மோடியால் ஒரே நாளில் ஸ்டார் ஆன டீக்கடைக்காரர், இந்தியா ஒளிர்வது இப்படிப் பட்டவர்களால் தான்!

மே 26 ஆம் தேதி பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ உரையைக் கேட்ட பின் இப்போதெல்லாம் வழியில் என்னைக் காணும் மக்கள் கால் தொட்டு வணங்கத் தொடங்கி விடுகிறார்கள். என்று புளகாங்கிதப் படுகிறார் 54 வயது பிரகாஷ்
மோடியால் ஒரே நாளில் ஸ்டார் ஆன டீக்கடைக்காரர், இந்தியா ஒளிர்வது இப்படிப் பட்டவர்களால் தான்!

 ‘மே 26 ஆம் தேதி பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ உரையைக் கேட்ட பின் இப்போதெல்லாம் வழியில் என்னைக் காணும் மக்கள் கால்களைத் தொட்டு வணங்கத் தொடங்கி விடுகிறார்கள்.’

- என்று புளகாங்கிதப் படுகிறார் 54 வயது பிரகாஷ் ராவ். பிரதமர் மோடி ஏன் இவரைப் பாராட்டிப் பேச வேண்டும்? இந்தியாவில் எத்தனையோ டீக்கடைக்காரர்கள் இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பேரும், புகழும் இவருக்கு மட்டும் கிடைக்க வேண்டுமெனில் இவர் ஏதாவது அதிசயிக்கத் தக்க செயற்கரிய செயல்களைச் செய்திருக்க வேண்டுமே?! என்று யோசிக்கிறீர்களா? ஆம், பிரகாஷ் ராவ் செயற்கரிய மனிதரே!

அடிப்படையில் பிரகாஷ் ராவ் ஒரு டீக்கடைக் காரர். ஆறு வயது முதல் அவரது வாழ்நாளின் பெரும்பகுதி கழிவது டீக்கடையில் தான். நன்றாகப் படித்துக் கொண்டிருந்த மாணவனொருவன் குடும்ப வறுமை காரணமாக 5 ஆம் வகுப்பு முதல் பள்ளிக்கே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. டீக்கடைகளில் சூடான டீ, காப்பி விற்றுக் கொண்டிருந்தாலும் சரி, எச்சில் கிளாஸ்களை கழுவிக் கொண்டிருந்தாலும் சரி சிறுவன் பிரகாஷின் சிந்தையில் எப்போதும் நீக்கமற நிறைந்திருந்தது பள்ளி வகுப்பறைகளும், பாடப்புத்தகங்களுமே! காலங்கள் மாறின. சிறுவன் பிரகாஷ் வளர்ந்து இளைஞனானார். கூடவே அவரது வருமானமும் சிறிதளவு பெருகியது. சிறிதளவு தான்... பிரகாஷ் இப்போதும் வசதி படைத்தவரெல்லாம் இல்லை. அவரது மாத வருமானம் அவரது குடும்பத் தேவைகள் போக ஏதோ கொஞ்சம் மிஞ்சும். அந்த மிச்சத்தில் துணிந்து ஒரு பள்ளி தொடங்கினார். அந்தப் பள்ளி ஒதிஷாவின், கட்டாக் பகுதியைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களின் ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி. 

ஏதோ ஆர்வக் கோளாறில் பள்ளி தொடங்கி விட்டாரே தவிர, அந்தப் பள்ளியில் பயில ஏழைக் குழந்தைகளை ஈர்க்க வெகு பாடுபட வேண்டியதாயிருந்திருக்கிறது. பிள்ளைகள் தெருவில் வெட்டியாகச் சுற்றக் கூட விரும்பினார்களேயன்றி பிரகாஷ் ராவின் பள்ளிக்கு வர அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் பள்ளி என்றால் புத்தகங்கள், படிப்பு, ஆசிரியர்களின் கட்டுப்பாடுகள் என்று வழக்கமான பள்ளியைக் கற்பனை செய்து கொண்டு பள்ளிக்கு வர விருப்பமற்று இருந்தார்கள். அவர்களை ஈர்க்க ஒரே வழியாக அப்போது உணவு மட்டுமே இருந்தது. எனவே குழந்தைகளை பள்ளியை நோக்கி ஈர்க்க முதலில் உணவு இலவசம் என்று அறிவித்தேன். பலர் இப்போது பள்ளிக்கு வரத் தொடங்கினர். கற்பதற்காக அல்ல, உணவு கிடைக்கிறதே என்று. ஒருவேளை உணவு கூடக் சரிவரக் கிடைக்காத குழந்தைகளுக்காகத் தானே நான் இந்தப் பள்ளியைத் தொடங்கியது. அதனால் அவர்களது முதல் தேவை உணவு தான் என்பது எனக்கப்போது புரிந்தது. பிறகு அந்தக் குழந்தைகளுக்கு ஏற்றவாறு பாடப்புத்தகங்கள் வாயிலான கல்வி முறையாக இல்லாமல், பாட்டு, நடனம், ஜூடோ போன்றவற்றைக் கற்றுத்தரும் பள்ளியாக என் பள்ளியின் கற்பித்தல் முறையையும் மாற்றினேன். இப்போது பல குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வரத் தொடங்கினர்.

இப்போது 70 குழந்தைகள் வரை பயிலும் பிரகாஷ் ராவின் பள்ளியில் அத்தனை குழந்தைகளுமே ஆர்வத்துடன் பள்ளிக்கு வருபவர்கள் தான். சாதாரண டீக்கடைக் காரராக இருந்து கொண்டு எப்படி ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளி நடத்த முடிகிறது? என்று கேள்வியெழுப்பினால் அதற்கு பிரகாஷ் ராவின் பதில்; ‘ சீஸன் நேரங்களில் என் கடையில் நாளொன்றுக்கு 700 முதல் 800 ரூபாய் வருமானம் கிடைக்கும், சீஸனற்ற நாட்களிலும் கூட குறைந்த பட்சம் 600 ரூபாய் கிடைக்கும். இந்த வருமானத்தை வைத்து என்னால் என் பள்ளியை திறம்பட நடத்த முடிகிறது. முதலில் பள்ளியைத் தொடங்கியதால் என்னைப் பள்ளி ஆசிரியர் என சில மக்கள் நினைத்தனர். எனக்கு ரத்த தானம் செய்யப் பிடிக்கும், அதோடு மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கே நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் தேவையான சிறு சிறு உதவிகள் செய்து கொடுப்பதும் எனது வழக்கம். அதை வைத்துக் கொண்டு மக்கள் என்னை டாக்டர் என்று கேலி செய்வார்கள். ஆக, படிக்காமலே நான் டீக்கடைக்காரராகவும், டீச்சராகவும், டாக்டராகவும் என் மக்களால் மதிக்கப்படுகிறேன். என்று நினைக்கும் போது வேடிக்கையாக இருந்தாலும் பெருமையாகவும் இருக்கிறது.

எனது ஒரே நோக்கம் என்னால் முடிந்த உதவியை என்னைச் சுற்றியுள்ள மக்களுக்குச் செய்ய வேண்டும் என்பது மட்டும் தான். அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். எனது செயல்களை அறிந்த பிரதமர் மோடி, அவரது ஒதிஷா வருகையின் போது என்னைச் சந்திக்க விருப்பப் பட்டார். இந்தத் தகவலை அறிந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உலகமே வியக்கும் ஒரு தலைவர் என்னைக் காண விரும்புகிறார் என்றதும் மனம் உருகிவிட்டது. மே 26 ஆம் நாள் மோடிஜியை சந்திக்க என்னை அழைத்துச் சென்றார்கள். என்னுடன் 15 முதஒ 20 மாணவர்களையும் அழைத்துச் செல்ல அனுமதி இருந்தது. நாங்கள் மோடிஜியைப் பார்க்க அறைக்குள் நுழைந்தோம், என்னைப் பார்த்ததும், கையசைத்து வரவேற்ற மோடிஜி, ராவ்ஜி, உங்களைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டு தான் உங்களைச் சந்திக்க விரும்பினேன், எனக்கு உங்களைப் பற்றி புதிதாக ஒரு அறிமுகம் தேவையில்லை’ என்றவாறு அவரது அருகில் என்னை அமர வைத்துக் கொண்டார். எங்களது சந்திப்பு சுமார் 18 முதல் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. மறுநாளே வானொலியில் தனது 44 ஆவது ‘மன் கி பாத்’ உரையில் மோடிஜி என்னைப் பற்றி சிலாகித்துப் பேசினார். இதனால் மொத்த இந்தியாவுக்கும் என்னை அடையாளப்படுத்தினார்.

‘ராவ், கட்டாக்கில் ஒரு சாதாரண டீக்கடைக் காரர், ஆனால் அவரது வருமானத்தில் 50% க்கு மேல் ஏழைக்குழந்தைகளின் படிப்பிற்காக செலவிடுகிறார். சொன்னால் நீங்கள் ஆச்சர்யப் படுவீர்கள், இதுவரை சுமார் 70 குழந்தைகளுக்கும் மேலாக அறிவுக் கண்களை திறந்து வைக்க உதவியிருக்கிறார் இந்த மனிதர். தன்னுடைய மிக சொற்பமான வருமானத்தில் ‘ஆஷா அவாஷன்’ எனும் பள்ளியைத் தொடங்கி அதன் மூலமாக வறுமையில் வாடும் குழந்தைகளுக்கான பள்ளியொன்றை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார் ராவ். அந்தப் பள்ளியின் வாயிலாக அந்தக் குழந்தைகளின் கல்விக்கு மட்டுமல்ல, அவர்களுக்கான ஆரோக்யம், மற்றும் உணவுக்கும் உதவிகள் பல செய்து வருகிறார். அவரை மன் கி பாத்தில் அறிமுகம் செய்வதில் பெருமிதம் அடைகிறேன்’ 
- என பாரதப் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். 

அது முதல் என்னை வழியில் காணும் மக்கள் எல்லோரும் மரியாதையுடன் கால்களைத் தொட்டு வணங்க முயல்கின்றனர். இதெல்லாம் ஒரு பக்கம் கூச்சமாக இருந்தாலும் மோடிஜி எனக்கு கொடுத்த அங்கீகாரத்தை நினைக்கையில் மனம் பெருமிதம் கொள்கிறது. இப்போது என்னைப் பலரும் அழைத்து எனது செயல்களுக்காக விருதுகள் தருகிறார்கள். ஆனால், என் மனைவி என்னைக் கடிந்து கொள்கிறார். ‘இவற்றை வைப்பதற்கு இனி வீட்டில் இடமே இல்லை’ என. 

என்று பெருமிதம் கொள்ளும் பிரகாஷ் ராவ் போன்றவர்களால் தான் இந்தியா ஒளிர்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com