வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா! 28 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குப் பிறகு ஒன்று சேர்ந்த காதல் தம்பதி!

சுமார் 24 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த விஜயா, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினியின் உதவியால் 2013 ஆம் ஆண்டில் முன் விடுதலை செய்யப்பட்டார்.
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா! 28 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குப் பிறகு ஒன்று சேர்ந்த காதல் தம்பதி!

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா! 28 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குப் பிறகு ஒன்று சேர்ந்த காதல் தம்பதி!

மொழியால் வெளிப்படுத்த முடியாத பேரன்பின் வெளிப்பாடு இது. 28 ஆண்டுகளாகத் தேக்கி வைத்த அன்பெனும் அணை உடைந்து மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது அது வெளிப்படும் தன்மை இப்படியாகத்தான் இருக்க முடியும். இலங்கையைச் சேர்ந்த விஜயா புலம் பெயர் தமிழராக தமிழகத்திற்கு வந்தார். இங்கு கலைக்கூத்தாடியாக நடனம் ஆடிப் பிழைத்துக் கொண்டிருந்த விஜயாவுக்கு திருப்பூர் நாச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் தீவிர ரசிகர். விஜயா எங்கு நடனம் ஆடினாலும் அங்கு சுப்ரமணியம் இருப்பார். இந்த அதி தீவிர ரசிகத் தன்மை காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தனர். கலைக்கூத்தாடிப் பெண்ணைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் ஒப்புக் கொள்வார்களோ மாட்டார்களோ என்று யோசித்த சுப்ரமணியம் 1985 ஆம் ஆண்டில் தன் குடும்பத்தை உதறி விட்டு விஜயாவைக் கரம் பிடித்தார். விஜயாவின் மீதான பெருங்காதலுடன் அவருடைய கலையையும் சுப்ரமணியம் வெகு விரைவில் கற்றுக் கொண்டார். இருவரும் சேர்ந்து கலைக்கூத்தாட்டங்களில் கலந்து கொள்வது வாடிக்கையானது. 1990 ஆம் ஆண்டில் இப்படித்தான் ஒரு கலைக்கூத்தில் நடனமாடி விட்டு சாலையோரம் களைத்துப் போய் அசந்து உறங்கிக் கொண்டிருந்த விஜயாவிடம் யாரொ ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயல தற்காப்புக்காக அவரிடம் சுப்ரமணியம் சண்டையிட நேர்ந்தது. இருவருக்குமிடையிலான மோதலில் அந்த நபர் உயிரிழக்க... ஆடிக் களைத்து ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் கணவன், மனைவி இருவரும் கொலை வழக்கில் கைதாகினர். வழக்கு விசாரணையின் போது 500 ரூபாய்க்காக இவர்கள் இருவரும் வழிப்பறியில் ஈடுபட்ட போது கொலை நடந்ததாக வழக்கு திசை மாற்றப்பட்டு பதியப்பட்டது. நேரடியாக கொலையில் தன்னுடைய பங்கு இல்லாவிட்டாலும் கூட விஜயா, இணைந்தே கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சொல்ல இருவரும் ஆயுள் தண்டனைப் பெற்றனர். இணைந்து வாழ வேண்டியவர்கள் இணைந்து சிறை சென்றனர்.

இருவரும் தனித்தனியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்கள் செல்லச் செல்ல விஜயாவின் பேசும் திறன் பறிபோனது. சுமார் 24 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த விஜயா, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினியின் உதவியால் 2013 ஆம் ஆண்டில் முன் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை ஆன நாள் முதலாக விஜயா அறியூரில் உள்ள தஞ்சம் முதியோர் இல்லத்தில் தனது கணவரின் வருகைக்காகக் காத்திருந்தார். எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தற்போது சிறையிலுள்ள சுப்ரமணியம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேசும் திறனை இழந்த போதும் சிறையிலிருந்து கணவர் விடுதலையாகித் தன்னிடம் வந்து சேர்ந்த போது அவரை மாமா என அழைக்கும் விஜயாவின் ஆர்வம் பொங்கும் குரலிலும், சந்தோசத்தை வெளிப்படுத்தும் முகபாவனைகளிலும் குற்றமற வெளிப்படுகிறது அவருக்குத் தன் கணவர் சுப்ரமணியத்தின் மீதுள்ள எல்லை கடந்த அன்பு. தான் தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் அனைவரிடமும் சுப்ரமணியத்தைக் காட்டி மாமா, என் மாமா என்று அறிமுகப்படுத்தி வைக்கிறார் விஜயா. காலம் இவர்களை சிறையில் தள்ளினாலும் காலம் கடந்தும் காதலும். அன்பும் தீராமல் பேருவையுடன் ஒன்றிணைந்திருக்கும் விஜயாவையும் சுப்ரமணியத்தையும் உண்மையான காதலுக்கு சாட்சியாக எப்போதும் நினைவுகூரலாம்.

வாழ்வின் கடைநிலையில் இருக்கும் இவர்களுக்கு அரசும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும், இச்செய்தியை அறிய நேர்பவர்களும் அடுத்தொரு அமைதியான வாழ்வை மேற்கொள்ள வழிவகை செய்து தரலாம்.

COURTESY: PUTHIYATHALAIMURAI T.V

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com