Enable Javscript for better performance
DONT YOU KNOW KAMALA DEVI CHATTOPADHYAY?!|உங்களுக்கு கமலாதேவியைப் பற்றித் தெரியுமா?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  உங்களுக்கு கமலாதேவியைப் பற்றித் தெரியுமா? தெரியாதென்றால் இன்று தெரிந்து கொள்ளுங்கள்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published On : 03rd April 2018 11:51 AM  |   Last Updated : 03rd April 2018 04:49 PM  |  அ+அ அ-  |  

  0000kamala_devi_chattoopadhyay

   

  இன்று கமலாதேவி சட்டோபாத்யாயின் 115 ஆவது பிறந்தநாள்.

  115 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில், கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரில் இந்தக் கமலாதேவி பிறந்திருக்காமல் போயிருந்தால் நமது பாரம்பரியக் கைவினைக் கலைகளும், இந்தியன் தியேட்டர் ஆர்ட்ஸும், இந்தியன் கோ ஆப்பரேட்டிவ் சொஸைட்டியும் இன்று நாம் காணும் அளவுக்கு மறுமலர்ச்சி பெற்றிருக்க முடியாதென்பது உண்மை. அதுமட்டுமல்ல இந்திய வரலாற்றில், இந்தியப் பெண்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் கமலா தேவி அளவுக்கு உழைத்தவர்கள் சொற்பமானவர்களே! 

  1903 ஆம் ஆண்டு மங்களூரில் ஆனந்தைய தாரேஸ்வருக்கும், கிரிஜாபாய்க்கும் 4 ஆவது மகளாகப் பிறந்தவர் கமலாதேவி. இவர் பிறந்த போது தந்தை ஆனந்தையா மாவட்ட ஆட்சியராகப் பணியிலிருந்தார். கமலாவின் தாயார் கிரிஜாபாயின் குடும்பம் பாரம்பரியப் பெருமைகள் நிறைந்தது. கமலாவின் தாய்வழிப் பாட்டியார் அந்தக் காலத்திலேயே பண்டைய சமஸ்கிருத நூல்கள் வாயிலாக இந்திய வரலாற்றைக் கரைத்துக் குடித்து சரித்திர ஞானத்தில் கரை கண்டவராக இருந்தவர். பாட்டியார் வழியில் தாயார் அமைய கமலாவுக்கு இப்படித்தான் இந்திய சுதந்திரப் போராட்ட தாகம் இயல்பிலேயே உட்புகுந்தது. இளமையில் தனது பெற்றோரைக் காண தன் வீட்டிற்கு வருகை தந்த சுதந்திரப் போராட்டத் தலைவர்களான கோவிந்த ரானடே, கோபால கிருஷ்ண கோகலே, ரமாபாய் ரானடே, அன்னி பெசண்ட் அம்மையார் உள்ளிட்டோரின் ப்ரியமான சகவாசத்தால் இளம் கமலா சுதேசி இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக விளங்கத் தொடங்கினார்.

  இதற்கிடையில் கமலாவின் வாழ்வில் அப்போது தான் புயலடிக்கத் தொடங்கியது. முதலில் கமலா தனது ஆதர்ஷமாகக் கருதிய அவரது மூத்த சகோதரி சகுணா வெகு இளமையில் உயிர் நீத்தார். சின்னஞ்சிறு கமலாவுக்கு சகோதரியும் மரணத்துக்கு காரணம் தெரியாவிட்டாலும் கூட பால்ய விவாகத்தினால் தான் சகோதரி மரணமடைந்தாரோ என்ற கலக்கம் மட்டும் அவரை விட்டு மறையவில்லை. சகோதரி இறந்த துக்கத்தோடு கமலாவுக்கு 7 வயதாகும் போது அவரது தந்தையாரும் மறைந்தார். மறைந்த தந்தையார் உயில் எதுவும் எழுதி வைத்து விட்டுச் செல்லவில்லை என்பதால் அந்த நாள் வழக்கப்படி கணவரது சொத்துக்கள் எல்லாம் மனைவியை வந்தடையாமல் கணவரது வழி உறவினர்களில் பங்காளிகளில் ஒருவரது மகனைச் சென்றடைந்தது. பெண்ணுக்கு சொத்துரிமை வேண்டும் எனும் வாதமெல்லாம் அதற்குப் பின் வந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில், சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட கமலாவின் பெரியப்பா மகன், சொத்துக்களின் உடைமை தாரர்களான கமலா குடும்பத்தார்க்கு மாதா மாதம் செலவுக்குப் பணம் தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இம்மாதிரியான உத்தரவை விரும்பாத கமலாவின் தாயார் கிரிஜா பாய். நீதிமன்ற உத்தரவை நிராகரித்தார்.

  தனக்குத் தனது கணவரது சொத்துக்களின் மீது உரிமை இல்லாவிட்டால் அது தனக்கும், தன் குழந்தைகளுக்கும் தேவை அற்றது எனக்கருதி உறவினர் மூலமான உதவித்தொகையை மறுத்து விட்டு தனது தாய் வீட்டில் இருந்து தனக்களிக்கப்பட்ட சீதனத்தைக் கொண்டு மட்டுமே எதிர்கால வாழ்க்கையை நடத்துவது என முடிவு செய்து கொண்டார்.

  தாயார் கிரிஜாபாயின் இந்த தன்மான உணர்வும், தன்னிச்சையான சுதந்திர மனப்பான்மையும் மகள் கமலா தேவிக்கும் இருந்தது. அதனால் தான் அவரால் அந்தக் காலத்தில் நடைமுறை வழக்கத்தில் இல்லாத, பெரும் விமர்ச்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சில விஷயங்களைத் தனது வாழ்வில் நடத்திக் காட்ட முடிந்தது. முதலாவதாக 14 வயதில் கமலாவுக்கு திருமணம் ஆனது. திருமணம் ஆன இரு வருடங்களுக்குள்ளாக கணவர் இறந்து விட்டார். இளம் விதவையாக சென்னை ராணி மேரிக் கல்லூரியில் சமூகவியல் கற்க மாணவியாகச் சேர்ந்தார் கமலா.

  அங்கே கமலாவின் சக வகுப்புத் தோழியாக அமைந்தவர் சுஹாசினி சட்டோபாத்யாய். இவர் பார் போற்றும் கவிஞரான கவிக்குயில் சரோஜினி தேவியின் இளைய சகோதரி. இவர்களது நட்பு கிடைத்ததும் கமலாவுக்கு மென்கலைகளில் நாட்டம் மிகுந்தது. அதோடு சுஹாசினி, தன் தோழிக்கு, தனது மூத்த சகோதரரும், மாபெரும் கலை ஆர்வலரும், தியேட்டர் கலை வல்லுனருமான திறமை மிகுந்த ஹரிந்தர நாத்தை அறிமுகம் செய்து வைக்க இருவருக்குள்ளும் மெல்ல மெல்ல காதல் சிறகடிக்கத் தொடங்கியது. கமலாவின் கலை ஆர்வங்களும், ஹரிந்திரநாத்தின் ஆர்வங்களும் ஒன்றாக இருக்கவே அத்துறையில் இருவரும் இணைந்து செயல்படத் தொடங்கினர். தனது 20 ஆவது வயதில் கமலா தேவி, தனது நண்பரும், தோழியின் சகோதரருமான ஹரிந்திர நாத்தைத் திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்தார்.

  கமலாவின் இந்த முடிவு அந்நாளில் அவரது குடும்பத்திலும் சரி, அவர் சார்ந்திருந்த சமூகத்திலும் சரி மிகப்பெரிய பூகம்பத்தைக் கிளறிவிட்டது. விதவா விவாஹம் இன்றைப் போல அன்று சர்வசாதாரணம் அல்ல. அப்போது பெண்களுக்கு மறுமணம் செய்து கொள்ள சமூக அளவில் மிகப்பெரும் தடைகள் இருந்தன. அப்படித் திருமணம் செய்து கொண்ட பெண்கள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களில் கமலாவும் ஒருவர்.

  ஆயினும், கமலா அது குறித்து கவலைப் பட்டுக் கொண்டிருக்கவில்லை.அவர் ஹரிந்திர நாத்தைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஓரிரு ஆண்டுகளில் தனது ஒரே மகன் ராமா பிறந்ததும் கணவருடன் மேற்கல்விக்காக லண்டன் சென்று விட்டார் கமலா தேவி. கமலா லண்டனில் இருக்கும் போது தான் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் இன்னபிற காந்திய வழிப் போராட்டங்கள் குறித்தெல்லாம் அறிய நேர்ந்தார். அவருக்கு காந்தியின் அஹிம்சா வழிப் போராட்டங்களின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது இப்படித்தான்.

  கமலாதேவியும், ஹரிந்திர நாத்தும் இணைந்து தங்கள் வாழ்வில் தடைகள் பல இருப்பினும் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகக் கடந்து பல மேடை நாடகங்களை அரங்கேற்றினர். கமலா திரைப்படங்களிலும் நடித்தார். கன்னடத்தில் முதல் மெளனப் படத்தில் நடித்தவர் என்ற பெருமை கமலாதேவிக்கு உண்டு. அது தவிர 1931 ஆம் ஆண்டில் பிரபல கன்னட நாடக ஆசிரியரான சூத்ரகாவின், மிருக்‌ஷ்கடிகா (வசந்தசேனா)  என்ற கன்னடப் படத்திலும் கமலா நடித்தார். 1943 ஆன் ஆண்டில் தான்சேன் என்ற இந்தித் திரைப்படத்திலும், தொடர்ந்து சங்கர் பார்வதி, தன்னா பகத் உள்ளிட்ட திரைப்படங்களிலும் கமலா நடித்திருந்தார்.

  இந்நிலையில் கமலா தேவிக்கு மீண்டுமொருமுறை இந்த சமூக நடைமுறைகளை, பழம் பஞ்சாங்க நியமங்களை உடைத்தெறிய மீண்டுமொரு வாய்ப்புக் கிடைத்தது. ஆம், இப்போது கமலா தேவி தனது காதல் கணவரான ஹரிந்திர நாத்தை விவாகரத்துச் செய்து விடுவது என முடிவெடுத்திருந்தார். அந்நாளில் இதுவும் பெண்கள் பின்பற்ற அஞ்சும், தயங்கும் மிகப் புதிதான ஒரு நடைமுறை தான். எனவே இதைக் குறித்தும் கமலா தேவி மீது மிகுந்த விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட கமலாவுக்கு நேரமில்லை. அவர் அச்சமயத்தில் வெகு தீவிரமாக காந்தியப் போராட்டங்களுக்கு தம்மை ஒப்புக் கொடுத்து விட்டிருந்தார்.

  கமலாதேவி இலண்டனில் இருந்தபோது, இந்தியாவில் காந்தி  ஒத்துழையாமை இயக்கத்துக்கு 1923இல் அழைப்புவிடுத்ததை அறிந்து இந்தியா திரும்பி, சேவாதளத்தளம் என்னும் காந்திய அமைப்பில் இணைந்தார். விரைவில் கமலாதேவி சேவா தளம் மகளிர் பிரிவின் பொறுப்பாளராக ஆனார். சேவாதளத்தின் சார்பில் அனைத்திந்திய அளவில் பெண்களைத் தேர்வு செய்வது, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளில் கமலா ஈடுபட்டார்.

  1926, இல் இவர் அனைத்திந்திய மகளிர் மாநாடு (AIWC) அமைப்பின் நிறுவனரான  மார்கரெட் என்பவரைச் சந்தித்தார். அவரின் தாக்கத்தால் சென்னை மாகாண சட்டசபைக்கு போட்டியிட்டார். இவர்தான் இந்தியாவில் சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட முதல் பெண். ஆயினும் தேர்தலில் இவர் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

  அதற்கடுத்த ஆண்டில், அனைத்து - இந்திய மகளிர் மாநாடு (AIWC) நிறுவப்பட  அதன் முதல் அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில், AIWC யின் கிளைகள் இந்தியா முழுவதும் இயங்கத் துவங்கின, தன்னார்வத் திட்டங்கள் பலவற்றைக் கொண்டு மதிப்பு மிகுந்த தேசிய அமைப்புகளில் ஒன்றாக மாறியது AIWC. கமலாதேவி, இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்களுக்கான கல்வி, சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்கள் முதலியவை குறித்து ஆராய்ந்தார். அதன் பயனாக டெல்லியில் பெண்களுக்கான ஹோம் சயின்ஸ் (Lady Irvin College for Home Science) கல்லூரியை ஆரம்பித்தார்.

  1930களில்...

  காந்தியடிகளால் 1930-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகக் குழு உறுப்பினர்களான ஏழு பேர்களில் கமலாவும் ஒருவர். மும்பை கடற்கரையில் பெண்கள் பிரிவில் உப்பு சத்தியாக்கிரகம் செய்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது சுதேசி உப்பை மும்பை பங்குச் சந்தையில் விற்க முயன்ற போது கமலா கைது செய்யப்பட்டார்.  இதற்கு ஓராண்டு கழித்து 1936 ல் காங்கிரஸ் சோஸலிஸ்ட் கட்சியின் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டு,  ஜெயபிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, மினுமசானி முதலிய தலைவர்களுடன் இணைந்து இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார்.

  1940களில்...

  இரண்டாம் உலகப்போர் துவங்கிய காலத்தில் கமலாதேவி இங்கிலாந்தில் இருந்தார், அவர் உடனடியாக உலகின் மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் பிரதிநிதியாகச் சென்று இந்திய விடுதலைக்கான ஆதரவைத் திரட்டுவதில் முனைந்தார்.

  விடுதலைக்கு பிந்தைய பணிகள்...

  இந்தியா சுதந்திரமடையும் போது இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகளான பிரிந்தன. இதனையொட்டி நாட்டில் இந்து –முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் பல்லாயிரம்பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். பல லட்சம் இந்துக்களும், முஸ்லீம்களும் அகதிகளாக்கப்பட்டனர். இந்நிலையில் கமலா தேவி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக பரிதாபாத் நகரத்தில் சேவை மையம் அமைத்து 50,000 மக்களுக்கு மருத்துவ உதவியும், உணவு வசதியும், தங்குமிடமும்  செய்து கொடுத்தார்.

  இவ்வாறு மக்கள் மறுவாழ்வுக்கு உதவியதோடு, அவர்கள் இழந்த கைவினைத் தொழிலுக்கு உதவி அவர்களது எதிர்கால வாழ்வுக்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ள மறக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த கைவினைத் தொழில்களை சீரமைத்துத் தரும்  பணியினையும் இரண்டாம் கட்டமாக தொடங்கினார். இந்திய கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறித்துறை மரபைக் காக்கவும் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் அத்துறைக்கு பெரும் புத்துயிர் அளிக்கவும் கமலாதேவி பொறுப்பெடுத்துக் கொண்டார். நவீன இந்தியாவில் இன்று நாம் காணும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள் வளர்ச்சி மற்றும் நவீன முன்னேற்றங்கள் அனைத்துக்கும் அடித்தளமிட்டவர் என்றால் அது கமலா தேவி எனும் ஒற்றை மனுஷி மட்டுமே என்றால் மிகையில்லை.

  விருதுகள்...

  இவரது பணிகளை அங்கீகரிக்கும் விதமாக  இந்திய அரசு  பத்ம பூசன் விருதை 1955 ல் அளித்தது. பின்னர் இரண்டாவது மிக உயரிய  விருதான பத்ம விபூசன் விருதை 1987 ல் பெற்றார். 1966 ல் ராமன் மகசேசே விருதை பெற்றார். மேலும் சங்கீத நாடக அகாதெமி விருது,  1974 இல் இசை, நடனம், நாடகம் ஆகியவற்றுக்காக இந்திய தேசிய அகாதெமி வழங்கிய வாழ்நாள் சாதனைக்கான விருதையும் பெற்றார்.

  யுனெஸ்கோ அமைப்பு கைவினைப்பொருட்களை ஊக்குவிக்கும் இவரது பணிகளுக்காக 1977 ல் சிறப்பு விருது வழங்கியது.  ரவீந்திர நாத் தாஹூரின் சாந்தி நிகேதனும் கூட கமலாதேவியின் சமூக முன்னேற்ற மற்றும் கலைத்துறை சேவைகளுக்காக அதன் மிக உயர்ந்த விருதை கமலாவுக்கு அளித்து அவரைச் சிறப்பு செய்து கெளரவித்தது.

  இத்தனை சிறப்புகள் வாய்ந்த ஒரு பெண்மணியை இந்தியர்கள் நாம் அவரது 115 ஆவது பிறந்த நாளில் நினைவு கூர்வது அவசியம் தான் இல்லையா?

  அதனால் தான் கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp