பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசை பகுதியினருக்கு பட்டா வழங்கப்படும்: எடியூரப்பா

பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.
Updated on
1 min read

பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு காந்தி நகரில் உள்ள லட்சுமணபுரி குடிசைப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் சனிக்கிழமை இரவு தங்கி அடுத்த நாள் காலை சிற்றுண்டி சாப்பிட்டு, பின்னர் குடிசைவாசிகள் நிலை குறித்து புத்தகம் வெளியிட்டு அவர் பேசியது:
குடிசை பகுதிகளில் வசிப்பவர்களின் நிலைமையைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கில் சனிக்கிழமை இரவு இங்குள்ள பாஜகவைச் சேர்ந்த நண்பரின் வீட்டில் தங்கினேன். இங்கு வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை நேரில் கண்டறிய முடிந்தது.
தீனதயாள் உபாத்யாயாவின் கனவை நனவாக்குவதற்கு குடிசைப் பகுதிகளில் தங்க முடிவு செய்துள்ளேன். பெங்களூரு மட்டுமின்றி மாநில அளவில் உள்ள குடிசை பகுதிகளில் தொடர்ந்து தங்க திட்டமிட்டுள்ளோம். முதல்வர் சித்தராமையா குடிசை பகுதிகளில் வாழும் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் செயல்பட்டு வருகிறார்.
எனவே, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைக் கண்டறியும் நோக்கில் குடிசை பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்க முடிவு செய்துள்ளேன். பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசை பகுதிகளின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு வாழ்பவர்களுக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் கர்நாடகத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருவதை வரவேற்கிறேன். ராகுல்காந்தி பிரசாரத்துக்குப்போகும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவி வருகிறது.
முன்பு 6 மாநிலங்களில் மட்டுமே இருந்த பாஜகவின் ஆட்சி, தற்போது 19 மாநிலங்களுக்கு பரவியுள்ளது. இதற்கு ராகுல் காந்தியும் ஒரு காரணம். காங்கிரஸ் அல்லாத இந்தியா என்ற கனவு நனவாகும் காலம் வெகு தூரமில்லை என்றார் அவர்.
நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.அசோக், மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், பாஜக மாநிலச் செயலாளர் ரவிக்குமார், காந்தி நகர் பாஜக கட்சியில் நிர்வாகி கருணாகர் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com