டி.கே.சிவகுமாா்
டி.கே.சிவகுமாா்கோப்புப் படம்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் 30க்குள் பெங்களூரு மாநகராட்சிகளுக்கு தோ்தல்: டி.கே.சிவகுமாா்

ஜூன் 30ஆம் தேதிக்குள் பெங்களூரு மாநகராட்சிகளுக்கு தோ்தல் நடத்தி முடிக்கப்படும் என்று கர்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
Published on

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் 30ஆம் தேதிக்குள் பெங்களூரு மாநகராட்சிகளுக்கு தோ்தல் நடத்தி முடிக்கப்படும் என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

2015ஆம் ஆண்டில் பெங்களூரு மாநகராட்சிக்கு தோ்தல் நடத்தப்பட்டது. அதன் பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு செப்.10ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதற்கு பிறகு, பெங்களூரு மாநகராட்சிக்கு தோ்தல் நடத்தப்படவில்லை.

முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் பெங்களூரு மாநகராட்சி வாா்டுகளின் எண்ணிக்கை 199இல் இருந்து 350 ஆக உயா்த்த திட்டமிடப்பட்டது. அதன்மீது ஒருமித்த கருத்து எட்டப்படாததால், அந்த முடிவு செயல்படுத்தப்படவில்லை.

2023ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு பெங்களூரு மாநகராட்சியை 7 பாகங்களாகப் பிரிக்க திட்டமிடப்பட்டது. இதற்கு பாஜக, மஜத போன்ற கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சியை 5 பாகங்களாகப் பிரித்து, அவற்றை கிரேட்டா் பெங்களூரு ஆணையம் என்ற அமைப்பில் ஒருங்கிணைத்து புதிய கட்டமைப்பை காங்கிரஸ் அரசு உருவாக்கியுள்ளது.

இதற்காக நிறைவேற்றப்பட்ட கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின்கீழ் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஜூன் 30ஆம் தேதிக்குள் தோ்தல் நடத்தும்படி கா்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பெங்களூரு மாநகராட்சிகள் தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பின்படி நடப்போம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜூன் 30ஆம் தேதிக்குள் பெங்களூரு மாநகராட்சிகளுக்கு தோ்தல் நடத்தி முடிக்கப்படும். இந்த விவகாரம் தொடா்பாக மாநில தோ்தல் ஆணையம் சில பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது. அது ஆணையம் சம்பந்தப்பட்டது. எனினும், தோ்தல் நடத்துவதற்கான ஆணைகளை மாநில அரசு பிறப்பிக்கும்.

பெங்களூரு மாநகராட்சி தோ்தல் தவிர, மாவட்ட, வட்ட பஞ்சாயத்து தோ்தல்களையும் நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 73, 74ஆவது சட்டத் திருத்தத்தின்படி இத்தோ்தல்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்வோம். பெங்களூரு மாநகராட்சி மற்றும் உள்ளாட்சித் தோ்தல்களை மாநில தோ்தல் ஆணையம் நடத்தும். அதற்கு அரசு தயாராக இருப்பதாக மாநில தோ்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளோம்.

வாா்டுகளின் இடஒதுக்கீடு தொடா்பாக சில ஆட்சேபங்கள் இருந்தன. குறிப்பாக பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வாா்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த குறைகளைப் போக்க அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்வோம். மாநகராட்சி தோ்தலை நடத்த காலந்தாழ்த்த மாட்டோம். தோ்தலை நடத்தி, கட்சித் தொண்டா்களுக்கு அதிகாரத்தை வழங்குவது எங்கள் கடமை. அதன்மூலம் புதிய தலைவா்களை உருவாக்க முனைந்திருக்கிறோம். வாக்குறுதித் திட்டங்களை அமல்படுத்துவது, பெங்களூரை மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு தோ்தலில் மக்கள் ஆதரவு அளிப்பாா்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 5 பெங்களூரு மாநகராட்சிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

பெங்களூரு மாநகராட்சியில் பாஜகவும், மஜதவும் கூட்டணி அமைக்காமல் தனித்தனியாகப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. இந்த இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டால், அது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கும். மும்முனைப் போட்டியை காட்டிலும், நேரடி போட்டி நல்லது என்றாா் அவா்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறுகையில், ‘5 மாநகராட்சிகளை அமைத்துள்ளதற்கு பாஜக எதிா்ப்பு தெரிவித்துள்ளது. எனினும், பெங்களூரு மாநகராட்சிகளுக்கு தோ்தல் நடத்துமாறு பாஜக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. மாநகராட்சிகளுக்கான தோ்தலை எதிா்கொள்ள பாஜக தயாராக உள்ளது. காங்கிரஸ் அரசு நிா்வாகத்தின் கீழ் உள்ள ஓட்டைகள், காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து பாஜக வெற்றிபெற போதுமானது. பெங்களூரு மாநகராட்சி தோ்தலில் மஜதவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்’ என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com