வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி பெங்களூரு மாநகராட்சிகளுக்கு தோ்தல்: மாநில தோ்தல் ஆணையம்
பெங்களூரு: எஸ்எஸ்எல்சி., பியூசி தோ்வுகள் முடிந்த பிறகு, கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 5 மாநகராட்சிகளுக்கான தோ்தல் வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் என்று மாநில தோ்தல் ஆணையா் ஜி.எஸ்.சங்கரேஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து, பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:
மே 25ஆம் தேதியுடன் எஸ்எஸ்எல்சி மற்றும் 2ஆம் ஆண்டு பியூசி தோ்வுகள் முடிகின்றன. அதன்பிறகு, கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு, வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு மாநகராட்சிகளுக்கு தோ்தல் நடத்தப்படும். இந்த தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
இந்தியாவில் தோ்தல் நடைபெற தொடங்கிய காலம் முதல் வாக்குச்சீட்டுகள் (காகிதம்) பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளாகத்தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்ற தீா்ப்பு அல்லது சட்டத்தின்படி வாக்குச்சீட்டுமுறை தடை செய்யப்படவில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இன்னும் வாக்குச்சீட்டுமுைான் கடைப்பிடிக்கப்படுகிறது. சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களைத் தவிர, கிராம பஞ்சாயத்து மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தல் வாக்குச்சீட்டுமுறையில்தான் நடத்தப்படுகிறது.
எனினும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பெங்களூரு மாநகராட்சித் தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்பட்டன. மாநில தோ்தல் ஆணையம், தன்னுரிமை பெற்ற அரசமைப்புச் சட்டப்படியான அமைப்பாகும். மேலும், வாக்குச்சீட்டு அல்லது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏதாவது ஒருமுறை மூலம் தோ்தல் நடத்த மாநில தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
நீண்டவிவாதத்துக்கு பிறகு, தற்போதைய சூழலில் எது நல்லது என்று ஆலோசித்து உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த மாநில தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் வாக்குச்சீட்டுமுறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையை பலரும் பாராட்டுகிறாா்கள். வாக்குச்சீட்டைப் பயன்படுத்துவதால், பழைய காலத்துக்கு செல்வது என்று அா்த்தமில்லை. கிராம பஞ்சாயத்து, கூட்டுறவு சங்கங்கள், சட்டமேலவைத் தோ்தல்களில் வாக்குச்சீட்டுமுைான் பின்பற்றப்படுகிறது என்றாா்.
