"ஹிந்தி மொழித் திணிப்பை சகித்துக் கொள்ள இயலாது'

ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழியின் திணிப்பையும் கர்நாடகம் சகித்துக் கொள்ளாது என அந்த மாநில முதல்வர்சித்தராமையா தெரிவித்தார்.
Updated on
2 min read

ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழியின் திணிப்பையும் கர்நாடகம் சகித்துக் கொள்ளாது என அந்த மாநில முதல்வர்சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக உதய தின விழாவை முன்னிட்டு, அகில இந்திய வானொலியில் புதன்கிழமை முதல்வர் சித்தராமையா ஆற்றிய உரை:
கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் பண்பாட்டு மற்றும் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைந்து 61 ஆண்டுகள் கடந்து விட்டன. கன்னடம் என்பது வெறும் எழுத்துக் கோவை அல்ல. அது, கன்னட மக்கள், நிலம், நீர், வாழ்க்கை, இலக்கியம், பண்பாடு, கலை, இசை  அடங்கிய கன்னடத்துவம்.
கர்நாடக நிலத்தில் வாழும் அனைவரும் கன்னடர்கள். உணர்வுரீதியாக கன்னடமொழியை மிகவும் நேசிப்பவன்நான். கன்னட காவல் படையின் தலைவராக அரசியல்வாழ்க்கையைத் தொடங்கிய நான், அன்று முதல் இன்று வரை மாநிலம் மற்றும் மொழி விவகாரங்களில் சமரசம் செய்து கொண்டதில்லை. மொழி, நிலம், நீர் தொடர்பான வினா எழும்போது நாம் அனைவரும் ஒரே கட்சி என்பதை மறக்கக்கூடாது.
கன்னடம் வளமான மொழியாகும். உலக அளவில் செறிவார்ந்த இலக்கிய வளம் நிறைந்த சில மொழிகளில் கன்னடமும் ஒன்று. இம்மொழிக்கும் ஈராயித்திற்கும் அதிகமான வரலாறு உள்ளது. எனது கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கன்னட மொழி சம்பந்தமாக அரசியல் லாப-நஷ்ட நோக்கின்றி கன்னடநேசனாக பல்வேறு முடிவுகளை எடுத்திருக்கிறேன்.  
கர்நாடக பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் கன்னட பயிற்று மொழி மாணவர்களுக்கு 5 சத இட ஒதுக்கீடு, தனியார் நிறுவனத்தில் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை வேலை நியமனத்தில் கன்னடர்களுக்கு 100-க்கு 100 இட ஒதுக்கீடு, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து ஆங்கில வழிப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்புமுதல் கட்டாய கன்னட உத்தரவு, கிராமிய வங்கிகளின் பணி நியமன தேர்வுகள் அனைத்தும் கன்னடத்தில் நடத்த நடவடிக்கை, தேசிய, கிராமிய, பட்டியல்வகை வங்கிகளின் ஊழியர்கள் கன்னடமொழியை கட்டாயம் கற்க சுற்றறிக்கை, திரையரங்குகளில் கன்னட திரைப்படங்களை கட்டாயம் திரையிட உத்தரவு, தரமான கன்னட திரைபடங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 125 திரைப்படங்களுக்கு வழங்க உத்தரவு, கன்னடர் அல்லாதவர்களுக்கு கன்னடம் கற்பிக்க பயிற்சிமையங்கள் அமைக்க உத்தரவு போன்ற பல்வேறு முடிவுகளை எடுத்திருக்கிறேன். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழிகள்தான் ஆட்சி மொழிகளாக உள்ளன.
இதை அரசியலமைப்புச்சட்டமும் அங்கீகரித்துள்ளன. மாநில மொழிகள் மீது அந்நிய மொழிகள் ஆதிக்கம் செலுத்துவது மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியத்தன் நோக்கத்திற்கு எதிரானதாகும்.
அரசியலமைப்புச் சட்டமும் இதை ஏற்பதில்லை. அந்தந்த மாநில மொழிகளின் தன்மையை தற்காத்துக்கொண்டு அந்நிய மொழியைக் கற்பிக்கும் சூழலை உருவாக்கி தர வேண்டிய கூட்டாட்சி நெறிகளை எனது அரசும் பின்பற்றி வந்துள்ளது. ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழி மீதும் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், கன்னட மொழி நலனை புறக்கணித்துவிட்டு ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளின் ஆதிக்கத்தை எப்போதும் ஏற்பதில்லை.
மெட்ரோ ரயில் நிலையத்தில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதற்கு எதிராக கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்த போது, அந்தவிவகாரத்தில் தலையிட்ட மாநில அரசு, மத்திய அரசை அணுகி மெட்ரோ ரயில் நிலையங்களில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கையைச் செயல்படுத்தியிருக்கிறோம்.
மாநிலத்திற்கு தனிக்கொடி தேவை என்ற கருத்தை எனது அரசு கொண்டுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்து அறிக்கை அளிக்க எனது அரசு அறிஞர்குழுவை அமைத்துள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரையின்பேரில் வெகுவிரைவாக நல்ல முடிவு எடுக்கப்படும்.
அதிநவீன அறிவியலை நமதுகன்னடமொழியில் படிக்க இயலாதுஎன்பது தவறான கருத்தாகும்.
கன்னட மொழி வளர்ச்சி அடைய வேண்டுமானால் பல்துறை அறிஞர்கள் அவரவர் துறைகளில் கன்னட மொழியின் பயன்பாட்டை தீவிரமாக்க வேண்டும். கன்னடத்தில் அறிவியல் வார்த்தைகளை கண்டறிய வேண்டும். மருத்துவம் மட்டுமன்றி, பொறியியல், தொழில்நுட்பம், சட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கன்னடமொழியின் வேர்கள் பரவ வேண்டும்.
கன்னட மொழி வளர்ச்சியின் போது எதிர்கொண்ட சவால்கள், எதிர்கால சவால்கள், எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை அறிவியல் ரீதியாக ஆய்ந்து மக்கள் விரும்பும் மொழிக்கொள்கையை வகுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com