Enable Javscript for better performance
‘தாடி சுந்தர ரூபிணி’ தோற்றத்தால் தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்களுக்கொரு உதாரண புருஷி!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  இந்த ‘தாடி சுந்தர ரூபிணி’ தோற்றத்தால் தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்களுக்கொரு உதாரண புருஷி!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published On : 19th April 2018 05:10 PM  |   Last Updated : 20th April 2018 11:25 AM  |  அ+அ அ-  |  

  7832238-3x2-940x627

   

  கடந்த வாரத்தில் ஒரு நாள் மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் மறுநாளைக்குத் தேவையான பழங்கள் மற்றும் காய்கறிகளுக்காக பழமுதிர்ச்சோலைக்குச் சென்றிருந்தேன். அப்போது அருகில் பழங்களைத் தேடித் தேடி தேர்ந்தெடுத்து கூடையில் போட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்மணி என்னை வெகுவாக கவனம் ஈர்த்தார். காரணம் அவர் பெண் என்றாலும் கூட அவருக்கு ஆண்களைப் போல அடர்த்தியான மீசை, தாடி இருந்தது. சட்டென அப்படியொரு தோற்றத்தில் ஒரு பெண்ணைக் கண்டதும் நான் சரியாகத்தான் கவனித்தேனா அல்லது தோற்றப்பிழையா என்று குழப்பமாகி விட்டது எனக்கு. இல்லை... நான் பார்த்தது நிஜம் தான். 

  நான் குறிப்பிடுவது... பெண்களில் சிலருக்கு இருப்பதைப் போன்று மேலுதட்டில் சாதாரணமாகத் தென்படும் பூனை ரோமங்களை அல்ல. திடீரென்று பார்க்க நேர்ந்தால் அவரை ஒரு ஆணாகவே கருதலாம் போல, அப்படித்தான் இருந்தது அவரது தாடி மறைந்த மோவாயும், மீசையும். உற்றுக் கவனித்தால் அவர் தவறாக எண்ணக் கூடும், அல்லது சங்கோஜப் படக்கூடும் என்றெண்ணி நான் என் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டேன். ஆனால், அவரது வித்யாசமான தோற்றம் மட்டும் நன்றாகவே மனதில் பதிந்து போனது. வீடு திரும்பும் வழியெல்லாம், இப்படியொரு அசாதாரண தோற்றத்துடன் வாழும் போது எத்தனை பேர் இவரைக் கேலி செய்திருப்பார்களோ?! பெண்களுக்கு ஆண்களைப்போல தாடி, மீசையெல்லாம் ஏன் வளர்கிறது? இது என்னவிதமான குறைபாடாக இருக்கும்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டே தான் சென்றேன். பிறகு அதை அப்படியே மறந்து விட்டேன்.

  இன்று அவரைப் போன்ற அதே விதமான குறைபாடு இருந்த பெண்ணொருவரைப் பற்றி இணையத்தில் வாசிக்க நேர்ந்தபோது எனக்கது ஆச்சர்யமாக இருந்தது.

  அந்தப் பெண்ணின் பெயர் ஹர்னாம் கெளர்.

  ‘ஆமாம் நான் வித்யாசமானவள் தான், அதை முழுமனதோடு அப்படியே ஏற்றுக் கொள்ள நான் பழகிக் கொண்டேன். அதுவே என் வாழ்க்கையின் வெற்றி.’

  - என்று சொல்லும் ஹர்னாம் கெளரின் கதை இதைப்போன்ற குறைபாடு கொண்ட பெண்களுக்கு மட்டுமல்ல உடல் சார்ந்த தாழ்வு மனப்பான்மை கொண்ட அத்தனை பெண்களுக்குமே ஒரு உதாரணக் கதையே!

  ஹர்னாம் கெளர் தனது 12 வயது முதல் ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ எனும் நோய்க்குறைபாடு காரணமாக தாடி, மீசையுடன் கூடிய இந்தத் தோற்றத்தில் தான் இருக்கிறார். அந்தக் குறைபாட்டின் வெளிப்பாடு தான் முகம் உட்பட உடல் முழுதும் ஆணைப் போன்ற அதிகப்படியான முடி வளர்ச்சி. அன்று முதல் அவர் எப்போதுமே தன்னை அதீதப் பெண்மையுடன் உணர்ந்ததே இல்லை என்கிறார். கடவுள் தன்னை இப்படித்தான் படைத்திருக்கிறார் என்றால் அதை நான் ஏற்றுக் கொண்டு சந்தோசமாக வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று சுயசமாதானம் செய்து கொள்ளும் ஹர்னாம் கெளருக்கு 11 வயதாகும் போது முதன்முதலாக முகத்திலும் உடலிலும் அசாதரண முடி வளர்ச்சி தென்படத் தொடங்கியதாம். இங்கே பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்றால் என்ன என்பதைப் பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும்.

  பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்றால் என்ன?

  இந்தகுறைபாடு இன்று உலகில் பல பெண்களுக்கு இருந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரை ஒரு அரிதான குறைபாடே. இந்தக் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு உடலில் அதீதமான ரோம வளர்ச்சி இருக்கும். அதீதம் என்றால் எங்கெல்லாம் ரோம வளர்ச்சி குறைவாகவோ அல்லது சுத்தமாக இல்லாமலே கூட இருக்குமோ அந்தப் பகுதிகளில் எல்லாம் அசாதாரணமான அளவுக்கு மிக அதிக முடி வளர்ச்சி இருப்பதற்குப் பெயர் தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம். இதனால், பெண்களுக்கு மோவாய், கன்னம், மேலுதடு, ஆண்களைப் போல மார்பகங்களில் கூட அதீத ரோம வளர்ச்சி இருக்கும். இந்தக் குறைபாட்டைக் களைவது அசாத்தியமான விஷயம். ஹார்மோன் சுரப்பில் நிகழும் சமநிலைத்தன்மை குறைபாடு காரணமாக நிகழும் இந்த மாற்றங்களுக்கு உடனடித் தீர்வே இல்லை எனும் நிலை. இப்படி ஒரு குறைபாடு தனக்கு வந்ததில் ஹர்னாம் வெகுவாக அதிர்ந்து போனதில் ஆச்சர்யமில்லை.

  ஆரம்பத்தில் இதை மறைப்பதற்காக அவர் பெருமுயற்சி செய்திருக்கிறார். புதிதாக யாரைப் பார்த்தாலும் அவர்கள் தன் முகத்திலும், உடலிலும் தோன்றத் தொடங்கியிருக்கும் முடி வளர்ச்சியைத் தான் வித்யாசமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ! என்ற சஞ்சலம் அவருக்கு நிறைய இருந்திருக்கிறது. அதனால், இம்மாதிரியான விபரீதமான மாற்றம் தனது உடலில் நிகழத் துவங்கிய ஆரம்ப காலங்களில் வேக்ஸிங் செய்து அதை மறைக்க நினைத்திருக்கிறார். ஆனால் அது உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் வலி மிகுந்ததாக இருந்திருக்கிறது. 

  பிறகு ஆண்களைப் போல ஷேவிங் செய்து கொள்வது, முக ரோமங்களை அகற்ற அதற்கென விளம்பரப்படுத்தப் படும் அத்தனை கிரீம்களையும் பயன்படுத்துவது என்றெல்லாம் செய்து பார்த்தேன். இதற்கிடையில் என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றங்களை கவனித்த மக்கள், நான் தெருவில் செல்லும் போதும், அவர்களைக் கடக்கும் போதும்  ‘ஏய்... தாடி வைத்த பெண்ணே என்றும் Beardo instead of Wierdo, Sheman, Shemale என்றும் கிண்டல் செய்யத் தொடங்கினர். இன்னும் சிலரிடமிருந்து மரண அச்சுறுத்தல்களைக் கூடத் தான் எதிர்கொண்டதாகக் கூறுகிறார் ஹர்னாம். தனக்கு நேர்ந்த இந்த வித்யாசமான அசாதாரண ரோம வளர்ச்சியை ‘தாடி, மீசையுடனான பெண்’ என்ற தலைப்பில் காணொளியாக்கி யூ டியூபில் பதிவேற்றம் செய்ய அதைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் ஒரு சிலரிடமிருந்து வந்தவையே அந்த மரண அச்சுறுத்தல்கள்.

   

  அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை... ஆனால், ஒரு சிலர் ஹர்னாமைக் கண்டாலே கல்லெடுத்து அடிப்போம் என்றும், கடவுளின் மோசமான படைப்பு இவர் எனவே கண்ணில் கண்டால் எரித்து விடுவோம் என்றும் மிரட்டியிருக்கிறார்கள். 

  யோசித்துப் பாருங்கள், ஒரு சின்னப் பெண் தன்னைப் பற்றிய இத்தனை விமர்சனங்களையும் எப்படித் தாங்கியிருக்கக் கூடும்?! 

  இத்தனைக்கும் தனக்குள் நிகழ்ந்த இந்த அசாதாரண மாற்றங்களுக்கு ஹர்னாம் எந்தவிதத்திலும் பொறுப்பானவர் அல்ல. இறைவனின் படைப்பு அப்படி அமைந்து விட்டது. அதற்கு இந்தச் சமூகம் அவரை வஞ்சித்துக் கொண்டே இருந்தால் அவரால் என்ன செய்ய முடியும்? மேற்கண்ட விமர்சனங்கள் உச்சத்தைத் தொட்டு கர்ணத்தின் இதயத்தைக் குத்திக் கிழிக்கும் போதெல்லாம் அவரால் செய்ய முடிந்தது ஒன்றே... ஆம்... அவர் தன் மீதான விமர்சனங்களைத் தாங்கவியலாத போதெல்லாம் தன்னைத்தானே மிக மோசமாகக் காயப்படுத்திக் கொள்ளத் தொடங்கினார். தனக்குள் தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கும் போதெல்லாம் அறைக்குள் அடைந்து கொண்டு நெடுநேரம் கதவைத் திறக்க விரும்பாமல் உள்ளுக்குள் சிறையிருப்பது. புதிதாக யாரையும் பார்க்க விரும்பாதது, யாரையும் தன்னைப் பார்க்கவும் அனுமதிக்காது தனக்குள் புழுங்குவது என்று சில நாட்கள் போராடிப் பார்த்தார். ஒரு கட்டத்தில் யாரைச் சந்தித்தாலும் அவர்கள் அசூயையாகவும், அருவருப்பாகவும் தன்னை உற்றுப் பார்ப்பது போலத் தோன்றவே நான் மனிதர்களைச் சந்திப்பதையே முற்றிலுமாக வெறுத்தேன் என்கிறார் ஹர்னாம்.

  ஆனால் தனது இந்த நிலையை ஹர்னாமால் அதிக நாட்கள் வெறுக்க முடியவில்லை. அவர் தன்னுள் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றி தனிமையில் அலசி ஆராயத் தொடங்கினார்.

  தனக்கு நேர்ந்த எதற்கும் தான் பொறுப்பில்லை எனும் போது இது இறைவனது செயல் என்று புரிந்தது. இறைவன் தன்னை இதனுடன் தான் வாழப் பணித்திருக்கிறார் என்றால் அப்படியே வாழ்வது தான் முறை என்று தனது 16 வயதில் தீர்மானித்தார். ஒரு பெண்ணாகப் பிறந்து விட்டு எத்தனை முறை தான் தாடி, மீசையை ஷேவ் செய்து மறைப்பது? மார்பிலும் ஆண்களைப் போன்றே அசாதாரண முடி வளர்ச்சி. பார்ப்பதற்கும் ஆணைப் போன்றே தோற்றமளிப்பதால் தான் ஏன் ஒரு சீக்கியராக ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று கர்ணம் யோசிக்கத் தொடங்கினார். எப்படியும் தன் வாழ்வில் இனி திருமணம் என்ற பேச்சுக்கே இடமிருக்கப் போவதில்லை. ஏனெனில் தன்னால் ஒரு பெண்ணாக உணரவே முடிந்ததில்லை எனும் போது ஏன் பெண்ணாக நீடிக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ? மிகப் புரட்சிகரமாக முடிவெடுத்து தனது 16 வயதில் ஹர்னாம் தன்னை ஒரு சீக்கியராக ஞானஸ்தானம் செய்வித்துக் கொண்டார். ஏன் சீக்கியராக ஞானஸ்தானம் என்றால் அந்த மதத்தில் தான் முடியை மழித்துக் கொள்ள வேண்டியதே இல்லை. ஒரு சீக்கியர் தலைமுடியை மழித்துக் கொள்ளக் கூடாது என்பது அங்கு விதியாகவே பின்பற்றப்படுகிறது. எனவே தன் தலைமுடியை டர்பனில் மறைத்துக் கொண்டு இனிமேல் தாராளமாக தாடி வளர்க்கலாம் என முடிவு செய்து தான் ஹர்னாம் சீக்கியராக மாறினார். இதற்காக அனுமதி கேட்டபோது அவரது பெற்றோர்கள் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் அவர்களை சமாதானப் படுத்தி ஒப்புக்கொள்ள வைத்து ஹர்னாம் தன்னை ஒரு சீக்கியராக மாற்றிக் கொண்டார். 

  ‘கடவுள் கொடுத்த இந்த உடலை அதில் நேர்ந்த மாற்றங்களை நான் அப்படியே முழு மனதோடு ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். எனக்கு இயல்பான வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. ஒரு பெண்ணுக்குண்டான இயல்பான வாழ்க்கையாக கருதப்படும் திருமணம் போன்ற பந்தங்களுக்கெல்லாம் என் வாழ்வில் இடமில்லை எனும் போது எனக்காக ஒரு நல்ல வேலையையாவது அமைத்துத் தர வேண்டும் என என் பெற்றோர் நினைத்தார்கள். ஆனால்... பாருங்கள், எந்த நிறுவனமும் தாடி, மீசையுடன் இருக்கும் பெண்ணுக்கு வேலை தர விரும்பவில்லை. என்ன செய்ய?'

  - என்று சிரிக்கிறார் ஹர்னாம்

  தன் வாழ்வில் இத்தனை தடைகள் இருந்த போதும் ஹர்னாம் இப்போது அவற்றை எதிர்கொள்ளத் தயார். முன்னைப் போல வீட்டுக்குள், தனதறையில் தனிமைச்சிறையிருக்க வேண்டிய அவசியம் இனி அவருக்கு இல்லை. வறண்ட பாலைவனத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் சுடும் மணல் மட்டும் தானா? என்ற தனிமை உணர்வு இப்போது கர்ணத்துக்கு இல்லை. அவருக்கே அவருக்கென்று அவரைப் புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்ள அவரது வாழ்வில் இப்போது இரு ஜீவன்கள் உண்டு. ஒருவர் ஹர்னாமின் 18 வயது இளைய சகோதரர், மற்றொருவர் அவரது சினேகிதியான சுரேந்தர். இவர்கள் இருவரும் தான் ஹர்னாமின் இயல்பான வாழ்க்கைக்கு காரணமானவர்கள்.

  அவர்களிடம் ஹர்னாம் குறித்துக் பேசினால்,  ‘அவர், அவராகவே வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவரது விருப்பம் என்னவோ அதைச் செய்து கொண்டு தனது வாழ்தலுக்கான நியாயங்களை அவர் உண்டாக்கிக் கொள்ளட்டும். எங்களைப் பொருத்தவரை அவர் இந்த உலகில் மற்ற எல்லோரையும் போலவே நிம்மதியாக, இயல்பாக வாழ்ந்தால் போதும். சொல்லப் போனால் இப்போதெல்லாம் தாடி, மீசை இல்லாமல் ஹர்னாமைக் கண்டால் தான் நாங்கள் அதிர்ச்சி அடைவோம். அந்த அளவுக்கு அவரது தோற்றத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்’ என்கிறார்கள்இருவரும்.

  ‘இப்போதும் மக்கள் என்னைக் கண்டால் வித்யாசமாகத் தான் பார்க்கிறார்கள். பலமுறை பெண்ணுருவில் இருக்கும் ஒரு ஆணோ என்று தான் பலரும் ஐயத்துடன் கடக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்வதென்றால்... பொதுக் கழிப்பிடங்களை உபயோகிக்கச் செல்கையில் பெண்கள் பகுதியில் என்னைக் கண்டால்... ஒரு நொடி திகைத்து ஐயோ இது பெண்கள் டாய்லட் என்று யாராவது கத்தினால் நான் புன்னகையுடன் அவர்களைக் கடந்து அடிக்குரலில் எனக்குள் ‘இல்லை... இது ஆண்களுக்கானதும் என்று முணுமுணுத்துக் கொள்கிறேன். ஏதோ, என்னால் திருப்பி அளிக்க முடிந்த சின்ன நையாண்டி இது.'

  - என்று புன்னகைக்கிறார் ஹர்னாம்

  இப்போதெல்லாம் இப்படித்தான் ஹர்னாம் தன் வாழ்வை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். 

  இந்த உலகம் எப்போதும் அழகானதே... அது தன்னுள் நிறைந்தவர்கள் அத்தனை பேருக்கும் மிக அருமையான வாழ்வையும், சந்தோஷங்களையும், உன்னதங்களையும் அளிக்கத் தயாராகவே இருக்கிறது. மனிதர்கள் தான் அதை அவரவர்களுக்கு ஏற்றவாறு உணரத் தவறி விடுகிறார்களோ என்று நான் நினைக்கிறேன். என் விஷயத்தில் கூட ஆரம்பத்தில் எனது அசாதாரண தோற்றத்துடன் இந்த உலகை எதிர்கொள்ள நான் பட்ட சிரமங்களும், துயரங்களும் அளவற்றவை. அவற்றில் இருந்து வெளிவர நான் விரும்பினேன். அதற்கு எனது சகோதரனும், சினேகிதியும், பெற்றோரும் உதவினார்கள். இன்று நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொள்ள இந்தச் சமூகம் தயாராகி விட்டது. அதுவே எனது வெற்றி என்று குதூகலமாகச் சிரிக்கும் ஹர்னாம் இப்போது ஒரு பிரிட்டிஷ் மாடல் மட்டுமல்ல சர்வதேச அளவில் தோற்றத்தில் தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்கள் & ஆண்களுக்கான தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமல்ல லண்டன் ஃபேஷன் ஷோவில் முதல்முறை தனது முழு தாடியுடனும், மீசையுடனும் அழகிய இளம்பெண்ணாக மணக்கோலத்தில் ராம்ப் வாக்கிய்வர் என்ற பெருமையும் ஹர்னாமுக்கு உண்டு.

  ஜெண்டர் ஸ்டீரியோடைப் என்று சொல்லக்கூடிய பாலின பேதத் தடைகளை முற்றிலுமாக வெறுக்கும் ஹர்னாம், 

  “I don’t think I believe in gender. I want to know who said a vagina is for a woman and a penis is for a man, or pink is for a girl and blue is for a boy. I am sitting here with a vagina and boobs – and a big beautiful beard."

  - என்று இந்த உலகைப் பார்த்து உரக்கக் கேள்வி எழுப்புகிறார். அவர் கேட்பது நியாயம் தானே?

  ஹர்னாம் மாடலாக மாறியது 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான். அதற்கு முன்பு வரை லண்டனில் பிரைமரி ஸ்கூல் டீச்சர். பள்ளியில் டீச்சராகப் பயிற்சியில் இருந்த போது ஹர்னாம் தன்னைப் பற்றி சமூக ஊடகங்கள் அனைத்திலும் பகிர்ந்திருந்தார். அவற்றில் அடிக்கடி தனது புகைப்படங்களையும், காணொளிகளையும் பதிவேற்றுவது அவரது வாடிக்கை. அதன் மூலமாக வந்தது தான் மாடலிங் வாய்ப்பு. உலகம் முழுக்க பல்லாயிரக் கணக்கான ரசிகர்களையும், அபிமானிகளையும் பெற்றுள்ள ஹர்னாமுக்கு இன்று தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாழ்த்துக்களும், விசாரணைகளும் வந்து குவிகின்றன. அவர்களெல்லோரும் ஹர்னாமிடம் தெரிவிக்க விரும்பும் முக்கியமான தகவல் என்ன தெரியுமா? அவரது தாடியும், மீசையும் அவர்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கிது என்பதைத் தான், ஒரு இளைஞர் என்னைத் திருமணம் செய்து கொள்வாயா பெண்ணே! என்று கூட ஹர்னாமுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாராம்! 

  நான் என் தோற்றத்தால் வெறுக்கப்படத்தக்கவள் இல்லை எனும் தன்னம்பிக்கை என்னிடம் நிறையத் தொடங்கியதற்கு இத்தனை பேரின் அன்பும் கூட ஒரு காரணம் தான்.

  என் கதை என்னைப் போன்ற பெண்களுக்கு தங்களது உடல் மீதான தன்னம்பிக்கை அதிகரிக்க இப்போது நிச்சயம் உதவக் கூடும்.

  இது தான் நான். 

  நான் யார் என்பதை உள்ளும், புறமுமாக இப்போது நான் நன்றாகவே உணர்ந்து கொண்டேன்.

  இது தான் எனது பூரண அழகு.

  என்னை முழுமையானவளாக இப்போது நான் உணர்கிறேன். அது போதும் எனக்கு. என்று புன்னகையுடன் கட்டை விரல் உயர்த்தி புன்னகைக்கும் ஹர்னாம் கெளர் தனது தாடியை ‘தாடி சுந்தரி’ (அழகான தாடி) என்றும் ‘அவள்’ (she) எனவும் தனக்குத்தானே பாராட்டிக் கொள்கிறார். 

  இந்த சமூகத்தில் ஹர்னாம் கெளர் போன்றோர் நிச்சயம் அறியப்பட வேண்டிய, பாராட்டப் பட வேண்டிய நபர்களே!

  வாழ்த்துக்கள் பெண்ணே! 
   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp