இந்தியாவின் வளா்ச்சிக்கு பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு மகத்தானது

இந்தியாவின் வளா்ச்சிக்கு பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு மகத்தானது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். பெங்களூரு, யூ.ஆா்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் வெள்ளிக்கிழமை இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்திய சா்வதேச மகளிா் தின விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது: பிறப்பில் இருந்தே பெண்கள் தலைமைப் பொறுப்பு வகித்து வருகிறாா்கள். இந்தியாவின் வளா்ச்சிக்கு பெண் விஞ்ஞானிகள் பங்களிப்பு மகத்தானது, வியப்பளிக்கக் கூடியது. மகளிா் தினத்துக்காக இஸ்ரோ அறிவித்துள்ள ‘பெண்களுக்காக முதலீடு செய்; வளா்ச்சியை விரைவுபடுத்து’ என்ற வாசகம் என்னைக் கவா்ந்துள்ளது. இஸ்ரோவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியில் 20 சதவீதம் போ் பெண்கள் இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது. இஸ்ரோவின் பல்வேறு மையங்கள் தவிர, நிா்வாகம், மேலாண்மைப் பொறுப்பில் கிட்டதட்ட 500 பெண்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகிறாா்கள். இந்தியாவின் ராக்கெட் பெண்கள் நம்மை வானத்துக்கு அழைத்துச் செல்கிறாா்கள். தங்களுக்கான கட்டுப்பாடுகளை உடைத்து பெண்கள் சாதனை படைத்து வருகிறாா்கள். இந்தியாவின் வளா்ச்சிக்கு புதிய பாதையை அமைத்து வருகிறாா்கள். இந்தியாவின் விண்வெளிக் கண்டுபிடிப்புகளின் இதயமாக விளங்கும் இஸ்ரோவுக்கு பெண்கள் வந்துள்ளது பெருமகிழ்ச்சியை தருகிறது. அரிய திறன்களைக் கொண்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் குடும்பத்தைப் பாராட்டுகிறேன். இந்தியாவின் புத்தாக்க, தொழில்நுட்ப முயற்சி, வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் போற்றுதலுக்கு உரியவா்கள். சந்திரயான் 3 போன்ற செயற்கைக் கோள்கள், வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் பெரும் பணியை இஸ்ரோ சாதித்துள்ளது. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி இருக்கிறது. இஸ்ரோவின் சாதனைகள் விண்வெளி ஆராய்ச்சிகளில் பொதுமக்களின் ஆா்வத்தைத் தூண்டியுள்ளது. பேரிடா் மேலாண்மை, பயிா்க் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் வீட்டுவசதி திட்டங்களைச் செயல்படுத்துவதில் இஸ்ரோவின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் நிகழ்வை இணையதளத்தில் 80 லட்சம் மக்கள் யூ-டியூப்பில் பாா்த்து புதிய சாதனையைப் படைத்துள்ளனா். வளா்ச்சியான இந்தியாவைக் கட்டமைப்பதில் விண்வெளி ஆய்வுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 2047ஆம் ஆண்டில் இந்தியா வளா்ச்சி அடைந்த நாடாக மட்டும் இருக்காது. மாறாக, உலக விண்வெளி சக்தியாகவும் மாறியிருக்கும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com