ விருதுகளின் அடிப்படையிலும் நான் உங்களுக்குத் தர முன் வரவில்லை. நான் உங்களை பத்மஸ்ரீக்குத் தேர்ந்தெடுக்க முக்கியமான காரணம், நீங்கள் இதுவரை 40,000 நோயாளிகளின் தீக்காயமுற்ற உடல்களை உங்களது கைகளால் தொட்டு சிகிச்சையளித்திருக்கிறீர்கள். அந்த அர்ப்பணிப்பு உணர்வுக்காக மட்டுமே நான் இந்த விருதுக்கு உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்றார். 

அப்துல் கலாமிடமிருந்து அப்படி பாராட்டுப் பெறுவது எனக்கு மிகப் பெருமிதமாக இருந்தது. அந்த நாள் என் வாழ்வில் மிக முக்கியமான நாள். மற்றபடி விருது மயக்கங்கள் எல்லாம் எனக்கு இல்லை. என் தொழிலில் நன் விரும்பி தேர்ந்தெடுத்த எனது துறையில் நான் திருப்தி அடைந்தேன். அடைந்து கொண்டிருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com