618 விக்கெட்டுகள் எடுத்தால் அதுவே எனது கடைசி போட்டி: அஸ்வின்

618 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் அதுவே எனது கடைசி போட்டியாக இருக்கும் என இந்திய வீரர் அஸ்வின் சனிக்கிழமை தெரிவித்தார்.
618 விக்கெட்டுகள் எடுத்தால் அதுவே எனது கடைசி போட்டி: அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக அஸ்வின் திகழ்கிறார். இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார். இதனால் உலகளவில் தலைசிறந்த வீரராகத் திகழ்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 292 விக்கெட்டுகளும் (சராசரி 25.26), ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளும் (சராசரி 32.91) வீழ்த்தியுள்ளார். 

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை மற்றும் அடுத்து நடைபெறவுள்ள நியூஸிலாந்து தொடர்களுக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை. இவ்விகாரம் தொடர்பாகவும், முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே குறித்தும் அஸ்வின், மனம்திறந்தார். 

இதுகுறித்து அஸ்வின் கூறியதாவது:

கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அதில் இந்திய அணிக்காக விளையாடுவதை நான் கௌரவமாக கருதுகிறேன். ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேனா அல்லது எனக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் இடத்தில் நான் இல்லை. அணி விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் எனக்கு கிடையாது. 

என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறுவதை மட்டுமே எனது குறிக்கோளாக வைத்துள்ளேன். எனக்கான வாய்ப்பு கிடைத்தால் அதில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். இதுவரை நான் செயல்பட்டதை விட கூடுதலாக கவனம் செலுத்தி எனது திறமையை வளர்த்துக்கொள்வேன். என்னால் அதை மட்டும் தான் சிறப்பாகச் செய்ய முடியும். மற்றபடி அணி விவகாரங்களில் நான் எதுவும் செய்துவிட முடியாது.

இலங்கையின் முன்னணி நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹெராத் இதில் எனக்கு சிறந்த முன்மாதிரியாக விளங்குபவர். வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்தவர். ஒவ்வொரு நாளும் தனது திறனை மேம்படுத்தி வருகிறார். அவர் ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர் என்பதை தனது ஆட்டத்திறனால் நிரூபித்து வருபவர். தடைகளை சிறப்பான முறையில் கடந்து சாதனை படைப்பதில் வல்லவர்.

நான் அனில் கும்ப்ளேவின் பரம ரசிகன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அனில் கும்ப்ளே டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 619 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இது மிகப்பெரிய சாதனையாகும். நான் 618 விக்கெட்டுகள் எடுத்தாலே போதுமானதாகக் கருதுகிறேன். அவ்வாறு 618 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் அதுவே எனது கடைசி போட்டியாக அமைந்துவிடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com